பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரிஸில் நடைபெற்ற 'விவாடெக் 2026' மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 18 JUN 2026 7:00PM by PIB Chennai

சிறப்பு விருந்தினர்களே,

புத்தாக்கக் கலைஞர்களே, தொழில்துறை தலைவர்களே, தொழில்நுட்ப ஆர்வலர்களே,

புத்தொழில் நிறுவனங்களின்  பிரதிநிதிகளே,

பெரியோர்களே, சகோதர சகோதரிகளே,

நமஸ்கார்!

போன்ஜூர் (Bonjour - பிரெஞ்சு மொழியில் வணக்கம்)!

விவாடெக்கின் 10வது பதிப்பிற்காக நான் பாரிஸில் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வாகும். விவாடெக்கின் இந்த வெற்றிக்கு அதிபர் மக்ரோனுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

2026ம் ஆண்டு இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரு சிறப்பான ஆண்டாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம். இந்த ஒப்பந்தம் நமது வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்தும். மேலும், இது திறமை, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாப் பரிமாற்றத்திற்கான பல புதிய பாதைகளைத் திறந்துவிடும்.

இந்த ஆண்டு 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு' தொடங்கப்பட்டதன் மூலம், இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தொழில்நுட்பச் சூழல் மண்டலங்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான பாலமாக பிரான்ஸ் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நீஸ் நகரில் நடைபெற்ற 'பாரத் இன்னோவேட்ஸ்' முதல், இன்று பாரிஸில் நடைபெறும் இந்த விவாடெக் வரை, நமது புத்தொழில் நிறுவனங்கள் பல புதிய கூட்டணிகளை உருவாக்கி வருகின்றன.

நண்பர்களே,

2021-ல் நான் விவாடெக் மாநாட்டில் உரையாற்றியபோது, உலகம் கோவிட்-19 ஏற்படுத்திய தடங்கல்களை எதிர்கொண்டிருந்தது. இன்று, உலகம் பிற வகையான தடங்கல்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 2021 விவாடெக் மாநாட்டில் நான் பகிர்ந்த செய்தியை இப்போதும் மீண்டும் வலியுறுத்துகிறேன்: மரபு சார்ந்த வழிமுறைகள் தோல்வியடையும் இடங்களில், புத்தாக்கம் உதவ முடியும்.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில், இந்தியா தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட ஒரு விரைவான மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள அமைப்பை உருவாக்குவதில் தொடங்கி, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளங்கள் வரை நாம் முன்னேறியுள்ளோம். நிதி உள்ளடக்கம், கல்வி, தொலைநிலை மருத்துவ சேவை, விவசாயம் மற்றும் பல துறைகளில் தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் நாம் பயன்படுத்தி வருகிறோம்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை எடுத்துக்கொள்வோம். நமது ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை இடைமுகம்  காரணமாக, இன்று உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதியளவு இந்தியாவில் நடக்கின்றன. இப்போது பிரான்ஸிலும் நீங்கள் ஈபிள் கோபுரம் அல்லது பாரிஸ் விமான நிலையத்தில் யுபிஐ பயன்படுத்தலாம்.

இத்தகைய உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பொதுச் சொத்துகளுக்கு நம்மிடம் பல உதாரணங்கள் உள்ளன. டிஜிலாக்கர் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் ஆவணப் பைகளில் ஒன்றாகும். டிஜிலாக்கர் மூலம், எழுபது கோடி பயனர்கள் எந்நேரமும், எங்கிருந்தும் அசல் ஆதாரங்களில் இருந்து அதிகாரபூர்வமான ஆவணங்களை அணுக முடிகிறது. டிஜிலாக்கர் தளத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தரப்படுத்தப்பட்ட ஆவணங்களை நாங்கள் இணைத்துள்ளோம். இந்தியாவில் இனி உங்கள் ஓட்டுநர் உரிமம் அல்லது வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்ற அசல் ஆவணங்களைச் சேமித்து வைத்துத் தேட வேண்டிய அவசியம் இல்லை.

மற்றொரு உதாரணம் 'கதிசக்தி' தளமாகும். தொழில்நுட்பத்தின் உதவியால், 1500க்கும் மேற்பட்ட புவியியல் தரவு அடுக்குகளை ஒரே ஜி.ஐ.எஸ் அடிப்படையிலான வரைபடத்தில் ஒருங்கிணைத்துள்ளோம். உள்கட்டமைப்பு பணிகளுக்காக, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த திட்டமிடல் தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இப்போது, பல மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட திட்ட ஆய்வுகள், சில வாரங்களிலேயே முடிந்துவிடுகின்றன.

நண்பர்களே,

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் 'சுவாமித்வா' திட்டத்தைத் தொடங்கினோம். தொழில்நுட்பம் எவ்வாறு கண்ணியத்தையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கிராமப்புறக் குடும்பங்களுக்குச் சொத்து ஆவணங்களை வழங்க, ட்ரோன்கள், புவிசார் மேப்பிங் மற்றும் நவீன ஆய்வுத் தொழில்நுட்பம் ஆகியவற்றை 'சுவாமித்வா' ஒருங்கிணைக்கிறது. சுமார் இரண்டு லட்சம் கிராமங்களில், முப்பத்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான சொத்து அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை நிதிச் சொத்துக்களாகப் பயன்படுத்த உதவுகிறது.

அரசு பொதுநலத் திட்டங்களை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தும் அதே வேளையில், நமது புத்தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் மனித வாழ்க்கையை மாற்றியமைத்து வருகின்றன.

நண்பர்களே,

சரளாபென் எனப்படும் செயற்கை நுண்ணறிவு  செயலி, லட்சக்கணக்கான பெண் பால் பண்ணையாளர்களுடன் அவர்களின் சொந்த மொழியிலேயே பேசி, கால்நடை ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை குறித்த நிபுணர் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்தியப் பெண்கள் உரமிடுதல் மற்றும் பயிர் கண்காணிப்புக்காக ட்ரோன் விமானிகளாகப் பயிற்சி பெற்று வருகின்றனர். செயற்கைக்கோள் தரவுகள், லட்சக்கணக்கான மீனவர்களுக்கு மீன் வளம் மிகுந்த இடங்களைக் கண்டறிய வழிகாட்டி, அவர்களின் எரிபொருள் செலவைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், மீன்பிடி அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன.

நமது தொழில்நுட்பத் தீர்வுகள் அடித்தட்டு அளவில் செழுமையைக் கொண்டு சேர்க்கின்றன.

நண்பர்களே,

விண்வெளித் தொழில்நுட்பம் முதல் அணுசக்தி வரை, மனிதத் திறனின் எல்லைகளை நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம்.

நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது. சமீபத்தில், இந்தியாவின் முன்மாதிரி வேகமான நியூட்ரான் உலை செயல்பாட்டு நிலையை எட்டியது. இது, நமது பரந்த தோரியம் இருப்புக்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நமது மூன்று கட்ட அணுசக்தி தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு நம்மை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது.

 

நண்பர்களே,

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களுடன் (Start-ups), இந்தியா உலகின் மிகவும் துடிப்பான சூழல் மண்டலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. நீங்கள் அனைவரும் இந்திய அரங்கை பார்வையிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அங்கு, இந்தியாவின் அபரிமிதமான ஆற்றலை நீங்கள் உணர முடியும். உலகின் முதல் ஒற்றை முப்பரிமாண அச்சிடப்பட்ட ராக்கெட் இன்ஜின், மேம்பட்ட மரபணு பொறியியல் சிகிச்சைகள், புற்றுநோய் மற்றும் பிற தீவிர நோய்களைக் கண்டறியும் அல்லது சைபர் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகள், ரோபோக்கள், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் போக்குவரத்து தீர்வுகள் என அனைத்தையும் நீங்கள் இந்திய அரங்கில் காணலாம். அனைத்துத் துறைகளிலும் நமது புத்தொழில் நிறுவனங்கள் ஊக்கமளிக்கும் வகையில் புத்தாக்கங்களைச் செய்து வருகின்றன.

நண்பர்களே,

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, புத்தாக்கத்துடன் சேர்ந்து முக்கியமானது அதற்கான அணுகல் தொழில்நுட்பம் ஜனநாயகப்படுத்தப்படும்போது மட்டுமே அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த மாற்றங்களின் காலகட்டத்தில், தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று இந்தியா நம்புகிறது.

செயற்கை நுண்ணறிவை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும், அணுகலை விரிவுபடுத்த வேண்டும், வளர்ச்சியைத் தூண்ட வேண்டும், மேலும் ஆரோக்கியமான கிரகத்தைப் பேணவும் நமக்கு உதவ வேண்டும். விவாடெக் 2026-ல் 'செயற்கை நுண்ணறிவு நாட்டு கூட்டாளியாக' நமது பங்கேற்பு இந்த நோக்கத்தையே பிரதிபலிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஏஐ என்றால் "அனைவரையும் உள்ளடக்கியது" என்று பொருள்.

நண்பர்களே,

இந்தியா ஒரு திறந்த சமூகமாகும், மேலும் இது உலகின் மிகப்பெரிய திறமையாளர்களைக் கொண்ட களமாகும். நாங்கள் வணிகம் செய்வதை எளிதாக்க விதிமுறைகளை மாற்றி  வருகிறோம்.  புத்தாக்கம் முதல் வணிகமயமாக்கல் வரை, 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான இலக்கு ஊக்கத்தொகைகள் மூலம் தனியார் நிறுவனங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். உலகின் மிகவும் மலிவான தரவு மற்றும் குறைந்த கட்டண பசுமை ஆற்றலையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.

எங்கள் அணுகுமுறை தெளிவானது. எங்கள் அரசு வழிவகுக்கும், தொழில் துறை புத்தாக்கங்களைச் செய்யும். புத்தொழில் நிறுவனங்கள் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும், உலகளாவிய கூட்டாளிகள் எங்களுடன் இணைந்து வளர்ச்சியை விரிவுபடுத்துவார்கள். நாம் அனைவரும் இணைந்து, முன்னெப்போதையும் விட வேகமாக முன்னேறுவோம். இந்த அறையில் உள்ள அனைவரும் முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுங்கள், அனைவருக்கும் நன்மைகளைப் பெற்றுத் தாருங்கள்.

நன்றி. மிக்க நன்றி.

(Release ID: 2274805)

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2282729) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam