விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த தோதாபுரி மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு, மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானின் முக்கிய முன்முயற்சி

प्रविष्टि तिथि: 22 JUL 2026 6:26PM by PIB Chennai

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவில் தோதாபுரி ரக மாம்பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானம் குறைவது மற்றும் மண்டிகளில் அவற்றின் விலை சரிவது குறித்த தொடர்ச்சியான புகார்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அவரால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசித்த பின், தோதாபுரி மாம்பழங்களின் சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் முறைகளில் பரவலான மேம்பாடுகளைக் கொண்டுவருவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

 

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் தோதாபுரி ரக மாம்பழங்களைப் பயிரிடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை ஆய்வு செய்வதற்காக, திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். உயர்மட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தோதாபுரி மாம்பழங்களுக்கான ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவது குறித்த முக்கிய முடிவுகளை அப்போது அவர் அறிவித்தார். மாந்தோப்புகள், சந்தைகள் மற்றும் பழக்கூழ் தயாரிப்பு நிலையங்களைப் பார்வையிட்டு, அக்குழுவினர் கள நிலவரங்களைச் சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில், வெறும் அறிக்கையைத் தயாரிப்பதுடன் விவகாரம் முடிந்துவிடாது என்றும், கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் சந்தை ஆகிய மூன்று நிலைகளிலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.

 

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் எம்.எல். ஜாட் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆண்டு தோதாபுரி ரக மாம்பழங்களின் விலை சரிவுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களை குழு சுட்டிக்காட்டியது. பதப்படுத்தும் திறன் மற்றும் கொள்முதல் ஏற்பாடுகளுக்கு இடையே சரியான நேரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாமை, உள்நாட்டுச் சந்தையில் மாம்பழம் சார்ந்த பானங்களில் உண்மையான பழக்கூழ் அளவு குறைவாக இருப்பது மற்றும் உலகளாவிய சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

 

தேவையான தரநிலைகள் மற்றும் வரி அமைப்பு குறித்து ஒருமித்த கருத்தை எட்டும் வகையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), ஜிஎஸ்டி கவுன்சில், நிதி அமைச்சகம், உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், வேளாண் அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகிய தொடர்புடைய அமைச்சகங்களுக்கு இடையே ஒரு அமைச்சகங்கள் அளவிலான கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய அமைச்சர் திரு சவுகான் உத்தரவிட்டார்.

 

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), ஐசிஏஆர் மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், தோதாபுரி ரக மாம்பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் நேரடியாக உண்ணக்கூடிய மாம்பழங்களுக்கான ஒருங்கிணைந்த ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்தல் உத்தி ஒன்று உருவாக்கப்படும் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

 

தோதாபுரி மாம்பழம் சார்ந்த ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியையும் விவசாயிகளை மையமாகக் கொண்டதாக மாற்ற மத்திய அரசு விரும்புவதாக திரு சிவராஜ் சிங் சவுகான் தெளிவுபடுத்தினார். மத்திய மற்றும் மாநில அரசுகள், ஐசிஏஆர், அபேடா, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் பதப்படுத்தும் தொழில் துறை ஆகியவை கூட்டாகப் பொறுப்பேற்றுச் செயல்படும் என்றும், ஜிஎஸ்டி, உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் மாநிலக் கொள்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு தெளிவான செயல் திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள் முழுமையான முறையில் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவில் உள்ள தோதாபுரி மாம்பழம் பயிரிடும் விவசாயிகளின் வருமானத்தில் நிரந்தர உயர்வு ஏற்படும் என்றும், உலகச் சந்தையில் இந்திய மாம்பழங்கள் இன்னும் வலுவான அடையாளத்தை உருவாக்கக் கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287885&reg=48&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2288106) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Telugu , Kannada