பிரதமர் அலுவலகம்
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 'அக்ரிகோலா பதக்கத்தை ஏற்றுக்கொண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரை
प्रविष्टि तिथि:
20 MAY 2026 11:00PM by PIB Chennai
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் அவர்களே,
மதிப்பிற்குரிய விருந்தினர்களே,
பெரியோர்களே மற்றும் தாய்மார்களே,
வணக்கம்!
எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்காகவும், எனக்கு "அக்ரிகோலா பதக்கத்தை" வழங்கி கவுரவித்ததற்காகவும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா குறித்த அவரது கனிவான வார்த்தைகளுக்கும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிற்கு அவர் பல ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது எனக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் அல்ல. இந்தியாவின் லட்சக்கணக்கான விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களுக்குக் கிடைத்த கவுரவமாகும். மேலும், மனித நலன், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் தளராத அர்ப்பணிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமும் ஆகும். இந்தப் பதக்கத்தை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இதனை இந்தியாவிற்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நண்பர்களே,
இந்திய நாகரிகத்தில், விவசாயம் என்பது வெறும் பயிர்களை வளர்க்கும் ஒரு தொழில் முறை மட்டுமல்ல. அது மனிதர்களுக்கும் பூமித் தாய்க்கும் இடையே உள்ள ஆழமான மற்றும் புனிதமான ஒரு உறவாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில், விவசாயமே வாழ்க்கையின் மிக முக்கிய அடிப்படையாகும். இது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவும், நமது முக்கிய விழுமியங்களின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது. நமது பாரம்பரியத்தில், பூமி "தாய்" என்று போற்றப்படுகிறது, மேலும் விவசாயி "மண்ணின் மைந்தன்" என்று வர்ணிக்கப்படுகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகாலப் பாரம்பரியத்தில் வேரூன்றிய இந்த காலத்தால் அழியாத விழுமியங்கள், இன்றும் கூட நமது முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.
நண்பர்களே,
ஆயிரக்கணக்கான ஆண்டுகால கற்றல் மற்றும் இந்தியாவின் வளமான விவசாயப் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு, நமது நாடு இன்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் சார்ந்த அணுகுமுறையின் மூலம் விவசாயத் துறையை முன்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
நாங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மட்டுமின்றி, நிலையான, காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு விவசாயச் சூழலை உருவாக்குவதற்கும் பணியாற்றி வருகிறோம். அதனால்தான், இந்தியா முழுவதும் அறிவியல் பூர்வமான விவசாயம் ஒரு திட்டவட்டமான இலக்கோடு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
மண்வள அட்டைகள் மூலம், விவசாயிகளுக்கு அறிவியல் ரீதியான மண் பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையிலான வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்கி வருகிறோம்.
"சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல்" போன்ற பிரச்சாரங்கள், நுண்பாசனம் மற்றும் துல்லிய விவசாயத்தை ஊக்குவித்து, குறைந்த நீர் பயன்பாட்டுடன் விவசாயிகள் அதிக பயிர் மகசூலைப் பெற வழிவகை செய்கின்றன.
நண்பர்களே,
இன்று, தொழில்நுட்பம் இந்திய விவசாயத்தின் புதிய பலமாக உருவெடுத்து வருகிறது. அக்ரிஸ்டாக் போன்ற டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு முயற்சிகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆலோசனை அமைப்புகள், ட்ரோன்கள், தொலை உணர்வு தொழில்நுட்பங்கள் மற்றும் சென்சார் அடிப்படையிலான இயந்திரங்கள் ஆகியவை இந்தியாவில் விவசாயத்தை மிகவும் புத்திசாலித் தனமாகவும், தரவுகள் அடிப்படையிலானதாகவும் மாற்றி வருகின்றன. இன்று, கிராமத்தில் உள்ள ஒரு சிறு விவசாயி கூட மொபைல் தொழில்நுட்பத்தின் மூலம் வானிலை நிலவரங்கள், பயிர் ஆலோசனைகள் மற்றும் சந்தை தகவல்களை எளிதாகப் பெற முடிகிறது.
இந்தியா காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாயத்தை நோக்கியும் வேகமாகப் பணியாற்றி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டில் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய சுமார் 3,000 பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த கண்டுபிடிப்புகளால் பயனடைந்து வருகின்றனர்.
நண்பர்களே,
விவசாயத்தின் எதிர்காலம் என்பது வெறும் "அதிகமாக உற்பத்தி செய்வது" என்பதில் மட்டுமல்ல, "சிறப்பாக உற்பத்தி செய்வது" என்பதில் தான் உள்ளது என்று நாம் நம்புகிறோம். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கும், ரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தியின் பிரம்மாண்டமும் அதன் நிலையான தன்மையும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியும் என்பதையும், தொழில்நுட்பமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் ஒன்றை ஒன்று வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், அறிவியல் சார்ந்த விவசாயம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு ஒரு வலுவான அடித்தளமாக மாற முடியும் என்பதையும் இந்தியாவின் அனுபவம் உலகிற்கு நிரூபித்துக் காட்டி வருகிறது.
நண்பர்களே,
இன்று, இந்தியாவின் வேளாண் துறை மிக வேகமாக மாறி வருகிறது. உணவு உற்பத்தியில் தற்சார்பு அடைந்துள்ள அதே வேளையில், உலகளாவிய உணவுப் பாதுகாப்பிலும் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. பால் மற்றும் நறுமணப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாகும். நெல், கோதுமை, பழங்கள், காய்கறிகள் மற்றும் பருத்தி உற்பத்தியிலும் நமது நாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவின் வேளாண் பொருட்களின் ஏற்றுமதி வலுவாக வளர்ந்து, 2020-ம் ஆண்டில் 35 பில்லியன் டாலராக இருந்தது, கடந்த ஆண்டில் 51 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
நண்பர்களே,
உலகில் உள்ள விவசாய நிலங்களில் வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே இந்தியா கொண்டுள்ள போதிலும், உலக மக்கள் தொகையில் சுமார் 18 சதவீதம் பேர் இங்கு வாழ்ந்து வருவதால் இந்த சாதனைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்தியாவின் வெற்றி ஒட்டுமொத்த உலகளாவிய வளர்ந்து வரும் நாடுகளுக்கும் ஒரு உத்வேகமாக மாறியுள்ளதுடன், பல நாடுகள் முன்னோக்கிச் செல்வதற்கான நம்பிக்கையையும் அளிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் கொள்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல — அது மனிதகுலத்தின் மீதான ஒரு பொறுப்பாகும்.
நண்பர்களே,
உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் இந்தியாவின் கூட்டு செயல்பாடு பல தசாப்த கால வரலாற்றைக் கொண்டது. திரு. எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் திரு. பினய் ரஞ்சன் சென் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடனான தங்களது பணிகளின் மூலம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அறிவியல், கொள்கை மற்றும் மனித நெறிமுறைகள் ஆகியவை ஒன்றாக இணையும்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்படும் என்று இந்தியா எப்போதும் நம்புகிறது. இந்த அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினராக, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் பசியற்ற ஒரு உலகத்தை ஊக்குவிப்பதற்காக உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் இந்தியா தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. நமது கூட்டு செயல்பாட்டிற்கு மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றை ‘சர்வதேச சிறுதானிய ஆண்டின்’ போது நாம் கண்டோம். உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் நாம் மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் மூலம், சிறுதானியங்களின் முக்கியத்துவத்தையும் அதன் வலிமையையும் உலகம் மீண்டும் ஒருமுறை புரிந்து கொண்டது. எதிர்காலத்திலும் நாம் இதேபோல தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றுவோம். நான் சிறுதானியங்களைப் பற்றி பேசும்போதெல்லாம், பெரும்பாலான மக்கள் அதன் ஊட்டச்சத்து மதிப்பில் மட்டுமே முக்கியமாக கவனம் செலுத்துவதை நான் கவனித்திருக்கிறேன். ஆனால், சிறுதானியங்கள் என்பவை சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு பயிரும் ஆகும். அவற்றுக்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது மற்றும் ரசாயன உரங்கள் இல்லாமலேயே அவற்றை வளர்க்க முடியும். இந்தியாவில், சுமார் 85 சதவீத விவசாயிகள் மிகக் குறைந்த அளவிலான நிலத்தில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகள் ஆவர். பாசன வசதிகள் இல்லாத மற்றும் விவசாயம் மழையை மட்டுமே நம்பியிருக்கும் பல பகுதிகளில், சிறுதானிய சாகுபடி ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பெரிய அளவில் உதவுகிறது.
நண்பர்களே,
"இந்தியாவில் நாம், 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்று கூறுகிறோம். ஒரு விவசாயி விதையை விதைக்கும் போது, அவர் வெறும் பயிரை மட்டும் வளர்ப்பதில்லை; எதிர்காலத் தலைமுறைகளுக்கான நம்பிக்கையையும் சேர்த்துதான் விதைக்கிறார். இன்று, உலகம் ஒரு நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற காலத்தைக் கடந்து கொண்டிருக்கும் வேளையில், விவசாயிகளின் பங்களிப்பு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. இன்று வழங்கப்பட்ட இந்த கௌரவம், இந்தியாவின் ஒவ்வொரு விவசாயியின் மன உறுதியையும் மேலும் வலுப்படுத்தும். பசி, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராகப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து தனது முழு ஆதரவை வழங்கும். மேலும், நாளை நீங்கள் 'தேநீர் தினம்' கொண்டாடப் போவதாக இங்கு குறிப்பிடப்பட்டது, அந்த உன்னத நிகழ்வைக் கொண்டாடுவதற்காக ஒரு தேநீர் விற்பவர் ஒரு நாள் முன்பாகவே உங்களிடையே வந்து சேர்ந்துள்ளார். இந்தியா அதன் பரந்த அளவிலான தேநீர் ரகங்களுக்குப் பெயர் பெற்றது, மேலும் தேநீருக்கு உண்மையிலேயே ஒரு தனித்துவமான சக்தி உள்ளது.
மீண்டும் ஒருமுறை, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் ஆற்றப்பட்டது.
----
(Release ID:2264063)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2280688)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
हिन्दी
,
Manipuri
,
Gujarati
,
Urdu
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam