குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சிறப்பான நிர்வாகத்திற்கும், தகுதியான பயனாளிகளுக்குச் சலுகைகள் சென்றடைவதற்கும் துல்லியமான தரவு அவசியம்: குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
18 AUG 2026 7:27PM by PIB Chennai
இந்தியப் புள்ளியியல் சேவையின் 2026-ம் ஆண்டுப் பிரிவு பயிற்சி அதிகாரிகள் இன்று குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். 16 பெண்கள் உட்பட மொத்தம் 34 இளம் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய குடியரசு துணைத்தலைவர், இந்தப் பெருமைமிக்க பணியில் இணைந்ததற்காக அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருவது, 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' நிலையிலிருந்து 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்ற நிலையை நோக்கிய இந்தியாவின் பயணத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
துல்லியமான மற்றும் நம்பகமான தரவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு சி பி ராதாகிருஷ்ணன், "தரவு சரியாக இல்லாவிட்டால், எந்தவொரு முடிவும் சரியாக இருக்காது," என்று கூறினார். தகுதி வாய்ந்த பயனாளிகள் முறையாக அடையாளம் காணப்படாவிட்டால், வளங்கள் வீணடிக்கப்படவும் வாய்ப்புள்ளது. "தரவுகள் துல்லியமாகச் சேகரிக்கப்பட்டு, சரியான நேரத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்," என்று கூறிய அவர், அடிப்படைத் தரவுகள் தவறாக இருந்தால், தேசிய அளவிலான சவால்களுக்குப் பொருத்தமான தீர்வுகளைக் கண்டறிவது கடினமாகிவிடும் என்றும் எச்சரித்தார்.
அரசுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த கள அனுபவம், துல்லியமான தரவு சேகரிப்பு, முறையான பராமரிப்பு, தரவுகளை உரிய நேரத்தில் சமர்ப்பித்தல் ஆகியவை மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். அரசுத் திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதில் புள்ளியியல் நிபுணர்களின் முக்கியப் பங்கைச் சுட்டிக்காட்டிய அவர், "ஒரு திட்டத்தின் வெற்றி அல்லது தோல்வி, தரவுகளின் தரத்தையே பெருமளவு சார்ந்திருக்கிறது," என்று குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிப்பிட்ட அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, அவற்றின் விரிவாக்கத்திற்கு கணிசமாகப் பங்களித்ததுடன், முறைசாராப் பொருளாதாரத்தைக் குறைக்கவும் உதவியுள்ளது என்றார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைவதற்கு ஒரு வலுவான புள்ளியியல் அமைப்பை உருவாக்குவதில், வளர்ச்சிக்கான தரவு, தரவு சார்ந்த முடிவெடுத்தல் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், தரவு நிர்வாகப் பிரிவின் தலைமை இயக்குநர் திரு பி ஆர் மெஷ்ராம், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பயிற்சி பெறும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300977®=3&lang=1
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2301011)
आगंतुक पटल : 7