பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார்

மூன்றாவது முறையாக மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹரிவன்ஷுக்குப் பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 17 APR 2026 2:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.04.2026) மாநிலங்களவையில் உரையாற்றுகையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹரிவன்ஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சாதனையை எடுத்துரைத்த பிரதமர், இது திரு ஹரிவன்ஷ் மீது அவை வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும், அவர் இந்த அமைப்புக்குக் கொண்டு வந்துள்ள மதிப்புமிக்க அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, அவரது அனுபவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை மற்றும் கண்ணியமான பணி ஆகியவற்றுக்கு சபை அளித்துள்ள அங்கீகாரமாகும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் பிறந்த நாளான ஏப்ரல் 17-ஆம் தேதியின் சிறப்பு முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார். சந்திரசேகருடன் திரு ஹரிவன்ஷுக்கு இருந்த நெருங்கிய தொடர்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மாநிலங்களவைத் துணைத் தலைவர் அவரது அரசியல் பயணம் முழுவதும் சந்திரசேகருக்குத் துணையாக இருந்து, அவரது வாழ்க்கை குறித்து நூல்களையும் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார். சந்திரசேகரின் பிறந்த நாளில் உங்களின் மூன்றாவது பதவிக்காலத்தைத் தொடங்குவது, இந்த நிகழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாக்குகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

திரு ஹரிவன்ஷ் பத்திரிகைத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்ந்த பிரதமர், உயர்ந்த தரத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பையும், தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தையும் பாராட்டினார். குஜராத்தில் தாம் பதவியில் இருந்தபோது, ஆழ்ந்த ஆய்வையும் உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்திய திரு ஹரிவன்ஷின் கட்டுரைகளைத் தவறாமல் படித்ததாக பிரதமர் பகிர்ந்து கொண்டார். அவரது எழுத்தில் கூர்மையான அம்சங்கள் இருந்தன எனவும் ஆனால் அவரது பேச்சும் நடத்தையும் எப்போதும் மென்மையாகவும் மரியாதையாகவும் உள்ளன என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

திரு ஹரிவன்ஷின் நேரம் தவறாமை, ஒழுக்கமான வாழ்க்கைமுறை மற்றும் கடமைகளின் மீதான தீவிர ஈடுபாடு ஆகியவையே அவரது ஆளுமைக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணிகள் எனப் பிரதமர் பாராட்டினார். மாநிலங்களவை உறுப்பினரானதிலிருந்து, திரு ஹரிவன்ஷ் அவையில் முழுநேரமும் இருந்து வருகிறார் என்றும், அவைத்தலைவராக இல்லாத நேரங்களிலும் அமர்வுகளில் கலந்துகொள்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். இது, தமது பொறுப்புகளின் மீதான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதோடு, நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகவும் அமைகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றப் பணிகளுக்கு அப்பாற்பட்டு, திரு ஹரிவன்ஷ் பொதுமக்களுடன் ஆற்றிவரும் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டையும், குறிப்பாக இளைஞர்களுடன் அவர் ஆற்றிவரும் பணிகளையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  2018-ல் மாநிலங்களவைத் துணைத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து, திரு ஹரிவன்ஷ், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 350-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் என்று பிரதமர் தெரிவித்தார். இது, இளைஞர்களுடன் தொடர்புகொள்வதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர் காட்டும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முன்மாதிரியாக, திரு ஹரிவன்ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை முன்மாதிரியாகப் பயன்படுத்தியதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்ந்த போதிலும், மாநலங்களவைத் துணைத் தலைவர் தனது கிராம வேர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதை திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியின்போது திரு ஹரிவன்ஷுடன் இணைந்து பணியாற்றிய தமது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், அவருடனான ஒத்துழைப்பு எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தது என்பதை எடுத்துரைத்தார்.

மாநில சட்டமன்றங்கள், சட்ட மேலவைகள் மற்றும் அவற்றின் சபாநாயகர்களுக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் உதவி செய்வதில் திரு ஹரிவன்ஷின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், உலக அளவில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புமுறை குறித்து வலுவான ஒரு பிம்பத்தை உருவாக்குவதில் காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பில் அவர் ஆற்றிய தீவிரப் பங்கையும் புகழ்ந்து தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2252918)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2278835) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam