பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 12-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 21 JUN 2026 8:25AM by PIB Chennai

மாண்புமிகு ஆளுநர் ஆர். என். ரவி அவர்களே, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அவர்களே, மத்திய அரசு அமைச்சரவையில் எனது சக ஊழியர் பிரதாப் ராவ் ஜாதவ் அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் மற்ற முக்கிய  பிரமுகர்களே, கொல்கத்தாவில் இந்த நிகழ்வுக்காக திரண்டுள்ள அனைத்து பங்கேற்பாளர்களே, இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து இந்த யோகா கொண்டாட்டத்தில் இணைந்துள்ள நண்பர்களே, மற்றும் எனது அன்பிற்குரிய சக நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

ஜூன் 21ம் தேதி என்பது பூமியின் சில பகுதிகளில் பகல் பொழுதின் அதிகபட்ச கால அளவு கொண்ட நாளாகும். மேலும், சர்வதேச யோகா தினத்தின் காரணமாக, ஜூன் 21ம் தேதி உலகின் மிகப்பெரிய கூட்டு கொண்டாட்டத்தின் நாளாகவும் மாறியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிருந்து யோகா குறித்த அற்புதமான காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில், இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரையிலும், வடகிழக்கு மற்றும் கிழக்கில் வங்காளம் முதல் மேற்கே சௌராஷ்டிரா வரையிலும், ஒட்டுமொத்த தேசமும் யோகாவின் ஆற்றலாலும் விழிப்புணர்வாலும் நிறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த நாடும், ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்திருப்பதாகத் தெரிகிறது, அதுவே யோகாவின் உண்மையான சக்தியாகும். யோகா அனைவரையும் ஒன்றிணைக்கிறது, யோகா அனைவரையும் ஒன்றாகக் கொண்டு வருகிறது. இந்த நன்னாளில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுமைக்கும், அனைத்து மனிதகுலத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று, யோகா தினத்தை முன்னிட்டு, கொல்கத்தா மக்கள், குறிப்பாக வங்காளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 'தூய்மைக்கான யோகா' குறித்து நான் பாராட்ட விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான முன்னெடுப்பு –  தூய்மையே வரவேற்பு திட்டத்திற்காக இங்கே மேற்கொள்ளப்பட்டுள்ள நீடித்த முயற்சிகளும், குடிமைப் பணிகளும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக மாறியுள்ளன.

நண்பர்களே,

யோகா தினத்தை முன்னிட்டு வங்காளத்தில் இருப்பது உண்மையிலேயே சிறப்பானது. பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற புனிதர்கள் பிறந்த, சுவாமி விவேகானந்தர் யோகாவை உலகம் முழுமைக்கும் அறிமுகப்படுத்திய, மகரிஷி அரவிந்தர் போன்ற சிறந்த யோகிகள் அவதரித்த, லஹிரி மகாசயர் யோகக் கலையை புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்ற இந்த வங்காளத்தின் புனித மண்ணில், கூட்டு யோகா நிகழ்வை அனுபவிப்பது ஒரு தனித்துவமான ஆன்மீக உணர்வைத் தருகிறது. இந்த மண்ணில் பிறந்த குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், மனிதனின் அடையாளம் தனித்து இருப்பதில் இல்லை, தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் இணைவதில்தான் உள்ளது என்று நம்பினார். இந்த இணைப்பே யோகாவின் சாரமாகும். மகரிஷி அரவிந்தரும் கூறியது போல – நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ, நம் வாழ்க்கை முழுவதுமே ஒரு யோகாதான். யோகா நமது இயல்பின் ஒரு பகுதியாக மாறும்போது, அது மனித ஒற்றுமைக்கான அடித்தளமாக அமைகிறது.

நண்பர்களே,

யோகா என்பது உடற்பயிற்சிக்கான வழிமுறை மட்டுமல்ல. யோகா ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவிற்கு மட்டும் உரியதும் அல்ல. இந்தியாவில், யோகா என்பது மனித வாழ்வில் ஒரு ஒளி, அது விழிப்புணர்வுடனும் ஆற்றலுடனும் இணைவதாகும் என்பதை நாம் அறிவோம், கண்டுமிருக்கிறோம். அதனால்தான், இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகாஎன்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தாலும், நம்மால் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்க முடியும் - அதற்கு யோகா வழிகாட்டுகிறது.

நண்பர்களே,

'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்று நாம் பேசும்போது, வயது மனித ஆற்றலைக் குறைத்துவிடாதபடி நாம் செயல்பட முடியும் என்று அர்த்தம். மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சி அடைய யோகா உதவ முடியும். 20 வயதில் இருந்ததை விட 40 வயதில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். 30 வயதில் இருந்ததை விட 50 வயதில் அதிக ஆற்றலுடன் இருப்பது நமது இலக்காக இருக்க வேண்டும். 50 வயதில் இருந்ததை விட 70 வயதில் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைத் தடுக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பது நமது இலக்காக இருக்க வேண்டும். இங்கேதான் யோகா நமக்கு உதவுகிறது. இது நம் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் மாற்ற உதவுகிறது. இது நமது ஆற்றல் அளவை உயர்வாக வைத்திருக்கிறது, மன அழுத்தமற்ற அமைதியான வாழ்க்கையைப் பராமரிக்கவும், வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைத் தள்ளி வைக்கவும் உதவுகிறது. மேலும், வழக்கமான பயிற்சியின் மூலம், நமது உடல் மற்றும் மனதை வாழ்நாள் முழுவதும் கவனிப்பவர்களாக இருக்க யோகா நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நம்மைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகத் தெரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக நம்மால் நம்மை நிர்வகிக்க முடியும். அதனால்தான், 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா'. இந்தக் கருப்பொருள் முதியவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வயதுடைய மக்களுக்கும் உரியதாகக் கருதப்பட வேண்டும்.

நண்பர்களே,

கீதையில், பகவான் கிருஷ்ணர் யோகாவைப் பற்றிக் கூறும்போது: "யுக்த ஆஹார விஹாரஸ்ய, யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு, யுக்த ஸ்வப்னாவபோதஸ்ய, யோகோ பவதி துக்கஹா" என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள், சமநிலையான உணவு மற்றும் பொழுதுபோக்கு, சமநிலையான செயல்பாடுகள் மற்றும் கடமைகள், சமநிலையான உறக்கம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம், யோகா துயரங்களைப் போக்குவதாக அமைகிறது. சமநிலைதான் யோகாவின் அடித்தளம். சமநிலைதான் நம் வாழ்வின் அடித்தளமும்கூட. இருப்பினும், நவீன காலத்தில், பெரும்பாலான மக்கள் வாழ்வில் சமநிலையின்மையால் சிரமப்படுகிறார்கள். யோகா நமக்கு சமநிலையான வாழ்க்கை முறையைக் கற்றுத் தருகிறது. யோகா நமக்கு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற வழிமுறைகளைக் காட்டுகிறது. நமது உடலை முறையாக வழிநடத்தக் கற்றுக்கொள்ளும்போது, ஆரோக்கியம் என்பது நமது இயல்பான நிலையாகிவிடுகிறது.

நண்பர்களே,

யோகா நமது உடல் ஆரோக்கியத்தை மட்டும் மையமாகக் கொண்டதல்ல. மன ஆரோக்கியத்திலிருந்து உடல் ஆரோக்கியத்திற்குச் செல்லும் பாதையை யோகா காட்டுகிறது. அதனால்தான் யோகாவில் "யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு" என்று கூறப்படுகிறது - அதாவது, நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது. இந்த விழிப்புணர்வு நமது வாழ்வில் அமைதிக்கான ஊற்றாக மாறுகிறது, மேலும் இது உலக அமைதிக்கான பாதையையும் திறக்கிறது. அதனால்தான், இன்றைய காலத்தில் யோகா நமது தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கு மட்டுமல்ல, உலகின் சிறந்த எதிர்காலத்திற்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

நண்பர்களே,

சர்வதேச யோகா தினத்தில், மில்லியன் கணக்கான மக்கள் யோகாவுடன் இணைகிறார்கள். ஆனால், இந்த நாள் நமது கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. யோகா என்பது ஒரே ஒரு நாளுக்கு மட்டும் கட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது, யோகா என்பது ஏதோ ஒரு நிகழ்வோடு முடிந்துவிடக்கூடாது என்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம். யோகாவை நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், நமது குடும்பங்களின் ஒரு பகுதியாகவும், வருங்கால சந்ததியினரின் ஒரு பகுதியாகவும் மாற்றுவோம்.

நண்பர்களே,

இந்தத் திசையில், இந்த ஆண்டு 'யோகா 365' என்ற முன்னெடுப்பும் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதன்கீழ், 100 நாள் ஆன்லைன் யோகா பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது; இது முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களின் பங்கேற்பைக் கண்டது. 130 நாடுகளைச் சேர்ந்த 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்றனர்.

நண்பர்களே,

சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்போது, நாடு அதிகத் திறனுடனும், செழிப்புடனும், தன்னம்பிக்கையுடனும் திகழும். உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்: "சர்வே பவந்து சுகின: ஸர்வே ஸந்து நிராமயா:" (அனைவரும் நலமுடன் வாழட்டும், அனைவரும் நோயின்றி வாழட்டும்). இதனுடன், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது.

(Release ID: 2275922)

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2282875) आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam