பிரதமர் அலுவலகம்
பிரான்சில் நடைபெற்ற 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வில் பிரதமர் நிகழத்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
14 JUN 2026 4:36PM by PIB Chennai
மேன்மைக்குரியவரே, எனது அன்பிற்குரிய சகோதரர், அதிபர் மேக்ரான் அவர்களே!
துணைவேந்தர்களே, தொழில் நிறுவனத் தலைவர்களே மற்றும் கண்டுபிடிப்பாளர்களே,
போன்ஜூர் (Bonjour)! (வணக்கம்!)
'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டம் மகத்தான வெற்றியைப் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
உலகில் உள்ள நாடுகள் தங்களுக்குள் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன; நாடுகளுக்கிடையே பல உத்திசார்ந்த கூட்டணிகளும் உள்ளன. ஆனால், ஒரு சில உறவுகள் வெறும் வணிக நலன்களைத் தாண்டி, பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படுகின்றன. இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவு, அத்தகைய ஒரு மிகச்சிறந்த கூட்டாகும்.
இந்த உறவு, ஆழமான பிணைப்பையும் அசைக்க முடியாத உறுதியையும் கொண்டது. இது புத்தாக்கத்தையும் உத்வேகத்தையும் உள்ளடக்கியது. நாம் பகிரும் கொள்கைகள் மற்றும் ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையின் அடித்தளத்தில்தான் இந்த உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த உறுதியான உறவின் அடிப்படையில்தான், கடந்த சில ஆண்டுகளாக நாம் புதிய முன்னெடுப்புகளை ஒன்றிணைந்து தொடங்கியிருக்கிறோம். புதிய சிந்தனைகளை வளர்த்தெடுத்திருக்கிறோம்; மேலும், மனிதகுலம் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண, நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி ஆகட்டும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான உரையாடல்கள் ஆகட்டும், அல்லது பாதுகாப்பு முதல் நிலைத்தன்மை வரை நமது இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகட்டும், மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண நமது இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்கம் தொடங்கப்பட்டது. இன்று, 'பாரத் இன்னோவேட்ஸ்' தொடக்க விழாவையும் பிரான்சுடன் இணைந்து நடத்துவதில் நாம் அனைவரும் சமமான மகிழ்ச்சி கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட எனது நண்பர், அதிபர் மேக்ரான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் மேக்ரான் அவர்களே, சமீபத்தில் நீங்கள் இந்தியா வந்திருந்தபோது, இந்த நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும் பிரான்சும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான அடிதான் இந்த முன்னெடுப்பு என்பதை இன்று என்னால் பெருமையுடன் கூற முடியும்.
'பாரத் இன்னோவேட்ஸ்' தளம், இந்தியத் திறமைக்கும் ஐரோப்பிய முதலீட்டிற்கும் இடையிலான ஒரு பாலமாக உருவெடுத்து வருகிறது. இது இந்தியாவின் இளம் திறமையாளர்கள், ஐரோப்பிய நிபுணத்துவத்துடன் இணைவதற்கான வாய்ப்பைப் பெறும் ஒரு களமாகும்.
நண்பர்களே,
இன்று, 21-ம் நூற்றாண்டின் இந்தியா மகத்தான மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்தியா ஒரு புத்தொழில் புரட்சியை கண்டு வருகிறது. இந்தப் புரட்சியில், புதிய சிந்தனை கொண்ட இந்தியாவின் இளைஞர்கள், மனிதகுலத்தின் நன்மைக்காகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடி வருகிறார்கள். நமது இளம் கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்லும் தளமாக 'பாரத் இன்னோவேட்ஸ்' திகழ்கிறது. இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தில்லி வாரியத்தின் தலைவரான எனது நண்பர் திரு. ஹரிஷ் சால்வே அவர்கள், இந்த முன்னெடுப்பை ஒருங்கிணைப்பதில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். அவருடைய மற்றும் ஒட்டுமொத்த குழுவினரின் முயற்சிகளுக்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று இங்கே ஏராளமான இளம் தொழில்முனைவோர் கூடியிருக்கிறார்கள். இவர்களிடம் இந்தியாவின் எதிர்காலத்தின் ஒரு பிம்பத்தைக் காண முடிகிறது. இந்திய இளைஞர்களின் தன்னம்பிக்கையைப் பார்க்க முடிகிறது. புதிய இந்தியாவின் ஆற்றலையும் நம்மால் காண முடிகிறது.
இந்தியா இன்று தீர்வுகளை நுகரும் நாடாக மட்டுமல்லாமல், தீர்வுகளை வழங்கும் நாடாக உருவெடுத்து வருகிறது. இங்கே சிலர் செயற்கை நுண்ணறிவின் மூலம் கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைக்க உழைக்கிறார்கள்; மற்றவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறார்கள். சில இளம் கண்டுபிடிப்பாளர்கள் பொலிவுறு நகரங்கள், மேம்பட்ட உற்பத்தி மற்றும் புதிய மூலப்பொருட்கள் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். இன்னும் சிலர் பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்கள் மூலம் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்கிறார்கள். அதே வேளையில், பல புத்தொழில்கள் பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன.
உங்கள் திறன்களைக் கவனிக்கும்போது, நான் இப்படிச் சொல்ல விரும்புகிறேன்: பாரதம் அளவீட்டுடனும் வேகத்துடனும் புத்தாக்கம் செய்கிறது. பாரதம் நிலையான எதிர்காலத்திற்காகப் புத்தாக்கம் செய்கிறது. மேலும், பாரதம் ஒட்டுமொத்த உலகிற்காகவும் புத்தாக்கம் செய்கிறது.
நண்பர்களே,
இன்று, பல துணிகர முதலீட்டாளர்களும் தொழில் நிறுவனத் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களின் முன்னிலையில், இந்தியாவிலிருந்து வந்துள்ள இந்த இளம் பங்கேற்பாளர்களை நான் குறிப்பாகப் பாராட்ட விரும்புகிறேன்.
இங்கே வந்துள்ள அனைவரும் வழக்கமான பாதையைப் பின்பற்ற வேண்டாம் என்று முடிவு செய்தனர். அதற்குப் பதிலாக, அவர்கள் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கென ஒரு புதிய திசையை உருவாக்கிக்கொண்டனர். இங்கே நீங்கள் சுமார் 100 முதல் 125 புத்தொழில்களை பார்க்கலாம், ஆனால் இன்று இந்தியாவில் இது போன்ற 200,000-க்கும் மேற்பட்ட புத்தொழில்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு உள்ளது. இந்த புத்தொழில்கள் இப்போது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் புதிய ஆற்றலுடன் பங்களித்து வருகின்றன.
நண்பர்களே,
உலகைப் பொறுத்தவரை, இந்த தசாப்தம் என்பது சீர்குலைவுகளும் அதே சமயம் வளர்ச்சியும் கொண்ட ஒரு காலமாகும். தொடர்ந்து நீடிக்கும் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் என, உலகம் முன்னெப்போதும் இல்லாத ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் எவ்வளவு பிரம்மாண்டமானவையோ, அதே அளவு வாய்ப்புகளும் நம்முன்பு கொட்டிக்கிடக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட மூலப்பொருட்கள் ஆகிய அனைத்தும் மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் தொழில்நுட்பங்களாகும். இவை மனித நாகரிகத்தின் அடுத்த அத்தியாயத்தைப் பிரதிபலிக்கின்றன.
ஒவ்வொரு தொழில்நுட்பப் புரட்சியும் மனிதகுலத்திற்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது. அதே சமயம், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு புதிய பொறுப்பையும் சுமந்து வருகிறது. இன்று உலகம், நம்பிக்கைக்குரிய, அனைவரையும் உள்ளடக்கிய, மனிதனை மையப்படுத்திய மற்றும் உலக நன்மைக்காக உழைக்கக்கூடிய தொழில்நுட்பங்களை எதிர்நோக்கியிருக்கிறது. இத்தகைய சூழலில், இந்தியாவின் முன்னுரிமை என்பது 'மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம்' என்பதாகும்; அதாவது, மனிதனை மையமாகக் கொண்ட புத்தாக்கமே நமது இலக்கு.
நண்பர்களே,
இந்த மந்திரமே நமது டிஜிட்டல் புரட்சியின் ஆணிவேராகத் திகழ்கிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் உள்ளார்ந்த சாராம்சத்தை எதிரொலிக்கிறது. அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு என்ற நமது தொலைநோக்குப் பார்வையின் அடிப்படை கொள்கையும் இதுவே; அதாவது, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக தொழில்நுட்பத்தை உருவாக்குதல். தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டின் மையப்பொருளும் இதுவேயாகும்.
நண்பர்களே,
புத்தாக்கமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்து மேம்படுத்துபவை என்பதை இந்தியா உலகுக்கு உணர்த்தியுள்ளது. ஒரு புத்தாக்கத்தின் சிறப்பானது, அதன் சந்தை மதிப்பில் மட்டும் அடங்கிவிடாது; அது மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்திலேயே அதன் உண்மையான மகத்துவம் அடங்கியுள்ளது.
இதுவே 'பாரத் இன்னோவேட்ஸ்' எனும் இந்த முன்னெடுப்பின் ஆன்மா; இதுவே இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை. இங்கே கூடியிருக்கும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் சூழலியல், உங்கள் அனைவருக்கும் ஒரு உன்னதமான உத்வேகத்தின் ஊற்றாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
நண்பர்களே,
புத்தாக்கம் என்பது இந்தியாவின் மரபணுவிலேயே ஊறிப்போன ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தனது அறிவு மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் இந்தியா உலகிற்கு ஒரு புதிய திசையைக் காட்டி வந்துள்ளது. கணிதம் முதல் வானியல் வரை, மருத்துவம் முதல் யோகா வரை, இந்தியாவின் பங்களிப்புகள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளன. இன்று, அந்தத் தொன்மையான பாரம்பரியத்திற்கு நாங்கள் ஒரு புதிய உத்வேகத்தையும், புதிய இலக்கையும் வழங்கியுள்ளோம்.
நண்பர்களே,
கடந்த 11 முதல் 12 ஆண்டுகளில், இந்தியா புத்தாக்கத்திற்காக ஒரு வலிமையான சூழலியலை கட்டமைத்துள்ளது. காப்புரிமைப் பதிவுகள் முதல் புதிய தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்புகள் வரை, 'புத்தொழில் இந்தியா' முதல் கொள்கை அளவிலான ஆதரவு வரை, இந்த முழு பயணமும் ஒரு மாபெரும் இலக்கின் அடிப்படையில் வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று, உலகம் வியக்கும் வண்ணம் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் சூழலியலைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. இருப்பினும், நமது தொலைநோக்குப் பார்வை வெறும் பெரிய நகரங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. புத்தாக்கத்தை அடித்தட்டு அளவில் உள்ள சாமானிய மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் நாங்கள் அயராது உழைத்துள்ளோம்.
பள்ளிக்கூடங்களில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன; இளைஞர்கள் ஹேக்கத்தான் மற்றும் புத்தாக்கப் போட்டிகளுடன் இணைக்கப்படுகிறார்கள்; நாடு முழுவதும் காப்பகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன; குறிப்பாக, மகளிர் கண்டுபிடிப்பாளர்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் இணைக்கப்படுகிறார்கள்.
இந்த முயற்சிகளின் விளைவாக, இந்தியா மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கண்டுள்ளது. இன்று, ட்ரோன் சகோதரிகள் முதல் நிறுவனங்களின் நிறுவனர்கள் வரை, நமது பெண் சக்தி புதிய வெற்றிக் கதைகளை எழுதி வருகிறது.
நண்பர்களே,
நமது இளைஞர்களின் ஆற்றலை மேலும் முழுமையாகப் பயன்படுத்த, இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் புத்தாக்கத்திற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான புத்தொழில்கள் இந்தியாவில் வியக்கத்தக்க வகையில் பணியாற்றி வருகின்றன.
சமீபத்தில், அணுசக்தித் துறையிலும் இந்தியா மிக முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள், தூய்மையான ஆற்றல், மேம்பட்ட அணு உலைகள் மற்றும் எல்லை கடந்த ஆராய்ச்சிகள் ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவிருக்கின்றன.
சீர்திருத்தங்களின் இந்த வேகம் தடையின்றித் தொடரும்; இது சளைக்காமல் முன்னோக்கிச் செல்லும். இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்முனைவு நிறுவனங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.
நண்பர்களே,
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியா வெறும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்பவராக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று, இந்தியா தொழில்நுட்பத்தை வழங்கும் வல்லரசாக உருவெடுத்து வருகிறது. இந்தியா எதைக் கண்டுபிடித்தாலும், அது வழங்கும் தீர்வுகள் மனிதகுலத்தின் பெரும்பகுதிக்கு பயனளிக்கின்றன. இதுவே 'பாரத் இன்னோவேட்ஸ்' என்பதன் நோக்கமுமாகும்.
'பாரத் இன்னோவேட்ஸ்' என்பது உலகளாவிய புதுமையான கண்டுபிடிப்புகளை இந்தியாவுடன் இணைந்து படைக்க உலகிற்கு விடுக்கப்படும் ஒரு அழைப்பாகும்.
அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள உங்கள் ஆக்கபூர்வமான அமர்வுகள் மற்றும் விவாதங்கள், சிறப்பான விளைவுகளைத் தர எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது நோக்கம் தெளிவானது: நாங்கள் கூட்டு ஒத்துழைப்பை நாடுகிறோம். இணைந்து வளர்ச்சியடைவதை முன்னிறுத்துகிறோம். கூட்டு ஆராய்ச்சியின் மூலம் புதிய எல்லைகளைத் தேடுகிறோம். இணைந்து உற்பத்தி செய்வதன் மூலம் உலகிற்கான தீர்வுகளை உருவாக்குகிறோம். அனைத்திற்கும் மேலாக, நீண்டகால நீடித்த நட்புறவையும், வலுவான ஒத்துழைப்பையும் நாங்கள் பெரிதும் நாடுகிறோம்.
இன்று இங்கே கூடியிருக்கும் ஒவ்வொரு முதலீட்டாளர், ஒவ்வொரு பல்கலைக்கழகம், ஒவ்வொரு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் நான் அன்புடன் அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவுக்கு வாருங்கள். எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். இந்தியாவில் வடிவமைப்போம், இந்தியாவில் உருவாக்குவோம், உலகிற்கான தீர்வுகளை படைப்போம்.
மிக்க நன்றி!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். உரையின் மூல வடிவம் இந்தி மொழியில் வழங்கப்பட்டது.
(Release ID: 2272661)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282722)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam