நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் (டிஆர்ஐ) மேற்கொண்ட நடவடிக்கைகளில் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர்

प्रविष्टि तिथि: 26 JUN 2026 3:53PM by PIB Chennai

வெளிநாட்டுத் தங்கக் கடத்தலுக்கு எதிரான பெரும் நடவடிக்கையில், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் , மும்பை விமான நிலையம் வழியாகச் செயல்பட்டு வந்த தங்கக் கடத்தல் கும்பலை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கையில், வெளிநாட்டுக் கடத்தல் தங்கத்தை உருக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட உருக்காலையை டிஆர்ஐ கண்டறிந்து தகர்த்தது.

விமான நிலைய ஊழியர், அவரைக் கையாண்டவர், மூன்று இடைத்தரகர்கள், தங்கம் உருக்கும் ஆலையை  நடத்துபவர், உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று நபர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.  சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 6 கிலோ வெளிநாட்டுக் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில், சர்வதேசப் பயணி ஒருவரின் ஆடைகளுக்குள் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோ எடையுள்ள 24 காரட் தங்கத்தை டிஆர்ஐ பறிமுதல் செய்தது. இதைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 1.5 கிலோ தங்க நகைகள், 45 கிலோ வெள்ளி மற்றும் இந்திய, வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த வாரத் தொடக்கத்தில், ஐதராபாத், ராஜ்கோட், கோழிக்கோடு, விசாகப்பட்டினம், குவஹாத்தி, பெட்ராபோல் ஆகிய இடங்களில் உள்ள பிற விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் தரைவழி சுங்கச் சாவடிகளில் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு  நடத்திய தொடர் சோதனைகளின் விளைவாக, வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக, தங்கக் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவாக, ஏறத்தாழ ரூ. 23 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம், 45 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

(Release ID: 2278205)

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2278228) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam