பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் 48 சில்லறை விற்பனை நிலையங்களில் இ-85 எரிபொருள் அறிமுகம்
प्रविष्टि तिथि:
05 JUN 2026 7:57PM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இன்று புதுதில்லியில் உள்ள இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் இ-85 எரிபொருளை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இ-85 என்பது 80–85% எத்தனால் மற்றும் 14–19% பெட்ரோல் அடங்கிய ஒரு எரிபொருளாகும். குறிப்பாக கலப்பு எரிபொருளில் (பிளெக்ஸ்-பியூவல்) இயங்கும் வாகனங்களில் பயன்படுத்துவதற்காக இந்த எரிபொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 20% முதல் 100% வரையிலான எத்தனால்-பெட்ரோல் கலவையில் இயங்கும் வாகனங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதை எளிதாக்குவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.
வழக்கமான பெட்ரோலை விட இ-85 எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் ₹20 குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்களால் அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை சுமார் 61% குறைக்க முடியும்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. பூரி, புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் 50% கலப்பு எரிபொருள் வாகனங்களாக மாறினால், அது சுமார் 312 கோடி லிட்டர் எத்தனால் தேவையை உருவாக்கும் என்றும், இதன் விளைவாக விவசாயிகளுக்கு நேரடியாக சுமார் ₹12,403 கோடி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இத்தகைய மாற்றம், ஆண்டுதோறும் சுமார் ₹15,151 கோடி அந்நியச் செலாவணி சேமிப்பிற்கும், 66.4 லட்சம் மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இ-85 எரிபொருள் என்பது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கானது, வழக்கமான பெட்ரோல் வாகனங்களுக்கானது அல்ல என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார். மின்சார வாகனத் தொழில்நுட்பங்கள், பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மின்கலங்களையும், முக்கிய கனிமங்களையும் சார்ந்திருக்கும் வேளையில், இ-85 எரிபொருள் வாகனங்கள், இந்திய விவசாயிகளின் வியர்வை மற்றும் உழைப்பிலிருந்து பெறப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எத்தனாலை அடிப்படையாக க் கொண்டு இயங்குவதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு லிட்டர் எத்தனாலும், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக விளங்குகிறது என்றும், இ-85-ன் ஒவ்வொரு துளியும் தற்சார்பு இந்தியா என்ற உணர்வை தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269509®=3&lang=2
(Release ID: 2269509)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2269626)
आगंतुक पटल : 31