பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 23 JAN 2026 12:43PM by PIB Chennai

கேரள ஆளுநர் திரு. ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களே, பல்வேறு இடங்களிலிருந்து இணைந்திருக்கும் எனது மத்திய அமைச்சரவை சக ஊழியர்களே, திருவனந்தபுரத்தின் பெருமையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயருமான எனது நீண்ட கால சக ஊழியர் திரு. வி.வி. ராஜேஷ் அவர்களே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! நமஸ்காரம்!

இன்று கேரளாவின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகள் புதிய வேகத்தைப் பெற்றுள்ளன. இன்றைய தினத்திலிருந்து கேரளாவில் இரயில் இணைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது; திருவனந்தபுரத்தை நாட்டின் மிகப்பெரிய புத்தொழில்  மையமாக மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் உள்ள ஏழைகளின் நலன் சார்ந்த ஒரு மிகப்பெரிய தொடக்கமும் கேரளாவிலிருந்து நிகழ்கிறது. இன்று 'பிரதமரின் ஸ்வநிதி'  கடன் அட்டை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் தெருக்களிலும், தள்ளுவண்டிகளிலும், நடைபாதைகளிலும் வியாபாரம் செய்யும் சக நண்பர்கள் பயனடைவார்கள். வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்த அனைத்துத் திட்டங்களுக்காகவும் கேரள மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எனது நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இன்று நாடே ஒன்றிணைந்து பாடுபட்டு வருகிறது. ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது நகரங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு நகர்ப்புற உள்கட்டமைப்புகளில் பெருமளவு முதலீடு செய்து வருகிறது.

நண்பர்களே,

மத்திய அரசு நகரங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்காகவும் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், நாட்டில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் நகர்ப்புற ஏழைகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. கேரளாவைச் சேர்ந்த சுமார் ஒன்றேகால் லட்சம் நகர்ப்புற ஏழைகளும் தங்களது நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர்.

நண்பர்களே,

பிரதமரின் சூரிய சக்தியுடன் கூடிய வீடுகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழைகள் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். பெண்களின் ஆரோக்கியப் பாதுகாப்பிற்காக, 'மகப்பேறு நலத்திட்டம் ' போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது. இது கேரள மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும், மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கும் மிகப்பெரிய நன்மையாக அமைந்துள்ளது.

எனது நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளில் கோடிக்கணக்கான நாட்டு மக்களை வங்கி முறையுடன் இணைக்கும் மிகப்பெரிய பணி நடந்துள்ளது. இப்போது ஏழைகள், எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவினர், பெண்கள், மீனவர்கள் என அனைவரும் எளிதாக வங்கிக் கடன்களைப் பெறத் தொடங்கியுள்ளனர். யாரிடம் அடமானம் வைக்க எந்த உத்தரவாதமும் இல்லையோ, அவர்களுக்கு அரசாங்கமே உத்தரவாததாரராக மாறுகிறது.

நண்பர்களே,

சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் பொருட்களை விற்பனை செய்பவர்களின் நிலை, அதாவது இந்தத் தெருவியாபாரிகளின் நிலை முன்பு மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் பொருட்களை வாங்குவதற்குச் சில நூறு ரூபாயைக் கூட அதிக வட்டிக்கு வாங்க வேண்டியிருந்தது. மத்திய அரசு அவர்களுக்காக முதல்முறையாக 'பிரதமரின் ஸ்வநிதி'  திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சக நண்பர்கள் வங்கிகளிடமிருந்து பெரும் உதவியைப் பெற்றுள்ளனர். லட்சக்கணக்கான தெருவியாபாரிகள் தங்கள் வாழ்க்கையில் முதல்முறையாக வங்கிக் கடனைப் பெற்றுள்ளனர்.

நண்பர்களே,

இப்போது இந்திய அரசு, ஒரு படி மேலே சென்று இந்தச் சக நண்பர்களுக்குக் கடன் அட்டைகளை வழங்கி வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு, இங்கும் 'பிரதமரின் ஸ்வநிதி' கடன் அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் கேரளாவைச் சேர்ந்த பத்தாயிரம் நண்பர்களும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோரும் அடங்குவர். முன்பு பணக்காரர்களிடம் மட்டுமே கடன் அட்டைகள் இருந்தன, இப்போது தெருவோர வியாபாரிகளிடமும் 'ஸ்வநிதி' கடன் அட்டை உள்ளது.

நண்பர்களே,

மத்திய அரசு இணைப்பு வசதி  அறிவியல் மற்றும் புத்தாக்கம் மற்றும் சுகாதாரத் துறையிலும் பெருமளவு முதலீடு செய்து வருகிறது. கேரளாவில் சிஎஸ்ஐஆர்  புத்தாக்க மையத்தை திறந்துவைத்தது, மருத்துவக் கல்லூரியில் ரேடியோ அறுவை சிகிச்சை மையத்தைத் தொடங்கியது ஆகியவை கேரளாவை அறிவியல், புத்தாக்கம் மற்றும் சுகாதாரத்தின் மையமாக மாற்றுவதற்கு உதவும்.

நண்பர்களே,

இன்று நாட்டின் பிற பகுதிகளுடனான கேரளாவின் ரயில் இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்ட 'அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில்கள் மூலம் கேரளாவில் பயண வசதி மேம்படும்; இதன் மூலம் சுற்றுலாத் துறையும் பெரும் பயன் பெறும். குருவாயூர் முதல் திருச்சூர் வரையிலான புதிய பயணிகள் ரயில், யாத்ரீகர்களின் பயணத்தை இன்னும் எளிதாக்கும். இந்த அனைத்துத் திட்டங்கள் மூலம் கேரளாவின் வளர்ச்சியும் வேகம் பெறும்.

பங்குதார்களே,

வளர்ச்சியடைந்த கேரளா மூலமே வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும். இதில் மத்திய அரசு கேரள மக்களுடன் முழு சக்தியுடன் துணை நிற்கிறது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குப் பிறகு, உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த ஆயிரக்கணக்கான கேரள மக்கள் எனது உரைக்காகக் காத்திருக்கிறார்கள்; அங்கேயும் நான் மிகவும் வெளிப்படையாகப் பேச வாய்ப்பு கிடைக்கும். என்னால் விரிவாகப் பேச முடியும்; ஊடகங்களுக்கும் இதில் அதிக ஆர்வம் இருக்காது, ஆனால் அந்த நிகழ்ச்சியில் அதிக ஆர்வம் இருக்கும். எனவே, இன்றைய இந்த நிகழ்ச்சியை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்; இன்னும் 5 நிமிடங்களில் அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்ற பிறகு, கேரளாவின் எதிர்காலத்துடன் தொடர்புடைய பல விஷயங்களை நான் அங்கு நிச்சயம் கூறுவேன்.

மிக்க மிக்க நன்றி.

----

(Release ID :2217606)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2258062) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam