பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
28 APR 2026 7:34PM by PIB Chennai
நம பார்வதி பதயே, ஹர ஹர மகாதேவ்!
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஜி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாக்களும், பாஜக-வின் தேசியத் தலைவருமான திரு. நிதின் நவீன் ஜி அவர்களே, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில பாஜக தலைவருமான திரு. பங்கஜ் சவுத்ரி ஜி அவர்களே, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் சகோதரி பூனம் மவுரியா ஜி அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் காசியின் பெண் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமத் தலைவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, இங்கே பெரும் எண்ணிக்கையில் வருகை தந்துள்ள என் தாய்மார்களே, சகோதரிகளே மற்றும் மகள்களே.. உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
நண்பர்களே,
நமது காசி மாநகரம் மாதா சிருங்கார் கௌரி, மாதா அன்னபூர்ணா, மாதா விசாலாட்சி, மாதா சங்கடா மற்றும் கங்கை மாதா எனத் தெய்வீக சக்திகள் குடிகொண்டுள்ள புனிதமான நிலமாகும். இத்தகைய சூழலில், உங்கள் அனைவரையும் உள்ளடக்கிய சகோதரிகள் மற்றும் மகள்களின் இந்தச் சங்கமம், இந்தத் தருணத்தையே மிகவும் தெய்வீகமானதாக மாற்றியுள்ளது. காசி மண்ணின் மைந்தனான நான், இங்கே குழுமியுள்ள என் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்றைய இந்த நிகழ்வு உண்மையாகவே பெண் சக்தியைப் போற்றுவதற்கும், அவர்களை மேம்படுத்துவதற்குமான ஒரு கொண்டாட்டமாகும். சற்று நேரத்திற்கு முன்னதாகவே, இங்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன மற்றும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. காசியின் ஒவ்வொரு வகையான வளர்ச்சியோடு தொடர்புடைய திட்டங்களும் இதில் அடங்கும்.
இதனுடன் சேர்த்து, காசி மற்றும் அயோத்திக்கு இடையிலான இணைப்பை அதிகரிக்கும் பணிகளும் இதில் உள்ளன. சற்று நேரத்திற்கு முன்பு, இரண்டு 'அமிர்த பாரத்' இரயில்கள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டன. காசியிலிருந்து புனே வரையிலும், அயோத்தியிலிருந்து மும்பை வரையிலும் இயக்கப்படவுள்ள இந்த இரண்டு அமிர்த பாரத் ரயில்கள், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்தும். இனி மும்பை-புனே மற்றும் ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநில மக்களும் அயோத்தி தாம் மற்றும் காசி விஸ்வநாதர் தாமை வந்தடைய மற்றொரு நவீன வசதி கிடைத்துள்ளது. இந்தத் தொடக்க விழாவிற்காக நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவை வல்லரசாக்கும் வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் 'வளர்ந்த இந்தியா' என்று பேசும் போதெல்லாம், அதன் வலுவான தூணாகத் திகழ்வது இந்தியாவின் பெண் சக்திதான். இன்று இந்த நிகழ்ச்சியில், ஒரு மாபெரும் யாகத்தைத் தொடங்குவதற்காக உங்கள் அனைவருடைய ஆசிகளையும் பெறுவதற்கு நான் வந்துள்ளேன்.
காசியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாட்டின் பிரதமராகவும், ஒரு பெரிய தேசிய இலக்கை அடைவதற்கு உங்கள் ஆசிகள் எனக்குத் தேவைப்படுகின்றன. அந்தப் பெரிய இலக்கு என்னவென்றால் - மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதாகும். சில நாட்களுக்கு முன்பு, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளால் நாடாளுமன்றத்தில் எங்களது முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், நான் மீண்டும் உங்கள் அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன், உங்கள் இடஒதுக்கீட்டு உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நான் எந்த முயற்சியையும் விட்டுவிடமாட்டேன்.
நண்பர்களே,
வீட்டில் ஒரு பெண் அதிகாரம் பெற்றால், அந்த முழு குடும்பமும் வலிமை பெறுகிறது; அதன் மூலம் சமூகம் வலுவடைகிறது, ஒட்டுமொத்த நாடும் பலம் பெறுகிறது. கடந்த காலங்களில், சகோதரிகளும் மகள்களும் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. காசியைச் சேர்ந்த சகோதரிகளாகிய நீங்களும் பல இன்னல்களைக் கண்டிருக்கிறீர்கள், பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறீர்கள்.
"இதைச் செய்வதால் நீ என்ன செய்யப் போகிறாய்? இது உனக்கு ஏன் தேவை? நீ என்ன செய்வாய்? உனக்கு என்ன தேவை இருக்கிறது? அமைதியாக இரு, இந்த வேலையை உன்னால் செய்ய முடியாது" என மகள்கள் பலமுறை பல்வேறு வகையான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்னும் பல நேரங்களில் கேள்விகள் கூட கேட்கப்படுவதில்லை, "இது உனக்கான வேலை அல்ல" என்று நேரடியாக உத்தரவுகளே பிறப்பிக்கப்பட்டன.
நண்பர்களே,
இத்தகைய சூழல் காசி சகோதரிகளுக்கு மட்டும் இருந்ததல்ல, நாட்டின் பெரும்பாலான சகோதரிகளும் மகள்களும் இத்தகைய அனுபவங்களைக் கொண்டிருந்தனர்; இது இயல்பான ஒன்றாகவே கருதப்பட்டது. அதனால்தான், 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, இத்தகைய எண்ணங்களை உடைப்பதைத்தான் எனது முதல் முயற்சியாக மேற்கொண்டேன்.
அச்சமயத்தில், மகள்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு பெரிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஒன்று – 'சாலா பிரவேசோத்சவ்' (பள்ளி நுழைவுத் திருவிழா). மகள்கள் அதிக எண்ணிக்கையில் பள்ளிகளைச் சென்றடைய வேண்டும், அவர்கள் பாதியிலேயே படிப்பைக் கைவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம். இரண்டாவது – 'முதலமைச்சர் கன்யா கேளவணி நிதி'. மகள்களின் கல்விச் செலவுகளுக்கு உதவுவதற்காக இந்த நிதி தொடங்கப்பட்டது.
நண்பர்களே,
அன்றிலிருந்து இன்று வரை, எங்களது அரசின் கொள்கைகளில் பெண்களுக்குத் தான் தொடர்ந்து முதலிடம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு, நீங்கள் எங்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியபோது, நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன; இவை "இஸத் கர்கள்" (தன்னுமதி இல்லங்கள்) என்று அழைக்கப்பட்டன. 30 கோடிக்கும் அதிகமான சகோதரிகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 2.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 12 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் சென்றடைந்தது. அதாவது, பல பெரிய திட்டங்களின் மையப்புள்ளியாகச் சகோதரிகளும் மகள்களும் வைக்கப்பட்டனர்.
நண்பர்களே,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வாரணாசியில், செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடர்பான ஒரு மிகப் பெரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காசியில் ஒரே மாதத்தில் 27 ஆயிரம் மகள்களுக்குச் செல்வ மகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன; மேலும் ஒவ்வொரு மகளின் வங்கிக் கணக்கிலும் 300 ரூபாய் செலுத்தப்பட்டது. மகள்களின் கல்வி மற்றும் சிறப்பான எதிர்காலத்திற்குச் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெரும் பங்காற்றி வருகிறது. இத்திட்டம் மகள்களின் படிப்பை வலுப்படுத்தியுள்ளது; முத்ரா திட்டம் அவர்களின் வருமானத்தை உறுதி செய்துள்ளது. அதே வேளையில், மகப்பேறு உதவித் திட்டம் மற்றும் பிரதமரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் மருத்துவச் செலவுகளுக்கு வழிவகை செய்துள்ளன.
நண்பர்களே,
கல்வி, வருமானம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றுடன் சேர்த்து, முதல் முறையாகக் கோடிக்கணக்கான சகோதரிகளின் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகளும் சகோதரிகளின் பெயர்களிலேயே வழங்கப்பட்டுள்ளன. இன்று நமது தாய்மார்களும் சகோதரிகளும் உண்மையாகவே தங்களது சொந்த வீடுகளின் உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.
நண்பர்களே,
எங்களது அரசின் ஒட்டுமொத்த கவனமும் சகோதரிகளின் வசதி மற்றும் பாதுகாப்பிலேயே இருந்து வருகிறது. இந்த இரண்டு விஷயங்கள்தான் அதிகாரமளித்தலின் அடித்தளத்தை வலுப்படுத்துகின்றன. இங்கு உத்தரப்பிரதேசத்தில் நிலைமைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை நீங்கள் கண்கூடாகவே பார்த்திருக்கிறீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு சமாஜ்வாடி கட்சி ஆட்சி இருந்தபோது, மகள்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்குக் கூட கடினமான சூழல் நிலவியது. ஆனால் இப்போது, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் கீழ், மகள்களுக்கு எதிராகத் தவறான எண்ணம் கொண்ட எவருக்கும் அதற்கான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது நன்றாகவே தெரியும்.
நண்பர்களே,
இந்திய நீதிச் சட்டம் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் பாதுகாப்பிற்கான ஒரு புதிய உத்தரவாதத்தை அளித்துள்ளது. இதன் கீழ், பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் விரைவான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் ஆலோசனை மையங்களின் கட்டமைப்பு தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இன்று இங்கேயும் கூட, மகளிர் புறக்காவல் நிலையம் மற்றும் ஆலோசனை மையத்திற்கான கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மகள்களின் பாதுகாப்பிற்கு ஒரு பெரும் உத்தரவாதத்தை அளிக்கின்றன.
நண்பர்களே,
பெண்களின் பொருளாதார சக்தி அதிகரிக்கும் போது, வீட்டிற்குள் அவர்களின் குரலும் வலிமை பெறுகிறது. எனவே, வசதி மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், சகோதரிகளின் பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிப்பதிலும் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த 11 ஆண்டுகளில், நாட்டில் சுமார் 10 கோடி சகோதரிகள் சுய உதவிக்குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். காசியிலும் சுமார் 1.25 லட்சம் சகோதரிகள் இத்தகைய குழுக்களில் இணைந்துள்ளனர். இந்த குழுக்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது, அதன் மூலம் சகோதரிகள் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனர். இத்தகைய முயற்சிகளின் மூலம், 3 கோடி சகோதரிகள் ஏற்கனவே "லட்சாதிபதி சகோதரிகள்" ஆகிவிட்டனர். அந்த 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளில் வாரணாசியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சகோதரிகளும் அடங்குவர்.
நண்பர்களே,
லட்சாதிபதி சகோதரி இயக்கத்திற்கு வேகம் அளிப்பதில், நமது பால் பண்ணைத் துறையும் பெரும் பங்கு வகிக்கிறது. இங்கே, பனஸ்காந்தா பால் பண்ணையுடன் இணைந்துள்ள லட்சக்கணக்கான சகோதரிகள் மிகச் சிறந்த பணிகளைச் செய்து வருகின்றனர். இன்று இந்தச் சகோதரிகள் போனஸ் தொகையாக 106 கோடி ரூபாயை நேரடியாகப் பெற்றுள்ளனர். இந்தச் சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் பால் பண்ணைத் துறையுடன் இணைந்துள்ள பெண்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன் – இது ஒரு தொடக்கம் மட்டுமே; வாரணாசி வளரும், பனஸ்காந்தா பால் பண்ணை வளரும், இந்த போனஸ் தொகையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
நண்பர்களே,
பாஜக - என்டிஏ அரசாங்கம் சகோதரிகளைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றுவதுடன், இந்தியாவை வல்லரசாக்கும் வளர்ச்சியடைந்த இந்தியா பிரச்சாரத்தில் அவர்களுக்குத் தலைமையையும் வழங்கி வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆயிரக்கணக்கான “வங்கித் தோழிகள்” பெரும் பங்காற்றுகின்றனர். காப்பீடு தொடர்பான பணிகளில் “காப்பீட்டுத் தோழிகள்” முன்னணியில் உள்ளனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் “விவசாயத் தோழிகள்” முக்கியப் பங்காற்றுகின்றனர். மேலும், விவசாயத்தில் ஏற்பட்டு வரும் ட்ரோன் புரட்சியில் நமது “நமோ ட்ரோன் சகோதரிகள்” தலைமை தாங்குகிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் மகள்களுக்குப் புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் முறையாகச் சைனிக் பள்ளிகள் மற்றும் பாதுகாப்பு அகாடமியின் கதவுகளும் மகள்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. அதாவது, பாஜக - என்டிஏ அரசாங்கம் என்றால் - பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பெண்களின் முன்னேற்றம் மற்றும் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குதல் என்று பொருள்.
நண்பர்களே,
இன்று ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு முனையிலும் இந்தியாவின் மகள்கள் மிகச் சிறந்த பணிகளைச் செய்து வருகின்றனர். எனவே இயல்பாகவே, கொள்கை முடிவுகள் எடுப்பதிலும், தேசத்தின் எதிர்காலம் சார்ந்த தீர்மானங்களிலும் சகோதரிகள் மற்றும் மகள்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும். இன்று நாட்டுக்கு இது மிகவும் அவசியமாகும். இதற்காகவும் நேர்மையான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டதற்குப் பின்னாலுள்ள ஒரு பெரிய காரணம் பெண்களின் பங்களிப்பு என்ற சிந்தனையாகும். புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்ட பிறகு, நாங்கள் செய்த முதல் பணி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதுதான். 40 ஆண்டுகளாகச் சகோதரிகளின் இந்த உரிமை தடையாகித் தொங்கிக்கொண்டிருந்தது. எனவேதான், 2023-ல் நாடாளுமன்றத்தில் பெண் சக்தி போற்றும் சட்டத்தை நாங்கள் நிறைவேற்றினோம்.
நண்பர்களே,
ஒரு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அதனை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். இப்போது இந்தச் சட்டம் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டும். எனவேதான், கடந்த சில தினங்களாக இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான மசோதாவை நாங்கள் கொண்டு வந்தோம். இந்தத் திருத்தமானது, இதன் பிறகு அதிகப்படியான சகோதரிகள் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் சென்றடைவதை உறுதி செய்வதாகும்.
ஆனால் நண்பர்களே,
காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் மீண்டும் ஒருமுறை நாட்டின் பெண்களுக்குத் துரோகம் இழைத்துள்ளன. இத்தகைய கட்சிகள் தான் 40 ஆண்டுகளாகப் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தன. இப்போது சமாஜ்வாடி கட்சி மீண்டும் அதற்கு சிவப்புக்கொடி காட்டியுள்ளது.
நண்பர்களே,
உண்மையான விஷயம் என்னவென்றால், வாரிசு அரசியல் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலை முன்னெடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் பெண் சக்திக்கு அஞ்சுகின்றன, உங்கள் அனைவரையும் கண்டு பயப்படுகின்றன. கல்லூரி வளாகங்கள் முதல் பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வரை எங்கும் தங்களது சொந்த பலத்தில் தலைமைத்துவத்தை வழங்கி வரும் இந்த நாட்டின் மகள்கள், சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் வருவதை இந்த வாரிசு அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. அடிமட்டத்தில் பணியாற்றும் மகள்கள் மேலெழுந்து வந்தால், தங்களது ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்பதும், தங்களது அதிகாரத்தின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பைத் தெரிவிப்பதில் இந்த வாரிசு அரசியல் கட்சிகள் முன்னணியில் இருந்தன.
நண்பர்களே,
நாட்டின் சகோதரிகளும் மகள்களும் இவர்களது வஞ்சக எண்ணங்களைப் புரிந்துகொண்டுள்ளனர் என்பதில் நான் திருப்தியடைகிறேன். அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, வங்கம் மற்றும் தமிழகத்தில் சகோதரிகள் சாதனை எண்ணிக்கையில் வாக்களித்திருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். பெண்களுக்கு எதிரான இத்தகைய கட்சிகளைத் தண்டிப்பதற்காகவே சகோதரிகளின் இந்த வாக்குகள் விழுந்துள்ளன என்பதைப் பெண்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகள் உணரவில்லை.
நண்பர்களே,
பாஜக-என்டிஏ அரசிற்கு மக்களே தெய்வம் என்ற ஒரே ஒரு மந்திரம் தான் உள்ளது. நாட்டின் குடிமக்களின் கல்வி, வருமானம், மருத்துவம், பாசனம் மற்றும் குறைகளைக் கேட்டறிதல் ஆகியவையே எங்களது முன்னுரிமையாகும். இந்த உணர்வோடுதான், இன்று காசியின் வளர்ச்சியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கங்கை நதியின் மீது சிக்னேச்சர் பாலம் கட்டப்படுவதன் மூலம், பூர்வாஞ்சல் பகுதியின் போக்குவரத்து இணைப்பு மேலும் வலுவடையும்.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில், வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான ஒரு முக்கிய மருத்துவ மையமாக காசி உருவெடுத்துள்ளது. இங்கு அமையவுள்ள 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை, காசியின் சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும். இதனுடன் கூடுதலாக, 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது தீவிர நோய்களுக்கான சிகிச்சையில் காசிக்கு ஒரு மிகப்பெரிய வசதியைச் சேர்க்கும்.
நண்பர்களே,
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதாக இருக்கட்டும், படித்துறைகளை மேம்படுத்துவதாக இருக்கட்டும், ஆட்சி மற்றும் நிர்வாகம் சார்ந்த கட்டிடங்களின் கட்டுமானமாக இருக்கட்டும், ஹர்ஹுவா மற்றும் பவானிபூரில் விவசாயிகளுக்கான சேமிப்புக் கிடங்கு வசதிகள், முதியோர் இல்லங்கள் அல்லது மகளிர் விடுதிகள் என இவை அனைத்துமே காசியின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சிக்குச் சான்றுகளாகும். இந்தப் பணிகளின் மூலம் வாரணாசி மக்களே அதிகப்படியானப் பயன்களைப் பெறுகின்றனர்.
நண்பர்களே,
காசியின் பாரம்பரியத்தையும் மரபையும் வலுப்படுத்தும் பிரச்சாரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்த் கபீரின் இருப்பிடத்தை மேம்படுத்துவதும், நாக்வாவில் அமைந்துள்ள சந்த் ரவிதாஸ் பூங்காவைப் புதுப்பிப்பதும் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
நண்பர்களே,
நமது காசி அழிவற்றது; அது இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாநகரம். அதே போலவே, இந்த வளர்ச்சிப் பயணமும் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பெண் சக்தியைப் போற்றும் அதே வேளையில், எங்களுக்கு ஆசிகளை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். என்னுடன் இணைந்து சொல்லுங்கள் –
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
ஹர ஹர மகாதேவ்!
----
(Release ID: 2256353)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2280693)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam