உள்துறை அமைச்சகம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பஸ்தரின் வருமானம் 6 மடங்கு அதிகரித்து, இந்தியாவின் மிகவும் வளர்ச்சியடைந்த பழங்குடியினர் பிரிவாக மாறும்: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 8:16PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் செய்தியாளர்களிடையே உரையாற்றினார்.
2023 டிசம்பர் 13 அன்று தங்கள் அரசு அமைக்கப்பட்ட உடனேயே, பஸ்தரில் நக்சல்களை ஒழிக்கும் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியதாக அவர் கூறினார். 2026 மார்ச் 31-க்குள் நாடு நக்சல் இல்லாத நாடாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக திரு ஷா கூறினார். பாதுகாப்புப் படையினரின் வீரம், தைரியம் மற்றும் தியாகங்களால், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே நாட்டிலிருந்து நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னர் நக்சல் பாதிப்புக்குள்ளான அதே பகுதியில், 2026 மே 19 அன்று ஒரு விரிவான வளர்ச்சித் திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். வீர ஷஹீத் குண்டாதூர் சேவை முகாம்கள் திறந்து வைக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். பஸ்தரின் ஏழு மாவட்டங்களை நக்சலிசத்திலிருந்து விடுவிப்பதற்காக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அப்பகுதியில் கிட்டத்தட்ட 200 பாதுகாப்பு முகாம்களை அமைத்திருந்தது. தற்போது பஸ்தர் நக்சல் இல்லாத பகுதியாகிவிட்டதால், முதல் கட்டமாக இந்த 200 முகாம்களில் 70 முகாம்களை வீர ஷஹீத் குண்டாதூர் சேவை முகாம்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பஸ்தரில் உள்ள ஒவ்வொரு பழங்குடி சகோதர, சகோதரியின் வீட்டு வாசலுக்கே அரசின் திட்டங்களையும், சேவைகளையும் கொண்டு சேர்ப்பதே இந்த முகாம்களின் நோக்கமாகும்.
நக்சல் பாதிப்புக்குள்ளான பஸ்தரை, நக்சல் இல்லாத மற்றும் வளர்ச்சி பெற்ற பகுதியாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய கருவியாக வீர ஷஹீத் குண்டாதூர்சேவை முகாம் திகழும். வனப் பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதப்படுத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் முழு லாபமும் பழங்குடியின சமூகங்களுக்கு வழங்கப்படும் என்றும் திரு அமித் ஷா கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பஸ்தரின் வருமானம் 6 மடங்கு அதிகரித்து, அது இந்தியாவின் அனைத்துப் பழங்குடியினர் பிராந்தியங்களிலும் மிகவும் வளர்ச்சியடைந்த பழங்குடியினர் பிரிவாக மாறும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். நக்சல் ஒழிப்பின் முழுப் பெருமையும், நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கே சேரும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262997®=3&lang=1
(Release ID: 2262997)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263062)
வருகையாளர் எண்ணிக்கை : 8