குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நீண்டகால வெற்றிக்குத் தரம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
27 JUN 2026 2:32PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 'சர்வதேச குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) பொருளாதார வகைப்பாட்டிற்கு உட்பட்ட நிறுவனங்களாக இருப்பதுடன், அவை முதல் தலைமுறை தொழில்முனைவோரின் துணிச்சல், இளைஞர்களின் லட்சியங்கள், பெண் தொழில்முனைவோரின் உறுதிப்பாடு, சவால்களை வாய்ப்புகளாக மாற்றியமைத்துள்ள லட்சக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்களின் மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றன என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள், ஆற்றல்மிக்க எம்எஸ்எம்இ துறையால் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்முனைவோர் பயணத்தில் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர், பட்டப்படிப்பை முடித்த பிறகு, தனது தந்தையின் நிதி உதவியுடன் ஒரு சிறிய ஆடை விற்பனையகத்தைத் தொடங்கியதாகக் கூறினார். தொடக்க காலத்தில் எதிர்கொண்ட சவால்களை நினைவுகூர்ந்த அவர், விடாமுயற்சி, தொடர்ச்சியான கற்றல், கடின உழைப்பு ஆகியவை பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒரு முன்னணி பின்னலாடை ஏற்றுமதி வணிகத்தை உருவாக்க தனக்கு உதவியதாகக் கூறினார். தொடக்ககாலத் தடைகளைக் கண்டு ஒருபோதும் மனச்சோர்வடைய வேண்டாம் என்றும், தொழிலைக் கற்றுக்கொள்வதில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்றும், இளம் தொழில்முனைவோரை அவர் கேட்டுக் கொண்டார்.
தேங்காய் நார் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய காலத்தை நினைவுகூர்ந்த திரு சி.பி. ராதாகிருஷ்ணன், அத்துறை குறித்து தனக்கு பெரிய அளவில் ஞானம் இல்லை என்ற போதிலும், அத்துறையின் ஒவ்வொரு அம்சத்தையும் புரிந்துகொள்வதில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதாகக் கூறினார். ஏற்றுமதியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியதாலும், லட்சிய இலக்குகளை நிர்ணயித்ததாலும், அத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்ததாக அவர் தெரிவித்தார். சாதிக்க வேண்டும் என்ற முடிவுடன், கடினமாக உழைத்து, றை சார்ந்த அனைத்தையும் கற்றுக்கொண்டால், வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும்," என்று அவர் கூறினார்.
பொருட்களின் தர நிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், தரநிலைகளில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்று கூறினார். செலவைக் குறைப்பதற்காகத் தர நிலைகளில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். போட்டியாளர்களை விடச் சிறந்த தரம், சேவையைத் தக்க வைத்துக் கொண்டு, செலவுகளைக் குறைப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது என்று அவர் கூறினார். அதிகரித்து வரும் போட்டி நிறைந்த உலகளவிலான சந்தைகளில், வர்த்தகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்குத் தரம் முக்கிய காரணியாகத் திகழ்கிறது என்றும் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278390®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2278407)
आगंतुक पटल : 16