குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரைச் சந்தித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 4:22PM by PIB Chennai

சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனத்தில் தற்போது அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய வெளியுறவுப் பணிப் பயிற்சி அதிகாரிகளும் (2025 தொகுதி), பூட்டானைச் சேர்ந்த இரண்டு தூதர்களும் இன்று (ஆகஸ்ட் 27, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்திய வெளியுறவுப் பணிப் பயிற்சி அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெளிநாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நாட்டின் நலன்களை முன்னெடுத்துச் செல்லவும், உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தவும் அவர்களுக்கு உள்ள பொறுப்பை எடுத்துரைத்தார்.

 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளுடனான நமது உறவுகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்று அவர் குறப்பிட்டார். முதலீடு, தொழில்நுட்பம், உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, புத்தாக்கம் போன்ற துறைகளில் உருவாகும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும், இந்தியாவின் தேசிய நலன்களை மேம்படுத்தும் ஒத்துழைப்புகளை உருவாக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

 

உலகத்துடனான இந்தியாவின் ஈடுபாடு, எப்போதும் நமது தேசிய நலன்களுடன் நெருக்கமாக இணைந்திருக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

வெளியுறவுப் பணி அதிகாரிகள், தங்களது தொடர்புகளை அரசு அலுவலகங்களுக்குள் மட்டும் சுருக்கிக்கொள்ளக் கூடாது என்று அவர் கூறினார். அவர்கள் பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், புதுமைப் படைப்பாளர்கள், கலாச்சார நிறுவனங்கள் போன்றவர்களையும் தொடர்பு கொண்டு நமது வளர்ச்சிப் பயணத்தில் அவர்கள் பங்களிப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறியுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

 

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, ​​அரசை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதை இளம் பயிற்சி அதிகாரிகள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நேர்மை, நாணயம், தொழில்முறை செயல்பாடு ஆகியவற்றின் மிக உயர்ந்த தரங்களைப் பேணுமாறு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பயிற்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303766&reg=3&lang=1

(Release ID : 2303766)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303995) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Malayalam