மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியாவின் 11 ஆண்டுகள் இ சராஸ் தளத்தில் டிஜிட்டல் வர்த்தகத்தின் மூலம் கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு

प्रविष्टि तिथि: 11 JUL 2026 6:28PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா திட்டம் 11 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் , இந்தியா அனைத்துத் துறைகளிலும், அனைவரையும் உள்ளடக்கிய வாய்ப்புகளை உருவாக்குவதற்காக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த மாற்றத்தின் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் , நாடு முழுவதும் உள்ள கிராமப்புற உற்பத்தியாளர்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் அரசு ஆதரவு பெற்ற டிஜிட்டல் வர்த்தகத் தளமான ' இ-சராஸ்' (eSaras) ஆகும். மின்னணுவியல் - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன், ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள இ-சராஸ், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் தளம், சுய உதவிக் குழுக்கள், பெண் தொழில்முனைவோர், உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஆகியோர் தங்கள் தயாரிப்புகளை நம்பகமான டிஜிட்டல் சந்தை மூலம் சந்தைப்படுத்த உதவுகிறது. இது நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்கிறது.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராமப்புற தொழில்முனைவோரை ஆதரிக்கும் ஒரு முக்கிய டிஜிட்டல் வர்த்தக தளமாக இ-சராஸ் உருவெடுத்துள்ளது. இந்தத் திட்டம் இப்போது 8.99 கோடிக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களை உள்ளடக்கி, உலகின் மிகப்பெரிய பெண்கள் தலைமையிலான வாழ்வாதாரச் சூழல் அமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் தளத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.  கிராமப்புற நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட சராஸ் மேளாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

 டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வாழ்வாதார மேம்பாட்டுடன் இணைப்பதன் மூலம், இ-சராஸ் (eSaras) தளம், கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு குடும்ப வருமானத்தை வலுப்படுத்தவும், பாரம்பரிய திறன்களைப் பாதுகாக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கவும் உதவுகிறது.

இ-சராஸ், இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது. பிரபலமான தயாரிப்பு வகைகளில் ஊறுகாய்கள், அப்பளம், தேன், மசாலாப் பொருட்கள், சிறுதானிய அடிப்படையிலான உணவுப் பொருட்கள், மூங்கில், பிரம்பு கைவினைப் பொருட்கள், மர கைவினைப் பொருட்கள், சுடுமண் பொருட்கள், கைத்தறி புடவைகள், சால்வைகள், பருத்தி ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், மூலிகை சோப்புகள், அத்தியாவசிய எண்ணெய்கள், பால் பொருட்கள், நெய், கம்பளிப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இந்தத் தளம், சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் கால்நடை வளர்ப்பு, அது சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தயாரிப்புகளையும் ஊக்குவிக்கிறது. இது கிராமப்புறத் தயாரிப்புகளுக்கு அதிக சந்தை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

மேலும் தகவல்களுக்கு, https://www.esaras.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283704&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2283747) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam