பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் தலைவர்கள் அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 19 FEB 2026 3:57PM by PIB Chennai

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த ஏஐ தாக்க  உச்சிமாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மனிதநேயத்தை மையமாகக் கொண்ட, உணர்வுபூர்வமான உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் இந்த உச்சிமாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், மனிதகுலம் ஒவ்வொரு இடையூறையும்  எப்போதும் ஒரு புதிய வாய்ப்பாக மாற்றியிருப்பதை நாம் காணலாம். இன்று, நாம் மீண்டும் அத்தகையதொரு தருணத்தை எதிர்கொள்கிறோம். நாம் அனைவரும் இணைந்து இந்த மாற்றத்தை மனிதகுலத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பாக மாற்ற வேண்டும்.

நண்பர்களே,

இந்தியா புத்தர் பிறந்த பூமி. "சரியான புரிதலிலிருந்துதான் சரியான செயல் பிறக்கிறது" என்று புத்தர் கூறியுள்ளார். எனவே, செயற்கை நுண்ணறிவு சரியான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய நாம் இணைந்து ஒரு தெளிவான பாதையை உருவாக்குவது அவசியமாகும். சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன், சரியான முடிவுகளை எடுக்கும்போது மட்டுமே சரியான தாக்கம் ஏற்படும்.

நண்பர்களே,

கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது சாத்தியமற்றதும் சாத்தியமாகும் என்பதை உலகம் கண்டது. தடுப்பூசி மேம்பாடு முதல் விநியோகச் சங்கிலி வரை, தரவுப் பகிர்வு முதல் உயிர்களைக் காப்பது வரை - கூட்டு முயற்சியே தீர்வுகளை வழங்கியது. பெருந்தொற்று காலத்தில் தொழில்நுட்பம் எவ்வாறு மனிதகுலத்திற்குச் சேவை செய்ய முடியும் என்பதை இந்தியாவில் நாம் கண்டோம்.

நமது டிஜிட்டல் தடுப்பூசி தளம் (கோ-வின்) லட்சக்கணக்கான மக்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்த உதவியது. கடினமான காலங்களிலும் மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளைத் தொடர நமது யுபிஐ உதவியது. இந்தியாவில் நிலவிய டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதிலும் யுபிஐ முக்கியப் பங்கு வகித்தது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா ஒரு துடிப்பான டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது, அதை நாம் உலகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நமக்கு, தொழில்நுட்பம் என்பது அதிகாரத்திற்கான கருவி அல்ல, மாறாக அது சேவையாற்றுவதற்கான ஒரு ஊடகம். அது மற்றவர்களை அடக்குவதற்காக அல்ல, மாறாக அதிகாரம் அளிப்பதற்காக  உருவாக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவையும் இதே பாதையைப் பின்பற்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காகச் சேவை செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் தொழில்நுட்பம் பிரிவினைகளை உருவாக்கியது, ஆனால் இன்று நமது இலக்கு செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும். எனவே, நாம் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கும்போது, 'குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்துவரும்  நாடுகளின் விருப்பங்களையும் முன்னுரிமைகளையும் ஏஐ நிர்வாகத்தின் மையப்புள்ளியாக வைக்க வேண்டும்.

மேதகு தலைவர்களே,

எந்தக் காலமாக இருந்தாலும், அறநெறிகள் எப்போதும் விவாதங்களின் மையமாகவே இருந்துள்ளன. முன்பு, அறநெறியற்ற நடத்தைகளின் நோக்கம் வரம்பிற்குட்பட்டதாக இருந்தது; ஆனால் செயற்கை நுண்ணறிவு அதன் நோக்கம் எல்லையற்றது. எனவே, செயற்கை நுண்ணறிவுக்கான அறநெறி நடத்தைகள் மற்றும் விதிமுறைகளின் நோக்கத்தையும் நாம் எல்லையற்றதாக விரிவுபடுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு  நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது: லாபத்துடன்  சேர்த்து, நோக்கத்திலும்  அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய அறநெறி சார்ந்த அர்ப்பணிப்புகள் தற்போது அவசரமாகத் தேவைப்படுகின்றன. தனிநபர் அளவில், செயற்கை நுண்ணறிவு  நமது கற்றல், அறிவு மற்றும் உணர்ச்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேதகு தலைவர்களே,

செயற்கை நுண்ணறிவின் அறநெறி சார்ந்த பயன்பாட்டிற்காக என்னிடம் மூன்று ஆலோசனைகள் உள்ளன:

தரவு இறையாண்மை : தரவு இறையாண்மையை மதிக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு  பயிற்சிக்காக ஒரு தரவு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு பழமொழி உண்டு: "குப்பை உள்ளே சென்றால், குப்பைதான் வெளியே வரும்" . தரவு பாதுகாப்பற்றதாகவும், சமநிலையற்றதாகவும், நம்பகத்தன்மையற்றதாகவும் இருந்தால், அதன் முடிவுகளை நம்ப முடியாது. எனவே, உலகளாவிய நம்பகமான தரவு கட்டமைப்பு அவசியமாகும்.

வெளிப்படைத்தன்மை: செயற்கை நுண்ணறிவு  தளங்கள் தங்களது பாதுகாப்பு விதிகளைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வைத்திருக்க வேண்டும். நமக்கு ஒரு 'பிளாக்-பாக்ஸ்'  அணுகுமுறைக்கு பதிலாக, பாதுகாப்பு விதிகளைப் பார்க்கவும் சரிபார்க்கவும் கூடிய 'கிளாஸ்-பாக்ஸ்' அணுகுமுறை தேவை. இது வணிகத்தில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் மற்றும் அறநெறி நடத்தையை மேம்படுத்தும்.

மனித வழிகாட்டுதல்: செயற்கை நுண்ணறிவு  ஆராய்ச்சியில் 'பேப்பர்கிளிப் பிரச்சனை'  பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படுகிறது. ஒரு இயந்திரத்திற்கு பேப்பர் கிளிப்புகளைத் தயாரிப்பதே ஒரே குறிக்கோளாக வழங்கப்பட்டால், அந்த இலக்கை அடைய அது உலகின் அனைத்து வளங்களையும் தியாகம் செய்யக்கூடும். எனவே, செயற்கை நுண்ணறிவுக்கு தெளிவான மனித விழுமியங்களும் வழிகாட்டுதல்களும் தேவை. தொழில்நுட்பம் வலிமையானது, ஆனால் அதன் திசை எப்போதும் மனிதர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய பயணத்தில்,  இந்தியா ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இந்தப் பொறுப்பை உணர்ந்து, இந்தியா இன்று குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது செயற்கை நுண்ணறிவு  திட்டத்தின் செயற்கை நுண்ணறிவு  இயக்கம் மூலம், இந்தியாவில் தற்போது 38,000 ஜிபியு-கள் உள்ளன, அடுத்த ஆறு மாதங்களில் மேலும் 24,000 ஜிபியுக்களைச் சேர்ப்போம். நமது புத்தொழில் நிறுவனங்களுக்கு  உலகத்தரம் வாய்ந்த கணினித் திறனை மிகவும் மலிவான விலையில் வழங்கி வருகிறோம். நாம் 'AI Co-STE' ஐயும் உருவாக்கியுள்ளோம், இதன் மூலம் 7ஆயிரத்தி 500க்க்கும் மேற்பட்ட தரவுத்தொகுப்புகள் மற்றும் 270 செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் தேசிய வளங்களாகப் பகிரப்பட்டுள்ளன.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவு குறித்த இந்தியாவின் திசை தெளிவாக உள்ளது, இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையும் தெளிவாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்கான ஒரு பொதுவான வளம். புதுமைகளை ஊக்குவிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மனித விழுமியங்களை ஒருங்கிணைக்கும் ஓர் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை நாம் இணைந்து உருவாக்க வேண்டும். தொழில்நுட்பமும் மனித நம்பிக்கையும் கைகோர்த்து முன்னேறும்போது, செயற்கை நுண்ணறிவின் உண்மையான தாக்கம் உலகம் முழுவதும் பிரதிபலிக்கும்.

----

(Release ID:2230229)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2276923) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam