பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவஹாத்தியில் நடைபெற்ற பாரம்பரிய போடோ கலாச்சார நிகழ்ச்சியான பகுரும்பா த்வோவின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JAN 2026 8:47PM by PIB Chennai

 

வணக்கம்!

மாக் பிஹு, மாக் தோமாஷி விழாக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

அசாம் ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா அவர்களே, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனோவால் அவர்களே, பபித்ரா மார்கெரிட்டா அவர்களே, அசாம் சட்டப்பேரவைத் தலைவர் திரு பிஸ்வாஜித் டைமரி அவர்களே, போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினர் திரு ஹக்ரம மொஹிலரி அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, அசாமின் எனது சகோதர சகோதரிகளே, வணக்கம்!

அசாமின் கலாச்சாரத்தையும் இங்குள்ள போடோ மரபுகளையும் உன்னிப்பாகக் கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். பிரதமராக, நான் அதிக முறை அசாமிற்கு வந்தது போல இதற்கு முன்பு எந்தப் பிரதமரும் வந்ததில்லை. அசாமின் கலை, கலாச்சாரம் ஒரு பெரிய முக்கியத்துவத்தைப் பெற வேண்டும் என்பது எப்போதும் எனது விருப்பம். பிரமாண்டமான நிகழ்வுகள் மூலம் அதன் அடையாளம் நிலைநாட்டப்பட வேண்டும். இதற்கு முன்பே இதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரிய அளவில் பிஹு தொடர்பான நிகழ்வுகளாக இருந்தாலும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற பிரமாண்டமான போடோலாந்து விழாவாக இருந்தாலும் சரி, அல்லது பிற கலாச்சார நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, அசாமின் கலை, கலாச்சாரத்தில் உள்ள அற்புதமான மகிழ்ச்சியை அனுபவிக்கும் எந்த வாய்ப்பையும் நான் தவறவிடுவதில்லை. இன்று, மீண்டும், இந்த பகுரும்பா நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு போடோ அடையாளத்தின் ஒரு கொண்டாட்டமாகும். இது போடோ சமூகத்திற்கும் அசாமின் பாரம்பரியத்திற்கும் ஒரு மரியாதை. இந்த நிகழ்வோடு தொடர்புடைய அனைத்து மக்களுக்கும், குறிப்பாக அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

'பகுரும்பா த்வோ' என்பது வெறும் விழா அல்ல. இது நமது சிறந்த போடோ பாரம்பரியத்தை மதிக்கும் நிகழ்வு. போடோ சமூகத்தின் சிறந்த ஆளுமைகளை நினைவுகூரும் ஒரு தளம். போடோபா உபேந்திரநாத் பிரம்மா, குருதேவ் காளிச்சரண் பிரம்மா, ரூப்நாத் பிரம்மா, சதீஷ் சந்திர பாசுமதரி, மொராதம் பிரம்மா, கனகேஷ்வர் நர்சாரி, போன்றோர் சமூக சீர்திருத்தம், கலாச்சார மறுமலர்ச்சி, அரசியல் உணர்வு ஆகியவற்றுக்கு வலிமை அளித்த சிறந்த ஆளுமைகளாக இருந்துள்ளனர். இந்த நிகழ்வில், போடோ சமூகத்தின் அனைத்து சிறந்த ஆளுமைகளுக்கும் நான் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் வரலாறு அசாமின் வரலாறு இல்லாமல் முழுமை அடையாது. அதனால்தான், எங்கள் அரசால், பகுரும்பா த்வோ போன்ற பெரிய விழாக்கள் நடத்தப்படுகின்றன, பிஹுவுக்கு தேசிய அடையாளம் வழங்கப்படுகிறது. எங்கள் முயற்சிகள் மூலம் சரைடியோ மொய்தம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெறுகிறது. அசாமிய மொழிக்கு ஒரு பாரம்பரிய செம்மொழியின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

போடோ மொழிக்கு அசாமின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்று என்ற அந்தஸ்தையும் நாங்கள் வழங்கியுள்ளோம். போடோ மொழியில் கல்வியை வலுப்படுத்த ஒரு தனி இயக்குநரகத்தையும் நாங்கள் நிறுவியுள்ளோம். எங்களின் இந்த உறுதிப்பாட்டின் காரணமாக, பத்தோ மதம் முழு மரியாதையுடன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. பத்தோ பூஜை அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம், மாபெரும் போர்வீரர் லச்சித் போர்புகனின் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டது இந்த அரசால் மட்டுமே. அதே நேரத்தில், போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் சிலையும் திறக்கப்பட்டது. இதேபோல், ஸ்ரீமந்த சங்கர்தேவின், பக்தி, சமூக நல்லிணக்க பாரம்பரியம், ஜோதி பிரசாத் அகர்வாலாவின் கலை உணர்வு என அசாமின் ஒவ்வொரு பாரம்பரியத்தையும் இந்த அரசு மதிக்கிறது. தற்செயலாக, இன்று ஜோதி பிரசாத் அகர்வாலாவின் நினைவு நாளாகும். அவருக்கு எனது அஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

இன்று நான் இங்கு வந்திருக்கும்போது, ​​என் மனதில் நிறைய விஷயங்கள் உள்ளன!  அசாம் மிகவும் முன்னேறி வருவதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு நாளும் ரத்தம் சிந்தப்பட்ட ஒரு காலம், மாறி இப்போது இங்கு கலாச்சாரத்தின் அற்புதமான வண்ணங்கள் அலங்கரிக்கப்படுகின்றன! தோட்டாக்களின் எதிரொலி இருந்த ஒரு காலம் மாறி இப்போது இனிமையான ஒலி கேட்கிறது. முன்பு ஊரடங்கு உத்தரவு இருந்த இடத்தில், இப்போது இசை எதிரொலிக்கிறது. முன்பு அமைதியின்மை இருந்த இடத்தில், இப்போது பகுரும்பாவின் வண்ணமயமான நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன. இவ்வளவு பெரிய நிகழ்வு அசாமின் சாதனை மட்டுமல்ல. இந்த சாதனை முழு இந்தியாவிற்கும் சொந்தமானது. அசாமில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் நாட்டு மக்கள்  அனைவரும் பெருமைப்படுகிறார்கள்.

நண்பர்களே,

எனது அசாமிய மக்கள், எனது போடோ சகோதர சகோதரிகள், என் மீது நம்பிக்கை வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இரட்டை இன்ஜின் அரசுக்கு நீங்கள் வழங்கிய வளர்ச்சிக்கான பொறுப்பை, உங்கள் ஆசிர்வாதங்களுடன் நாங்கள் நிறைவேற்றுகிறோம். 2020 போடோ அமைதி ஒப்பந்தம் பல ஆண்டுகளாக நடந்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, நம்பிக்கை திரும்பியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறைப் பாதையை விட்டு வெளியேறி, பிரதான வளர்ச்சியின்  நீரோட்டத்திற்கு மாறினர். ஒப்பந்தத்திற்குப் பிறகு, போடோ பிராந்தியத்தில் கல்வி அதிகரித்து, புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அமைதி, சட்டம் ஒழுங்குடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. அதில் மக்களின் முயற்சிகள் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தன.

நண்பர்களே,

அசாமின் அமைதிக்கும், அசாமின் வளர்ச்சிக்கும், அசாமின் பெருமைக்கும் மையமாக யாராவது இருந்தால், அது அசாமின் இளைஞர்கள்தான். அமைதியை நிலைநாட்ட அசாம் இளைஞர்கள் தேர்ந்தெடுத்த பாதையை,  நாம் அனைவரும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதிலிருந்து, போடோலாந்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. மறுவாழ்வு செயல்முறையை அரசு வேகமாக முன்னெடுத்துச் சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது!

நண்பர்களே,

எங்களது அரசின் முயற்சிகளின் பலன் இப்போது நம் அனைவரின் கண் முன்னும் தெரிகிறது. திறமையான போடோ இளைஞர்கள் இப்போது அசாமின் கலாச்சார தூதர்களாக மாறி வருகின்றனர். விளையாட்டுத் துறையிலும், போடோ சமூகத்தின் மகன்களும் மகள்களும் பெருமை சேர்க்கிறார்கள். இப்போது, புதிய நம்பிக்கையுடன், அவர்கள் புதிய கனவுகளை வெளிப்படையாகக் காண்கிறார்கள். தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதுடன், அசாமின் வளர்ச்சிக்கும் வேகத்தை அளிக்கிறார்கள்.

நண்பர்களே,

அசாமின் கலை, கலாச்சாரம், அடையாளத்தை நாம் மதிக்கும்போது, ​​சிலர் பொறாமைப் படுகிறார்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அசாமின் மரியாதையை விரும்பவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். பதில் ஒன்றுதான் - காங்கிரஸ் கட்சி! பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா வழங்குவதை எதிர்த்த கட்சி எது? காங்கிரஸ் கட்சி! அசாமில் குறைக்கடத்தி ஆலை அமைக்கப்படுவதை எதிர்த்த கட்சி எது? காங்கிரஸ்.

சகோதர சகோதரிகளே,

பல ஆண்டுகளாக அசாம், போடோலாந்து பகுதிகள் பிரதான நீரோட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தன. இதற்கு காங்கிரஸ் மட்டுமே பொறுப்பு. காங்கிரஸ் தனது அரசியல் நலனுக்காக அசாமில் ஸ்திரமின்மையை உருவாக்கியது. காங்கிரஸ் அசாமை வன்முறைத் தீயில் தள்ளியது. சுதந்திரத்திற்குப் பிறகு, அசாமுக்கும் சவால்கள் இருந்தன! ஆனால் காங்கிரஸ் என்ன செய்தது? அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் அதன் அரசியல் லாபத்தைப் பெற்றது. ஒற்றுமைக்கு நம்பிக்கை தேவைப்பட்டது. ஆனால் காங்கிரஸ் பிரிவினையை அதிகரித்தது. பேச்சுவாரத்தை தேவைப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அதைப் புறக்கணித்து பேச்சுவார்த்தைக்கான பாதைகளை மூடியது! குறிப்பாக, போடோலாந்து பகுதியின் குரல், போடோலாந்து மக்களின் குரல் ஒருபோதும் சரியாகக் கவனிக்கப்படவில்லை. அதன் மக்களின் காயங்களைக் குணப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ​​அசாம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ​​காங்கிரஸ்  அசாமின் கதவுகளைத் திறந்து ஊடுருவல்காரர்களை வரவேற்பதில் ஆர்வமாக இருந்தது.

நண்பர்களே,

காங்கிரஸ் கட்சி அசாம் மக்களைத் தங்கள் சொந்தக்காரர்களாகக் கருதுவதில்லை. காங்கிரஸ் கட்சியினர் வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை அதிகம் விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இங்கு வந்து காங்கிரசின் தீவிர வாக்கு வங்கியாக மாறுகிறார்கள். அதனால்தான் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து வந்து, லட்சக்கணக்கான ஏக்கர் அசாமின் நிலங்களை ஆக்கிரமித்து வந்தனர். காங்கிரஸ் அரசு அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தது. இப்போது திரு ஹிமந்தா அவர்களின் அரசு, அசாம் மக்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

காங்கிரஸ் எப்போதும் அசாமையும் முழு வடகிழக்குப் பகுதியையும் புறக்கணிப்புக் கண்ணோட்டத்துடன்தான் பார்த்திருக்கிறது. வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சி அவசியம் என்று கருதாத காங்கிரஸ்காரர்கள், அசாமின் வளர்ச்சிக்கு எப்படி கவனம் செலுத்தியிருப்பார்கள்? போடோ பகுதியின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு எங்கே நேரம் கிடைத்திருக்கும்? காங்கிரஸ் அரசுகள் வேண்டுமென்றே இந்தப் பகுதியைப் பிரச்சினைகளில் தள்ளின.

சகோதர சகோதரிகளே,

காங்கிரஸால் ஏற்பட்ட விளைவுகளைச் சரி செய்யும் பணியை எங்கள் இரட்டை இன்ஜின் அரசு செய்து வருகிறது. இப்போது இங்கு வளர்ச்சியின் வேகம் உங்கள் முன் உள்ளது.  போடோ-கச்சாரி நல தன்னாட்சி கவுன்சிலை உருவாக்கினோம். போடோலாந்து பிராந்தியத்தில் சிறந்த வளர்ச்சிக்காக 1500 கோடி ரூபாய் சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. கோக்ராஜரில் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும் தொடங்கப்பட்டது. தமுல்பூரில் மருத்துவக் கல்லூரியின் கட்டுமானமும் வேகம் பெற்றது. நர்சிங் கல்லூரிகள், துணை மருத்துவ நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. கோபர்தானா, பர்பத்ஜோரா, ஹொரிசிங்கா போன்ற பகுதிகளில் பாலிடெக்னிக் பயிற்சி நிறுவனங்களும் கட்டப்பட்டன.

நண்பர்களே,

போடோலாந்திற்காக ஒரு தனி நலத்துறையும் போடோலாந்து நிர்வாகப் பணியாளர் கல்லூரியும் நிறுவப்பட்டன. இது போடோ சமூகத்தின் நலனுக்காக சிறந்த கொள்கைகளை உருவாக்க உதவுகிறது.

நண்பர்களே,

பிஜேபி அரசு இதயங்களின் தூரத்தை நீக்கியுள்ளது. அசாமுக்கும் தில்லிக்கும் இடையிலான தூரத்தைக் குறைத்துள்ளது. சிறந்த உள்கட்டமைப்பு மூலம், அசாமில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கான தூரத்தையும் குறைத்து வருகிறது. முன்பு சென்றடைவது கடினமாக இருந்த பகுதிகளில், இப்போது நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற சாலைகள் உருவாக்கப்படுகின்றன. கோக்ரஜாரை பூடான் எல்லையுடன் இணைக்கும் பிஷ்முரி-சரல்பாரா சாலைத் திட்டத்திற்கு, கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோக்ரஜாரில் இருந்து பூட்டானில் உள்ள கெலேஃபு வரையிலான ரயில் திட்டமும் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாகும். இதை ஒரு சிறப்பு ரயில் திட்டமாக நாங்கள் அறிவித்துள்ளோம். கிழக்கு நோக்கிய செயல்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இதை மாற்றியுள்ளோம். இது நிறைவடைந்த பிறகு, வர்த்தகம், சுற்றுலா இரண்டும் முன்னேறும்.

நண்பர்களே,

ஒரு சமூகம் அதன் வேர்களுடன் இணைந்திருக்கும்போது, ​ நம்பிக்கையும் வலுவாக இருக்கும்போது, ​​சம வாய்ப்புகள் ஒவ்வொரு பிரிவையும் சென்றடையும்போது, ​​நேர்மறையான மாற்றங்கள் தெரியும். அசாம், போடோலாந்து பகுதிகளின் பயணம் அந்த திசையில் நகர்கிறது. அசாமின் தன்னம்பிக்கை, அசாமின் ஆற்றல், அசாமின் முன்னேற்றம் ஆகியவற்றிலிருந்து, இந்தியாவின் வளர்ச்சிக் கதை புதிய வலிமையைப் பெறுகிறது. இப்போது வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் அசாம் தனது அடையாளத்தை உருவாக்கி வருகிறது. அசாமின் பொருளாதாரம் வேகமெடுத்து வருகிறது. இந்த வளர்ச்சியில், இந்த மாற்றத்தில், போடோலாந்தும் இங்குள்ள மக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இன்றைய நிகழ்வுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

***

AD/PLM/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2257806) வருகையாளர் எண்ணிக்கை : 21