பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-நியூசிலாந்து பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நிகழ்த்திய தொடக்க உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUL 2026 9:01AM by PIB Chennai

மாண்புமிகு பிரதமரே,

உங்கள் நட்பார்ந்த உரையாடலுக்கும் வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று இரவு நீங்கள் விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றதே ஒரு மிக முக்கிய நற்செயலாகும். இதற்காக எனது சிறப்பு நன்றியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

மேலும், உங்களது அமைச்சர் இரவு முழுவதும் என்னுடன் இருந்ததற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் இந்தியப் பிரதமர் நியூசிலாந்துக்கு வருகை தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். உங்களின் பொருளாதாரத் தலைநகரில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம், இந்தியா-நியூசிலாந்து உறவுகளுக்கு ஒரு புதிய வேகத்தை அளிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளீர்கள். இதற்காக எனது மனமார்ந்த நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியூசிலாந்து மக்களிடையே வந்து, இந்தியா மீது அவர்கள் காட்டும் அன்பையும் ஆத்மார்த்தமான வரவேற்பையும் நேரில் காண்பது மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது. இது என் இதயத்தைத் தொடுகிறது. இதற்காகவும் எனது மனமார்ந்த நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது உறவில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். இது நமது பந்தத்தில் ஏற்பட்டுள்ள புதிய ஆற்றலையும், நட்பிற்கான நமது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நீங்கள் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, நாம் தாராள வர்த்தக ஒப்பந்த நடைமுறையைத் தொடங்கினோம். அவ்வளவு குறுகிய காலத்தில், இந்தத் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை முன்னோக்கி எடுத்துச் சென்று அதை நிஜமாக்குவதற்காக ஒட்டுமொத்த நியூசிலாந்தும் ஒன்றிணைந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய வெற்றியை அடைவது உலகில் ஒரு அரிய சாதனையாகும். இதற்காக, உங்கள் தலைமைத்துவத்திற்கும் முயற்சிகளுக்கும் உங்களுக்கும், உங்கள் அரசாங்கத்திற்கும், உங்களது முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு ஹோலி பண்டிகையின் போது நீங்கள் இந்தியாவிற்கு வருகை தந்தீர்கள். ஹோலியின் வண்ணங்கள் சிறப்புமிக்க முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், உங்களது வருகை நமது உறவிலும் புதிய வண்ணங்களைச் சேர்த்தது; அந்த உணர்வை நாம் இணைந்து அனுபவித்தோம். இன்று நாம் ஒரு உத்திசார் பங்களிப்பு  கட்டமைப்புக்குள் நமது உறவை வடிவமைப்பதை நோக்கி நகர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த மைல்கல் இன்னும் மிகுந்த ஆற்றலுடனும், ஆழமான நம்பிக்கையுடனும் நாம் முன்னோக்கிச் செல்ல நமக்கு ஊக்கமளிக்கும்.

மாண்புமிகு பிரதமரே,

ஜனநாயக மதிப்புகள் மீதான நமது வலுவான நம்பிக்கை நம்மை இயல்பான கூட்டாளிகளாக்குகிறது. சொல்லப்போனால், நாம் ஒருவருக்கொருவர் ஏற்றவாறு அமைந்திருப்பது போல உள்ளது. மேலும், இரு கடல்சார் நாடுகளாக, நமது நெருங்கிய ஒத்துழைப்பானது இந்தோ-பசிபிக் பகுதிக்குப் புதிய பலத்தை அளிக்கிறது; அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்ற நமது பங்கீட்டு இலக்குகளை அடைவதற்கு நமது உறவு புதிய ஆற்றலைக் கொண்டுவர முடியும்.

எனது இந்த வருகை நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான நமது பங்களிப்பை நாம் இணைந்து மேம்படுத்துவோம் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு வகையில், நாம் அமைதிக்காக நின்று, அமைதிக்காக உழைத்து, அமைதியின் வழியே உலக நல்வாழ்வை நோக்கி நகரும் ஒரு தூண்டுகோலாக செயல்பட முடியும்.

உங்கள் அன்பான வரவேற்பிற்கும், பாசத்திற்கும், எனக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத் துறப்பு : இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் ஆற்றப்பட்டது.

 

(Release ID: 2283537)

***

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2288827) வருகையாளர் எண்ணிக்கை : 26