பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய எரிசக்தி வாரம் 2026 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 JAN 2026 11:38AM by PIB Chennai

வாழ்த்துகள்.

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, கோவா முதலமைச்சர் அவர்களே, ஏனைய அமைச்சர்களே, தூதர்களே, தலைமைச் செயல் அதிகாரிகளே, சிறப்பு விருந்தினர்களே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

 

எரிசக்தி வாரத்தின் இந்தப் புதிய பதிப்பில், உலகின் சுமார் 125 நாடுகளின் பிரதிநிதிகள் கோவாவில் குழுமியுள்ளனர். எரிசக்தி பாதுகாப்பான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க நீங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

மிகக் குறுகிய காலத்தில், இந்திய எரிசக்தி வாரம் என்பது உரையாடல் மற்றும் செயல்பாட்டிற்கான ஒரு உலகளாவிய தளமாக உருவெடுத்துள்ளது. இன்று, எரிசக்தித் துறைக்கு இந்தியா ஒரு மிகப்பெரிய வாய்ப்புகள் நிறைந்த நிலமாக உள்ளது. இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாகும். அதாவது, நமது நாட்டில் எரிசக்தி தயாரிப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தவிர, உலகின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளையும் இந்தியா வழங்குகிறது. இன்று, பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் உலகின் முதல் 5 நாடுகளில் நாமும் ஒன்றாக உள்ளோம். உலகின் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நமது ஏற்றுமதிப் பரப்பைக் கொண்டுள்ளோம். இந்தியாவின் இந்தத் திறன் உங்களுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கப்போகிறது. எனவே, எரிசக்தி வாரத்தின் இந்தத் தளம் நமது கூட்டு ஒத்துழைப்புகளை ஆராய்வதற்கான ஒரு சிறந்த இடமாகும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு முன், ஒரு பெரிய முன்னேற்றம் குறித்து நான் விவாதிக்க விரும்புகிறேன். நேற்றுதான், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் இதனை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்'  என்று விவாதிக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. இது உலகின் இரண்டு முக்கியப் பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கையும் இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. வர்த்தகத்துடன் சேர்த்து, இந்த ஒப்பந்தம் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்த நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் பலப்படுத்துகிறது.

நண்பர்களே,

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின்  ஒப்பந்தங்களுக்கும் ஒரு கூடுதல் பலமாக அமையும். இது வர்த்தகம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி ஆகிய இரண்டிற்கும் வலிமையை வழங்கும். இதற்காக இந்தியாவின் இளைஞர்களுக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல் மற்றும் காலணிகள் என ஒவ்வொரு துறையுடனும் தொடர்புடைய சகாக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒப்பந்தம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்படும்.

நண்பர்களே,

இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் உற்பத்தியைப் பலப்படுத்துவது மட்டுமல்லாமல், சேவைத் துறையுடன் தொடர்புடைய பிரிவுகளையும் மேலும் விரிவுபடுத்தும். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உலகில் உள்ள ஒவ்வொரு வணிகருக்கும் மற்றும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியாவின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

நண்பர்களே,

இன்று இந்தியா ஒவ்வொரு துறையிலும் உலகளாவிய கூட்டு ஒத்துழைப்புகளில் விரிவாகப் பணியாற்றி வருகிறது. எரிசக்தித் துறையைப் பற்றி நான் விவாதித்தால், எரிசக்தி மதிப்புச் சங்கிலி தொடர்பான பல்வேறு பகுதிகளில் இங்கு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சித் துறையை எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தியா தனது ஆய்வுத் துறையை கணிசமாகத் திறந்துவிட்டுள்ளது. எங்களது ஆழ்கடல் ஆய்வு தொடர்பான 'சமுத்ராயன்' திட்டம் பற்றியும் நீங்கள் அறிவீர்கள். இந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் நமது எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீட்டை 100 பில்லியன் டாலராக உயர்த்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஆய்வின் நோக்கத்தை ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்துவதும் எங்களது இலக்காகும். இந்தச் சிந்தனையுடன், ஏற்கனவே 170-க்கும் மேற்பட்ட மண்டலங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபார் படுகையும் எங்களது அடுத்த ஹைட்ரோகார்பன் நம்பிக்கையாக மாறி வருகிறது.

நண்பர்களே,

ஆய்வுத் துறையில் நாங்கள் பல சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளோம். தடைசெய்யப்பட்ட பகுதிகள்  கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. முந்தைய இந்திய எரிசக்தி வாரப் பதிப்புகளில் நீங்கள் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், நீங்கள் கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, எங்களது சட்டங்கள் மற்றும் விதிகளில் அதற்கேற்ப மாற்றங்களைச் செய்துள்ளோம். நீங்கள் ஆய்வுத் துறையில் முதலீடு செய்தால், உங்கள் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பது நிச்சயம்.

நண்பர்களே,

இந்தியாவின் மற்றொரு சிறப்பம்சம், எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதை மிகவும் லாபகரமானதாக மாற்றுகிறது. எங்களிடம் மிகப் பெரிய சுத்திகரிப்புத் திறன்  உள்ளது. சுத்திகரிப்புத் திறனில் நாம் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளோம். விரைவில் நாம் உலகில் முதலிடத்தைப் பிடிப்போம். இன்று இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் சுமார் ஆண்டுக்கு  260 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆக உள்ளது. இதனை 300 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு மேல் கொண்டு செல்லத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய நன்மையாகும்.

நண்பர்களே,

இந்தியாவில் திரவ இயற்கை எரிவாயுக்கான (எல்என்ஜி)  தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது மொத்த எரிசக்தி தேவையில் 15 சதவீதத்தை எல்என்ஜி மூலம் பூர்த்தி செய்ய இலக்கு வைத்துள்ளோம். எனவே, எல்என்ஜியின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியிலும் நாம் பணியாற்ற வேண்டும். இன்று இந்தியா போக்குவரத்துத் துறையிலும் மிகப்பெரிய அளவில் பணியாற்றி வருகிறது. எல்என்ஜி போக்குவரத்திற்குத் தேவையான கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சமீபத்தில், இந்தியாவில் கப்பல் கட்டும் பணிகளுக்காக 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன், நாட்டின் துறைமுகங்களில் எல்என்ஜி முனையங்களை  அமைப்பதிலும் பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. மறு-வாயுவாக்கம்  தொடர்பான திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்வதற்கான பெரும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

நண்பர்களே,

இந்தியாவில் எல்என்ஜி  போக்குவரத்திற்காக இப்போது ஒரு மிகப்பெரிய குழாய் வழித்தட அமைப்பும்  தேவைப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இதில் நாங்கள் பெருமளவு முதலீடு செய்துள்ளோம். இருப்பினும், மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. இன்று, நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பு  இந்தியாவின் பல நகரங்களைச் சென்றடைந்துள்ளது; மற்ற நகரங்களையும் இதனுடன் மிக வேகமாக இணைத்து வருகிறோம். உங்கள் முதலீட்டிற்கு நகர எரிவாயு விநியோகம் என்பதும் ஒரு மிகச் சிறந்த ஈர்ப்புள்ள துறையாகும்.

நண்பர்களே,

இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, நமது பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இத்தகைய இந்தியாவில், பெட்ரோ ரசாயன தயாரிப்புகளுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரிக்கப்போகிறது. எனவே, நமக்கு ஒரு மிகப் பெரிய எரிசக்தி உள்கட்டமைப்பு தேவைப்படும், இதிலும் உங்கள் முதலீடு உங்களுக்குப் பெரும் வளர்ச்சியைத் தரும். இவை அனைத்தையும் தவிர, இந்தியாவில் கீழ்நிலை செயல்பாடுகளிலும்  நீங்கள் முதலீடு செய்வதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன.

நண்பர்களே,

இன்றைய இந்தியா 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்'  வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது; ஒவ்வொரு துறையிலும் மிக வேகமாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு ஹைட்ரோகார்பன்களை வலுப்படுத்துவதற்காக நாங்கள் சீர்திருத்தங்களைச் செய்து வருகிறோம்; மேலும் உலகளாவிய ஒத்துழைப்பிற்காக ஒரு வெளிப்படையான மற்றும் முதலீட்டாளர் நட்பு சூழலை உருவாக்கி வருகிறோம். இந்தியா இப்போது எரிசக்தி பாதுகாப்பிற்கு அப்பால் சென்று, எரிசக்தி சுதந்திரம்  எனும் இலக்கை நோக்கிப் பணியாற்றி வருகிறது. இந்தியாவின் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், மலிவான சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்துத் தீர்வுகளுடன் உலகிற்கு ஏற்றுமதி செய்வதற்குப் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும் ஒரு எரிசக்தித் துறை சூழல் அமைப்பை  இந்தியா உருவாக்கி வருகிறது.

நண்பர்களே,

நமது எரிசக்தித் துறை நமது லட்சியங்களின் மையமாக உள்ளது. இதில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. எனவே, எனது அழைப்பு இதுதான் - இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், இந்தியாவில் புத்தாக்கம் செய்யுங்கள் , இந்தியாவுடன் இணைந்து வளர்ச்சி காணுங்கள், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள். இந்த உத்வேகத்துடன், உங்கள் அனைவருக்கும் இந்திய எரிசக்தி வாரத்திற்காக எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க மிக்க நன்றி.

----

(Release ID :2218987)

AD/VK/KR

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2258075) வருகையாளர் எண்ணிக்கை : 17