பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத், வதோதராவில் சர்தார்தாம் விடுதித் திறப்பு விழாவின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2026 10:09PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி அவர்களே, மத்திய அமைச்சரும் நிறுவன அறங்காவலருமான மன்சுக் பாய் மாண்டவியா அவர்களே, சர்தார்தாம் தலைவர் கக்ஜி பாய் சுதாரியா அவர்களே, துஷ்யந்த் பாய் படேல் அவர்களே, பங்கஜ் பாய் படேல் அவர்களே, மாநில பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நன்கொடையாளர்களே, அறங்காவலர்களே, சிறப்பு விருந்தினர்களே மற்றும் எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

இன்றைய நாள் ஒரு புனிதமான திருவிழாவிற்கு இணையானது. இங்கு வருவதற்கு முன்னதாக, நான் சோமநாதர் ஆலயத்தில் இருந்தேன். சோமநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சர்தார் படேலின் உறுதியான எண்ணத்தால் சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்புப் பணி நிறைவேறியது. அந்தச் சந்தர்ப்பத்தில், பிரபாஸ் பாதனில் சோமநாதர் அமிர்தப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நாளில், வதோதராவில் சர்தார்தாம் தொடர்பான பல முக்கியமான திட்டங்களின் தொடக்க விழாவும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகின்றன.

டாக்டர் துஷ்யந்த் மற்றும் தக்ஷா படேல் வளாகத் திறப்பு விழா, கல்வி உதவித் திட்டத்தின் தொடக்கம் மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா - என இந்த அனைத்து முயற்சிகளும் எதிர்காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயனுள்ள கருவிகளாக மாறும். ஒரு வகையில், இந்த நிறுவனங்கள் நமது இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஏவுதளங்களாக செயல்படும். இந்த உன்னதமான பணிக்காக உங்கள் அனைவருக்கும் மற்றும் சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று உங்கள் மத்தியில் வந்திருப்பது எனக்கு மற்றொரு மகிழ்ச்சியையும் அளிக்கிறது. வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் உற்சாகமான சூழலை உருவாக்கியுள்ளன. அதோடு சேர்ந்து, நீங்கள் அனைவரும் இணைந்து ஒரு வரலாற்றைப் படைத்துள்ளீர்கள் — குஜராத் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளும் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன, அவை தேசம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

குஜராத் மக்கள் எப்போதும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மதிப்பளிப்பவர்கள். இது அவர்களின் அரசியல் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர், ஏனென்றால் எங்கெல்லாம் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கிறதோ, அங்கெல்லாம் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுக்கும். குஜராத் இதை நீண்ட காலத்திற்கு முன்பே புரிந்து கொண்டது. அதன் முடிவுகள் இன்று குஜராத்தின் வளர்ச்சியிலும், அடுத்தடுத்து வெளியாகும் தேர்தல் முடிவுகளிலும் வெளிப்படையாகத் தெரிகின்றன.

நண்பர்களே,

உங்கள் மத்தியில் வருவதும், உங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் எனக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சியான அனுபவம்; இது ஏதோ சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வைத் தருகிறது. ஏனெனில் உங்கள் மத்தியில், சமூகத்தின் வலிமையை ஒருவரால் உணர முடிகிறது. உண்மையான மாற்றம் எப்போது நிகழ்கிறதோ, அது சமூகத்தின் கூட்டு வலிமையாலேயே அடையப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக, எந்தச் சமூகங்கள் கல்விக்கு முன்னுரிமை அளித்து, கல்வியில் சமமான பங்கேற்பைத் தங்கள் இலக்காகக் கொண்டுள்ளனவோ, அவை எப்போதும் முன்னேறி புதிய உயரங்களை எட்டியுள்ளன.

அதனால் தான், சகோதர சகோதரிகளே,

சர்தார் தாமின் ஒவ்வொரு முயற்சியிலும், எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் எப்போதும் உங்களுடன் நிற்கவே முயற்சி செய்கிறேன். திரு. கக்ஜி பாய் இப்போது விரிவாக விளக்கியது போல, 2021-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற சர்தார் தாம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன், அங்கு பெண் குழந்தைகளுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டு, அது திறந்து வைக்கப்பட்டது. இன்று ஆயிரக்கணக்கான மகள்கள் அங்கே கல்வி கற்று, தங்கள் கனவுகளுக்குப் புதிய திசையை அளித்து வருகிறார்கள். சூரத், ராஜ்கோட், புஜ், மெஹ்சானா மற்றும் தில்லியில், சர்தார் தாமின் இதுபோன்ற பல நிறுவனங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகின்றன. இன்றும் கூட, அகமதாபாத்தின் நிகோல் பகுதியில் ஆயிரம் பெண்களுக்கான புதிய விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நண்பர்களே,

 

மாற்றம் என்பது பரவலாகவும், அதன் முடிவுகள் நிலைத்திருக்கவும் வேண்டுமானால், சமூகமும் அரசாங்கமும் இணைந்து செயல்பட வேண்டும். அதனால்தான் இப்போது கல்வித்துறையில் தரைமட்ட யதார்த்தத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசியக் கல்விக் கொள்கை இதற்கு ஒரு முக்கிய உதாரணம். இன்று இளைஞர்களின் பாதையில் இருந்த தடைகள் நீக்கப்பட்டு வருகின்றன. மொழியின் அடிப்படையிலான பாகுபாடு முடிவுக்கு வருகிறது. இனி கவனம் என்பது புத்தகங்கள் மற்றும் பட்டங்கள் மீது மட்டுமே இருக்கப்போவதில்லை. திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் ஆகியவை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்குச் சரியான சூழல் வழங்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் தங்களது பட்டப்படிப்பை முடித்த பிறகு அனுபவம் இல்லாமல் அலையாமல் இருப்பதை உறுதி செய்ய, தொழில் பழகுநர் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் நாடு எவ்வளவு பெரிய திறன்மிக்க பணியாளர்களைக் கொண்டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதன் மிகப்பெரிய பலன் இந்தியாவின் உற்பத்தித் துறைக்குச் சேரும்.

நண்பர்களே,

குஜராத் இளைஞர்கள் இயற்கையாகவே தொழில்முனைவோர் ஆற்றலைக் கொண்டவர்கள். இன்று, ‘புத்தொழில் இந்தியா’ இயக்கம் அவர்களின் கனவுகளை நனவாக்க உதவுகிறது. சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இன்று தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். சிறிய நகரங்களிலிருந்து பெரிய புத்தொழில்கள் உருவாகி வருகின்றன. புத்தொழில்களில் பெண்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் ஆபத்தானவை என்று கருதப்பட்ட துறைகள், இன்று இளைஞர்களின் முதல் தேர்வாக மாறி வருகின்றன. கடந்த 10-12 ஆண்டுகளில் விளையாட்டு முதல் விண்வெளி தொழில்நுட்பம் வரை நாடு அடைந்துள்ள சாதனைகளே இதற்கு மிகப்பெரிய சான்றாகும். மேலும், குஜராத்தைச் சேர்ந்த நமது மகன்களும் மகள்களும் இதனால் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

நண்பர்களே,

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய அடிப்படை என்பது, அந்தச் சமூகத்தின் பெண்களின் — அதாவது அதன் மறுபாதியின் — பங்களிப்புதான். குஜராத் இதை இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே புரிந்து கொண்டு, இந்தத் திசையில் வலுவான நடவடிக்கைகளை எடுத்தது.

நண்பர்களே,

இன்று, குஜராத் மாடலின் அதே வெற்றி நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது. கோடிக்கணக்கான பெண்களுக்கு வங்கி கணக்குகள் வழங்கப்பட்டுள்ளன. கழிப்பறைகள், குழாய் நீர் இணைப்புகள் மற்றும் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் மூலம் பெண்கள் சுயசார்பு அடைந்து வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் மற்றும்  தாய்மையைப்போற்றுவோம் போன்ற திட்டங்கள், குடும்பத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் பாதுகாப்பு கவசங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

முன்பெல்லாம், பல துறைகளின் கதவுகள் நம் நாட்டின் மகள்களுக்கு அடைக்கப்பட்டிருந்தன. இன்று, அதே துறைகளில் பெண்கள் தலைவர்களாக உருவெடுத்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண் கெடட்கள் இப்போது பயிற்சி பெற்று வருகின்றனர். நமது மகள்கள் போர் விமானிகளாக மாறி வருகின்றனர். அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகளிர் ஆற்றலை போற்றுதல் திருத்தச் சட்டத்தின் மூலம், இந்தத் திசையில் நாங்கள் மற்றொரு முயற்சியை மேற்கொண்டோம். அரசியல் காரணங்களால் அது நிறைவேறாமல் போயிருக்கலாம், ஆனால் இந்தத் திசையில் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று உங்களுக்கும், நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கும் நான் உறுதி அளிக்கிறேன்.

நண்பர்களே,

ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கான வாய்ப்புக் கதவுகளைத் திறப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, சமூகத்தின் பொறுப்புமாகும். சர்தார்தாம் இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சிகளுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

குஜராத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று என்னவென்றால், இங்குள்ள சமூகம் காலத்தின் போக்கை மிக விரைவாக அடையாளம் கண்டுவிடும். மாற்றத்தை வாய்ப்பாக மாற்றுவது, புதிய சாத்தியக்கூறுகளை ஏற்றுக்கொள்வது மற்றும் எதிர்காலத்திற்காக முன்கூட்டியே தயாராவது ஆகியவை எப்போதும் குஜராத்தின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. இன்று உலகம் எதிர்காலத் தொழில்நுட்பங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், குஜராத்தும் புதிய வேகத்துடன் முன்னேறி வருகிறது. செமிகண்டக்டர் உற்பத்தி, விண்வெளித் துறை, மேம்பட்ட பொறியியல், பசுமை எரிசக்தி மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் குஜராத் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி வருகிறது. சானந்தில் செமிகண்டக்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. கேய்ன்ஸ் செமிகண்டக்டர் ஆலை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. தோலேரா மற்றும் சூரத்திலும் புதிய செமிகண்டக்டர் திட்டங்கள் முன்னோக்கிச் செல்கின்றன.

நண்பர்களே,

இந்தியா மற்றும் குஜராத்தை உலகளாவிய விநியோகச் சங்கிலியின்  முக்கிய மையங்களாக மாற்ற நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். வரும் ஆண்டுகளில், வதோதராவும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். இங்கு தயாரிக்கப்படும் மெட்ரோ ரயில் பெட்டிகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சாவ்லியில் நவீன ரயில் அமைப்புகள் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பொறியியல், கனரக இயந்திரங்கள், ரசாயனங்கள் மற்றும் மருந்துகள், மின் சாதனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்  ஆகியவற்றில் வதோதரா ஒரு வலிமையான உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இங்குள்ள விரைவுசக்தி பல்கலைக்கழகம் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் நிபுணர்களை உருவாக்கி வருகிறது. இப்போது வதோதரா விண்வெளித் துறையிலும் ஒரு புதிய அடையாளத்தை நோக்கி நகர்கிறது. இங்குள்ள விமானத் தயாரிப்புத் திட்டம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.

நண்பர்களே,

குஜராத்திலும் நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அனைத்து வளர்ச்சி முயற்சிகளுக்கும் மத்தியில், மற்றொரு விஷயம் பெருகிய முறையில் உணர்திறன் வாய்ந்ததாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, உலகம் நிலையற்ற சூழ்நிலைகளைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது. முதலில் கொரோனா நெருக்கடி ஏற்பட்டது, பின்னர் உலகளாவிய பொருளாதார சவால்கள், இப்போது மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள். இந்தச் சூழ்நிலைகள் உலகம் முழுவதையும் தொடர்ந்து பாதித்து வருகின்றன, இந்தியாவும் இவற்றிலிருந்து தப்பவில்லை. கொரோனா பெருந்தொற்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது என்றால், மேற்கு ஆசியாவில் போரினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்றாகும். நாம் அனைவரும் இணைந்து எப்படி அந்தப் பெருந்தொற்றை வென்றோமோ, அதேபோல இந்த நெருக்கடியையும் நாம் முறியடிப்போம்.

இந்த மோசமான சூழ்நிலைகள் சாதாரண குடிமக்களின் மீது மிகக் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்துவதை உறுதி செய்ய அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இத்தகைய நேரத்தில், தேசத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு எனும் சக்தி பெருமளவில் தேவைப்படுகிறது. இந்தியாவின் குடிமக்களாக, நாம் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முந்தைய தசாப்தங்களிலும் கூட, நாடு போரையோ அல்லது பெரும் நெருக்கடிகளையோ சந்தித்த போதெல்லாம், அரசாங்கத்தின் அழைப்பிற்கு இணங்க குடிமக்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றினர். இன்றும் கூட, நாட்டின் வளங்கள் மீதான சுமையைக் குறைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பல பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா லட்சக்கணக்கான கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் செலவிடுகிறது. அதே நேரத்தில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன, விநியோகச் சங்கிலிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, நாடு இரட்டைச் சவாலை எதிர்கொண்டுள்ளது.

ஒரு குடம் சொட்டுச் சொட்டாக எப்படி நிரம்புமோ, அதுபோல நாமும் ஒவ்வொரு சிறு முயற்சியின் மூலமும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், மேலும் தேவையற்ற அந்நியச் செலாவணிச் செலவினங்களுக்கு வழிவகுக்கும் தனிப்பட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

நண்பர்களே,

இந்தியாவின் இறக்குமதியில் பெரும் பகுதி கச்சா எண்ணெய் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகம் செய்யும் பிராந்தியம் தற்போது மோதல்கள் மற்றும் போரில் சிக்கியுள்ளது. எனவே, நிலைமை சீராகும் வரை, நாம் அனைவரும் இணைந்து சில சிறிய உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். இதைப் பற்றி நான் நேற்று கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் பேசினேன், இன்று குஜராத்திலும் இதை மீண்டும் வலியுறுத்துகிறேன். உங்கள் மீது எனக்கு அதிக உரிமை இருப்பதால், நான் இதை அன்புடன் சொல்கிறேன்: எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். மெட்ரோ சேவைகள், மின்சாரப் பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள். 'கார்பூலிங்' (வாகனங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்) முறையை ஊக்குவியுங்கள். கார் வைத்திருப்பவர்கள் அதிக நபர்களுடன் இணைந்து பயணம் செய்யுங்கள். மின்சார வாகனங்கள் வைத்திருப்பவர்களும் மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

நண்பர்களே,

டிஜிட்டல் தொழில்நுட்பம் பல விஷயங்களை எளிதாக்கியுள்ளது. தொழில்நுட்பம் நமக்கு பெரிதும் பயனளிக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இரண்டுமே மெய்நிகர் சந்திப்புகள்  மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். சில பள்ளிகளும் கூட சில காலத்திற்கு ஆன்லைன் வகுப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

எரிபொருள் மட்டுமல்ல, சமையல் எண்ணெய் இறக்குமதியாலும் அதிக அளவிலான அந்நியச் செலாவணி செலவாகிறது. நாம் நிதானத்தைக் கடைப்பிடித்து, சமையல் எண்ணெய் நுகர்வைக் குறைத்தால், நாடும் நமது ஆரோக்கியமும் ஒருசேரப் பயனடையும். இதை நான் குறிப்பாக சூரத் மக்களுக்குச் சொல்கிறேன்.

அதேபோல், உங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக, நான் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்: தங்கம் இறக்குமதி செய்வதாலும் பெருமளவிலான அந்நியச் செலாவணி வெளியேறுகிறது. நிலைமை சீராகும் வரை, தங்கம் வாங்குவதைத் தள்ளிப் போடுமாறு நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போது தங்கம் வாங்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

நண்பர்களே,

இன்று, 'உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்' என்பதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் கிராமங்கள், நகரங்கள் மற்றும் நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோரை வலுப்படுத்துங்கள். இங்கு அமர்ந்திருக்கும் பலரே உலகத்தரம் வாய்ந்த சிறந்த பொருட்களைத் தயாரிப்பவர்கள்.

நண்பர்களே,

நம்மில் பெரும்பாலோர் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். விவசாயத்தில், நாம் உள்நாட்டு உரங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். டீசல் பம்புகளுக்குப் பதிலாக சூரிய சக்தி பம்புகளைப் பயன்படுத்த வேண்டும். நாம் விவசாயிகளின் மகன்கள் மற்றும் மகள்கள்; நாம் முதலில் நமது நிலங்களையும் பாரத மாதாவையும் காப்பாற்ற வேண்டும். ரசாயன உரங்கள் மூலம் நமது மண்ணை நாம் அழிக்கக் கூடாது. எனவே, உங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியையும் ரசாயன உரங்களிலிருந்து விடுதலை பெற்று, இயற்கை விவசாயத்தை நோக்கி வழிநடத்துமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

உங்களில் பலருக்குப் பொருந்தக்கூடிய மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது — தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம். விடுமுறை நாட்கள் தொடங்கியவுடன், குழந்தைகளுக்கு வெளிநாட்டுப் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை வழங்குவது ஒரு நாகரிகமாகிவிட்டது. மக்கள் வெளிநாடுகளில் விடுமுறையைக் கழிக்கிறார்கள். கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்களும், வெளிநாடுகளில் நடக்கும் திருமணங்களும் வளர்ந்து வரும் போக்காக மாறிவிட்டன. முன்பெல்லாம் மக்கள் எனக்கு திருமண அழைப்பிதழ்களை அனுப்புவார்கள்; இப்போது அவர்கள் அனுப்புவதில்லை, ஏனெனில் திருமணங்கள் வெளிநாடுகளில் நடத்தப்படுகின்றன. ஆனால் இதுவும் மிகப்பெரிய அந்நியச் செலாவணிச் செலவினத்திற்கே வழிவகுக்கிறது.

நண்பர்களே,

சற்று சிந்தித்துப் பாருங்கள் — நாம் விடுமுறையைக் கழிக்க இந்தியாவில் அழகான இடங்களே இல்லையா? நமது குழந்தைகளுக்கு நமது வரலாற்றைக் கற்பிப்போம், நமது நாட்டிலுள்ள இடங்களைக் குறித்துப் பெருமை கொள்வோம். நாம் இந்தியாவிற்குள்ளேயே விடுமுறையைக் கழிப்பது முக்கியம். திருமணங்களுக்கும் கூட, இந்தியாவை விடப் புனிதமான இடம் வேறு எதுவும் இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இங்கேயே திருமணங்கள் நடக்கும்போது, நமது முன்னோர்களின் மண் கூட நம்மை ஆசீர்வதிக்கிறது.

திருமணங்களுக்கும் கூட, இந்தியாவில் பல அற்புதமான இடங்கள் உள்ளன, நாம் அவற்றையே தேர்ந்தெடுக்க வேண்டும். குஜராத்திலேயே கூட எண்ணற்ற அழகான இடங்கள் உள்ளன. நான் குறிப்பாக எனது பட்டிதார் சகோதரர்களிடம் சொல்கிறேன்: இனி நீங்கள் ஒற்றுமைக்கான சிலை அமைந்துள்ள இடத்தில் திருமணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும், அங்கு சர்தார் படேல் அவர்களே ஒவ்வொரு திருமணத்தையும் ஆசீர்வதிப்பார். ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் அமைதி மற்றும் ஆன்மீகத்திற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோ, அதேபோன்ற வசதிகள் திருமணங்களுக்காக ஒற்றுமைக்கான சிலையிடமும் மேம்படுத்தப்பட வேண்டும்.

சமீபத்திய ஆண்டுகளில், ஒற்றுமைக்கான சிலையும் ஏக்தா நகரும் முக்கிய சுற்றுலா மையங்களாக உருவெடுத்துள்ளன. நம்மால் முடிந்தவரை அதிகமான மக்களை ஒற்றுமைக்கான சிலையைப் பார்வையிட ஊக்குவிப்போம் என நாம் உறுதி ஏற்கலாமா? பல இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்; வெளிநாட்டுக் குடும்பங்களை இந்தியாவைப் பார்க்க அழைத்து வருவது அவர்களின் பொறுப்பு என்று நான் கூறுகிறேன். இந்தியாவில் இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் சரி, இதுவரை ஒற்றுமைக்கான சிலையைப் பார்வையிடாத உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு குடும்பத்தையும், குறைந்தபட்சம் ஒரு முறையாவது அங்கு செல்ல ஊக்குவியுங்கள். ஏக்தா நகர் திருமணங்களுக்கான ஒரு அற்புதமான இடமாகவும் மாற முடியும். ஒற்றுமைக்கான சிலையில் உள்ள வசதிகள் மிகச் சிறந்தவை, உலகின் மிக உயரமான சிலை சர்தார் வல்லபாய் படேலினுடையது என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் இதைப் பெருமையாகக் கருதாமல் இருக்க முடியாது.

நண்பர்களே,

நான் குறிப்பிட்டுள்ள இந்த முயற்சிகள் அனைத்தும் சிறிய முயற்சிகளே; நான் உங்களிடம் கடினமான எதையும் செய்யச் சொல்லவில்லை. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், 140 கோடி இந்தியர்களும் ஒரே உறுதியுடன் இணைந்து செயல்படும்போது, சிறிய முயற்சிகள் கூட தேசத்தின் மிகப்பெரிய பலமாக மாறும். 140 கோடி மக்கள் ஒரு படி எடுத்து வைக்கும்போது, நாடு 140 கோடி அடிகள் முன்னேறிச் செல்கிறது.

எனவே, எந்தவொரு நெருக்கடியும் நமது முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுத்துவிடாதபடி நாம் மீண்டும் ஒருமுறை ஒன்றிணைய வேண்டும். நாம் அனைவரும் இணைந்து இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றி, தேசத்தை வலுப்படுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.

மேலும், நான் திரு. கக்ஜி பாயிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எனக்கு 'சர்தார் கவுரவ் ரத்னா' விருது வழங்கி கவுரவித்துள்ளீர்கள். ஒரு விருது சர்தார் படேலின் பெயரைக் கொண்டிருக்கும்போது, அதன் பொறுப்பு இன்னும் அதிகமாகிறது. ஒரு வகையில், திரு. கக்ஜி பாய் சாமர்த்தியமாக என்னைக் கட்டிப்போட்டு, என்னை ஒருபோதும் பின்வாங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை சர்தார் படேலின் அனைத்துக் கனவுகளையும், முடிக்கப்படாத பணிகளையும் நிறைவேற்றுவது எனது விதியில் எழுதப்பட்டிருக்கலாம்.

இன்று, இந்த கவுரவத்தையும் விருதையும் பெற்ற பிறகு, உங்கள் ஆசீர்வாதத்துடனும், குஜராத் மண்ணிலிருந்து நான் பெற்ற வலிமை மற்றும் விழுமியங்களுடனும், சர்தார் படேலின் கனவுகளை நனவாக்கும் பணியிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். குஜராத் மக்கள் எனது சுபாவத்தை நன்கு அறிவார்கள் — பின்வாங்குவது என்பது நான் அறியாத ஒன்று.

இந்தக் கவுரவம் எனக்குப் பெரிய பொருளைத் தருகிறது. ஜெனரல் கரியப்பா அவர்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதையை நான் ஒருமுறை படித்தேன். அவரை கவுரவிப்பதற்காக அவருடைய கிராமத்தில் ஒரு விழா நடைபெற இருந்தது, அதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். மக்கள் அதற்குக் காரணம் கேட்டபோது, அவர் சொன்னார்: "உலகம் முழுவதும் ராணுவ மரபுகளின்படி எனக்கு மரியாதைகளும் கவுரவங்களும் கிடைக்கின்றன, ஆனால் சொந்த மண்ணில், சொந்த வீட்டில் கவுரவம் பெறுவதன் மகிழ்ச்சியே தனித்துவமானது."

இன்று இந்தியா வலிமை பெற்று வருவதால், இந்தியப் பிரதமருக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைக்கிறது. ஆனால், ஒருவர் தனது சொந்த மக்களிடமிருந்தும், தனது சொந்தக் குடும்பத்திலிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறும்போது, அது பணியாற்றுவதற்கான வலிமையை பன்மடங்கு அதிகரிக்கிறது.

இந்த 'சர்தார் ரத்னா' விருது வடிவில் நீங்கள் எனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்காக உங்கள் அனைவருக்கும் நான் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்புக் கடனை நான் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

நீங்கள் எந்தக் கனவுகளுடனும் தீர்மானங்களுடனும் முன்னேறிச் செல்கிறீர்களோ, அவற்றை நிறைவேற்றுவதற்கான வலிமையை இறைவன் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வழங்கட்டும். சர்தார் படேலின் ஆசிகள் எப்போதும் உங்கள் மீது இருக்கட்டும், திரு. பங்கஜ் பாய் போன்ற தோழர்கள் உங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும். இங்கே அமர்ந்திருக்கும் எங்கள் மூவருக்கும் இடையே ஒரு சிறப்பான தொடர்பு இருக்கிறது. திரு. பங்கஜ் பாய், திரு.நர்ஹரி அமீன் மற்றும் நான்,  நாங்கள் அனைவரும் 'நவ்நிர்மான்'  இயக்கத்தின் பிள்ளைகள்.  இன்று திரு. பங்கஜ் பாய் ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

சர்தார் வாழ்க!

சர்தார் வாழ்க!

நன்றி. நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் ஆற்றப்பட்டது.

----

(Release ID : 2260058)

AD/VK/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2263339) வருகையாளர் எண்ணிக்கை : 18