நிதி அமைச்சகம்
என்பிசிஐ, உஸ்பெகிஸ்தானின் என்ஐபிசி-யுடன் இணைந்து, யுபிஐ பணப் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 4:14PM by PIB Chennai
இந்திய தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகமான என்பிசிஐ-ன் சர்வதேசப் பிரிவான என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், உஸ்பெகிஸ்தானின் தேசிய பணப்பரிவர்த்தனை அமைப்பான ஹுமோ-வை இயக்கும் நேஷனல் இன்டர்பேங்க் பிராசஸிங் சென்டர் (என்ஐபிசி) அமைப்புடன் 2026 ஆகஸ்ட் 30 அன்று ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒத்துழைப்பானது, இந்தியப் பயணிகள் தங்களுக்கு வசதியான யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி, உஸ்பெகிஸ்தானின் தேசிய ஒருங்கிணைந்த க்யூஆர் குறியீடான யுஇசட்க்யூஆர்-ஐ ஸ்கேன் செய்து, அந்த நாடு முழுவதும் வணிகர்களிடம் உடனடியாகப் பணம் செலுத்த வழிசெய்கிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானுக்கு மேற்கொண்ட இருதரப்புப் பயணத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, உஸ்பெகிஸ்தான் மத்திய வங்கி உள்ளிட்ட நிதி ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து முறையான ஒப்புதல்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள், வணிகப் பயணிகள், மாணவர்கள் தங்கள் இந்திய வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக உஸ்பெகிஸ்தானில் அந்நாட்டு வணிகர்களுக்குப் பணம் செலுத்தலாம். இது அந்நியச் செலாவணிக் கூடுதல் கட்டணச் சிக்கல்களை நீக்குவதோடு, சர்வதேச அட்டைகள் அல்லது பணத்தைச் சார்ந்திருக்கும் தேவையையும் குறைக்கிறது.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், பூட்டான், கத்தார், இலங்கை, கம்போடியா, கிரீஸ் ஆகிய நாடுகளில், ஏற்கெனவே இந்தியப் பயணிகள் யுபிஐ மூலம் தடையின்றிப் பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304967®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2305135)
வருகையாளர் எண்ணிக்கை : 10