PIB Backgrounder
ககன்: விமானப் பயணங்களுக்கான இந்தியாவின் துல்லியமான வழிகாட்டி
प्रविष्टि तिथि:
01 JUL 2026 2:50PM by PIB Chennai
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து உருவாக்கிய ஜிபிஎஸ் ஆதரவுடன் கூடிய புவிநிலை செயற்கைக்கோள் வழிகாட்டும் அமைப்பு (ககன்) இந்திய வான்வெளியில் விமானப் போக்குவரத்தை மிகவும் துல்லியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றியுள்ளது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இருப்பிடத் துல்லியதன்மையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த உள்நாட்டுத் தொழில்நுட்பம், விமானங்களுக்கு நிகழ்நேரத் திருத்தங்கள், நம்பகமான தகவல்களை வழங்குகிறது. விமானப் போக்குவரத்தின் வழிகாட்டும் அமைப்பில் எற்படும் சிறு பிழையும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படாத துல்லியமான வழிகாட்டும் அமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டே ககன் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, இத்தகைய வழிகாட்டும் அமைப்பைக் கொண்டுள்ள ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 2015 முதல் முழுமையாகச் செயல்பட்டு வரும் அந்த அமைப்பு, வான்வழிப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தற்சார்பு இந்தியா இலக்கிற்கும் வலுசேர்க்கிறது. 2026 ஜூன் மாதத்தில், ஜெட் விமானம் ஒன்றைக் ககன் துணையுடன் வெற்றிகரமாகத் தரையிறக்கிப் பரிசோதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சாதனை படைத்துள்ளது. ஒருங்கிணைந்த தரைமட்ட நிலையங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள், புவிநிலை செயற்கைக்கோள்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த அமைப்பாக ககன் செயல்படுகிறது ககன், ஜிபிஎஸ்-ன் சமிக்ஞைகளை மேம்படுத்தி, விமானங்களின் துல்லியமான வழிசெலுத்தல், பாதுகாப்பான தரையிறக்கத்துக்கு உதவுகிறது.
இந்தியாவின் ஜிசாட்-8, ஜிசாட்-10, ஜிசாட்-15 ஆகிய செயற்கைக்கோள்கள் இந்தச் சேவையைத் தடையின்றி வழங்க உதவுகின்றன. ககனின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு, இந்தியாவின் விரிவான செயற்கைக்கோள் வழிகாட்டல் திட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. ககனுடன் இணைந்து, இந்தியா தனது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டும் அமைப்பான நேவிக்-ஐ உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இருப்பிடக் கண்டறிதல், வழிகாட்டல், நேரக் கணிப்பு ஆகிய சேவைகளை வழங்குகிறது.
விமானப் போக்குவரத்து மட்டுமன்றி, கடற்பயணத்தில் வழிகாட்டும் அமைப்பாகவும், நெடுஞ்சாலைப் போக்குவரத்து மேலாண்மை, இரயில்வே செயல்பாட்டுத் திறன், பேரிடர் காலங்களில் இருப்பிடத்தைக் கண்டறிதல், பாதுகாப்புத் துறை, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு ஒத்திசைவு, நில அளவை போன்ற பல்வேறு துறைகளிலும் ககன் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கியத் தூணாக ககன் விளங்குகிறது. இந்தியாவின் எதிர்காலத்தில் வான்வெளி வழிகாட்டும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை இது தொடர்ந்து வலுப்படுத்தும். இது பாதுகாப்பான விமானப் பயணத்தை உறுதி செய்வதுடன், விமானப் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்தி, நாடு முழுவதும் செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை விரிவுபடுத்தும். நேவிக்-ம் ககனும் இணைந்து, உள்நாட்டு வழிகாட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், வெளிநாட்டு தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை, நில அளவை போன்ற துறைகளில் அதிகரித்து வரும் இதன் பயன்பாடுகளுடன், இந்தியாவின் தற்சார்பு, தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலப் பயணத்தின் முக்கியத் தூணாகவும் ககன் விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279810®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2280245)
आगंतुक पटल : 6