நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட ரீதியான அளவியல் விதிகள் 2026-ஐ வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 30 AUG 2026 11:27AM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட அளவியல் (இந்தியாவின் நிலையான நேர முறை) விதிகள் - 2026- 2026 ஆகஸ்ட் 27 அன்று அறிவித்துள்ளது. இந்த விதிகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 180 நாட்களில் நடைமுறைக்கு வரும்.

சட்ட, நிர்வாக, வணிக மற்றும் இதர அலுவல் நோக்கங்களுக்காக, நாடு முழுவதும் இந்திய நிலையான நேரத்தைப் பொதுவான நேரக் குறிப்பீடாகப் பயன்படுத்துவதற்கு இந்த விதிகள் வழிவகை செய்கின்றன. இந்த விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, அரசுத் துறைகள், வணிக நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் உள்ளிட்டவை தங்களின் செயல்பாட்டுக் கட்டமைப்புகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கு இந்த 180 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்புகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், ஒரு பொதுவான சீரான நேரக் குறிப்பீட்டின் தேவை அதிகரித்துள்ளது. வங்கிச் சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்கட்டமைப்புகள், கணினி அமைப்புகள் மற்றும் அரசுப் பதிவேடுகள் ஆகியவை துல்லியமான நேர அளவீடுகளைச் சார்ந்து இயங்குகின்றன. நேரங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் இத்தகைய செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பைப் பாதிக்கக்கூடும் என்பதால், நாடு முழுவதும் உள்ள முக்கிய அமைப்புகள் துல்லியமான, சீரான இந்திய நேரத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதே இந்த விதிகளின் நோக்கமாகும்.

வங்கி, தொலைத்தொடர்பு, மின்சாரம், போக்குவரத்து, டிஜிட்டல் ஆளுகை உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு நிலையான இந்திய நேரத்தைப் பரப்புவதை இந்த அமைப்பு உறுதி செய்யும். இந்த விதிகள் நாடு முழுவதும் நேரத்தைச் சார்ந்த அமைப்புகளுக்கும் அலுவல் நோக்கங்களுக்கும் ஒரு பொதுவான நேரக் குறிப்பீட்டை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304613&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304666) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada