பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2026-ன் நிறைவு அமர்வின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JAN 2026 10:03PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் சவாலின் வெற்றியாளர்களே, பிற பிரமுகர்களே, நாடு முழுவதிலுமிருந்து இங்கு வந்துள்ள எனது இளம் நண்பர்களே, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் இங்கு ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். நான் முதன்முதலில் முதலமைச்சராக பதவியேற்றபோது, உங்களில் பலர் பிறந்திருக்கவே மாட்டீர்கள். 2014-ல் நான் பிரதமராக பதவியேற்றபோது, உங்களில் பெரும்பாலோர் குழந்தைகளாக இருந்திருப்பீர்கள். ஆனால் முதலமைச்சராக இருந்த போதும் சரி, இப்போது பிரதமராக இருக்கும்போதும் சரி, இளைய தலைமுறையின் மீது எனக்கு எப்போதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. உங்கள் திறமையிலிருந்து நான் எப்போதும் சக்தியைப் பெற்றுள்ளேன். இன்று, வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான வளத்தை நீங்கள் வைத்திருப்பதை நான் காண்கிறேன்.
நண்பர்களே,
2047-ம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, அந்த மைல்கல்லை நோக்கி செல்லும் பயணம் தேசத்திற்கு மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில், வரும் ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டமாகும். இது உங்களுக்கு ஒரு சிறந்த பொன்னான வாய்ப்பு. உங்கள் திறன், இந்தியாவின் திறனாக மாறும். உங்கள் வெற்றி இந்தியாவின் வெற்றியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும். வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்றதற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள். இன்றும் கூட, அவரது சிந்தனைகள் ஒவ்வொரு இளைஞருக்கும் உத்வேகம் அளித்து வருகின்றன. நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நமது நோக்கம் என்ன? "தேசம் முதலில்" என்ற உணர்வோடு நாம் எவ்வாறு வாழ வேண்டும்? நமது ஒவ்வொரு செயலிலும், தேசத்தின் நலன் மையமாக இருக்க வேண்டும். இது சம்பந்தமாக, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், உத்வேகமாகவும் செயல்படுகிறது. அவரது நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
நண்பர்களே,
இவ்வளவு குறுகிய காலத்தில், வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் இவ்வளவு பெரிய தளமாக, நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைப்பதில் இளைஞர்கள் நேரடியாக பங்கேற்கும் ஒரு தளமாக மாறியிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் பதிவுசெய்துள்ளனர். மூன்று மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சவாலில் தீவிரமாகப் பங்கேற்று, இந்தியாவின் எதிர்காலத்திற்கான தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்வளவு பெரிய அளவில் இளைஞர்களின் ஈடுபாடு முன் எப்போதும் இல்லாதது. தெளிவான குறிக்கோளுடன் பல லட்சக் கணக்கான மனங்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கியதற்காக எனது அனைத்து இளம் நண்பர்களையும், யுவ பாரத் அமைப்புடன் தொடர்புடைய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
நான் முன்பு 2014-ம் ஆண்டைப் பற்றிக் குறிப்பிட்டபோது, இங்குள்ள உங்களில் பெரும்பாலோருக்கு எட்டு அல்லது பத்து வயதுதான் இருந்திருக்கும். அப்போது செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்திருக்காது. தாமதமான முடிவுகளால் செயல்பாட்டு முடக்கத்தை நீங்கள் கண்டதில்லை.
நண்பர்களே,
அந்தக் காலத்தில், ஒரு தேர்வுக்கோ அல்லது வேலைக்கோ விண்ணப்பிப்பது போன்ற எளிமையானது அல்ல. கட்டணம் செலுத்துவதற்கு வங்கிகள், தபால் நிலையங்களுக்குச் சென்று டிமாண்ட் டிராஃப்ட்களைப் பெற வேண்டும். ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு ஒரு சிறிய கடனுக்குக் கூட பல உத்தரவாதங்கள் தேவைப்பட்டன. இன்று, இவையனைத்தும் எளிதாகத் தோன்றுகின்றன.
நண்பர்களே,
நீங்கள் இங்கே புத்தொழில்களைப் பற்றிப் பேசினீர்கள். புத்தொழில் சூழல் அமைப்பின் மாற்றத்தை நான் விளக்குகிறேன். உலக அளவில் புத்தொழில் கலாச்சாரம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தாலும், சமீப காலம் வரை இந்தியாவில் அது பற்றிய விவாதம் மிகக் குறைவாகவே இருந்தது. 2014 வரை, நாட்டில் 500க்கும் குறைவான பதிவுசெய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. அதிகப்படியான அரசுக் கட்டுப்பாடு ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருந்தது.
நண்பர்களே,
என் நாட்டின் இளைஞர்கள் மீதும், உங்கள் திறன்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நாங்கள் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தோம். இளைஞர்களை மையமாக வைத்து, ஒன்றன்பின் ஒன்றாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினோம். இந்த முயற்சிகளின் தாக்கமே ஒரு குறிப்பிடத்தக்க வெற்றிக் கதையாக மாறியுள்ளது.
நண்பர்களே,
உதாரணமாக விண்வெளித் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, விண்வெளித் துறையை முன்னேற்றுவதற்கான பொறுப்பு இஸ்ரோவிடம் மட்டுமே இருந்தது. விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்தோம். தேவையான கட்டமைப்புகளை உருவாக்கினோம். துணை நிறுவனங்களை நிறுவினோம். இதன் விளைவாக, இன்று 300-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளித் துறையில் செயல்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
இப்போது நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். ட்ரோன்களை பறக்கவிடுவதற்கு எல்லா வகையான கட்டுப்பாடுகளும் இருந்திருந்தால் - என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? முந்தைய நிலைமை இதுதான். நம் நாட்டில், ட்ரோன்கள் பறப்பது, தயாரிப்பது இரண்டும் சட்டங்களின் வலையில் சிக்கிக்கொண்டன. நாங்கள் புதிய விதிகளை அறிமுகப்படுத்தி அவற்றை எளிமைப்படுத்தினோம். இதன் விளைவாக, இன்று பல இளைஞர்களுக்கு ட்ரோன் தொடர்பான துறையில் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. போர்க்களத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் நாட்டின் எதிரிகளை தோற்கடித்து வருகின்றன. விவசாயத் துறையில், நமது நமோ ட்ரோன் சகோதரிகள் விவசாயத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
நண்பர்களே,
முன்னதாக, பாதுகாப்புத் துறை முழுவதுமாக அரசு நிறுவனங்களையே நம்பியிருந்தது. நமது அரசு இதையும் மாற்றி, இந்தியாவின் பாதுகாப்புச் சூழல் அமைப்பின் கதவுகளை புத்தொழில் நிறுவனங்களுக்கு திறந்துவிட்டது. இது நமது இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தந்துள்ளது. இன்று, 1,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
நண்பர்களே,
டிஜிட்டல் இந்தியா ஒரு புதிய படைப்பாளர் சமூகத்தையும் உருவாக்கியுள்ளது. இன்று, இந்தியா ஆரஞ்சு பொருளாதாரத்தில், அதாவது கலாச்சாரம், உள்ளடக்கம், படைப்பாற்றல் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியைக் காண்கிறது. ராமாயணம், மகாபாரதம் இன்னும் பல கதைகள், புராணங்களின் ஒரு பெரிய புதையல் நம்மிடம் உள்ளது. இவற்றை கேமிங் உலகிற்கு எடுத்துச் செல்ல முடியுமா? உலக அளவில், கேமிங் ஒரு பெரிய சந்தையாகும். நமது புராணக் கதைகளின் அடிப்படையில் புதுமையான விளையாட்டுகளை உருவாக்க முடியும். இந்த வழியில், தொழில்நுட்பத்தை ஊடகமாகப் பயன்படுத்தி, நமது கலாச்சாரத்தை நவீன வடிவத்தில் பரப்ப முடியும். கேமிங் மூலம் இந்தியாவின் கதைகளை அழகாக முன்வைக்கும் பல இந்திய புத்தொழில் நிறுவனங்களை நான் காண்கிறேன். இதனால் குழந்தைகள் விளையாடும்போது இந்தியாவைப் புரிந்துகொள்வது எளிதாகிறது.
நண்பர்களே,
உலக ஆடியோ-விஷுவல் - பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸ் (WAVES) இளம் படைப்பாளர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த தளமாக மாறியுள்ளது. நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியா எல்லையற்ற சாத்தியக்கூறுகளுக்கான கதவுகளைத் திறந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிகழ்வோடு தொடர்புடைய அனைத்து இளைஞர்களுக்கும் எனது செய்தி இதுதான்: உங்கள் கருத்துக்களுடன் முன்னேறுங்கள். சிக்கல்களைச் சந்திக்க தயங்காதீர்கள். அரசு உங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறது.
நண்பர்களே,
கடந்த பத்து ஆண்டுகளில், நாங்கள் மேற்கொண்ட தொடர் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் இப்போது பலன் தருகின்றன. இந்த சீர்திருத்தங்களின் மையத்தில் நீங்கள் உள்ளீர்கள். ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு - சேவை வரியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள், இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் செயல்முறைகளை எளிதாக்கியுள்ளன. பன்னிரண்டு லட்சம் ரூபாய் வரை இப்போது வருமான வரி இல்லை. இது பணிகளுக்குச் செல்வோருக்கும், புதிய தொழில்களைத் தொடங்குபவர்களுக்கும் சேமிப்புக்கான திறனை கணிசமாக அதிகரிக்கிறது.
நண்பர்களே,
மின்சாரம் வெறும் ஒளியின் மூலமாக மட்டும் இல்லை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள் முதல் குறைக்கடத்திகள் வரை, ஒவ்வொரு நவீன சூழல் அமைப்புக்கும் ஏராளமான மின்சக்தி தேவைப்படுகிறது. அதனால்தான் இந்தியா தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்கிறது. சிவில் அணுசக்தி தொடர்பான சீர்திருத்தங்களைக் கொண்ட சாந்தி சட்டம் இந்த நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அணுசக்தித் துறையில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும் பிற துறைகளில் வலுவான விளைவை உருவாக்கும்.
நண்பர்களே,
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன. எனவே, திறன் மேம்பாட்டுத் துறைகளில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அவசியம். அவற்றை நாங்கள் தீவிரமாகப் பின்பற்றி வருகிறோம். புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, உயர்கல்வி தொடர்பான விதிமுறைகளும் சீர்திருத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இப்போது இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறக்கின்றன. இவை இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளுடன் பிரதமரின் சேது திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி ஆயிரக்கணக்கான ஐடிஐ-களை மேம்படுத்தும். இதனால் இளைஞர்கள் தொழில்துறையின் தற்போதைய, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி பெற முடியும். கடந்த சில ஆண்டுகளில், இந்தியா பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவை இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும்.
நண்பர்களே,
தன்னம்பிக்கை இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது. நமது திறன்கள், நமது பாரம்பரியம் மீதான பெருமை இல்லாதது நம்மை பலவீனப்படுத்துகிறது. நமக்கு அர்ப்பணிப்பும் பெருமை உணர்வும் தேவை. நாம் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். பிரிட்டிஷ் நிர்வாகி மெக்காலே பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவரது கல்வி முறை, திறன்கள் மீது தாழ்வு மனப்பான்மையை வளர்த்தது. வெளிநாட்டவரோ, அல்லது இறக்குமதி செய்யப்பட்ட பொருளோ இருப்பது மேன்மையின் உத்தரவாதமாகக் கருதப்பட்டது. இன்று அந்த மனநிலை சரியானதா? இந்த அடிமைத்தன மனநிலைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில், மெக்காலேயின் கல்வி முறை கொண்டுவரப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவடையும். இந்த இரண்டு நூற்றாண்டுகளின் அநீதியைக் கழுவுவது இந்தத் தலைமுறையின் பொறுப்பு. நமக்கு இன்னும் பத்து ஆண்டுகள் உள்ளன. இந்த இளம் தலைமுறை இந்தப் பணியை நிறைவேற்றும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு இளம் நபரும் காலனித்துவ மனநிலையிலிருந்து நாட்டை விடுவிக்க உறுதிபூண்டிருக்க வேண்டும்.
நண்பர்களே,
“ஆ நோ பத்ரா: க்ரதவோ யந்து விஷ்வதா:” என்று நமது வேதங்கள் கூறுகின்றன. அதாவது "எல்லா திசைகளிலிருந்தும் உன்னதமான, மங்களகரமான, நன்மை பயக்கும் எண்ணங்கள் நமக்கு வரட்டும்" என்பதே இதன் பொருள். உலகின் சிறந்த நடைமுறைகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் உங்கள் சொந்த பாரம்பரியத்தையும் கருத்துக்களையும் குறைத்து மதிப்பிடும் போக்கை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுப்பது இதுதான். அவர் உலகம் முழுவதும் பயணம் செய்தார். அதன் பலங்களைப் பாராட்டினார். ஆனால் இந்தியாவின் நாகரிகம் பற்றி பரவிய தவறான கருத்துக்களைத் தொடர்ந்து மறுத்து வாதிட்டார். அவர் சமூக தீமைகளை எதிர்கொண்டு சிறந்த இந்தியாவை உருவாக்க முயன்றார். அதே மனப்பான்மையுடன், நமது இளைஞர் சக்தி இப்போது முன்னேற வேண்டும். அதே நேரத்தில், உங்கள் உடற்தகுதியைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் மீதும், உங்கள் திறமைகள் மீதும், உங்கள் ஆற்றலின் மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்த வார்த்தைகளுடன், தேசிய இளைஞர் தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக ஒரு ஆலோசனையை நான் உங்களுக்கு வழங்க விரும்புகிறேன்: மாநிலங்களுக்குள் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்க இந்த உரையாடல் நிகழ்ச்சி மாநில அளவிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதன் பிறகு, மாவட்ட அளவிலான உரையாடல்களை நோக்கி நாம் செல்ல வேண்டும். இந்த வழியில், நாம் ஒரு சிந்தனைக் குழுவை சிந்தனை கட்டமைப்பாக உருவாக்கலாம். எனது வாழ்த்துகள் எப்போதும் உங்களுடன் இருக்கும்.
மிக்க நன்றி.
***
AD/PLM/KPG/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2257784)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam