பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் காந்திநகரில் சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகத் திறப்பு விழாவின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
31 MAR 2026 2:06PM by PIB Chennai
ஜெய் ஜினேந்திரா!
ஜெய் ஜினேந்திரா!
ஆச்சார்ய பகவந்த் ஸ்ரீ பத்மசாகர் சூரீஷ்வர் ஜி மகாராஜ் சாஹேப் அவர்களே, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் ஜி அவர்களே, முதல்வர் திரு. பூபேந்திர பாய் அவர்களே, மாநில துணை முதல்வர் சகோதரர் ஹர்ஷ் சங்வி ஜி அவர்களே, பரம பூஜ்ய ஆச்சார்ய பகவந்த் அவர்களே, பூஜ்ய சாது பகவந்த், சாத்விஜி பகவந்த் அவர்களே, இந்தப் புனிதக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து ஆச்சாரியர்கள் மற்றும் முனி பகவந்த் அவர்களே, மதிப்பிற்குரிய கொடையாளர்களே, அறிஞர்களே, பெரியோர்களே மற்றும் தாய்மார்களே!
இன்று, பகவான் மகாவீர் ஜெயந்தி எனும் மங்களகரமான திருநாளில், இந்தப் புனிதமான ஜெயின் புனிதத் தலத்திற்கு வரும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். முதலாவதாக, பகவான் மகாவீரரின் பாதங்களில் நான் தலைவணங்குகிறேன். கோபா தீர்த்தத்திலிருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று, பரம பூஜ்ய ஆச்சார்ய ஸ்ரீ கைலாச சாகர் சூரீஷ்வர்ஜி மகாராஜ் சாஹேப் அவர்களின் நினைவையும் நான் வணங்குகிறேன். அவருடைய கனவு தான் கோபா திருத்தலத்தின் இந்த மண்ணில் அறிவு மற்றும் நம்பிக்கையின் மாபெரும் மையத்தை நிறுவியுள்ளது. இந்த கோபா தீர்த்த தளம் ஆன்மீக அமைதியால் நிறைந்துள்ளது. எங்கே ஆற்றல் இவ்வளவு தெய்வீகமாக இருக்கிறதோ, எங்கே பல சமண முனிவர்கள் மற்றும் துறவிகளின் தவம் இணைந்திருக்கிறதோ, அங்கே ஆக்கமும் சேவையும் தானாகவே வெளிப்பட்டுச் செயல்படுகின்றன. கோபா தீர்த்தத்தில் கல்வி, ஆன்மீகப் பயிற்சி மற்றும் நிதானம் ஆகிய ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதை நான் பார்த்து வருகிறேன். இங்கே நற்பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன, கலாச்சார விழுமியங்கள் வலிமை பெறுகின்றன, அறிவு போஷிக்கப்படுகிறது. இந்த 'திரிவேணி' தான் இந்திய நாகரிகத்தின் அடிப்படை. இந்த திரிவேணியைத் தொடர்ந்து ஓடச் செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
நண்பர்களே,
ஆயிரக்கணக்கான ஆண்டுகால இந்திய பாரம்பரியம், சமண மதத்தின் காலமற்ற அறிவு, நமது பொக்கிஷங்கள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட உத்வேகங்கள் ஆகியவற்றை வரும் நூற்றாண்டுகளுக்கு அழியாததாக மாற்றவும், அடுத்த தலைமுறைக்கு ஒரு புதிய மற்றும் நவீன வடிவில் அவற்றைக் கொண்டு சேர்க்கவும் நமது துறவிகள் இந்த சமண பாரம்பரிய அருங்காட்சியகத்தை உருவாக்க நினைத்தார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, அந்த எண்ணம் ஒரு பிரம்மாண்ட வடிவில் நனவாகியுள்ளது. இந்த 'சாம்ராட் சம்பிரதி' அருங்காட்சியகம் சமண தத்துவம், இந்திய கலாச்சாரம் மற்றும் நமது பண்டைய பாரம்பரியத்தின் புனித மையமாக மாறியுள்ளது. இந்த தனித்துவமான முயற்சிக்காக நமது சமண முனிவர்கள் மற்றும் துறவிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது பாதங்களில் நான் தலைவணங்குகிறேன். மேலும் இப்பணியில் பெரும் பங்களிப்பை வழங்கிய ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்புள்ள மக்களையும் நான் பாராட்டுகிறேன்.
சகோதர சகோதரிகளே,
காலமற்ற அறிவை புதிய தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காக நாம் புதுமைகளை உருவாக்கும்போது, புத்துணர்வைக் கொண்டு வரும்போது, அதன் மூலம் நமது பாரம்பரியம் செழுமையடைகிறது மற்றும் வருங்காலமும் உத்வேகம் பெறுகிறது. சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகம் கோடிக்கணக்கான இந்திய மக்களின் பாரம்பரியம்; இது இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் சொத்து. இதற்காக அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
சாம்ராட் சம்பிரதி என்பது வெறும் ஒரு வரலாற்று மன்னரின் பெயர் மட்டுமல்ல. சாம்ராட் சம்பிரதி என்பவர் இந்தியாவின் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்கும் ஒரு பாலமாவார். ஏனெனில், நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, உலகின் பல நாகரிகங்களில் சிறந்த சிந்தனையாளர்களும் தத்துவஞானிகளும் பிறந்ததைக் காண்கிறோம். மனிதநேயத்தின் விழுமியங்களும் பல்வேறு வரையறைகளில் செதுக்கப்பட்டன. ஆனால், அதிகாரம் மற்றும் ஆட்சி என்று வந்தபோது, பல ஆட்சியாளர்கள் அந்த விழுமியங்களையும் கொள்கைகளையும் ஓரம் தள்ளிவிட்டனர். இதன் காரணமாக, சிந்தனைக்கும் நடைமுறைக்கும், கொள்கைக்கும் ஆட்சிமுறைக்கும் இடையே ஒரு இடைவெளி உருவாகிக் கொண்டே இருந்தது.
ஆனால், இந்தியாவில் சாம்ராட் சம்பிரதி போன்ற ஆட்சியாளர்கள் இருந்தனர், அவர்கள் அதிகாரத்தைச் சேவையாகவும் ஆன்மீகப் பயிற்சியாகவும் கருதிப் பணியாற்றினர். ஒருபுறம் சில ஆட்சியாளர்கள் வன்முறையை ஆயுதமாக்கி ஆட்சி செய்தபோது, மறுபுறம் சாம்ராட் சம்பிரதி அரியணையில் அமர்ந்து கொண்டே அகிம்சையை விரிவுபடுத்தினார். அவர் வாய்மை, திருடாமை மற்றும் பற்றற்ற நிலை ஆகியவற்றை ஊக்குவித்தார். இத்தகைய பற்றற்ற தன்மையுடன், சுயநலமற்ற உணர்வுடன், நிர்வாகத்தைச் சேவையின் ஊடகமாகக் கருதி வாழ்வது - இந்த பாடத்தை நாம் இந்தியாவின் கடந்த காலத்திலிருந்து மட்டுமே பெற முடியும். அத்தகைய கடந்த காலத்தைத்தான் இந்த அருங்காட்சியகத்தில் நாம் பாதுகாத்து வருகிறோம்.
நண்பர்களே,
இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு அடியிலும் பிரம்மாண்ட இந்தியாவின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை நான் கண்டேன். இதிலுள்ள ஏழு காட்சியகங்களும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் கலாச்சார செழிப்பையும் பறைசாற்றுகின்றன. முதல் காட்சியகத்தில் நாம் 'நவபத'த்தைக் காண்கிறோம். நவபதம் என்றால் - அரிஹந்த், சித்தர், ஆச்சாரியார், உபாத்யாயர் மற்றும் சாது. சரியான பார்வை, சரியான அறிவு, சரியான நடத்தை மற்றும் சரியான தவம்; அதாவது, தாமாகவே தவம் செய்து வாழ்க்கையை உணர்ந்தவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் பெறும் அறிவு சரியானதாக இருக்க வேண்டும்! நமது ஒழுக்கம் சரியானதாக இருக்க வேண்டும்! ஏனெனில் அறிவு சரியானதாக இருக்கும்போது, அது சமநிலைக்கும் சேவைக்கும் அடிப்படையாக அமைகிறது.
நண்பர்களே,
மூன்றாவது காட்சியகத்தில், நமது தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை, அவர்களின் போதனைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் கலைநயத்துடன் உயிர் கொடுக்கப்பட்டுள்ளன.
சகோதர சகோதரிகளே,
இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பம்சம் மற்றும் பலம் கண்ணுக்குத் தெரிகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, அந்த பலம் என்பது - இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை. உலகம் எப்போதும் நம்பிக்கை, மதம் மற்றும் வழிபாட்டு முறைகளின் பெயரால் மோதல்களைக் கண்டு வந்துள்ளது. ஆனால் இந்த அருங்காட்சியகத்தில், இந்தியாவின் மற்ற அனைத்து மதங்களின் பெருமைமிக்க பிரதிநிதித்துவமும் உள்ளது. வேத மற்றும் பௌத்த மரபுகள், வேதங்கள், புராணங்கள், ஆயுர்வேதம், யோகா, தத்துவம் எனப் பல்வேறு மரபுகளின் அனைத்து வண்ணங்களும் ஒரு வானவில்லைப் போல ஒன்றாக இருப்பது இந்தியாவால் மட்டுமே சாத்தியம்.
நண்பர்களே,
இன்று உலகில் நிலவும் சூழலில், உலகம் எத்தகைய நிலையற்ற தன்மை மற்றும் அமைதியின்மை எனும் நெருப்பில் தகித்துக் கொண்டிருக்கிறதோ, அந்தச் சூழலில் இந்த அருங்காட்சியகத்தின் பாரம்பரியமும் அதன் செய்தியும் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மிக முக்கியமானது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வரும் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும். இங்கு வருபவர்கள் இந்தியா மற்றும் சமண மதத்தின் போதனைகளை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
நண்பர்களே,
இந்தியாவில் அறிவு என்பது எப்போதும் தடையின்றிப் பாய்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் தீர்த்தங்கரர்களும், முனிவர்களும், சிந்தனையாளர்களும் இங்கு பிறந்தார்கள். அறிவின் தொகுப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது, காலப்போக்கில் பல புதிய விஷயங்களும் அதில் சேர்க்கப்பட்டன. கற்பனை செய்து பாருங்கள், ஒரு காலத்தில் நமது தட்சசீலம் மற்றும் நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்கள் லட்சக்கணக்கான புத்தகங்களாலும் கையெழுத்துப் பிரதிகளாலும் நிறைந்திருந்தன. ஆனால், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் குறுகிய மனப்பான்மையுடன் அறிவையும் தங்களது எதிரியாகக் கருதி அவற்றை எரித்தனர்; மனிதகுலத்தின் அத்தகைய மாபெரும் பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டன. அந்த இக்கட்டான காலகட்டத்தில், எஞ்சியிருந்த கையெழுத்துப் பிரதிகளை மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, அவற்றைக் கண்டறிந்து பாதுகாப்பது நாட்டின் கடமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அடிமை மனப்பான்மை காரணமாக இதற்குக் கவனம் செலுத்தப்படவில்லை.
ஆச்சார்ய பகவந்த் ஸ்ரீ பத்மசாகர் சூரீஷ்வர் ஜி மகாராஜ் சாஹேப் போன்ற மாபெரும் ஆளுமைகளும் துறவிகளும் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டனர்; இதற்காகவே அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தனர். 60 ஆண்டுகால வாழ்க்கையில், கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக, நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அவர்கள் கையெழுத்துப் பிரதிகளைத் தேடினார்கள். அத்தகைய மூன்று லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் — பனை ஓலைகளிலும், பூர்ஜ மரப்பட்டைகளிலும் பொறிக்கப்பட்ட அந்த நூற்றாண்டு கால அறிவு தற்போது கோபாவில் பாதுகாப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் மற்றும் நமது எதிர்காலத்திற்கும் செய்யப்படும் மிகப்பெரிய சேவையாகும்.
நண்பர்களே,
கையெழுத்துப் பிரதிகளைப் புறக்கணித்ததன் மூலம் முந்தைய அரசாங்கங்கள் செய்த தவறை இன்று நாம் சரிசெய்து வருகிறோம். இதற்காக, நாம் 'ஞான பாரதம் இயக்கம்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தப் பணியில் நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த இயக்கத்தின் கீழ், பண்டைய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் அவை அறிவியல் பூர்வமாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஸ்கேன் செய்தல், வேதியியல் முறைப்படி பதப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் தொகுப்பு போன்ற அனைத்து முயற்சிகளும் இந்த திசையில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'மனதின் குரல் நிகழ்ச்சியில், இது குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது பற்றி நான் விரிவாகக் குறிப்பிட்டேன். இதில் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் தங்களிடம் உள்ள கையெழுத்துப் பிரதிகளைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிதறிக்கிடக்கும் கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிப்பதில் இந்த இயக்கம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும்.
நண்பர்களே,
அரசு அளவில் எடுக்கப்படும் 'ஞான பாரதம் இயக்கம்' மற்றும் கோபா தீர்த்தத்தின் அசாதாரணமான பங்களிப்பு ஆகிய சமுதாயம் மற்றும் அரசாங்கத்தின் இந்த கூட்டு முயற்சிகள், இந்தியாவின் புதிய கலாச்சார மறுமலர்ச்சியின் அடையாளமாகும்.
நண்பர்களே,
நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், அதை உலகிற்கு முன்னால் கொண்டு வருவதற்கும் இன்று அனைத்து மட்டங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வரும் அதே வேளையில், பண்டைய கோவில்களைப் புதுப்பித்தல், புனிதத் தலங்களை மேம்படுத்துதல், வரலாற்றுச் சின்னங்களை உருவாக்குதல் மற்றும் ஆயுர்வேதம் மற்றும் யோகாவை ஊக்குவித்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகள் எல்லா நிலைகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கே குஜராத்திலேயே, லோத்தலில் ஒரு பிரம்மாண்டமான கடல்சார் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது, இது உலகின் மிகப்பெரிய கடல்சார் அருங்காட்சியகமாக மாறப்போகிறது; இது இங்கிருந்து சுமார் 70-80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மறுபுறம், வட்நகரில் ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது; இது ஏற்கனவே உலகின் சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் தன் இடத்தைப் பிடித்துவிட்டது. டெல்லியில் ‘யுகே யுகீன் பாரத்’ அருங்காட்சியகத்தைக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று, முதல் முறையாக சுதந்திரப் போராட்ட வரலாற்றை அதன் முழுமையான வடிவில் முன்னுக்குக் கொண்டு வர அர்த்தமுள்ள பணிகள் செய்யப்பட்டுள்ளன. உங்களுக்கு நினைவிருக்கும், இதற்கு முன் இந்தப் பணிகள் அனைத்தும் அரசியல் கண்ணோட்டத்திலேயே செய்யப்பட்டன; ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்தின் கதையை எப்படி நிலைநிறுத்துவது, வாக்கு வங்கிக்கு ஏற்ப எப்படிப் பேசுவது என்பதைச் சுற்றியே அனைத்தும் அமைந்திருந்தன. அந்த மனநிலையை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். நாம் ‘அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரத்துடன் முன்னேறி வருகிறோம். இந்த மந்திரமே வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் ஆன்மாவாகும்.
நண்பர்களே,
துறவிகளாகிய நீங்கள் அனைவரும் இந்தியாவின் பாரம்பரியத்தைப் போற்றுவதற்கு இவ்வளவு பெரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறீர்கள். தனிப்பட்ட விருப்பங்களுக்கு மேலாக உயர்ந்து, சமுதாயம் மற்றும் தேசத்தின் இலக்குகளுக்காக நாம் உழைக்கும்போது, நாட்டின் வளர்ச்சி இன்னும் கூடுதல் வேகத்தைப் பெறுகிறது. இதே உணர்வுடன் தான், தில்லியில் நடைபெற்ற 'நவ்கார் மகாமந்திர தின' நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்றேன். அந்த நிகழ்வில் நான்கு பிரிவினரும் ஒன்றாகக் கூடியிருந்தனர். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நான் ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்தேன், ஒன்பது தீர்மானங்களைப் பற்றிப் பேசினேன்; அதைத்தான் இப்போது நமது முதல்வர் பூபேந்திர பாயும் குறிப்பிட்டார். ஒவ்வொரு முறையும் அந்த ஒன்பது தீர்மானங்களை உங்கள் முன் நான் கண்டிப்பாக மீண்டும் வலியுறுத்துகிறேன். இன்றைய இந்தத் தருணமும் அவற்றை மீண்டும் நினைவூட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகும். முதல் தீர்மானம் - நீரைப் பாதுகாப்பதற்கான தீர்மானம். 2. இரண்டாவது தீர்மானம் - தாயின் பெயரில் ஒரு மரம். 3. மூன்றாவது தீர்மானம் - தூய்மைப் பணி. 4. நான்காவது தீர்மானம் - உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம். 5. ஐந்தாவது தீர்மானம் - தேசத் தரிசனம் (நாட்டைச் சுற்றிப் பார்த்தல்). 6. ஆறாவது தீர்மானம் - இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்தல். 7. ஏழாவது தீர்மானம் - ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுதல். 8. எட்டாவது தீர்மானம் - யோகா மற்றும் விளையாட்டுகளை வாழ்க்கையில் இணைத்தல். 9. ஒன்பதாவது தீர்மானம் - ஏழைகளுக்கு உதவும் தீர்மானம். பத்தாவது தீர்மானத்தை நீங்களே சேர்த்துள்ளீர்கள், அதுதான் - இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல். இன்றைய இந்த நிகழ்ச்சி அதன் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளது.
நண்பர்களே,
வருங்காலத்தில், நமக்கு முன்னால் பெரிய இலக்குகள் உள்ளன; நாம் பெரிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நமது ஒற்றுமையும், இத்தகைய கலாச்சார ஆதரவுகளும் இதில் நமக்கு மிகப்பெரிய பலமாக அமையும். வரும் காலங்களில் சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகம் இந்த திசையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும் என்று நான் நம்புகிறேன். இது அறிவு, ஆன்மீகப் பயிற்சி மற்றும் கலாச்சாரத்தின் மையமாக மாறும், அங்கிருந்து புதிய தலைமுறை உத்வேகத்தைப் பெறும் மற்றும் சமுதாயம் ஒரு புதிய ஆற்றலைப் பெறும். இந்த நம்பிக்கையுடன், இத்தகைய முக்கியமான பணிக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே சமயம், நான் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்; மஹாராஜ் சாஹேப் அவர்கள் இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கும்போது, நாம் இதைப் பார்ப்பதற்குக் கூட நேரம் ஒதுக்கவில்லை என்றால் எப்படி? அதிகப்படியான மக்கள் இங்கு வந்து பார்த்துவிட்டு மட்டும் செல்வதாக இது இருக்கக்கூடாது; இதை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்; இது ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம். குஜராத்தில் உள்ள அனைத்து தலைமுறை மக்களும் தங்கள் குடும்பத்தினருடன் இங்கு வர வேண்டும், மனதார இதைக் கண்டுகளிக்க வேண்டும், மேலும் இந்த அறிவாற்றல் மற்றும் மாபெரும் பாரம்பரியத்தைப் பார்த்துப் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, இன்றைய மகாவீர் ஜெயந்தி பல வழிகளில் மங்களகரமானது. ஏனெனில், நான் காந்திநகருக்கு வந்து, குஜராத் மண்ணில் கால் பதித்ததும் அமையும் முதல் நிகழ்ச்சி நமது வேர்களுடன் இணைவதாக உள்ளது. இங்கிருந்து நான் இப்போது சானந்த் செல்லவிருக்கிறேன்; அங்கு நடைபெறவிருக்கும் இரண்டாவது நிகழ்ச்சி - உலகத்துடன் இணைவது. இங்கே நான் மாபெரும் கலாச்சார மரபுகளையும், பிரம்மாண்டமான கடந்த காலத்தையும் பருகினேன்; சானந்தில், உலகின் அதிநவீன தொழில்நுட்ப சிப்கள் தயாரிப்பதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் செமிகண்டக்டர்களின் தொடக்க விழா நடைபெறுகிறது. இங்கே வேர்களுடன் இணைவது, அங்கிருந்து உலகத்தை இணைப்பது - இவை அனைத்தும் குஜராத் மண்ணில் நடக்கின்றன, இந்திய மண்ணில் நடக்கின்றன. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.
ஜெய் ஜினேந்திரா!
ஜெய் ஜினேந்திரா!
ஜெய் ஜினேந்திரா!
குறிப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
-----
(Release ID:2247243)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282315)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam