பிரதமர் அலுவலகம்
ஐதராபாதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAY 2026 5:51PM by PIB Chennai
தெலங்கானா ஆளுநர் திரு. சிவ பிரதாப் சுக்லா அவர்களே, முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான ஜி. கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் அவர்களே, எனது நாடாளுமன்றத் தோழர் கொண்ட விஷ்வேஷ்வர் ரெட்டி அவர்களே, தெலங்கானா அரசின் அமைச்சர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே!
சைபராபாத்தின் வலிமை என்பது தேசிய அளவிலும் உலக அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. தெலங்கானாவும் நாடும் வேகமாக வளர்வதற்கு இது ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. எனவே, தெலங்கானாவை நாட்டின் ஒரு மிகப்பெரிய உற்பத்தி ஆற்றல் மையமாக மாற்றுவதற்காக, இன்று சைபராபாத்தில் இருந்து பல முக்கிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள், இங்கு ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; மேலும் தெலங்கானாவின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்பையும் வலுப்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காகத் தெலங்கானா மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று இந்தியா சீர்திருத்த விரைவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், இன்றைய இந்தியா நவீன உள்கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறது. ஜஹீராபாத் தொழில்பேட்டை உருவாக்கம் என்பது இந்த இலக்கின் ஒரு பகுதியாகும்.
தொழில்துறை வழித்தடங்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு மேற்கொண்டு வரும் தேசிய அளவிலான இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தத் தொழில்பேட்டை அமைகிறது. இது ஒரு வகையான தொழில்துறை அறிவுசார் நகரமாக மாறப்போகிறது.
இங்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சிறப்பான மின்சாரம், மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்ப வலைப்பின்னல் என, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். இந்த வசதிகளை உருவாக்குவதற்காக இந்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடு செய்யும். இதன் மூலம் தெலங்கானா மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு அமைய உள்ள வாகன உற்பத்தி, இயந்திரங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் தெலங்கானாவின் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் வலிமைப்படுத்தும்.
நண்பர்களே,
முற்காலத்தில், இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தபோது, நமது ஜவுளித் தொழில் அதில் பெரும் பங்கு வகித்தது. இப்போது அந்த பாரம்பரியத்தை நாம் மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தி வருகிறோம். வாரங்கல்லில் அமைய உள்ள பிரதமரின் மித்ரா பூங்கா, நாட்டின் ஜவுளிப் புரட்சியை வேகப்படுத்தும். இந்த பூங்காவில் அமைக்கப்படும் தொழிற்சாலை அலகுகள் மத்திய அரசின் திட்டங்களின் முழுப் பலன்களையும் பெறும். மேலும், மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலமாகவும் அவை ஆதரவைப் பெறும். இந்த ஜவுளிப் பூங்கா பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக நமது சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இதன் மூலம் உருவாகும்.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில், இந்திய அரசின் மிக முக்கிய முன்னுரிமையாக நவீன இணைப்பு வசதிகள் இருந்து வருகின்றன. சாலைகள், இரயில்வே, விமான நிலையங்கள் என அனைத்து வகையான போக்குவரத்து இணைப்பு முறைகளிலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளுக்காக மட்டும் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவும் இதனால் பெரும் பயனடைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், தெலங்கானாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் வலைப்பின்னல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தெலங்கானா மற்றும் கர்நாடகாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவது மிகுந்த வசதியைக் கொண்டு வரும். இதன் மூலம் பயண நேரம் குறைவதுடன், பயணச் செலவும் மிச்சமாகும்.
நண்பர்களே,
2014-ம் ஆண்டிற்கு முன்னதாக, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கை ஒரு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. திரு ரேவந்த் அவர்களே, நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது, ரயில்வே நிதிநிலை அறிக்கை ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது. நான் இன்று ஒருங்கிணைந்த ஆந்திராவைப் பற்றிப் பேசவில்லை, இன்று தெலங்கானாவிற்கு மட்டுமே ரயில்வே திட்டங்களுக்கு சுமார் ரூ. 5500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஐந்து வந்தே பாரத் மற்றும் ஆறு அம்ரித் பாரத் ரயில்களும் தெலங்கானாவில் இயக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
சிறிது நேரத்திற்கு முன்னதாக, காசிப்பேட்டை - விஜயவாடா இடையிலான பல வழித்தடத் திட்டத்தின் சில பகுதிகள் தொடங்கி வைக்கப்பட்டன. அத்துடன், காசிப்பேட்டை இரயில்வே புறவழிச் சாலையும் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் பயணத்தை எளிதாக்குவதுடன், போக்குவரத்தையும் வேகப்படுத்தும்.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டின் உலகில், ஆற்றல் இன்றி அனைத்தும் நின்றுவிடும். எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இன்று ஒவ்வொரு நபரும் உணர்கிறார்கள். எனவே, நமது மத்திய அரசு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் முன் எப்போதும் இல்லாத முதலீடுகளைச் செய்து வருகிறது. மல்காப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முனையத்தைத் தொடங்கி வைத்திருப்பது இந்த திசையில் எடுக்கப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையாகும். இந்த முனையம் தெலங்கானாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், விநியோகச் சங்கிலியையும் வலுப்படுத்தும்.
நண்பர்களே,
அண்மைக்காலமாக, சூரிய சக்தி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு இடையே இந்தியா முதலிடத்தை எட்டியுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதிலும் முன்னெப்போதும் இல்லாத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலில் நாம் 100 விழுக்காடு சமையல் எரிவாயு இணைப்பை வழங்குவதில் கவனம் செலுத்தினோம், இப்போது மலிவான குழாய் வழி எரிவாயு மற்றும் சி.என்.ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு அமைப்புகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இத்தகைய முயற்சிகளால் தான், இந்தியா இந்த மிகப்பெரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை வலுவாக எதிர்கொண்டு வருகிறது. ஆனால், பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் இந்த எரிசக்தி பொருட்களை, தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். இது அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவுவதோடு, போரினால் ஏற்படும் நெருக்கடியின் மோசமான விளைவுகளையும் குறைக்கும்.
நண்பர்களே,
இன்று தெலங்கானா இளைஞர்கள் புதிய கனவுகளைக் காண்கிறார்கள். இங்குள்ள விவசாயிகள் புதிய நம்பிக்கைகளுடன் முன்னேற விரும்புகிறார்கள். இங்குள்ள தொழில்துறையினர், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர் என அனைவரும் வளர்ந்த தெலங்கானாவை உருவாக்குவதில் தங்கள் பங்களிப்பை வழங்க விரும்புகிறார்கள். ஏனெனில் தெலங்கானா வளரும்போது, இந்தியாவும் வளர்கிறது. உங்கள் கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு இன்னும் கூடுதல் வேகத்தில் தொடர்ந்து பணியாற்றும் என்று தெலங்கானாவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான் உறுதி அளிக்கிறேன். திரு. ரேவந்த் அவர்கள் நாம் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்னார், எனவே நானும் பேசமாட்டேன். ஆகவே, அரசியல் நோக்கமின்றி ரேவந்த் அவர்களிடம் நான் சொல்வது என்னவென்றால், 10 ஆண்டுகால ஆட்சியில் இந்திய அரசு குஜராத்திற்கு எதையெல்லாம் கொடுத்ததோ, அதையெல்லாம் உங்களுக்கும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எனது அனுபவத்தில் இருந்து ஒன்றைச் சொல்கிறேன், நான் அப்படிச் செய்தால் இப்போது உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது பாதியாகக் குறைந்துவிடும். நீங்கள் அடைய விரும்பும் இலக்கை உங்களால் எட்ட முடியாது. எனவே, என்னுடன் இணைந்திருப்பதே சிறந்தது.
நண்பர்களே,
மக்களாட்சியில், மாநிலங்களில் வெவ்வேறு வகையான அரசாங்கங்கள் இருப்பது தவறான ஒன்றல்ல என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு, மாநிலங்களின் வளர்ச்சி சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. மாநிலங்களின் வளர்ச்சி இன்றி, நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை. எனவே, எங்களது அனைத்துத் திட்டங்களின் மையப்புள்ளியாக மாநிலங்களின் வளர்ச்சி, அதிவேக மேம்பாடு ஆகியவை உள்ளன; இதே உணர்வுடன் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேறுவோம். 2047-ம் ஆண்டில் 'வளர்ச்சியடைந்த இந்தியா' எனும் கனவு நம் கண்முன்னே நனவாவதைக் காண்போம். இதுவே உங்கள் அனைவருக்கும் எனது விருப்பமாகும். மிக்க நன்றி!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் ஆற்றப்பட்டது.
----
(Release ID: 2259547)
AD/VK/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2260246)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam