பிரதமர் அலுவலகம்
டிவி9 உச்சிமாநாடு 2026: பிரதமர் திரு.நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
23 MAR 2026 9:21PM by PIB Chennai
வணக்கம்!
சமீப காலங்களில், 'டிவி9 பாரத்வர்ஷ்' சேனலை ஒன்று அல்லது இரண்டு முறை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பொதுவாக, உங்கள் கவனம் போர் மற்றும் ஏவுகணைகள் மீதே அதிகமாக இருக்கிறது, தற்போதைய சூழலில் உங்களுக்குத் தேவையான செய்திகள் அளவுக்கு அதிகமாகவே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பெரிய நாடுகள் டிவி9-க்கு அவ்வளவு செய்திகளை வழங்கத் தீர்மானித்திருப்பது போலத் தெரிகிறது. ஆனால் சற்றுத் தீவிரமாகச் சிந்தித்தால், இன்று உலகம் கடந்து கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலைகள் இதற்கு முன் எப்போதும் இல்லாதவை மற்றும் மிகவும் பாரதூரமானவை. இத்தகைய சூழல்களுக்கு மத்தியில், கருத்துப் பரிமாற்றத்திற்காக டிவி9 நெட்வொர்க் ஒரு மிக முக்கியமான தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த உச்சிமாநாட்டில், நீங்கள் அனைவரும் "இந்தியா மற்றும் உலகம்" என்ற தலைப்பில் விவாதித்து வருகிறீர்கள். இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன், இந்த உச்சிமாநாடு சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறேன்.
நண்பர்களே,
இன்று உலகம் மோதல்களில் சிக்கித் தவிக்கும் போது, அந்த மோதல்களின் மோசமான பாதிப்புகள் உலகெங்கிலும் எதிரொலிக்கும் போது, "இந்தியா மற்றும் உலகம்" என்பதைப் பற்றிப் பேசுவது மிகவும் பொருத்தமானது. இந்தியா இன்று பொருளாதார ரீதியாக மிக வேகமாக முன்னேறி வரும் ஒரு நாடு. 2014-க்கு முந்தைய நிலையை பின்னுக்குத் தள்ளிவிட்டு, புதிய நம்பிக்கையுடன் இந்தியா முன்னேறிச் செல்கிறது. இப்போது இந்தியா சவால்களைக் கண்டு ஒதுங்குவதில்லை, மாறாக அவற்றை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது.
கடந்த 5-6 ஆண்டுகளைக் கவனித்துப் பாருங்கள்: பெருந்தொற்றுக்குப் பிறகு, சவால்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே தான் இருக்கின்றன. இந்தியாவையும் இந்தியர்களையும் சோதிக்காத ஒரு வருடம் கூட இல்லை. இருப்பினும், 140 கோடி குடிமக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், இந்தியா ஒவ்வொரு நெருக்கடியையும் எதிர்கொண்டு முன்னேறியுள்ளது. போர் காலங்களில் கூட, இந்தியாவின் கொள்கை, உத்தி மற்றும் வலிமையைக் கண்டு உலகம் ஆச்சரியப்படுகிறது. "உண்மைக்கு நெருப்பு ஒரு சோதனை" என்று ஒரு பழமொழி உண்டு. பிப்ரவரி 28 முதல் உலகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவிய போதிலும், கடுமையான பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், இந்தியா முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் உறுதியாக நடைபோட்டு வருகிறது. இந்த 23 நாட்களில், உறவுகளைக் கையாள்வதிலும், முடிவெடுப்பதிலும் மற்றும் நெருக்கடி மேலாண்மையிலும் இந்தியா தனது ஆற்றலை நிரூபித்துள்ளது.
நண்பர்களே,
இன்று உலகம் பல முகாம்களாகப் பிரிந்து கிடக்கும் வேளையில், இந்தியா இதுவரை இல்லாத மற்றும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நட்புறவுப் பாலங்களை அமைத்துள்ளது. வளைகுடா நாடுகள் முதல் மேற்கு நாடுகள் வரை, தெற்குலக நாடுகள் முதல் அண்டை நாடுகள் வரை, இந்தியா அனைவராலும் நம்பப்படும் ஒரு கூட்டாளியாகத் திகழ்கிறது. "நாம் யாருடைய பக்கம் இருக்கிறோம்?" என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில் எளிமையானது: நாம் இந்தியாவின் பக்கம் இருக்கிறோம், இந்தியாவின் நலன்களின் பக்கம் இருக்கிறோம், அமைதி மற்றும் பேச்சுவார்த்தையின் பக்கம் இருக்கிறோம்.
நண்பர்களே,
உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில், பன்முகத்தன்மை மற்றும் மீள்தன்மைக்கான ஒரு மாதிரியை இந்தியா முன்வைத்துள்ளது. எரிசக்தி, உரங்கள் அல்லது அத்தியாவசியப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும், குடிமக்களுக்குக் குறைந்தபட்ச பாதிப்பு கூட ஏற்படாமல் இருக்க இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டது, இன்றும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறது.
நண்பர்களே,
தேசியக் கொள்கையே அரசியலின் அடித்தளமாக மாறும்போது, நாட்டின் எதிர்காலம் மிக முக்கியமானதாகிறது. ஆனால், தனிப்பட்ட நலன்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் போது, மக்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாகத் தங்களின் சொந்த எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். 2004 மற்றும் 2010-க்கு இடையில் என்ன நடந்தது என்பதை நினைவு கூருங்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நேரத்தில், காங்கிரஸ் நாட்டைப் பற்றி கவலைப்படவில்லை, மாறாகத் தனது அதிகாரத்தைப் பற்றியே கவலைப்பட்டது.
அவர்கள் 1.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 'ஆயில் பாண்டுகளை' வெளியிட்டனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே, தான் எதிர்கால சந்ததியினரின் மீது கடன் சுமையை ஏற்றி வைப்பதாக ஒப்புக்கொண்டார். ஆயில் பாண்ட் முடிவு தவறானது என்று தெரிந்தும், 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் அரசாங்கத்தை நடத்தியவர்கள், தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள இந்த முடிவை எடுத்தனர். ஏனெனில், இதற்கான பொறுப்புக்கூறல் உடனடியாக இருக்காது - இதற்கான திருப்பிச் செலுத்தும் காலம் 2020-க்குப் பிறகுதான் தொடங்க இருந்தது.
நண்பர்களே,
கடந்த 5-6 ஆண்டுகளில், எங்கள் அரசு காங்கிரஸ் ஆட்சியின் அந்தப் பாவத்தைக் கழுவப் பாடுபட்டது, இந்தச் சுத்திகரிப்புக்கான விலை ஒன்றும் சிறியதல்ல. இதற்கு முன்பு இப்படி ஒரு சுத்திகரிப்பை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். 1.48 லட்சம் கோடி ரூபாய்க்குப் பதிலாக, வட்டி சேர்க்கப்பட்டதால் நாடு 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த வேண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். இக்காலகட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ஏவுகணைகள் போன்ற அறிக்கைகளை வீசுகிறார்கள் - ஏவுகணைகள் என்றால் டிவி9-க்கு மகிழ்ச்சிதான் - ஆனால் இந்த விஷயம் வரும்போது, அவர்கள் பேச்சற்றுப் போகிறார்கள்.
நண்பர்களே,
மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து, இன்று மக்களவையில் எனது அறிக்கையைத் தாக்கல் செய்தேன். உலகில் எங்குப் போர்கள் நடந்தாலும், அவை இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் வெகு தொலைவில்தான் நடக்கின்றன. ஆனால் இன்றைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகளில், போரின் மோசமான விளைவுகளிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது. பல நாடுகளில் நிலைமை ஏற்கனவே மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் கூட, சில மனிதர்கள், சில கட்சிகள், அரசியல் சுயநலத்தால் தூண்டப்பட்டு, இந்த நெருக்கடியான நேரத்திலும் அரசியல் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். எனவே, டிவி9 மேடையிலிருந்து நான் மீண்டும் சொல்கிறேன்: இது நிதானத்துடனும், உணர்திறனுடனும் செயல்பட வேண்டிய நேரம். பெருந்தொற்றின் பெரும் நெருக்கடியின் போது, குடிமக்கள் ஒரு சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடும்போது, அதன் முடிவுகள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருப்பதை நாம் கண்டோம். அதே உணர்வுடன், இந்தப் போரினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
உலகில் இத்தனை கொந்தளிப்புகள் நிலவினாலும், இந்தியா தனது முன்னேற்றத்தின் வேகத்தைத் தக்கவைத்துள்ளது. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து கடந்த 23 நாட்களில் நடந்தவற்றை மட்டும் நான் பட்டியலிட்டால், நாட்டின் கிழக்கு முதல் மேற்கு வரையிலும், வடக்கு முதல் தெற்கு வரையிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரயிலின் முக்கியமான வழித்தடங்கள் திறப்பு, சில்சார் அதிவேக வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், கோட்டாவில் புதிய விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுதல், மதுரை விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்து வழங்குதல் - எனப் பல பணிகள் இந்த 23 நாட்களில் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தொழில் வளர்ச்சியை முடுக்கிவிடுவதற்கான ஒரு பிரம்மாண்டமான திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் நாடு முழுவதும் 100 'பிளக்-அண்ட்-ப்ளே' தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். சிறு நீர்மின் திட்ட மேம்பாட்டுத் திட்டத்திற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது, இது வரும் ஆண்டுகளில் 1,500 மெகாவாட் புதிய நீர்மின் திறனைச் சேர்க்கும். இக்காலகட்டத்தில், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் இயக்கம் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதியின் கீழ் 18,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நாடு எவ்வளவு வேகமாக உழைக்கிறது என்பதற்குச் சான்றாகும்.
நண்பர்களே,
மேலாண்மை உலகில் ஒரு கொள்கை உண்டு: "எது அளவிடப்படுகிறதோ, அதுவே நிர்வகிக்கப்படுகிறது." ஆனால் அதனுடன் ஒரு கருத்தை நான் சேர்க்க விரும்புகிறேன்: "எது அளவிடப்படுகிறதோ, அது மேம்படுத்தப்படுகிறது, இறுதியில் அது உருமாற்றப்படுகிறது." ஏனெனில், மதிப்பீடு என்பது விழிப்புணர்வை உருவாக்குகிறது. மதிப்பீடு பொறுப்புணர்வை நிலைநாட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மதிப்பீடு புதிய சாத்தியக்கூறுகளைப் பெற்றெடுக்கிறது.
நண்பர்களே,
2014-க்கு முந்தைய 10-11 ஆண்டுகளையும், 2014-க்குப் பிந்தைய 10-11 ஆண்டுகளையும் நீங்கள் மதிப்பீடு செய்தால், இந்தக் கொள்கையைப் பின்பற்றி இந்தியா ஒவ்வொரு துறையையும் எப்படி மாற்றியுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். முன்னதாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஒரு நாளைக்கு சுமார் 11-12 கிலோமீட்டர் என்ற வேகத்தில் அமைக்கப்பட்டன; இன்று இந்தியா ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் வேகத்தில் நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. முன்னதாக, துறைமுகங்களில் கப்பல்கள் வந்து செல்லும் நேரம் 5-6 நாட்களாக இருந்தது; இன்று அதே பணி 2 நாட்களுக்கும் குறைவான நேரத்தில் முடிக்கப்படுகிறது.
முன்பு, 'புத்தொழில்' கலாச்சாரம் பற்றிப் பேச்சுகளே இல்லை. 2014-க்கு முன்பு இந்தியாவில் வெறும் 400-500 புத்தொழில்கள் மட்டுமே இருந்தன. இன்று இந்தியாவில் 2,00,000-க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட புத்தொழில்கள் உள்ளன. முன்னதாக, மருத்துவக் கல்வி இடங்கள் மிகக் குறைவாக, அதாவது சுமார் 50-55 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே இருந்தன; இன்று இந்த எண்ணிக்கை 1,25,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. முன்னதாக, கோடிக்கணக்கான மக்கள் வங்கி அமைப்பிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தனர். நாட்டில் சுமார் 250 மில்லியன் (25 கோடி) வங்கி கணக்குகள் மட்டுமே இருந்தன. அனைவருக்கமான நிதி திட்டத்தின் மூலம், 550 மில்லியனுக்கும் (55 கோடி) அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக, நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 70-க்கும் குறைவாக இருந்தது. இன்று விமான நிலையங்களின் எண்ணிக்கை 160-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
திட்டங்கள் முன்பும் தீட்டப்பட்டன, ஆனால் இன்று அதன் முடிவுகள் கண்கூடாகத் தெரிவதுதான் வித்தியாசம். முன்பு வேகம் குறைவாக இருந்தது, இன்று இந்தியா அதிவேகப் பாதையில் உள்ளது. முன்பு சாத்தியக்கூறுகள் இருளில் இருந்தன, இன்று தீர்மானங்கள் சாதனைகளாக மாறி வருகின்றன. அதனால்தான், இது ஒரு 'புதிய இந்தியா' என்ற செய்தி உலகுக்குச் சென்றடைகிறது. தனது வளர்ச்சிக்காக இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
கடந்த காலங்களில் உருவான வளர்ச்சியின் சமமற்ற நிலையை, வாய்ப்புகளாக மாற்றுவதே இன்றைய நமது முயற்சியாகும். உதாரணமாக கிழக்கு இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். கிழக்கு இந்தியா வளங்கள் நிறைந்த பகுதி, ஆனால் அங்கு ஆட்சி செய்தவர்களின் பல தசாப்த கால அலட்சியம் அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது. இப்போது நிலைமை மாறி வருகிறது.
எந்த அசாமில் ஒரு காலத்தில் துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டதோ, இன்று அங்கே ஒரு செமிகண்டக்டர் ஆலை கட்டப்பட்டு வருகிறது. ஒடிசாவில், செமிகண்டக்டர் முதல் பெட்ரோ கெமிக்கல் வரை புதிய துறைகள் வளர்ந்து வருகின்றன. பீகாரில், கடந்த 60-70 ஆண்டுகளில் கங்கை நதியின் குறுக்கே ஒரே ஒரு பெரிய பாலம் மட்டுமே கட்டப்பட்டது; ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கள்ளத் துப்பாக்கிச் செய்திகளுக்குப் பெயர் பெற்ற உத்தரப் பிரதேசம், இன்று மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முத்திரை பதித்து வருகிறது.
நண்பர்களே,
கிழக்கு இந்தியாவின் மற்றொரு முக்கிய மாநிலம் மேற்கு வங்கம். ஒரு காலத்தில் இந்தியாவின் கலாச்சாரம், கல்வி, தொழில் மற்றும் வர்த்தகத்தின் மையமாக மேற்கு வங்கம் திகழ்ந்தது. கடந்த 11 ஆண்டுகளில், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பெருமளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று அங்கே வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் ஒரு இரக்கமற்ற அரசு உள்ளது. மேற்கு வங்கத்தில் ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இந்த இரக்கமற்ற அரசால் முடக்கப்பட்டுள்ளது என்பதை டிவி9 பங்களா நேயர்கள் அறிவார்கள். பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீட்டுவசதி திட்டம் முடக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான திட்டம் முடக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, இந்த இரக்கமற்ற அரசு தனது அரசியல் சுயநலத்திற்கே முன்னுரிமை அளிக்கிறது.
நண்பர்களே,
நாட்டில் இத்தகைய அரசியலைத் தொடங்கிய கட்சி தனது பாவங்களிலிருந்து தப்பிக்க முடியாது, அந்தக் கட்சி காங்கிரஸ். காங்கிரஸின் அரசியலின் ஒரே நோக்கம், சாத்தியமான அனைத்து வழிகளிலும் வளர்ச்சியை எதிர்ப்பதுதான். நான் குஜராத்தில் இருந்த காலத்திலிருந்தே காங்கிரஸ் இதைச் செய்து வருகிறது. குஜராத் மக்கள் பல ஆண்டுகளாக எங்களை ஆசீர்வதித்தபோது, காங்கிரஸ் அந்த மக்கள் தீர்ப்பை ஏற்கவில்லை. அவர்கள் குஜராத்தின் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கினார்கள், அதன் முன்னேற்றத்தைக் கூண்டில் நிறுத்தினர். அதே நம்பிக்கை இன்று நாடு முழுவதும் காணப்படும்போது, காங்கிரஸின் எதிர்ப்பு பிராந்திய அளவிலிருந்து தேசிய அளவிற்கு வளர்ந்துள்ளது.
அரசியலில் எதிர்க்கட்சியாக இருப்பது என்பது வளர்ச்சியையே எதிர்ப்பதாக மாறும்போது, விமர்சனங்கள் நாட்டின் சாதனைகளையே கேள்வி கேட்கத் தொடங்கும்போது, அது வெறும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு மட்டுமல்ல, அது நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு சங்கடப்படும் ஒரு மனப்போக்காக மாறிவிடுகிறது. இன்று காங்கிரஸ் இந்த மனப்போக்கிற்கு அடிமையாகி விட்டது. நாட்டின் ஒவ்வொரு வெற்றியும் கேள்விக்குள்ளாக்கப்படுவது, ஒவ்வொரு சாதனையின் மீதும் குறை தேடுவது, ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைய வேண்டும் என விரும்புவதுதான் இன்றைய நிலைமையாக உள்ளது.
கொரோனா காலத்தின் போது, நாடு தனக்கென ஒரு தடுப்பூசியை உருவாக்கியபோது, காங்கிரஸ் அதைச் சந்தேகித்தது. இந்தியாவில் தயாரிப்போம் இயக்கம் பற்றி பேசியபோது, அது வெற்றி பெறாது என்று கூறி, அதை ஒரு 'காகிதப் புலி' என்று கேலி செய்தனர். டிஜிட்டல் இந்தியா தொடங்கப்பட்டபோது, அதைப் பார்த்துப் பரிகாசித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும், இந்தியாவின் நற்பேறாகவும் காங்கிரஸின் துரதிர்ஷ்டமாகவும், இந்தியா ஒவ்வொரு சவாலையும் வெற்றியாக மாற்றியது. இன்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு இந்தியா ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. உற்பத்தி மற்றும் புத்தொழில்களில் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
நண்பர்களே,
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி என்பது அவசியம். ஆனால் எதிர்ப்புக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. அரசாங்கத்தை எதிர்ப்பது என்பது ஜனநாயக உரிமை. ஆனால் நாட்டை அவதூறு செய்வது காங்கிரஸின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. நாட்டின் சாதனைகளே ஒருவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் நிலைக்கு எதிர்ப்பு வளரும்போது, அது அரசியல் அல்ல, அது ஒரு கண்ணோட்டக் கோளாறு. சமீபத்தில் நடந்த உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் போது நாம் இதைக் கண்டோம். ஒட்டுமொத்த உலகமே இந்தியாவில் கூடியிருந்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் அங்கு சென்று போராட்டம் நடத்தித் தங்களின் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர். நாட்டின் கவுரவத்தைப் பற்றி அவர்களுக்கு எவ்வளவு குறைவான அக்கறை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அதனால்தான் இன்று கட்சி நலனை விட தேசிய நலனை மேலாக வைப்பது அவசியமாகிறது, ஏனெனில் இறுதியாக, அரசியலுக்கு மேலே நிற்பது நாடும், நாட்டின் வளர்ச்சியுமே ஆகும்.
நண்பர்களே,
இன்றைய நாள் நம்மை இந்த திசையிலேயே பயணிக்கத் தூண்டுகிறது. இதே நாளில்தான், தேசத்திற்காக பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய தியாகிகள் தங்களின் உயரிய உயிர்த்தியாகத்தைச் செய்தனர். இன்று சோசலிச இயக்கத்தின் சிறந்த கொள்கைவாதியான டாக்டர் ராம்மனோகர் லோகியாவின் பிறந்தநாளும் கூட. இவர்களெல்லாம் எப்போதுமே தங்களுக்கு மேலாகத் தேசத்தை வைத்த உந்துசக்திகள். தேசிய நலனை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கும் இந்த உந்துதல் தான் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும். இந்த உந்துதல் இந்தியாவைத் தற்சார்பு கொண்ட நாடாக மாற்றும்.
இந்த டிவி9 உச்சிமாநாடு, இந்தியாவின் தன்னம்பிக்கையையும், இந்தியா மற்றும் இந்தியர்கள் மீது உலகம் கொண்டுள்ள நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். உங்கள் மத்தியிலே வந்து உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்கு மிக்க நன்றி.
வணக்கம்!
----
(Release ID: 2244202)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282083)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Malayalam
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada