நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
செப்டம்பர் 15 முதல் சர்க்கரை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு 2,000 குவிண்டாலாக குறைப்பு - பதுக்கலைத் தடுத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 1:57PM by PIB Chennai
உள்நாட்டுச் சந்தையில் போதுமான சர்க்கரை இருப்பை உறுதி செய்வதற்கும், சர்க்கரைப் பதுக்கலையும் ஊக வணிகத்தையும் தடுப்பதற்கும், மத்திய அரசு, சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு வரம்பை 4,000 குவிண்டாலிலிருந்து 2,000 குவிண்டாலாக , 2026 செப்டம்பர் 15 முதல் குறைத்துள்ளது. இது 2026 நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும். தற்போது, நாடு முழுவதும் உள்ள சர்க்கரை வியாபாரிகளுக்கு, 4,000 குவிண்டால் கையிருப்பு வரம்பு 2026 ஆகஸ்ட் 1 முதல் அமலில் உள்ளது. இந்தக் கையிருப்பு வரம்பை மேலும் குறைத்து 2,000 குவிண்டாலாக நிர்ணயித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, 2026 செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் வகையில், சர்க்கரை வியாபாரிகள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
* பொருட்களைப் பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் எந்த பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது.
* நாடு முழுவதும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் 2,000 குவிண்டாலுக்கு மிகுதியாக சர்க்கரையை இருப்பு வைத்திருக்கக் கூடாது.
* இருப்பினும், குறிப்பிட்ட சந்தைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கொல்கத்தா, அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகளுக்கான கையிருப்பு வரம்பு 4,000 குவிண்டாலாகவே நீடிக்கும் .
* கொல்கத்தா பகுதியானது உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவிலிருந்து சர்க்கரையைப் பெற்று, வடகிழக்குப் பகுதி உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிக்கு விநியோகம் செய்கிறது. எனவே, கொல்கத்தாவிலும் அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகளுக்கும் தற்போதுள்ள 4,000 குவிண்டால் வரம்பு அப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது.
* இந்த நடவடிக்கை, பதுக்கலை கட்டுப்படுத்துவதையும், ஊக வணிகத்தை தடுப்பதையும், சர்க்கரை கையிருப்பு அதிகளவில் குவிவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது விநியோகக் கட்டமைப்பு முழுவதும் சர்க்கரையின் சீரான விநியோகத்திற்கு வழிவகுப்பதோடு, நுகர்வோருக்கு நியாயமான விலையில் அது தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.
தீவிரக் கண்காணிப்பும் சரிபார்ப்பும் :
அரசு, நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள், முகவர்கள், வர்த்தகர்களை உள்ளடக்கி, சர்க்கரை இருப்புகளைத் தீவிரமாகக் கண்காணித்து, சரிபார்த்து வருகிறது. இந்த நடவடிக்கை , அதிகப்படியான இருப்பு வைத்திருத்தல், தகவல்களை வெளியிடாமல் இருத்தல் சர்க்கரை இருப்பு, விற்பனை ஆகியவற்றில் உள்ள முறைகேடுகளைக் கண்டறிய உதவியுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் விளைவாக, சமீபத்திய நாட்களில் ஆலை சர்க்கரையின் விலை சுமார் 20% குறைந்துள்ளது. சில்லறை விலைகளும் குறையத் தொடங்கியுள்ளன. ஆலை விலைக் குறைப்பைப் பின்பற்றி மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் போதுமான இருப்பு, சீரான விநியோகம், விலை நிலைத்தன்மை ஆகியவற்றைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305404®=3&lang=1
----
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305661)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada