குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பெங்களூருவில் நடைபெற்ற நாடபிரபு திரு கெம்பேகவுடாவின் 517-வது பிறந்தநாள் விழாவில், குடியரசு துணைத்தலைவர் அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
27 JUN 2026 7:59PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், இன்று பெங்களூருவில் நடைபெற்ற நாடபிரபு திரு கெம்பேகவுடாவின் 517-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, பெங்களூருவின் நிறுவனரான அவரை, ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நிர்வாகி, சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்று வர்ணித்தார். மேலும், அவரது கொள்கைகள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன என்றும் கூறி, அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.
திரு கெம்பேகவுடா, வெறும் ஆட்சியாளராக மட்டுமின்றி, மக்களின் நலனுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஆட்சி செய்த ஒரு தலைவராகவும் நினைவுகூரப்படுகிறார் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். விவசாயிகள், வர்த்தகர்கள், கைவினைஞர்கள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து செழிக்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நகரத்தை திரு கெம்பேகவுடா கனவு கண்டார் என்றும், இன்றைய பெங்களூரு ஒரு “மினி இந்தியாவாக” அந்தத் தொலைநோக்குப் பார்வையை உண்மையாகவே பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெங்களூரு, இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் புதுமைகளின் தலைநகராக உருவெடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட திரு சி. பி. ராதாகிருஷ்ணன், அதன் வெற்றி, சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் திரு கெம்பேகவுடாவால் இடப்பட்ட வலுவான அடித்தளங்களையே சார்ந்துள்ளது என்றார். மேலும், திரு கெம்பேகவுடாவின் நீண்டகாலத் திட்டமிடல், நிலைத்தன்மை மற்றும் நிறுவனக் கட்டமைப்பு ஆகிய கொள்கைகள், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றன என்றும் அவர் கூறினார்.
திரு. கெம்பேகவுடாவின் வாழ்க்கையிலிருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்த குடியரசு துணைத்தலைவர், சமுதாயத்திற்கும், தேச நிர்மாணத்திற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக, நீர் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய ஆறுகளை இணைக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு ஹெச்.டி.குமாரசாமி, மத்திய ரயில்வே மற்றும் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திருவி. சோமன்னா, கர்நாடக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். அசோகா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278475®=3&lang=1
****
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2278521)
आगंतुक पटल : 9