பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் சனந்தில் கேன்ஸ் செமிகான் ஆலைத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 31 MAR 2026 3:54PM by PIB Chennai

குஜராத் முதல்வர் திரு. பூபேந்திர பாய் படேல் அவர்களே, மாநிலத்தின் துணை முதல்வர் திரு. ஹர்ஷ் பாய் சங்வி அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மாநில அமைச்சர் சகோதரர் அர்ஜுன் மோத்வாடியா அவர்களே, கேன்ஸ் மற்றும் ஆல்பா ஒமேகா செமிகண்டக்டர்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளே, இதர முக்கியப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

கடந்த மாதத்தின் இறுதி நாளிலும் நான் சனந்தில் இருந்தேன், இந்த மாதத்தின் இறுதி நாளிலும் நான் சனந்தில் இருக்கிறேன். பிப்ரவரி 28-ஆம் தேதி மைக்ரான்  ஆலையில் உற்பத்தி தொடங்கியது; இன்று மார்ச் 31-ம் தேதி கேன்ஸ் டெக்னாலஜி  நிறுவனத்தின் செமிகண்டக்டர் ஆலையில் உற்பத்தி தொடங்குகிறது. இது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல; இந்தியாவின் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பு எவ்வளவு வேகமாகவும், துரிதமாகவும், தீவிரமாகவும் வளர்ந்து வருகிறது என்பதற்கான சான்று இதுவாகும். கேன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்தத் தலைமைத்துவத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமேஷ் ரகு அவர்களே, வாழ்த்துகள். குஜராத் அரசிற்கும், இந்த ஆலையில் பணியாற்றும் அனைத்து சகாக்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று காலை நான் 'தெய்வீகம்'  தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் இருந்தேன், தற்போது நான் 'டிஜிட்டல்'  தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறேன்.

நண்பர்களே,

இந்திய நிறுவனம் ஒன்று செமிகண்டக்டர் சிப்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியதும், அதன் விளைவு இன்று நம் கண்முன்னே இருப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது இந்தியாவின் சொந்த நிறுவனமான 'கேன்ஸ்', இப்போது உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியின் ஒரு வலிமையான அங்கமாக மாறியுள்ளது. இது ஒரு மிகச்சிறந்த தொடக்கம்; ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம். வரும் நாட்களில், பல இந்திய நிறுவனங்கள் உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம், உலகிற்கு ஒரு நிலையான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை வழங்கப் போகின்றன.

நண்பர்களே,

இன்றைய நாள், உண்மையான பொருளில் "இந்தியாவில் உருவாக்குவோம், உலகிற்காக உருவாக்குவோம்" என்ற மந்திரத்தை நனவாக்குகிறது. இந்தத் திட்டத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டதன் மூலம், உலகச் சந்தையில் ஒரு நம்பகமான செமிகண்டக்டர் விநியோகஸ்தராக இந்தியா தனது பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. இன்று, ஒரு வகையில் சனந்திற்கும் சிலிக்கான் வேலிக்கும் இடையே ஒரு புதிய பாலம் உருவாகியுள்ளது. கலிபோர்னியா நிறுவனம் ஒன்றிற்கு, சனந்தில் உள்ள இந்த ஆலை 'நுண்ணறிவுத் திறன் தொகுப்புகளை' வழங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் தயாரிப்புகளில் பெரும்பகுதி ஏற்கனவே ஏற்றுமதிக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. சனந்தில் தயாரிக்கப்படும் இந்தத் தொகுப்புகள் அமெரிக்க நிறுவனங்களைச் சென்றடையும், அங்கிருந்து ஒட்டுமொத்த உலகிற்கும் ஆற்றலை வழங்கும். "இந்தியாவில் உருவாக்குவோம், உலகிற்காக உருவாக்குவோம்" என்ற மந்திரத்தின் வெற்றி முழக்கம் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும்.

நண்பர்களே,

இங்கு தயாரிக்கப்படும் "நுண்ணறிவுத் திறன் தொகுப்புகள்"  மூலம், இந்தியாவினதும் உலகினதும் மின்சார வாகனக் கட்டமைப்பு (EV ecosystem) மற்றும் கனரகத் தொழில்துறை ஆகியவை பெரும் வலிமையைப் பெறும். இந்த உலகளாவிய கூட்டாண்மைதான், உலகின் சிறந்த எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளமாகும்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்தத் தசாப்தம், அதன் தொடக்கத்திலிருந்தே உலகிற்குப் பல சவால்களைக் கொண்டு வந்துள்ளது. பெருந்தொற்று மற்றும் மோதல்களால்  உருவான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதிலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிதான் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது. சிப்கள், அரிய வகை கனிமங்கள் அல்லது எரிசக்தி என எதுவாக இருந்தாலும், மோதல்கள் காரணமாக அவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இவை மனிதகுலத்தின் அதிவேக வளர்ச்சியோடு தொடர்புடையவை; இவற்றின் விநியோகச் சங்கிலியிலோ அல்லது ஓட்டத்திலோ ஒரு தடை ஏற்பட்டால், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சியே பாதிக்கப்படும். எனவே, இந்தப் பாதையில் இந்தியாவைப் போன்ற ஒரு ஜனநாயக நாடு முன்னேறிச் செல்வது, ஒட்டுமொத்த உலகின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாகும்.

நண்பர்களே,

கொரோனா பேரிடர் காலத்திலேயே, இந்தியா செமிகண்டக்டர் துறையில் புதிய உலகளாவிய மையமாக உருவெடுக்க வேண்டும் என்றும், இத்துறையில் சுயசார்பு அடைய வேண்டும் என்றும் நாம் முடிவெடுத்தோம். செமிகண்டக்டர் துறையில் சுயசார்பு என்பது வெறும் ஒரு 'சிப்'  சார்ந்ததோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. இதன் மூலம்  செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், தூய்மையான எரிசக்தி, பாதுகாப்புத் துறை, மின்னணுவியல் போன்ற பல துறைகளிலும் நமது சுயசார்பு வலிமை பெறும் என்று பொருளாகும்.

எனவேதான், கடந்த 2021-ம் ஆண்டில் இந்தியா 'இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தை'  தொடங்கியது. இந்தத் திட்டம் வெறும் ஒரு தொழில்துறைக் கொள்கை மட்டுமல்ல; இது இந்தியாவின் தன்னம்பிக்கை குறித்த பிரகடனமாகும். அதன் தாக்கம் இப்போது அனைவர் முன்னிலையிலும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 6 மாநிலங்களில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கேன்ஸ் மற்றும் மைக்ரான் நிறுவனங்களின் திட்டங்களும் இதில் அடங்கும். செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் சுயசார்பு அடைவதற்காக, இந்தியா 'துருவ் 64' போன்ற நவீன நுண்செயலியை  உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 5ஜி உள்கட்டமைப்பு, வாகன மின்னணுவியல், தொழில்துறை தானியங்கி முறை போன்ற பல துறைகளுக்கு நமக்கு என ஒரு பாதுகாப்பான தளம் கிடைத்துள்ளது.

நண்பர்களே,

செமிகண்டக்டர் திட்டத்தின் இதுவரை கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா இப்போது தனது அடுத்த கட்டத்தை நோக்கிப் பாதம் பதித்துள்ளது. இந்தச் சிந்தனையோடுதான், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 'இந்திய செமிகண்டக்டர் திட்டம் 2.0' அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் முக்கிய நோக்கம் செமிகண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதாகும். இப்போது எங்களது முயற்சி முழுமையான இந்திய செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை  உருவாக்குவதாகும். இதன் மூலம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் நாம் பெரிய அளவிலான கூட்டாண்மைகளை உருவாக்க முடியும்.

நண்பர்களே,

தொழில்நுட்ப மேம்பாடு நிகழ்வதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்குத் தேவையான திறன்மிக்க பணியாளர்களும் தயாராக வேண்டும் என்பதற்காக, தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களை இந்தியா இன்று ஊக்குவித்து வருகிறது. மிக விரைவில், நாட்டில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'வடிவமைப்பு வல்லுநர்களை' உருவாக்கும் இலக்கு எட்டப்படும். இதனுடன், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வல்லுநர்களுக்கான பயிற்சி ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

செமிகண்டக்டர் வடிவமைப்பை மேம்படுத்துவதற்காக, 'சிப்ஸ் முதல் புத்தொழில் வரை'  திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டின் சுமார் 400 பல்கலைக்கழகங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நவீன வடிவமைப்பு கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே 55-க்கும் மேற்பட்ட சிப்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நண்பர்களே,

தொழில்நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, இன்று இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர்கள், அதாவது தோராயமாக நான்கரை லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் இது 100 பில்லியன் டாலர்களை, அதாவது ஒன்பது லட்சம் கோடி ரூபாயை தாண்டக்கூடும். இத்துறையில் இந்தியாவில் எவ்வளவு பெரிய வாய்ப்புகள் உள்ளன என்பதை இது காட்டுகிறது. நமது தேவைகளுக்கான சிப்களை அதிகளவில் இந்தியாவிலேயே தயாரிப்பதே நமது இலக்காகும். இந்தியாவின் இந்த உறுதிப்பாட்டின் மீது உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு இருக்கும் ஆர்வம் நமக்கு ஒரு மிகப்பெரிய மூலதனமாகும்.

நண்பர்களே,

இந்தியா ஒரு வலுவான செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் மூலப்பொருட்களுக்கான ஒரு நிலையான விநியோகச் சங்கிலியை  உருவாக்கவும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. 'பாக்ஸ் சிலிக்கா'  அமைப்பில் இந்தியா இணைந்திருப்பது இந்த முயற்சியின் ஒரு அங்கமே ஆகும். உலகெங்கிலும் உள்ள நமது கூட்டாளர்களுடன் இணைந்து, இந்தியாவில் பாதுகாப்பான விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.

நண்பர்களே,

முக்கியக் கனிமங்களில்  சுயசார்பு அடைவதற்காக, இந்தியா 'தேசிய முக்கியக் கனிமங்கள் இயக்கத்தை'  தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முக்கியக் கனிமங்களின் அகழ்வாராய்ச்சி மற்றும் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கனிமங்களை மறுசுழற்சி  செய்வதற்காக 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம் போன்ற கடற்கரை மாநிலங்களை இணைத்து 'அரிய வகை கனிம வழித்தடம்' அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் அகழ்வாராய்ச்சி, சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு வலிமையான வலையமைப்பாகத் திகழும். நம் நாட்டில் முக்கியக் கனிமங்களின் தேசிய இருப்பு இருக்க வேண்டும் என்பதே எங்களது முயற்சியாகும். இந்தப் பணிகள் 30-40 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இப்போது இந்தியா இதற்காக 'மிஷன் மோட்' எனப்படும் தீவிர இயக்க வடிவில் செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இக்காலகட்டம் வெறும் பொருளாதாரப் போட்டி நிலவும் காலம் மட்டுமல்ல என்று இந்தியா நம்புகிறது. இது எதிர்காலத் தொழில்நுட்பச் சூழலை வடிவமைப்பதற்கான காலம். எனவேதான், இந்தத் தசாப்தத்தை இந்தியாவின் 'தொழில்நுட்பத் தசாப்தம் என்று நான் அழைக்கிறேன். இந்தத் தசாப்தத்தில் ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் வெற்றியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், உலகிலேயே இந்தியா அனைவருக்கும் முன்னிலையில் உள்ளது. நாம் இந்தியர்கள் தொழில்நுட்பத்தை ஆர்வமுடன் ஆராய்பவர்கள். 'டிஜிட்டல் இந்தியா'வின் வெற்றி மற்றும் நிதித் தொழில்நுட்பத் துறையில்  நடைபெறும் சிறப்பான பணிகள் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தின் மீது இந்தியர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நம்மால் காண முடிகிறது. இந்தியா கொண்டுள்ள இந்த ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பு, நமது செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சியால் பெரும் உதவியைப் பெறும்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்தியா வெறும் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் சாட்சியாக மட்டும் இருக்கவில்லை; அந்த மாற்றத்தை முன்னின்று வழிநடத்தும் உறுதியோடு முன்னேறிச் செல்கிறது. நமது கொள்கைகளும் முடிவுகளும் வரவிருக்கும் தசாப்தங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகின்றன. எனவேதான், இன்று இந்தியா ஒவ்வொரு முக்கியத் தொழில்நுட்பத்திலும் முன்னோடியில்லாத முதலீடுகளைச் செய்து வருகிறது மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. நாம் விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்காகத் திறந்துவிட்டுள்ளோம்; 'இன்-ஸ்பேஸ்'  போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று கண்ணெதிரே தெரிகின்றன. விண்வெளித் துறை சார்ந்த நமது புத்தொழில் நிறுவனங்கள்  மிகச்சிறந்த பணிகளைச் செய்து வருகின்றன. அதேபோல், சமீபத்தில் அணுசக்தித் துறையில் 'சாந்தி மசோதா'  போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளோம். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவையில் அணுசக்தியின் பங்கினைப் பெருமளவு அதிகரிக்கப் போகிறது. நமது ஏஐ  எதிர்காலத்திற்கும் இது மிகவும் அவசியமானதாகும்.

நண்பர்களே,

குவாண்டம் கம்ப்யூட்டிங்  தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய உத்தி சார்ந்த சொத்தாகக் கருதி, இந்தியா அதனை ஒரு தீவிர இயக்கமாக  முன்னெடுத்து வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதில் இது மிகப் பெரிய பங்கினை வகிக்கும். அதாவது, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகிய இரண்டிலுமே இந்தியா இன்று மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். தொழில் புரிவதை எளிதாக்குதல், உற்பத்தியை எளிதாக்குதல்  மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்குதல்  ஆகியவற்றிலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

நண்பர்களே,

இந்தக் கேன்ஸ்  ஆலையிலிருந்து வெளிவரும் தயாரிப்புகள், உலகிற்கான தொழிற்சாலையாக உருவெடுக்க விரும்பும் இந்தியாவின் பயணத்திற்கு மேலும் வலிமை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு : இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அவர் தனது உரையை இந்தியில் நிகழ்த்தினார்.

----

(Release ID: 2247288)

AD/VK/KR

 

 


(रिलीज़ आईडी: 2282317) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam