ஆயுஷ்
பிரதமர் திரு நரேந்திர மோடி கொல்கத்தாவில் 12-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார்
வயதாகும்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருக்க யோகா நமக்கு உதவுகிறது - பிரதமர் திரு நரேந்திர மோடி
மேற்கு வங்க மக்கள் யோகா கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர் - மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி
ஆண்டு முழுவதும் யோகாவைத் தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மக்கள் பின்பற்ற வேண்டும் - மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
प्रविष्टि तिथि:
21 JUN 2026 8:14AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.06.2026) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற 12-வது சர்வதேச யோகா தின தேசிய கொண்டாட்டத்தில் பங்கேற்றார். “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த தேசிய கொண்டாட்டத்தை முன்னின்று நடத்திய அவர், ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் இணைந்து பொது யோகா நெறிமுறையின் படி யோகா பயிற்சி செய்தார். அதே நேரத்தில், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த கொண்டாட்டங்களில் இணைந்தனர். இந்நிகழ்வில் மேற்கு வங்க ஆளுநர் திரு ஆர்.என். ரவி, முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, ஆயுஷ் துறைக்கான மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், பிற முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். யோகா பயிற்சியின் மூலம் பல்வேறு நாடுகளையும் கலாச்சாரங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைவதால், ஜூன் 21-ம் தேதி உலகின் மிகப்பெரிய கூட்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். யோகாவிற்கு மக்களையும், சமூகங்களையும், நாடுகளையும் இணைக்கும் தனித்துவமான சக்தி உள்ளது என்றும், அது மனித ஒற்றுமையின் பிணைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
யோகா, தனிநபர்கள் வயதாகும்போது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருக்க உதவுவதோடு, அவர்களின் உடல் நெகிழ்வுத்தன்மை, மன சமநிலை, உணர்ச்சி வலிமை ஆகியவற்றைப் பராமரிக்கவும் உதவுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிகள் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, கொல்கத்தாவிற்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பிற முக்கிய பிரமுகர்களை வரவேற்றதோடு, 12-வது சர்வதேச யோகா தின தேசியக் கொண்டாட்டத்திற்கு மேற்கு வங்கத்தை இடமாகத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார். டார்ஜிலிங் முதல் தீகா மற்றும் கூச் பெஹார் வரையிலான மேற்கு வங்கத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் யோகா செயல்பாடுகளிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்றுள்ளதால், இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், யோகா உடல் நலம், நல்வாழ்வு ஆகியவற்றுக்கான ஒரு உண்மையான உலகளாவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது என்றார். 2014-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, யோகா தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது என்றும், இது அதன் உலகளாவிய ஈர்ப்பையும் சமூகத்தில் அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் கருப்பொருளான "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்பதைக் குறிப்பிட்டு, ஆண்டு முழுவதும் யோகாவைத் தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்காக மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆயுஷ் அமைச்சகத்தின் "யோகா 365" முன்முயற்சியை திரு ஜாதவ் எடுத்துரைத்தார்.
கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில், யோகா பயிற்சியாளர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். மேலும், நாடு முழுவதிலும், உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் யோகா அமர்வுகள், சமூக நிகழ்வுகள், இணையவழித் தளங்கள் மூலம் யோகா தின நிகழ்வுகளில் இணைந்தனர்.
2026-ம் ஆண்டின் சர்வதேச யோகா தினம் குறிப்பிடத்தக்க உலகளாவிய பங்கேற்பைக் கண்டு வருகிறது. இந்திய கலாச்சார உறவுகள் மன்றத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், 210-க்கும் மேற்பட்ட இந்தியத் தூதரகங்கள் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 2,500 இடங்களில் யோகா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
யோகா தின கொண்டாட்டங்களுக்கு ஒரு கலாச்சாரப் பரிமாணத்தைச் சேர்க்கும் வகையில், கலாச்சார அமைச்சகம், இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையுடன் இணைந்து, இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம், வரலாற்றுச் சின்னங்கள், யோகா மரபுகள் ஆகியவற்றை இணைக்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள 100 புகழ்பெற்ற இடங்களில் சிறப்பு யோகா நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275921®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2276164)
आगंतुक पटल : 5