பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் சூரத் நகரில், வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 05 JUN 2026 8:45PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

குஜராத் மாநிலத்தின்  முதலமைச்சர் திரு. பூபேந்திர பாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு. சி. ஆர். பாட்டீல் அவர்களே, துணை முதலமைச்சர் திரு.பாய் ஹர்ஷ் சங்வி அவர்களே, குஜராத் மாநில பாஜக தலைவர் திரு.ஜெகதீஷ் விஸ்வகர்மா  அவர்களே, அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பிற்குரிய சூரத் நகர சகோதர, சகோதரிகளே...

நீங்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? சூரத் நகரம் எப்போதும் போல மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக இருக்கிறது அல்லவா?

கூட்டத்தில் ஒருவரைப் பார்த்து தம்பி, அங்கிருந்து என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்? மிக அழகான ஓவியத்தை வரைந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். பாதுகாப்புப் படையினரே, அந்தத் தம்பி இந்த ஓவியத்தை என்னிடம் வழங்க விரும்புகிறார், அவரிடமிருந்து பெற்று எனது குழுவினரிடம் ஒப்படையுங்கள். தம்பி, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்களே,

நான் எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக... கடந்த சில நாட்களுக்கு முன்புதான், என்னோடு பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவரும், தனது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை மக்களுக்காகச் சுறுசுறுப்போடு உழைத்தவருமான எனது நெருங்கிய நண்பர் கனுபாய் மாவானி நம்மை விட்டுப் பிரிந்தார். அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். நெருங்கிய ஒரு நண்பரை இழப்பதன் வலி இயல்பானதுதான் என்றாலும், இன்று சூரத் மண்ணில் நின்றுகொண்டு, அவருடைய புனிதமான நினைவுகளோடு எனது உரையைத் தொடர்கிறேன்.

நண்பர்களே,

பல நேரங்களில் சூரத் என்பது வெறும் ஒரு நகரம் மட்டுமல்ல, சூரத் என்பது ஒரு உன்னதமான ஆன்மா என்று நான் உணர்கிறேன். அப்படிப்பட்ட ஒரு உன்னத உணர்வு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் இங்கிருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஒன்றாக இணைந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை உருவாக்கி இங்கே கொண்டு வந்துள்ளனர். இந்த நற்பணியைச் செய்த அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், அவர்கள் இதைப்பற்றி யோசிக்கத் தொடங்கிய கணமே, அவர்களின் மனம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முழுமையாக ஈடுபட்டுவிட்டது என்று அர்த்தம்.

அதேபோல், நமது கத்தியவார் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பலர் இந்தச் சூரத் நகரில் வசித்து வருகிறார்கள்; அவர்களுக்குச் சொந்த ஊர்களில் விவசாய நிலங்களும் இருக்கின்றன. சுற்றுச்சூழல் பணியின் ஒரு பகுதியாக, "விவசாய நிலங்களைக் காப்போம்" என்ற பிரச்சாரத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நமது முன்னோர்கள் செய்ததைப் போல, ரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாயத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். சூரத் நகரில் வசிப்பவர்களாய் இருந்து, எங்கு நிலம் வைத்திருந்தாலும் சரி, உங்கள் அனைவரிடமும் முழு உரிமையோடு நான் கேட்டுக்கொள்ளும் மிக முக்கியமான பணி இதுதான்.

நண்பர்களே,

இங்கு வந்த எனக்கு நீங்கள் அனைவரும் சிறப்பான வரவேற்பை அளித்து, பல்வேறு நினைவுப் பரிசுகளையும் அன்பளிப்புகளையும் வழங்கினீர்கள். ஆனால், இவை அனைத்தையும் விடச் சூரத் நகரம் எனக்கு மிகவும் விலைமதிப்பற்ற, அதைவிடவும் மிக உயர்ந்த ஒரு பரிசை வழங்கியுள்ளது. அது என்ன தெரியுமா? சூரத் நகரம் எனக்கு 'கழிவுகளைத்' தன் பரிசாக வழங்கியுள்ளது! இங்குள்ள சுமார் ஒரு லட்சம் மக்கள் கடந்த ஐந்து நாட்களாகத் தொடர் தூய்மைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த நகரத்தைச் சுத்தப்படுத்தியுள்ளனர். என்னைப்பொறுத்தவரை இதுதான் மிகச்சிறந்த விடைபெறும் பரிசு. இதற்காக அந்த ஒரு லட்சம் மக்களுக்கும், ஒட்டுமொத்த சூரத் நகரத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைக் கேட்கும் மக்கள், "இவர் என்ன இப்படிப்பட்ட ஒரு பிரதமராக இருக்கிறார்? குப்பைகளை வரவேற்புப் பரிசாகப் பெற்றதற்குப் பெருமைப்படுகிறாரே!" என்று ஆச்சரியப்படலாம். ஏனேனில், என்னைப்பொறுத்தவரை தூய்மை என்பது நம் வாழ்வின் ஒரு நற்பண்பாக, ஒழுக்கமாக மாற வேண்டும். ஒரு லட்சம் மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர் என்றால், ஒரு லட்சம் குடும்பங்கள் இதில் இணைந்துள்ளன என்று அர்த்தம். இது வெறும் ஒரு தூய்மைப் பிரச்சாரம் மட்டுமல்ல, நமது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான நற்பண்புகளின் திருவிழா ஆகும். இதற்காகச் சூரத் நகரத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு நான் குஜராத்திற்கு, அதுவும் குறிப்பாகச் சூரத் நகரத்திற்கு வருவது இதுவே முதல் முறை. இந்தச் சூரத் மண்ணில் இருந்து ஒட்டுமொத்த குஜராத் மக்களையும் நான் தலைவணங்கி எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த கால் நூற்றாண்டிற்கும்  மேலாக நீங்கள் எங்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும்  தொடர்ந்து உங்களது ஆதரவை வழங்கி வருகிறீர்கள். காலம் செல்லச் செல்ல இந்த ஆதரவு மென்மேலும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. பாருங்கள், ஒரு சிறுமி உங்களையெல்லாம் எப்படித் தன் பக்கம் இழுத்துவிட்டாள் என்று! சமீபத்தில் மாவட்ட கவுன்சில், தாலுகா கவுன்சில், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றில் குஜராத் மக்கள் பாஜகவுக்கு எந்தவொரு தேர்தலிலும் இல்லாத அளவிற்குப் பேராதரவை வழங்கி, பழைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளனர். இன்று நான் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியில் இருக்கிறேன்; ஏனென்றால், நான் முன்பு படைத்த சாதனைகளையும் நீங்கள் இப்போது முறியடித்துள்ளீர்கள்! நான் அரசியலுக்கு மிகவும் தாமதமாகத்தான் வந்தேன், அநேகமாக 1987-ல் என்று நினைக்கிறேன். நான் அரசியலுக்கு வந்த பிறகு சந்தித்த முதல் தேர்தல் சூரத் மற்றும் அகமதாபாத் மாநகராட்சித் தேர்தல் ஆகும். அந்த முதல் தேர்தலிலேயே நாங்கள் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றோம். அன்று முதல் இன்று வரை இந்த வெற்றிகரமான பயணம் தொடர்ந்து நீடித்து வருகிறது. உலக ஜனநாயக நாடுகளில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நாம் பார்ப்பது மிகவும் அரிது. எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, இவ்வளவு நீண்ட காலத்திற்கு மக்களின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்று, அவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல; அது மிகப்பெரிய ஒரு பாக்கியம்.

நண்பர்களே,

சூரத் மற்றும் நவ்சாரி பகுதிகளைச் சேர்ந்த பல மக்கள் பிரதிநிதிகளும் இங்கே வந்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் மக்கள் எப்போதுமே எங்களின் 'சேவை செய்யும் குணத்தைத்தான்' ஆதரித்து வந்துள்ளார்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நமக்குக் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றி, இந்தச் சேவைப் பயணத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காகத்தான். நாம் அனைவரும் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். நமது ஒரே லட்சியம் "வளர்ச்சியடைந்த குஜராத், வளர்ச்சியடைந்த இந்தியா" என்பதுதான். இந்த லட்சியத்தைச் சேவையின் மீதான முழு அர்ப்பணிப்போடு நாம் நிறைவேற்ற வேண்டும்.

"சூரத் என்பது வெறும் ஒரு நகரம் மட்டுமல்ல, சூரத் என்பது ஒரு உன்னதமான ஆன்மா" என்று நான் கூறும்போது, அதற்குப் பின்னால் எனது ஆழமான நம்பிக்கை இருக்கிறது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், ஒட்டுமொத்த இந்தியாவில் ஒரு நகரம் தூய்மைக்காகத் தொடர்ந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டே இருக்கிறது. பொதுவாக அப்படி இருந்தால் என்ன நினைப்பார்கள்? "போதும், நமக்குத்தான் இவ்வளவு விருதுகள் கிடைத்துவிட்டதே, இதற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது?" என்றுதான் நினைப்பார்கள். ஆனால், சூரத் நகரம் அப்படி நினைப்பதில்லை. இத்தனை விருதுகளைப் பெற்ற பிறகும், அது இப்போதும் தூய்மைப் பிரச்சாரங்களுக்குத்தான் முதல் முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால்தான் நான் சொல்கிறேன், சூரத் என்பது வெறும் நகரம் அல்ல, அது ஒரு உன்னத உணர்வு!

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த குஜராத் என்ற நமது லட்சியம், நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும், ஒவ்வொரு மாவட்டத்தையும், ஒவ்வொரு நகரத்தையும் நாம் மேம்படுத்தும்போது மட்டுமே முழுமையாக நிறைவேறும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பங்கும் இதில் மிகவும் முக்கியமானது.

இன்றைய நாள் மற்றொரு இனிமையான தற்செயலான நிகழ்வாகவும் அமைந்திருக்கிறது. இன்று ஜூன் 5, உலகச் சுற்றுச்சூழல் தினம் ஆகும்! இந்தச் சுற்றுச்சூழல் தினத்தில், நாட்டின் மிகத் தூய்மையான நகரங்களில் ஒன்றான இந்தச் சூரத் நகரில் நான் இருப்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்! ஒரு காலத்தில் பிளேக்  போன்ற கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இதே சூரத் நகரம், இன்று தூய்மைக்காகத் தனித்துவ அடையாளம் பெற்றுத் திகழ்கிறது. இதற்காகக் கடந்த கால் நூற்றாண்டாகத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சூரத் நகர மக்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் இதற்குப் பங்களிப்பு செய்துள்ளனர். சமீப நாட்களாக இங்குக் குறிக்கோளுடன் கூடிய சிறப்புத் தூய்மைப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்காகச் சூரத் நகர மக்கள் அனைவருக்கும், எனது அன்பிற்குரிய சூரத் வாசிகளுக்கும்  எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரத்தின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவதற்காக, இன்று பல புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த உன்னதத் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

நண்பர்களே,

உலக நாடுகள் இப்போது ஒரு பசுமையான யுகத்தை  நோக்கியும், பசுமையான எதிர்காலத்தை  நோக்கியும் நகர்வதில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருவதுடன், அதற்கான படிகளையும் படிப்படியாக எடுத்து வைத்து வருகின்றன. இந்தியாவும் பசுமை வளர்ச்சிக்காக  மிக விரிவான அளவில் உழைத்து வருகிறது. குஜராத் மாநிலமோ, பல ஆண்டுகளுக்கு முன்பே இத்திசையில் மிக அதிவேகமாக அடியெடுத்து வைத்துவிட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பருவநிலை மாற்றத்திற்காகத்  தனி ஒரு துறையை உருவாக்கிய அரசுதான் குஜராத் மாநில அரசு. நாட்டில் இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பை உருவாக்கிய முதல் மாநிலம் குஜராத் தான். இப்போது முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, குஜராத்தின் பதான்  மாவட்டத்தில் உள்ள சரங்கா கிராமத்தில்தான் இந்தியாவின் முதல் சூரிய ஒளி மின்சக்திப் பூங்கா அமைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், அது ஒரு புனிதப் பயணம் மேற்கொள்ளும் இடத்தைப் போல மாறியது. அந்தளவிற்கு மிகப்பிரம்மாண்டமாக, தொலைதூரம் வரை பரந்து விரிந்து காணப்பட்ட அந்தச் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தைக் காண்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வந்தனர்.

நண்பர்களே,

அக்காலத்தில் குஜராத்தில் நீங்கள் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெரும் தூண்டுதலாக அமைந்தன. இன்று நமது இந்திய நாடு, "இயற்கையோடு இணைந்த வளர்ச்சி" என்ற உன்னத மந்திரத்தோடு முன்னேறி வருகிறது. அதாவது, பொருளாதாரம் மற்றும் சூழலியல் ஆகிய இரண்டும் சமமாக வளர வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

நண்பர்களே,

இதற்கான நேரடிச் சான்றினை நாம் இந்தச் சூரத் நகரில் தெளிவாகக் காண முடிகிறது. இப்போதெல்லாம் சூரத் நகரின் "சுழற்சிமுறை நீர்ப் பொருளாதாரம்" பற்றி நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இங்கே, நகரத்தின் கழிவுநீர் முறையாகச் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் கழிவுநீர் மேலாண்மை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட நீரின் வழியாக வருவாயும் ஈட்டப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக, "கழிவிலிருந்து செல்வம்" என்ற ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் நம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது நமது நகரங்களைத் தூய்மையாக்குவதற்கும், அவற்றை பசுமையாகவும் சுத்தமாகவும் மாற்றுவதற்கும் பெரிதும் உதவி வருகிறது.

நண்பர்களே,

சூரத் நகரத்திற்கு பல தசாப்தங்களுக்குச் தேவையான குடிநீர் விநியோகத்தை முழுமையாக உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, "தாபி தடுப்பணைத் திட்டம்" அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், நீர் மேலாண்மை மற்றும் முறையான நீர் வடிகால் அமைப்புகளும் அரசாங்கத்தின் மிக முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன. இது போன்ற பல உன்னதத் திட்டங்கள் இன்று இங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

சூரத் நகரத்தின் சிறப்பானது வெறும் தூய்மையோடும், சுழற்சிமுறை நீர்ப் பொருளாதாரத்தோடும்  மட்டும் நின்றுவிடுவதில்லை. பசுமை வளர்ச்சியின் பிற வழிகளும் இங்கு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் விரிவடைந்து வருகின்றன. உதாரணமாக, மின்சார வாகனப் பயன்பாட்டைக் கூறலாம். சூரத் நகரின் சாலைகளில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளையும் மின்சாரப் பேருந்துகளாக மாற்றுவதற்கான கட்டமைப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்துடன், சூரத் மெட்ரோ ரயில் திட்டமும் அதிவேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு 'பசுமை நகரம்' என்ற சூரத்தின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும். அதுமட்டுமன்றி, வருங்காலத்தில் 'ஹசீரா தொழில்துறை பகுதி' பசுமை எஃகு தயாரிப்பிற்கும் பெயர் பெற்றதாக விளங்கும். அதாவது, எஃகு உற்பத்தியில் இனி முழுமையாகப் பசுமை ஆற்றல்  பயன்படுத்தப்படும்.

நண்பர்களே,

இன்று ஒட்டுமொத்த உலகமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான சவால்களைச் சந்தித்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு நான் குறிப்பிட்டதைப் போல, இந்த பத்தாண்டு காலம் உலகிற்குப் பேரிடர்களின் தசாப்தமாக அமைந்து வருகிறது. சமீப காலங்களில் அடுத்தடுத்து உலகளாவிய பேரிடர்களை நாம் பார்த்து வருகிறோம். முதலில் 'கொரோனா' என்ற மாபெரும் உலகப் பெருந்தொற்று உருவானது; அதைத் தொடர்ந்து உலகின் வெவ்வேறு பகுதிகளில் போர்கள் வெடித்தன; இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஒட்டுமொத்த உலகையும் நிலைகுலையச் செய்துள்ளது. உலகெங்கிலும் பெட்ரோல் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன, மேலும் எரிவாயு விநியோகச் சங்கிலியும்  முற்றிலும் முடங்கியுள்ளது.

ஆனால் எனது அன்புச் சகோதர, சகோதரிகளே...

இத்தனை சவால்கள் இருந்தபோதிலும், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால், நமது நாடு இப்படிப்பட்ட ஒவ்வொரு நெருக்கடியையும் மிக உறுதியோடு எதிர்கொண்டு வருவது எனக்குப் பெரும் மனநிறைவை அளிக்கிறது. இந்த உன்னதமான போராட்டத்தில் நீங்கள் அனைவரும் என்னோடு துணை நிற்கிறீர்கள் அல்லவா? நாம் இந்தப் போராட்டத்திலும் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும், இல்லையா?

நண்பர்களே,

இதிலும் கூட குஜராத் மாநிலத்திற்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு, சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றில் குஜராத் தனது திறனைப் பலப்படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெரும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது. இன்று இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தித் திறன் 250 கிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு நம் நாட்டில் மெகாவாட் அளவில்தான் சிந்தித்துக் கொண்டிருந்தோம், ஆனால் இன்று நாம் கிகாவாட் அளவில் பேசிக்கொண்டிருக்கிறோம். இதில் குஜராத் மாநிலம் மட்டுமே 50 கிகாவாட் பங்களிப்பை வழங்குகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியான 250 கிகாவாட்டில், 50 கிகாவாட் என்பது உங்களுடைய பலமாகும். அதாவது, நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பசுமை ஆற்றல் குஜராத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய ஒளி மின் உற்பத்தியில் குஜராத் பாராட்டுக்குரிய பணிகளைச் செய்துள்ளது. இப்போது நாடு பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா போன்ற துறைகளில் கால்பதித்து உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், குஜராத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

நண்பர்களே,

தற்போது நிலவி வரும் உலகளாவிய நெருக்கடியானது, எரிசக்தித் துறையில் நாம் தற்சார்பு அடைவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. கடந்த 12 ஆண்டுகளில் நாடு உருவாக்கியுள்ள கட்டமைப்பு மிக உன்னதமான முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருபுறம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நமக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பதை நாம் உறுதி செய்தோம். மறுபுறம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடுகளைச் செய்தோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தி என்பது மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் இன்று நாம் உலகிலேயே முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளோம்.

சூரிய ஒளி மின்சாரம் மட்டுமல்லாமல், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திறனை அதிகரித்துள்ளோம், ரயில்வே மின்மயமாக்கலை வேகப்படுத்தியுள்ளோம், அணுசக்தித் துறையில் பணியாற்றியுள்ளோம், நமது பழைய மின்சார விநியோகக் கட்டமைப்பை நவீனப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளோம், எரிவாயுக் குழாய் இணைப்புகளைப் பெரிய அளவில் பரப்பியுள்ளோம் மற்றும் நமது துறைமுகங்களின் திறனையும் அதிகரித்துள்ளோம். இதன் மூலம் அதிகப்படியான பெட்ரோலியப் பொருட்களைத் துறைமுகங்களுக்குக் கொண்டு வந்து, தேவையான இடங்களில் சேமித்து வைக்க முடிகிறது. வரும் காலங்களில் நாட்டின் இந்தத் திறன் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். இந்தத் திசையில் நமது அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நண்பர்களே,

சூரத் நகரில் உங்கள் முன்னிலையில் இங்கு வருவதற்கு முன்பாக, நான் ஹசீரா பகுதிக்குச் சென்றிருந்தேன்; அதைப்பற்றித்தான் சற்று முன்பு ஹர்ஷ் பாய் விவரித்துக் கொண்டிருந்தார். தற்சார்பு இந்தியா என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை ஹசீரா பகுதியில் நாம் தெளிவாகக் காண முடியும். ஹசீரா இன்று வெறும் ஒரு தொழில்துறை பகுதி மட்டுமல்ல; அது ஆற்றல், எஃகு, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, துறைமுகங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகம் ஆகிய அனைத்தும் உள்ளடங்கிய ஒரு மாபெரும் தொழில் சூழல் அமைப்பாக மாறியுள்ளது. நாட்டின் மிக முக்கிய கடல்சார் தொழில்துறை மையமாக வளர்ந்து வரும் ஹசீரா, சுயசார்பு இந்தியாவின் ஒரு முதன்மை மையமாக உருவெடுத்து வருகிறது.

ஆனால் நண்பர்களே,

இன்று நம் நாட்டில் சில எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் தற்சார்பு இந்தியா இயக்கத்தைத் தொடர்ந்து கேலி செய்து கொண்டே இருக்கிறார்கள். நாட்டின் இந்த உன்னத லட்சியத்தை அவர்கள் எப்போதும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இந்தியாவை எப்போதும் பிற நாடுகளையே சார்ந்து இருக்க வைத்த மனிதர்கள் இவர்கள்தான். பிறரைச் சார்ந்து வாழும் ஒரு நாடு, தனக்குரிய தகுதியான உன்னத வளர்ச்சி உயரங்களை ஒருபோதும் எட்ட முடியாது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

நண்பர்களே,

தற்சார்பு இந்தியாவை மேலும் விரைவுபடுத்துவதற்காக, இன்று நாடு போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புகளுக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. வதோதரா - மும்பை விரைவுச் சாலை, பிரத்யேக சரக்கு போக்குவரத்துப் பாதை மற்றும் புல்லட் இரயில் போன்ற திட்டங்கள் இந்தியாவின் இந்த முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. இன்று வதோதரா - மும்பை விரைவுச் சாலையின் ஒரு முக்கியப் பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் இரண்டு முக்கிய தொழில்துறை மற்றும் வர்த்தக மையங்களுக்கு இடையே மிகச்சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்கும்.

நண்பர்களே,

ஒவ்வொருவரையும் ஒன்றிணைப்பது, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குவதுதான் நமது முக்கிய முயற்சியாகும். இதுவரை அடிப்படை வசதிகள் கூட சென்றடையாத தொலைதூரப் பகுதிகள், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் இன்று நவீன போக்குவரத்து இணைப்புகளைப் பெற்று வருகின்றன. தஹோத் - போடேலி - வாபி இடையேயான போக்குவரத்துப் பாதை இந்த லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள், நர்மதா மற்றும் தாபி மாவட்டங்களில் உள்ள பழங்குடியினப் பகுதிகளுக்கு நான்கு வழிச்சாலை வசதிகள் இப்போது சென்றடைகின்றன. இது பயண நேரத்தைக் குறைக்கும், பயணக் கட்டணத்தைக் குறைக்கும்; மேலும் பழங்குடியின மற்றும் கிராமப்புற மக்களுக்குக் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான மிகச்சிறந்த வசதிகளை வழங்கும்.

நண்பர்களே,

இந்தப் போக்குவரத்துப் பாதையின் மூலம் சோட்டா உதய்பூர், நர்மதா, பரூச் மற்றும் தாபி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின பகுதிகள், தொழில்மயம் நிறைந்த பகுதிகளுடன் இணைக்கப்படும். இது தெற்கு குஜராத்தின் பழங்குடியின பகுதிகளில் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும். இதன் மூலம் ஒற்றுமைக்கான சிலை சபுதாரா மற்றும் அதன் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது இனி மிகவும் எளிதாகும்.

நண்பர்களே,

இன்று இங்கே சூரத் நகரில், ஒரு நவீன தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை நமது தொழிலாளர் சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மேம்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்கும் ஒரு புதிய மையமாக விளங்கும். பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்து தங்கி உழைக்கும் தொழிலாளர் தோழர்களும் இந்த மருத்துவமனையின் மூலம் பெருமளவில் பயனடைவார்கள்.

நண்பர்களே,

தேசிய வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்து நமது அரசாங்கம் உழைத்து வருகிறது. அதனால்தான், நாட்டின் நம்பிக்கை பாஜகவின் மீதும், அதன் வளர்ச்சிப் பணிகளின் மீதும் இருக்கிறது. இதன் காரணமாகவே, நாட்டின் மக்கள் மீண்டும் மீண்டும் பாஜகவுக்கு தங்களின் பேராதரவை வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற வங்காளத் தேர்தல் பற்றி நான் குறிப்பிடும்போதே உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றல் உருவாவதை நீங்கள் உணரலாம். ஆனால், எனது சமீபத்திய ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது, நான் சென்ற இடங்களிலெல்லாம் வங்காளத்தைப் பற்றியே பேசப்பட்டது என்பதுதான் எனது அனுபவம். அனைவரும் வங்காளத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். வங்காளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி, நாடு முழுவதும் நடைபெறும் பஞ்சாயத்து மற்றும் மாநகராட்சித் தேர்தல்களிலும் பாஜக தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது.

நண்பர்களே,

இதுபோன்ற ஒவ்வொரு தேர்தலும் ஒரு தெளிவான செய்தியை உணர்த்துகிறது: நாட்டில் குழப்பம், நிச்சயமற்ற நிலை மற்றும் ஏமாற்றம் நிலவுவதை மக்கள் விரும்புவதில்லை. காங்கிரஸ் கட்சி தனக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொள்வதற்காகக் கடந்த 12 ஆண்டுகளாகக் குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் பரப்பி வருகிறது; ஆனால், நாட்டின் மக்கள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். குஜராத் மக்களாகிய நீங்கள் காங்கிரஸை ஓரங்கட்டிவிட்டீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் கூட, அவர்களின் தவறான நிர்வாகத்தால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன; அங்கு காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இமாச்சல மக்கள் காங்கிரஸின் மோசமான ஆட்சியை நிராகரித்துவிட்டனர். அதற்கு முன்பாக, ஹரியானா உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது; பஞ்சாப் மக்களும் காங்கிரஸிற்குத் தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர். காங்கிரஸின் ஒட்டுண்ணி அரசியலோ, குழப்பத்தை ஏற்படுத்தி அதில் வாய்ப்புத் தேடும் அரசியலோ இனி செல்லுபடியாகாது என்பதுதான் அந்தச் செய்தி. கர்நாடகாவிலும் கூட, காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதன் காரணமாகவே, கர்நாடகாவிலும் முதலமைச்சரை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்திய நாடு இப்போது எதிர்மறை எண்ணங்களைக் கடந்து வெகுதூரம் முன்னேறி வந்துவிட்டது. இது எல்லையற்ற நேர்மறைத் தன்மைகளைக் கொண்ட ஒரு நாடு. அசாதாரணமான உன்னத ஆசைகள் நிறைந்த ஒரு நாடு. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் பெரும் கனவுகளுடனும், அசைக்க முடியாத லட்சியங்களுடனும் நிறைந்துள்ளனர். மேலும், தங்களின் உன்னத லட்சியங்களைச் சாதனைகளாக மாற்றுவதில் இந்த நாட்டு மக்கள் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். நாட்டின் மக்கள் எப்போது ஒருமித்த கருத்தோடு உறுதியேற்கிறார்களோ, அப்போது இந்த நாட்டால் எந்தவொரு இலக்கையும் எளிதில் அடைய முடியும். இதுதான் இந்தியாவின் உண்மையான பலம்.

நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பணியை மேலும் விரைவுபடுத்துவோம். நமது முழு அர்ப்பணிப்பின் மூலம், கனவுகளை லட்சியங்களாகவும், லட்சியங்களைச் சாதனைகளாகவும் மாற்றுவோம். நான் உங்களுடன் எப்போதும் தோளோடு தோள் நின்று துணை நிற்பேன். நீங்கள் இரண்டு அடிகள் எடுத்து வைத்தால், நான் உங்களுக்காக மூன்று அடிகள் எடுத்து வைக்கத் தயாராக இருக்கிறேன். தளர்ந்து போவதோ, சோர்ந்து நின்றுவிடுவதோ நமக்கு எப்போதும் ஏற்புடையது அல்ல. இந்த அழைப்போடு, இந்த உன்னத வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

குறிப்பு: பிரதமரின் உரையின் சில பகுதிகள் குஜராத்தி மொழியில் அமைந்திருந்தன; அவை இங்கு அதன் சாராம்சம் மாறாமல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

(Release ID: 2269542)

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2282368) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam