பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 7:21AM by PIB Chennai

முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தப் பதவியில் பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, மத்திய ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முப்படைகளின் தற்போதைய தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சவுகான், மே 30, 2026 அன்று ஓய்வு பெறுகிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, செப்டம்பர் 1, 2025 முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார். முன்னதாக, ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை, ராணுவப் படைத் துணைத் தலைவராகவும், மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை, மத்திய படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இந்த மூத்த ராணுவ அதிகாரி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்றுள்ளார். டிசம்பர் 14, 1985 அன்று 'கார்வால் ரைபிள்ஸ்' படைப்பிரிவின் 8-வது படைப் பிரிவில், அவர் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பிராக்னெல்லில் (இங்கிலாந்து) அமைந்துள்ள கூட்டுப் படைகளின் படைப் பிரிவின் பணியாளர் கல்லூரி மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கலைத்துறையில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில், பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில் எம்.ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி அனுபவம் கொண்ட, லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பல்வேறு வகையான போர்க்களச் சூழல்களிலும், மாறுபட்ட நிலப்பரப்புகளிலும் பணியாற்றியுள்ளார்; மேலும் பல்வேறு படைப் பிரிவுகள், பணியாளர் மற்றும் பயிற்சி சார்ந்த பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். அசாமில் நடைபெற்ற 'ஆபரேஷன் ரைனோ' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் '16 கார்வால் ரைபிள்ஸ்' படைப்பிரிவையும்; ஜம்மு காஷ்மீரில் '168-வது காலாட்படைப் பிரிவையும்', சவாலான செயல்பாட்டுச் சூழல் கொண்ட மத்தியப் பிரிவில் '17-வது மலைப்படைப் பிரிவையும்' அவர் வழிநடத்தியுள்ளார். இந்திய ராணுவத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள முதன்மையான தாக்குதல் படைப்பிரிவான '2-வது கார்ப்ஸ்' பிரிவை வழிநடத்திய பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 'பரம விசிஷ்ட சேவா பதக்கம்', 'அதி விசிஷ்ட சேவா பதக்கம்', 'சேனா பதக்கம்' மற்றும் 'விசிஷ்ட சேவா பதக்கம்' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259242&reg=3&lang=1

 

 (Release ID: 2259242)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259316) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Malayalam