பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நெதர்லாந்து இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAY 2026 3:35PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு ஜே!

இவ்வளவு அன்பு! இத்தனை பேரெழுச்சி! உண்மையைச் சொல்வதானால், நான் நெதர்லாந்தில் இருக்கிறேன் என்பதையே ஒரு கணம் மறந்துவிட்டேன். இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு மாபெரும் திருவிழா நடந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வே ஏற்படுகிறது!

தி ஹேக் நகரம் உலகம் முழுவதும் "அமைதி மற்றும் நீதிக்கான நகரம்" என்று அறியப்பட்டாலும், இன்றைய இங்குள்ள சூழலைப் பார்க்கும்போது, அந்த நகரம் இந்திய நட்புறவின் வாழும் அடையாளமாக மாறிவிட்டது போல் தோன்றுகிறது!

ஒருவருடைய கடவுச்சீட்டின் நிறம் மாறலாம், முகவரி மாறலாம், ஏன்... நேர மண்டலம் கூட மாறலாம் - ஆனால் பாரதத் தாயின் பிள்ளைகள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், இந்த பாசமும், இந்த துடிப்பும், வாழ்க்கையைக் கொண்டாடும் இந்த மனப்பான்மையும் எப்போதும் நம்முடனேயே இருக்கும் என்பதை இது காட்டுகிறது.

உங்களின் இந்த அன்பான வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உள்ளே நுழையும் போதே ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையும், சத்ரபதி சிவாஜி மகாராஜையும், எனது அன்பிற்குரிய ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநிலத்தையும் இங்கே பார்த்தேன்...

நண்பர்களே,

இன்று உங்களையெல்லாம் சந்தித்த பிறகு, மேதகு அரசர் மற்றும் மேதகு அரசியாரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவுள்ளது. அத்தோடு, பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் பல முக்கிய விஷயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளையும் நடத்த உள்ளேன்.

கடந்த ஆண்டுகளில், நான் நெதர்லாந்து நாட்டுத் தலைவர்களுடன் பேசும்போதெல்லாம், அவர்கள் எப்போதும் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசியிருக்கிறார்கள். உங்களை எல்லாம் அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். டச்சு சமுதாயத்திற்கும், இங்கிருக்கும் பொருளாதாரத்திற்கும் நீங்கள் அளித்து வரும் பங்களிப்பைக் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறார்கள்.

இன்றைய இந்தத் தருணத்தில், நெதர்லாந்து நாட்டு மக்களுக்கும், இங்கிருக்கும் அரசாங்கத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக, இந்நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நான் இதற்கு முன்பும் நெதர்லாந்திற்கு வந்திருக்கிறேன். என்னுடைய பழைய நண்பர்கள் சிலர் இன்று இங்கே அமர்ந்திருக்கிறார்கள். இங்கு வாழும் இந்திய வம்சாவளியினருடன் எனக்கு நீண்டகாலமாகவே நல்ல தொடர்பு இருக்கிறது. இன்று இங்கே குழுமியிருக்கும் பல குடும்பங்களின் கதை என்பது வெறும் இடப்பெயர்வு பற்றிய கதை மட்டுமல்ல; அது நமது கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் எண்ணற்ற போராட்டங்களுக்கு மத்தியில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றின் கதையாகும்.

அக்காலத்தில், இரண்டு பெருங்கடல்களைத் தாண்டிச் சென்ற பிறகும், இந்தியர்களின் அடையாளம் இவ்வளவு துடிப்புடனும் உயிர்ப்புடனும் இருக்கும் என்று யாருமே கற்பனை செய்திருக்க முடியாது. உங்கள் முன்னோர்கள் பல விஷயங்களைத் தங்கள் பின்னே விட்டுச் சென்றிருக்கலாம், ஆனால் சில விஷயங்கள் எப்போதும் அவர்களுடனேயே இருந்தன - அவர்களின் மண்ணின் வாசனை, அவர்களின் பண்டிகைகளின் நினைவுகள், பக்திப் பாடல்களின் ராகங்கள் மற்றும் அவர்களின் மூதாதையர்கள் வழியே கடத்தப்பட்ட நற்பண்புகள்.

நண்பர்களே,

காலப்போக்கில் பல கலாச்சாரங்கள் அழிந்து போயின என்பதற்கு மனிதகுல வரலாறே சாட்சியாக உள்ளது. இருப்பினும், இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் இன்றும் அதன் மக்களின் இதயங்களில் வலுவாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. தலைமுறைகள் மாறிவிட்டன, நாடுகள் மாறிவிட்டன, சுற்றியிருக்கும் சூழலும் மாறிவிட்டது - ஆனால் குடும்ப மதிப்புகள் மாறவில்லை. அந்தச் சொந்தம் என்ற உணர்வு மாறவில்லை. நீங்கள் டச்சு மொழியை ஏற்றுக்கொண்ட போதிலும், உங்கள் முன்னோர்களின் மொழியைக் கைவிடவில்லை.

நம்முடைய சமுதாய வானொலி நிலையங்கள் இங்கே மிகவும் பிரபலமாக உள்ளன. மேலும் இந்த நிலையங்கள் மூலமாக இந்தியாவின் இசையும் கலாச்சாரமும் டச்சு குடும்பங்களையும் சென்றடைகின்றன. காந்தி மையமாக இருக்கட்டும் அல்லது பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளாக இருக்கட்டும், நீங்கள் உங்களின் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கது. நீங்கள் அனைவரும் பாராட்டுதல்களுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்.

நண்பர்களே,

இன்று மே 16, இந்த நாள் மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பு வாய்ந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2014 மே 16 அன்று, ஒரு அசாதாரணமான விஷயம் நடந்தது. இதே நாளில் தான் 2014-ல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன, பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவில் முழு பெரும்பான்மையுடன் கூடிய ஒரு நிலையான அரசாங்கம் அமைவது இதன் மூலம் உறுதியானது. அன்றைய நாள் முதல் இன்று வரை, கோடிக்கணக்கான இந்தியர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை நிற்க விடுவதில்லை, சோர்வடையவும் விடுவதில்லை. இந்தப் பயணம் இடைவிடாமலும் தடையின்றியும் தொடர்கிறது.

நண்பர்களே,

மிக இளம் வயதிலேயே, நான் தேசபக்தி என்ற உணர்வில் ஆழமாக மூழ்கிவிட்டேன். நீங்கள் அனைவரும் என் குடும்பமாக மாறினீர்கள். சொர்க்கத்திற்கு இணையான ஒட்டுமொத்த சமூகம் என்ற இலக்கை நோக்கி நான் புறப்பட்டேன். "நான் என்பதிலிருந்து நாம்" என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

அதன் பிறகு, உங்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியாக மாறியது. உங்களின் நலனே என் கடமையாக மாறியது. அர்ப்பணிப்பு உணர்வோடு, உங்கள் அனைவரின் ஆசிகளோடும், என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தொடர்ந்து பாடுபட்டேன். ஆனால் மக்களிடமிருந்து எனக்கு இவ்வளவு பெரிய அன்பு கிடைக்கும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.

நான் திரும்பிப் பார்க்கும்போது, முதலமைச்சராக 13 ஆண்டுகள், பிரதமராக 12 ஆண்டுகள் என ஜனநாயக உலகில் 25 ஆண்டுகள் மக்கள் சேவையில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான வாக்காளர்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய நற்பேறாகும்.

என்னைப் பொறுத்தவரை, இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; இது உங்களின் ஆசி, இதுவே எனது மிகப்பெரிய பலம். நாட்டின் இந்த அன்பும் ஆசியும், இந்திய மக்களின் கனவுகளை நனவாக்குவதற்காக உழைக்க என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் எனக்கு ஊக்கமளிக்கிறது.

நண்பர்களே,

உலகில் அது எந்த நாடாக இருந்தாலும், அது முன்னேற விரும்பினால், பெரிய கனவுகளைக் காண வேண்டும். இன்று நமது இந்தியாவும் ஒரு மிகப்பெரிய கனவைக் காண்கிறது. இன்று தேசம் கூறுகிறது - நாங்கள் வெறும் மாற்றத்தை மட்டும் விரும்பவில்லை; மிகச் சிறந்ததை விரும்புகிறோம். மிகச் சிறந்தது மட்டுமல்ல, மிக விரைவானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான், இந்தியாவில் லட்சியங்கள் எல்லையற்றதாக இருக்கும்போது, அதற்கான நமது முயற்சிகளும் எல்லையற்றதாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இந்திய இளைஞர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இன்று இந்தியாவின் இளைஞர்கள் வானத்தைத் தொட விரும்புகிறார்கள். அவர்கள் புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்கவும், தரமான தயாரிப்புகளை உருவாக்கவும், ட்ரோன்களைத் தயாரிக்கவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் உலகில் இந்தியாவை முன்னோக்கி வழிநடத்தவும் விரும்புகிறார்கள். அதனால்தான் இந்தியாவின் புத்தொழில்களுக்கான சூழல் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இன்று நாம் உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழலைக் கொண்ட நாடாக விளங்குகிறோம்.

மற்றும் நண்பர்களே,

இன்று இந்தியாவின் லட்சியங்கள் வெறும் அதன் சொந்த எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கிவிடவில்லை. இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும், உலகளாவிய உற்பத்தி மையமாக மாறவும், பசுமை ஆற்றலில் முன்னணியில் உருவெடுக்கவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாகச் செயல்படவும் விரும்புகிறது. விஷயம் என்னவென்றால், நமது லட்சியங்கள் எல்லையற்றவை, நமது முயற்சிகளின் அளவும் அதே அளவிற்குப் பிரம்மாண்டமானது. சாதனை அளவிலான நெடுஞ்சாலைகள் கட்டுமானம், சாதனை அளவிலான ரயில்வே மின்மயமாக்கல், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற அதிவிரைவு ரயில்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கங்களில் ஒன்று — இலக்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இன்றைய இந்தியா அதை நாங்கள் சாதிப்போம் என்று சொல்கிறது, அதை எங்கள் செயல்களின் மூலமாகவும் நிரூபித்துக் காட்டுகிறோம்.

நண்பர்களே,

இன்றைய இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு மாபெரும் மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. அண்மையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தியதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதற்கு முன்பாக, புது தில்லியில் ஜி20 உச்சிமாநாட்டையும் இந்தியா வெற்றிகரமாக நடத்தியிருந்தது. இவை ஏதோ ஒருமுறை மட்டும் நடந்த நிகழ்வுகள் அல்ல; இதுதான் இப்போது இன்றைய இந்தியாவின் குணாதிசயமாகவும் நம்பிக்கையாகவும் மாறியுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய தனித்துவமான அடையாள அட்டைத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நிதிச் சேர்க்கைத் திட்டங்களில் ஒன்றையும் இந்தியா நடத்தியுள்ளது. இந்தியா டிஜிட்டல்மயமாக்கலை முன்னெடுத்துச் செல்லும் வேகம் உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். உலகிலேயே மிகப்பெரிய அரசு நிதியுதவி பெறும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் இந்தியா நடத்தி வருகிறது. மேலும், ஆம்... இதற்கு முன்பு யாரும் சென்றடையாத நிலவின் ஒரு பகுதியை இந்தியா சென்றடைந்தது. அணுசக்தித் துறையில் உலகின் அதிநவீன அதிவேக ஈணுலைகளில் ஒன்றிலும் இந்தியா வெற்றிகரமாகப் பணியாற்றி வருகிறது.

நண்பர்களே,

இந்தியா அடைந்து வரும் வளர்ச்சியின் வேகம், உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இன்று இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் சூரியசக்தி பூங்காக்கள் உலகிலேயே மிகப்பெரியவற்றுள் ஒன்றாகத் திகழ்கின்றன.

மிக உயரமான மற்றும் மிக நீளமான சுரங்கப்பாதைகள், மிக உயர்ந்த மற்றும் மிக நீளமான பாலங்கள், மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலைகள், மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்புகள், மிகப்பெரிய சிவில் விமானப் போக்குவரத்து கட்டமைப்புகள் அல்லது மிகப்பெரிய மின்மயமாக்கப்பட்ட இரயில்வே கட்டமைப்புகள் என எதுவாக இருந்தாலும் - இவற்றில் பலவும் இப்போது இந்தியாவில் தான் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில், பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போல பதினொரு மடங்குக்கும் அதிகமான நீளத்திற்கு இந்தியா செயற்கை கண்ணாடி இழை கேபிள்களைப் பதித்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு, நாம் கைபேசிகளை இறக்குமதி செய்தோம்; ஆனால் இன்று, இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய கைபேசி உற்பத்தி நாடாக மாறியுள்ளது.

நண்பர்களே,

இந்த வேகத்துடனும் பிரம்மாண்டத்துடனும், இன்றைய இந்தியாவின் மற்றொரு தனிச்சிறப்பும் இணைந்திருக்கிறது. இன்றைய இந்தியா புதுமைகளைப் புகுத்தும் கண்டுபிடிப்புத் திறனால் இயங்குகிறது. நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது, மேலும் இது இந்தியர்களின் புதுமையான கண்டுபிடிப்புத் திறன்களுக்கு ஒரு முக்கிய சான்றாக விளங்குகிறது.

இன்று, ஒருவர் பணத்தைச் சேமிக்க விரும்பினால் டிஜிட்டல் பணப்பைகள் உள்ளன. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் டிஜிலாக்கர் உள்ளது. பயணம் செய்ய விரும்பினால் டிஜி யாத்ரா உள்ளது. மேலும் ஒருவர் மருத்துவச் சேவைகளைப் பெற விரும்பினால், டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை உள்ளது.

நண்பர்களே,

இன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 2,000 கோடிக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகம் முழுவதும் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேலானவை இந்தியாவில் மட்டுமே நடக்கின்றன.

மேலும், புத்தொழில் என்பது இப்போது இந்திய இளைஞர்களின் சிந்தனையிலேயே ஒரு அங்கமாக மாறிவிட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் 500-க்கும் குறைவான புத்தொழில் நிறுவனங்களே இருந்தன; இன்று, அந்த எண்ணிக்கை 2,00,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல், புதிய தொழில்முனைவு உலகில், 2014-ம் ஆண்டில் இந்தியாவில் வெறும் நான்கு யூனிகார்ன்  நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இன்று, இந்தியாவில் கிட்டத்தட்ட 125 செயல்பாட்டு யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. 2025-ம் ஆண்டில் மட்டுமே, கிட்டத்தட்ட 44,000 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று, நமது புத்தொழல் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் அசாதாரணமான பணிகளைச் செய்து வருகின்றன.

காலப்போக்கில், இந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கலாச்சாரம் இன்னும் விரிவடைந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், இந்தியாவில் 1,25,000-க்கும் அதிகமான காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நண்பர்களே,

சிப் தயாரிப்பு மற்றும் குறைக்கடத்தி துறையிலும் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. தற்போது, இந்தியாவில் 12 குறைக்கடத்தி ஆலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் இவற்றில் இரண்டு ஆலைகளில் ஏற்கனவே உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது. இதன் பொருள், இனி சிப்களும் கூட "இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு", "இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்".

நண்பர்களே,

இந்தியாவின் லட்சியங்கள் நிறைந்த இந்தப் பயணம் நமது ஜனநாயகத்தையும் வலுப்படுத்தி வருகிறது. மக்களின் கனவுகள் நனவாகும்போது, ஜனநாயகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையும் மேலும் வலுவடைகிறது.

நண்பர்களே,

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களை உங்களுக்கு உதாரணமாகக் கூற விரும்புகிறேன். இந்த முறை அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு 80 முதல் 90 சதவீதம் வரை இருந்தது. குறிப்பாக, பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் காண முடிகிறது.

இன்று இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் பெரும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள், நீங்களும் அதே அளவு உற்சாகத்துடன் இருக்கிறீர்கள். நண்பர்களே, ஆண்டுக்கு ஆண்டு புதிய வாக்குப்பதிவு சாதனைகள் படைக்கப்பட்டு வருவதை எண்ணி நாம் பெருமிதம் கொள்கிறோம்.

நண்பர்களே,

இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் 64 கோடி மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் - இதன் பொருள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான இந்தியர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். இந்தியா ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகப் பங்களிப்பையும் மதிக்கிறது, மேலும் ஜனநாயகத்தின் தாய் என்ற முறையில் இது நம் அனைவருக்கும் மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும்.

நண்பர்களே,

இந்தியா வெற்றி பெறும் போதெல்லாம், அதன் பலன் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைக்கிறது. ஆனால் இன்று, மனிதகுலம் பல முக்கிய சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. உலகம் அடுத்தடுத்து புதிய சவால்களுடன் எவ்வாறு போராடி வருகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முதலில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று வந்தது, பின்னர் போர்கள் வெடிக்கத் தொடங்கின, இப்போது உலகம் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தத் தசாப்தம் உலகிற்குப் பேரழிவுகளின் தசாப்தமாக மாறி வருகிறது.

இந்தச் சூழ்நிலைகள் விரைவாக மாற்றப்படாவிட்டால், கடந்த பல தசாப்தங்களாக அடைந்த சாதனைகள் வீணாகிவிடும் என்பதை நாம் அனைவரும் பார்க்க முடிகிறது. உலக மக்கள் தொகையின் மிகப்பெரிய ஒரு பகுதி மீண்டும் வறுமை என்னும் சகதிக்குள் தள்ளப்படலாம்.

நண்பர்களே,

இத்தகைய உலகளாவிய சூழ்நிலைகளில், உலகம் இன்று நெகிழ்வுத்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளைப் பற்றிப் பேசுகிறது. இந்தச் சூழலில், நம்பகமான, வெளிப்படையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான விநியோகச் சங்கிலியை உருவாக்க இந்தியாவும் நெதர்லாந்தும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

எரிசக்தி பாதுகாப்பு முதல் தண்ணீர் பாதுகாப்பு வரை, நெதர்லாந்தும் இந்தியாவும் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன. பசுமை ஹைட்ரஜன் துறையிலான நமது ஒத்துழைப்பு குறிப்பாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்.

இதன் மூலம் நீங்கள் அனைவரும் கூட பயனடைவீர்கள். ஐரோப்பாவிற்குள் நுழையும் இந்திய வணிகங்களுக்கு நெதர்லாந்து ஒரு இயல்பான நுழைவாயிலாக மாறும். இந்தப் பயணத்தில், நம்முடைய வம்சாவளி மக்கள் ஒரு நம்பகமான பாலமாகச் செயல்பட முடியும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்திய வம்சாவளியினருக்கு இந்தியாவின் லட்சியங்களும் புரியும், ஐரோப்பாவின் தரநிலைகளும் தெரியும். இங்குக் குடியேறியுள்ள இந்தியர்கள், இந்தியாவின் உயர்தரத் தயாரிப்புகளுடன் தங்களை இணைத்துக் கொள்வதற்கும் இது கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும்.

நண்பர்களே,

நெதர்லாந்து என்பது துலிப் மலர்களின் தேசமாகும், மேலும் அதன் அழகான துலிப் மலர் வயல்களைக் காண்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இந்தியாவிலும் கூட, உலகின் மிகப்பெரிய துலிப் தோட்டங்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் அமைந்துள்ளது. நெதர்லாந்து எவ்வாறு துலிப் மலர்களுக்குப் பெயர் பெற்றதோ, அதேபோல் இந்தியா தாமரை மலருக்குப் பெயர் பெற்றது.

நண்பர்களே,

துலிப் மற்றும் தாமரை ஆகிய இரண்டுமே, ஒருவருடைய வேர்கள் நீரில் இருந்தாலும் சரி அல்லது மண்ணில் இருந்தாலும் சரி, சரியான ஊட்டச்சத்து கிடைத்தால் அழகும் வலிமையும் இணைந்து செழித்தோங்க முடியும் என்பதை நமக்குக் கற்றுத்தருகின்றன. இதுவே இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் அடித்தளமுமாகும்.

நண்பர்களே,

நமக்கு இடையே அடிக்கடி பேசப்படாத மற்றொரு முக்கியமான நட்புப் பிணைப்பும் உள்ளது, அதுதான் விளையாட்டுத் துறை. விளையாட்டுத் துறையில் நமது இரு நாடுகளும் பல வழிகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

கிரிக்கெட் விளையாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நெதர்லாந்தில் கிரிக்கெட் விளையாட்டு வளர்வதற்கு இந்திய வம்சாவளி சமூகம் ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பையின் போது, நெதர்லாந்து அணி பாராட்டத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா உலகக் கோப்பை சாம்பியனாக இருக்கலாம், ஆனால் இந்தியாவின் அணி கூட நெதர்லாந்து அணியிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டது.

தேஜா நிடமானுரு மற்றும் விக்ரம்ஜித் சிங் போன்ற வீரர்கள் நெதர்லாந்து நாட்டின் சீருடையை அணிந்திருப்பதைக் காணும் போதோ, அல்லது ஆர்யன் தத் போன்ற இளம் வீரர்கள் டச்சு கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்குப் பங்களிப்பதைக் காணும் போதோ, அது நம் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நண்பர்களே,

இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியிருப்பது போல, இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு வளர்ச்சி அடைவதற்கும் நெதர்லாந்து ஒரு முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. இந்திய ஹாக்கியை மேலும் வலுப்படுத்துவதில் டச்சு பயிற்சியாளர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். நம்முடைய மகளிர் ஹாக்கி அணி சமீபகாலமாக மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, இந்தத் தொடர் பயணத்தில் பயிற்சியாளர் ஷூர்ட் மரைன் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு, நெதர்லாந்து நாடு ஹாக்கி உலகக் கோப்பை போட்டியை நடத்துகிறது. நீங்கள் அனைவரும் நிச்சயமாகச் சென்று இந்தியாவின் போட்டிகளைக் காண வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம் - உலகக் கோப்பையை யார் வென்றாலும், இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான நட்பு நிச்சயம் வெற்றி பெறும்.

நண்பர்களே,

இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான உறவின் உண்மையான பலம் நீங்கள் தான். இந்தத் தூதரகக் கூட்டாண்மையின் வாழும் பாலமாக நீங்கள் விளங்குகிறீர்கள். எனவேதான், வெளிநாடு வாழ் இந்தியர் அடையாள அட்டை (ஓசிஐ அட்டை) பெறுவதற்கான தகுதியை, சுரினாம் இந்துஸ்தானி சமூகத்தினருக்கு நான்காவது தலைமுறையிலிருந்து ஆறாவது தலைமுறை வரை நீட்டித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்தியா என்பது வாய்ப்புகளின் தேசமாகும். இந்தியா தொழில்நுட்பத்தால் இயங்குவதோடு, மனிதநேயத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தியா எந்த அளவிற்குப் பழமையானதோ, அந்த அளவிற்கு நவீனமானதாகவும் மாறி வருகிறது. எனவே, இந்தியாவில் உள்ள உங்களது முன்னோர்களின் கிராமங்களோடு நீங்கள் மீண்டும் உங்களை இணைத்துக் கொள்வதற்கும், வளர்ந்த இந்தியாவை நோக்கிய இந்தப் பயணத்தில் பங்கெடுப்பதற்கும் இதுவே சரியான தருணமாகும். நெதர்லாந்தில் உள்ள இந்திய வம்சாவளிச் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் இந்தியாவுடனான தங்களது தொடர்பை மேலும் ஆழப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இது இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தும், அதே நேரத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகளுக்குப் பெருமளவிலான நன்மைகளையும் பெற்றுத் தரும் — இது மோடியின் உத்தரவாதம்.

இன்று உங்களில் இத்தனை பேர் இங்கே ஒன்று கூடியிருப்பதைக் கண்டு நான் உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களையெல்லாம் நேரில் பார்ப்பதற்கும், உங்களுடன் உரையாடுவதற்கும் கிடைத்த இந்த வாய்ப்பை எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். இந்த நல்லுணர்வுகளோடு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வளவு அன்பான மற்றும் உற்சாகமான வரவேற்பளித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகள்!

பாரத மாதாவுக்கு ஜே!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் ஆற்றப்பட்டது.

----

(Release ID: 2261724)

AD/VK/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2263659) வருகையாளர் எண்ணிக்கை : 10