குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - சைப்ரஸ் உறவில் புதிய மைல்கல்: குடியரசுத் தலைவர் மாளிகையில் சைப்ரஸ் அதிபருக்கு சிறப்பான வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAY 2026 9:23PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சைப்ரஸ் குடியரசு அதிபர் மாண்புமிகு திரு. நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்று, அவருக்குச் சிறப்பு விருந்தளித்து உபசரித்தார்.

அதிபர் நிகோஸ் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "இந்தியாவும் சைப்ரஸும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. தற்போது நமது இருதரப்பு உறவு 'உத்திசார் கூட்டாண்மை' என்ற அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் முதிர்ச்சியையும், ஆழமான நம்பிக்கையையும் காட்டுகிறது" என்றார்.

மேலும், பாதுகாப்பு, தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், போக்குவரத்து இணைப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு போன்ற முக்கியத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த உறவு ஒரு புதிய பொற்காலத்தில் நுழைந்துள்ளதாகக் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சைப்ரஸ் தொடர்ந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் பரந்த சந்தை, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை சைப்ரஸ் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன. இதனால், சைப்ரஸ் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

தற்போது தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் இரு நாட்டு உறவின் மிக முக்கியமான எதிர்காலத் துறைகளாக மாறியுள்ளன. இந்தியாவின் இளம் திறமையாளர்கள், தொழில்நுட்பத் திறன் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகியவை சைப்ரஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். குறிப்பாக செமிகண்டக்டர்கள், புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல், விண்வெளித் துறை, நிலையான வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு  போன்ற அதிநவீனத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமையை சைப்ரஸ் ஏற்கும் போது, இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையடைவதற்கு அது பெரிதும் உதவும். இதன் மூலம் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான பொருளாதார உறவை மேலும் விரிவுபடுத்துவதில் சைப்ரஸ் முக்கியப் பங்காற்ற முடியும் என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

எல்லை தாண்டிய பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தம் போன்ற முக்கிய விவகாரங்களில் சைப்ரஸ் இந்தியாவுக்கு அளித்து வரும் ஆதரவைக் குடியரசுத் தலைவர் பாராட்டினார். அதே வேளையில், சைப்ரஸ் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா எப்போதும் அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தியா மற்றும் சைப்ரஸ் இடையிலான இந்த நெருங்கிய நட்பு, இரு நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளைத் தரும் என இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264373&reg=3&lang=1

***

TV/VK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2264410) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Gujarati , Kannada