பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றத்தின் 2026-ம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 JUL 2026 11:11AM by PIB Chennai

உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

மழைக்காலம் தனது நேர்மறையான தாக்கத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரும் தொடங்குகிறது. மழையாக இருந்தாலும் சரி, மழைக்காலக் கூட்டத்தொடராக இருந்தாலும் சரி, இரண்டும் சுறுசுறுப்பாக இயங்கும்போது, அவை மிகுந்த பலனளிப்பதாக மாறுகின்றன. மேலும், இரண்டும் பலன் தரும் வகையில் அமையும் போது, நாட்டின் நலனுக்கும் அனைத்து உயிரினங்களின் நலனுக்கும் பங்களிக்கின்றன.  இந்த நம்பிக்கையுடன், பருவமழையும் சிறக்க வேண்டும், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரும் அதேபோலப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

நண்பர்களே,

கடந்த ஒரு மாதத்தில், நமது நாடு பல மைல்கற்களை எட்டியுள்ளது, இது நாட்டுமக்களுக்குப் பெருமிதத்தை அளித்துள்ளது. இந்த சாதனைகள் தேசிய, சர்வதேச மற்றும் விண்வெளித் துறைகளிலும் பரவியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை இவை பெருமைக்குரிய தருணங்கள். கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடருக்குச் சற்று முன்பாக, ஒரு இந்தியக் குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். நேற்று முன்தினம் தான், இந்தியாவின் இளம் புத்தொழில் நிறுவனம் ஒன்று ஒரு அசாதாரண சாதனையை நிகழ்த்தியது. உலகின் மிகச்சில நாடுகளில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் இத்தகைய திறனை வெளிப்படுத்தியுள்ளன. நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் விண்வெளியில் இந்தியாவின் லட்சியங்களை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர், இது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஸ்கைரூட் என்ற புத்தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் குழுவின் சராசரி வயது 28 ஆண்டுகள் மட்டுமே என்று எனக்குக் கூறப்பட்டது. இந்த இளம் மனங்கள் தான் இதைச் சாத்தியமாக்கியுள்ளன. நான் 56 வயது இளைஞரைப் பற்றிப் பேசவில்லை; சராசரியாக 28 வயதே கொண்ட தனது குழுவுடன், விண்வெளித் துறையில் இந்தியாவின் கொடியை நாட்டியுள்ள ஒரு புத்தொழில் நிறுவனத்தைப் பற்றிப் பேசுகிறேன். அவர்கள் நிச்சயமாக நமது மனமார்ந்த பாராட்டுகளுக்கு உரியவர்கள். மிக முக்கியமாக, இத்தகைய சாதனைகள் நமது நாட்டிற்குப் அளப்பரிய நம்பிக்கையளிப்பதோடு, உலகில் ஒரு மரியாதைக்குரிய மற்றும் நம்பிக்கையான பங்காளியாக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றன.

நண்பர்களே,

இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல; இது ஒரு வலுவான செய்தி, இந்திய இளைஞர்களின் திறன்களும் லட்சியங்களும் விண்வெளியைப் போலவே எல்லையற்றவை என்பதற்கான செய்தி. நாட்டிற்கு இதைவிடச் சிறந்த உத்வேகம் வேறொன்றும் இருக்க முடியாது.

நண்பர்களே,

நாட்டின் இந்த வேகமான சீர்திருத்தங்களால் தான், நமது இளைஞர்களால் துணிச்சலான அடிகளை எடுத்துவைத்து வெற்றியடைய முடிகிறது.

நண்பர்களே,

சமீபத்தில், ராஜஸ்தானில் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, நாட்டின் மூன்றாவது செமிகண்டக்டர் ஆலை தொடங்கி வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான், பசுமை ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் தொடங்கப்பட்டது - இந்த வசதி உலகின் மிகச் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. ஆனால், இந்தியா தனது குடிமக்களுக்கு அர்ப்பணித்துள்ள ஹைட்ரஜன் ரயில், உலகிலேயே அதிக சக்திவாய்ந்த என்ஜின் கொண்டதாகவும், மிக நீளமானதாகவும் உள்ளது. நாட்டின் நலனுக்காக ஒரு லட்சியத்தோடு உழைக்கும் இந்தியாவின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பின் வெளிப்பாடே இதுவாகும்.

நண்பர்களே,

போர் போன்ற சூழ்நிலைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம், உலகமும் இதனால் கவலையடைந்துள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர், ஆற்றல் தேவைகளுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஜி, உரங்கள், வேதிப்பொருட்கள் ஆகிய அனைத்திலும் தடங்கல்கள் ஏற்பட்டன. இருப்பினும், இந்தியா 7.7 சதவீத வளர்ச்சியைக் கண்டு, உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாகத் தொடர்ந்து திகழ்கிறது. இது இந்தியாவின் வலிமையையும், புதிய உயரங்களை உற்சாகத்தோடும் ஆற்றலோடும் எட்டுவதற்கான அதன் உறுதியையும் பிரதிபலிக்கிறது. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் வேளையில், நாடு விரைவான வேகத்தைப் பெற்றுள்ளது; நாடாளுமன்றத்தின் உணர்வு இந்த வேகத்திற்குப் புதிய ஆற்றலைச் சேர்க்க முடியும். தேசிய இலக்குகளை அடைவதற்கு நேர்மறையான எண்ணம் மிகவும் அவசியமாகும். நமது அவையில் கட்சி வேறுபாடின்றி பல அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களின் அறிவும் ஞானமும் நாடாளுமன்றத்திற்கும் இந்த நாட்டிற்கும் தேவைப்படுகின்றன. எனவே, நாடாளுமன்றம் இயங்க வேண்டும், அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இது காலத்தின் தேவையும், இளைஞர்களின் லட்சியமுமாகும். தேசபக்தியும் தேசபக்திக் கொள்கைகளும் நிறைந்த குரல்கள் நாடாளுமன்றத்தில் தகுந்த தளத்தைப் பெற்று, குரல் எழுப்பி நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும். உண்மைகளும் தர்க்கங்களும் மேலோங்கும் இடத்தில், தடங்கல்களுக்கு இடமில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பலமான வாதங்களும், வலுவான உண்மைகளும் அமைதியாகவும் அதே சமயம் சக்தி வாய்ந்த குரல்களை உயர்த்த அனுமதிக்கின்றன.

நாடாளுமன்ற விவாதங்கள் உண்மைகளாலும் தர்க்கங்களாலும் செழுமைப்படும் என்றும், ஒவ்வொரு குரலுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், ஒவ்வொரு கருத்துக்கும் மரியாதை கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். இதுவே நாடாளுமன்றத்தில் நமது கடமையாகும். இந்த கூட்டத்தொடரில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுறுசுறுப்பாகப் பங்கேற்குமாறு அழைக்கிறேன். இன்று காலை சபாநாயகரும் சமூக ஊடகங்கள் வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்றார். அவருடன் இணைந்து நானும் எனது குரலை இணைத்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

வணக்கம்.

(Release ID: 2286456)

***

AD/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2292238) வருகையாளர் எண்ணிக்கை : 32