PIB Backgrounder
azadi ka amrit mahotsav

விளையாட்டுத் துறையில் வல்லரசாக உருவெடுத்துவரும் இந்தியா: கேலோ இந்தியா திட்டமும் சர்வதேச சாதனைப் பயணமும்

प्रविष्टि तिथि: 27 JUL 2026 5:01PM by PIB Chennai

கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், விளையாட்டுத் துறையில் இந்தியா அடைந்து வரும் தொடர் வெற்றிகள், விளையாட்டு உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீண்டகால முதலீடுகளைப் பிரதிபலிக்கின்றன. நாட்டின் 65 சதவீத மக்கள் தொகை 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உள்ள நிலையில், அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14 நிதியாண்டில் 1,219 கோடி ரூபாயில் இருந்து, நடப்பு நிதியாண்டில் 4,479.88 கோடி ரூபாயாகப் உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் விளையாட்டுச் சூழலை முற்றிலும் மாற்றியமைக்கும் முதன்மைத் திட்டமாக 'கேலோ இந்தியா' திகழ்கிறது. 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3,176 கோடி ரூபாய் மதிப்பிலான 349 விளையாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அடித்தட்டு அளவில் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க 1,067 கேலோ இந்தியா மையங்களும், 267 விளையாட்டு அகாடமிகளும் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 2,745 முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய உயர்தரப் பயிற்சிகளும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள், பல்கலைக்கழக விளையாட்டுகள், குளிர்கால விளையாட்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுகள், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பழங்குடியினர் விளையாட்டுகள் என தேசிய அளவிலான பல்வேறு போட்டிகள் மூலம் 63,000-க்கும் மேற்பட்ட இளம்திறமையாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிக எண்ணிக்கையில் பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் 'டாப்ஸ்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் முன்னணி வீரர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகள், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள், 50,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இதன் பயனாக 2016 ரியோ ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை மட்டுமே வென்ற இந்தியா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களையும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தது. மேலும், 2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 29 பதக்கங்களையும், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனையாக 107 பதக்கங்களையும் இந்தியா குவித்தது. விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியாவை சர்வதேச மையமாக மாற்றும் நோக்கில் 2026-27 பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் 124 வீரர்களைக் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இத்தகைய விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், நிதியுதவிகள் ஆகியவை வரும் 2036-ம் ஆண்டிற்குள் உலகளவில் விளையாட்டுத்துறையில் 10 முன்னணி நாடுகளின் பட்டியலிலும், 2047-ம் ஆண்டிற்குள் முதல் 5 இடங்களுக்குள்ளும் இந்தியாவை இடம்பெறச் செய்யும் இலக்கை நோக்கி வழிநடத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289962&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2290111) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam