பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் வதினாரில், கப்பல் பழுதுபார்க்கும் வசதியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAY 2026 6:50PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, நாட்டின் கப்பல் பழுதுபார்க்கும் கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில், குஜராத் மாநிலம் வதினாரில், அதிநவீன கப்பல் பழுதுபார்க்கும் வசதியை உருவாக்க இன்று (05-மே-2026) ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம் தீன்தயாள் துறைமுக ஆணையம், கொச்சி கப்பல் கட்டுமான    நிறுவனம் ஆகியவை இணைந்து  செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான மொத்த முதலீடு ரூ.1,570 கோடியாகும்.

இத்திட்டம் 650 மீட்டர் நீளமுள்ள கப்பல் நிறுத்துமிடம், இரண்டு பெரிய மிதக்கும் உலர் கப்பல் தளங்கள், பணிமனைகள், அதனுடன் தொடர்புடைய கடல்சார் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஒரு 'பிரவுன்ஃபீல்ட்' (ஏற்கனவே உள்ள தளத்தை மேம்படுத்தும்) திட்டமாகத் வடிவமைக்கப்பட்டுள்ளது. வதினாரின் இயற்கையான ஆழம் மிகுந்த நீர்ப்பகுதி, முக்கிய கப்பல் வழித்தடங்களுடனான இணைப்பு, முந்த்ரா, காண்ட்லா போன்ற முக்கிய துறைமுகங்களுக்கு வெகு அருகில் அமைந்திருப்பது ஆகியவை, குறிப்பாக பெரிய வணிகக் கப்பல்கள், வெளிநாட்டு கொடி ஏந்திய கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கான சிறந்த இடமாக இதனை உருவெடுக்கச் செய்கின்றன.

இத்திட்டம் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். அதேவேளையில், இப்பகுதியில் கடல்சார் துணை சேவைகள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

இந்தியாவில் தற்போது 230 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட பெரிய கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கான போதிய வசதிகள் உள்நாட்டில் இல்லாத நிலையில், வதினார் கப்பல் பழுதுபார்க்கும் தளம் இந்தக் குறைபாட்டை களைய உதவுகிறது. 300 மீட்டர் நீளம் வரையிலான கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதியை வழங்குவதன் மூலம், பெரிய கப்பல்களுக்கான உயர்தர பழுதுபார்ப்புப் பணிகளை உள்நாட்டிலேயே மேற்கொள்ள இது உதவும். இது வெளிநாட்டு கப்பல் கட்டும் தளங்களைச் சார்ந்திருப்பதைக் கணிசமாக அளவில் குறைப்பதுடன், அந்நியச் செலாவணி வெளியேற்றத்தையும் தடுக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258115&reg=3&lang=2

(Release ID: 2258115)

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2269832) வருகையாளர் எண்ணிக்கை : 52