நிதி அமைச்சகம்
அக்டோபர் 2 முதல் இளைஞர்களுக்கான வங்கிச் சேவைகள் குறித்த சிறப்பு ஒரு மாத கால இயக்கத்தை மேற்கொள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அழைப்புவிடுத்தார்
प्रविष्टि तिथि:
18 AUG 2026 7:52PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை சார்பாக நடைபெற்ற பொதுத்துறை வங்கிகள் மாநாடு 2026 என்ற இரண்டு நாள் நிகழ்வு, இன்று நிறைவடைந்தது. வங்கி மற்றும் நிதித் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியுடன் தொடர்புடைய ஏழு முக்கிய கருப்பொருள்கள் குறித்து, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் இடையே விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஆலோசனைகளை உறுதியான செயல்வடிவங்களாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை முன்வைத்தார். பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிதி நிறுவனங்கள், தங்கள் நிறுவன ரீதியான ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளவும், உருவாகி வரும் வாய்ப்புகளை முன்கூட்டியே கண்டறியவும், இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத் தேவைகளை ஆதரிப்பதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அவர் அழைப்பு விடுத்தார்.
முறையான நிதி அமைப்பில் இணையும் இளைஞர்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான வங்கிச் சேவைகள் குறித்த ஒரு சிறப்பு முன்முயற்சியை மேற்கொள்ளுமாறு பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்திய வங்கிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன், 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பயனடையும் வகையில் 2026 அக்டோபர் 2 அன்று தொடங்கப்படவுள்ள இந்த ஒரு மாத கால இயக்கம், இளம் குடிமக்களுடன் நீடித்த உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, முதலீடு, செல்வம் ஈட்டுதல் என இளைஞர்களின் வளர்ச்சிப் பாதையில் எழும் மாறிவரும் நிதித் தேவைகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த முன்முயற்சி வங்கிகளுக்கு உதவும்.
முன்னுரிமைத் துறைக்கான கடன் வழங்குதலின் முக்கியத்துவத்தையும், தனிப்பட்ட இலக்குகள், துணை இலக்குகளில் ஏற்படும் பின்னடைவுகள் குறித்துக் கூர்ந்து கவனிக்க வேண்டியதன் அவசியத்தையும் நிதியமைச்சர் வலியுறுத்தினார். உரிய பயனாளிகளுக்கு உண்மையான, பயனுள்ள கடன் வரத்தை உறுதி செய்வதன் மூலம் பின்னடைவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், நுட்பமான கண்காணிப்பு, அதிகரித்துவரும் இடைவெளிகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பொருத்தமான வணிக உத்திகள் ஆகியவற்றின் மூலம் முன்னுரிமைத் துறைக்கான கடன் வழங்குதலில் தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300990®=3&lang=1
***
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2301063)
आगंतुक पटल : 8