பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

குழந்தைகளிடையே விளையாட்டு, உடற்பயிற்சி, படைப்பாற்றல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் திரு நரேந்திர மோடி

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 10:39AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (04.09.2026) லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆண்டு, மூன்று துறைகளிலிருந்து 82 ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறையிலிருந்து 48 ஆசிரியர்களும், உயர் கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகளிலிருந்து 21 ஆசிரியர்/பேராசிரியர்களும், திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து 13 திறன் பயிற்சியாளர்களும் அடங்குவர். விருது பெற்றவர்கள், தங்களின் கல்விப்பணிப் பயண அனுபவங்களை எடுத்துரைத்தனர். வகுப்பறைக் கற்றலை மேலும் ஈடுபாடு மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்காகத் தாங்கள் கையாண்ட பல ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

குழந்தைகளின் கல்விசார் செயல்திறனை மட்டும் பார்க்காமல், அவர்களின் செயல்பாடுகள், அன்றாட வாழ்வு ஆகியவற்றிலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பாரம்பரிய கூட்டுக் குடும்ப அமைப்பு குறைந்து வருவதைக் குறிப்பிட்ட அவர், குழந்தைகளின் வாழ்வில் ஆசிரியர்களின் பங்கு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்றார். போதைப்பொருள் பிரச்சனையைக் குறிப்பிட்ட பிரதமர், குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்கவும், அதற்கான காரணத்தைக் கண்டறியவும், அத்தகைய குழந்தைகள் அப்பழக்கத்திலிருந்து விடுபட உதவவுமாறும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

குழந்தைகளின் களங்கமற்ற தன்மையைப் பாதுகாப்பது ஆசிரியர் ஆற்றக்கூடிய முக்கியப் பங்கு என்று பிரதமர் கூறினார். குழந்தைகளுக்கு சிறந்த அடிப்படை இயல்பும் ஆர்வமும் உண்டு என்றும், ஆசிரியர்கள் இந்த ஆர்வத்தை வளர்த்து, சரியான முறையில் வழிநடத்தினால், அவர்களின் வளர்ச்சிக்கு அவர்களால் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்னணு சாதனத் திரை நேரப் பிரச்சனையை எடுத்துரைத்த பிரதமர், அது ஒரு பெரும் கவலையாக மாறியுள்ளது என்றார். குழந்தைகள் மின்னணுத் திரைகளில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், அவர்கள் நள்ளிரவில் கைபேசிகளைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து பெற்றோரிடம் பேசுமாறு அவர் ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார். விளையாட்டு, உடற்பயிற்சி, படைப்பாற்றல் ஆகியவை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்தை வளர்ப்பதன் மூலம், குழந்தைகள் படிப்படியாக அதிகப்படியான திரை பயன்பாட்டிலிருந்து விடுபட முடியும் என்றும் அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையைக் குறிப்பிட்ட பிரதமர், குழந்தைகளை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் சென்று, நிஜ உலகத் திறன்களுடன் அவர்களை இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், ஆசிரியர்கள் பாடத்திட்டம் குறித்த அறிவைப் புகட்டுவதோடு நின்றுவிடாமல், குழந்தைகளிடையே உழைப்பின் மாண்பு போன்ற விழுமியங்களை வளர்க்க உதவ வேண்டும் என்றும் பிரதமர்  திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306878&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2306909) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam