திரைப்படம் என்பது ஒரே குரலில் ஒலிக்கும் கூட்டுக்கலை": மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் படத்தொகுப்பாளர் தீபா பாட்டியா பேச்சு
மும்பையில் நடைபெறும் 19-வது சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற படத்தொகுப்பாளர் தீபா பாட்டியா நடத்திய "தொகுப்பின் சவால்கள்" (Surviving the Cut) என்ற பட்டறை, இளம் திரைக்கலைஞர்களுக்கு ஒரு பெரும் அனுபவமாக அமைந்தது.
சினிமா என்பது அசையும் படங்கள் மற்றும் காட்சித் தொகுப்பு ஆகியவற்றின் கலவை என்று கூறிய தீபா, படத்தொகுப்பில் மனித உணர்வுகளே மையப்புள்ளியாக இருக்க வேண்டும் என்றார். ஒரு சிறந்த படத்தொகுப்பாளருக்குத் தேவையான முதன்மையான குணம் கூர்ந்து கவனிக்கும் திறன் என்று அவர் குறிப்பிட்டார். படத்தொகுப்பாளர் முழுப் படப்பிடிப்பையும், தியானம் செய்வது போல, கவனச்சிதறல் இன்றி அமைதியாகப் பார்த்து, இயக்குநரின் பார்வையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் முதல் படி என்றார்.
படத்தொகுப்பு மேஜையில் அமரும்போது, அந்தத் திட்டத்துடன் ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சிறந்த காட்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சரியான வரிசையில் அடுக்கும்போதே ஒரு படத்தின் ஆன்மா உருவாகிறது. இது காலத்தின் ஓட்டத்தை நுணுக்கமாகக் கையாண்டு, பல மணிநேரக் காட்சிகளைச் சில நிமிடங்களில் பார்வையாளர்களுக்குக் கடத்தும் கலை என்று அவர் விளக்கினார்.
தாரே ஜமீன் பர், மை நேம் இஸ் கான், ராக் ஆன்!!, சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ் போன்ற தனது புகழ்பெற்ற படைப்புகளை உதாரணமாகக் கொண்டு அவர் பேசினார். ஆவணப்படங்கள் மீதான ஆர்வம் ஓடிடி தளங்களால் தற்போது அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முடிவாக, "திரைப்படம் என்பது ஒரே குரலில் ஒலிக்கும் கூட்டுக்கலை" என்று குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்தக் குழுவின் உழைப்பும் ஒருமித்த படைப்பாற்றலும் சேரும்போதுதான் ஒரு சிறந்த திரைப்படம் உருவாகிறது என்று கூறி பட்டறையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2274807®=3&lang=1
செய்தி அடையான எண்:2274807
****
TV/VK/SH
रिलीज़ आईडी:
2274958
| Visitor Counter:
14