பிரதமர் அலுவலகம்
கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2025 4:13PM by PIB Chennai
நான் 'சர்தார் படேல்' என்று கூறுவேன், நீங்கள் அனைவரும் 'அமர் ரஹே, அமர் ரஹே' (வாழ்க பல்லாண்டு) என்று கூற வேண்டும்.
சர்தார் படேல் - அமர் ரஹே, அமர் ரஹே.
சர்தார் படேல் - அமர் ரஹே, அமர் ரஹே.
சர்தார் படேல் - அமர் ரஹே, அமர் ரஹே.
சர்தார் படேல் 150-வது பிறந்தநாளான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், ஏக்தா நகரின் இந்த தெய்வீகமான காலைப் பொழுது, இந்த அழகான காட்சி மற்றும் சர்தார் சாஹேபின் பாதங்களில் நாம் கூடியிருப்பது என இன்று நாம் அனைவரும் ஒரு உன்னதமான தருணத்தைச் சாட்சியாகக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் நடைபெற்று வரும் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' கோடிக்கணக்கான இந்தியர்களின் உற்சாகம் ஆகியவற்றின் மூலம் புதிய இந்தியாவின் உறுதியை நாம் நேரடியாக உணர்கிறோம். நேற்று மாலை நடைபெற்ற அற்புதமான நிகழ்ச்சி உட்பட இங்கு சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில், கடந்த கால பாரம்பரியம், நிகழ்காலத்தின் உழைப்பு மற்றும் வீரம், எதிர்கால சாதனைகளின் ஒரு பார்வை ஆகிய அனைத்தும் இடம் பெற்றிருந்தன.
சர்தார் சாஹேபின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ஒரு நினைவு நாணயம் மற்றும் சிறப்புத் தபால் தலை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன. சர்தார் சாஹேபின் பிறந்தநாள் மற்றும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு 140 கோடி நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
வரலாற்றை எழுதுவதில் நேரத்தை வீணாக்கக் கூடாது, வரலாற்றைப் படைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சர்தார் படேல் நம்பினார். இந்த உணர்வு அவரது வாழ்க்கை வரலாற்றில் பிரதிபலிக்கிறது. சர்தார் சாஹேப் வகுத்த கொள்கைகளும், அவர் எடுத்த முடிவுகளும் ஒரு புதிய வரலாற்றைப் படைத்தன. சுதந்திரத்திற்குப் பிறகு, 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சாத்தியமற்ற பணியை அவர் சாத்தியமாக்கினார். 'ஒரே இந்தியா - உன்னத இந்தியா' என்ற சிந்தனையே அவருக்கு முதன்மையானதாக இருந்தது. அதனால்தான் இன்று, சர்தார் படேலின் பிறந்தநாள் இயற்கையாகவே தேசிய ஒற்றுமையின் ஒரு மாபெரும் திருவிழாவாக மாறியுள்ளது.
140 கோடி நாட்டு மக்களாகிய நாம் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தையும், ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தையும் எப்படிக் கொண்டாடுகிறோமோ, அதேபோல இந்த ஒற்றுமை தினத்தின் முக்கியத்துவமும் நமக்கு ஊக்கமளிக்கும் மற்றும் பெருமிதம் கொள்ளும் தருணமாகும். இன்று கோடிக்கணக்கான மக்கள் ஒற்றுமைப் பிரமாணத்தை ஏற்றுள்ளனர்; நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்போம் என நாம் உறுதி பூண்டுள்ளோம். இங்கு ஏக்தா நகரிலேயே அமைந்துள்ள 'ஏக்தா மால்' மற்றும் 'ஏக்தா கார்டன்' ஆகியவை ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதைக் காண முடிகிறது.
நண்பர்களே,
நாட்டின் ஒற்றுமையை வலுவிழக்கச் செய்யும் எந்தவொரு செயலிலிருந்தும் ஒவ்வொரு குடிமகனும் விலகி இருக்க வேண்டும். இது ஒரு தேசியக் கடமை; இதுவே சர்தார் சாஹேபிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. இதுவே இன்றைய நாட்டின் தேவை, இதுவே ஒவ்வொரு இந்தியருக்குமான ஒற்றுமை தினத்தின் செய்தி மற்றும் தீர்மானமாகும்.
நண்பர்களே,
சர்தார் சாஹேப் நாட்டின் இறையாண்மையை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சர்தார் சாஹேபின் மறைவுக்குப் பிந்தைய ஆண்டுகளில், அன்றைய அரசாங்கங்கள் நாட்டின் இறையாண்மையில் போதுமான அக்கறை காட்டவில்லை. ஒருபுறம் காஷ்மீரில் இழைக்கப்பட்ட தவறுகள், மறுபுறம் வடகிழக்கு மாநிலங்களில் உருவான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் செழித்து வளர்ந்த நக்சலைட் - மாவோயிஸ்ட் பயங்கரவாதம் ஆகியவை நாட்டின் இறையாண்மைக்கு நேரடி சவால்களாக அமைந்தன. இருப்பினும், சர்தார் சாஹேபின் கொள்கைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அக்கால அரசாங்கங்கள் முதுகெலும்பில்லாத அணுகுமுறையையே தேர்ந்தெடுத்தன. இதன் விளைவுகளை வன்முறை மற்றும் ரத்தக் களரி வடிவில் நாடு அனுபவித்தது.
நண்பர்களே,
இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்; சர்தார் சாஹேப் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போலவே, முழு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். ஆனால் நேரு அவர்கள் சர்தார் சாஹேபின் விருப்பத்தை நிறைவேற விடவில்லை. காஷ்மீர் தனி அரசியலமைப்பு மற்றும் தனிக்கொடியுடன் பிரிக்கப்பட்டது!
நண்பர்களே,
காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக காங்கிரஸ் இழைத்த தவறு எனும் நெருப்பில் நாடு வெந்து தணிந்தது. காங்கிரஸின் மோசமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் சென்றது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தையும், அரசு ஆதரவு பயங்கரவாதத்தையும் ஊக்குவித்தது.
நண்பர்களே,
காஷ்மீரும் இந்த நாடும் இதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளன. இருப்பினும், காங்கிரஸ் எப்போதும் பயங்கரவாதத்திற்கு அடிபணிந்தே வந்துள்ளது.
நண்பர்களே,
காங்கிரஸ் சர்தார் சாஹேபின் தொலைநோக்குப் பார்வையை மறந்துவிட்டது, ஆனால் நாம் மறக்கவில்லை. 2014-ம் ஆண்டிற்குப் பிறகு, நாடு மீண்டும் ஒருமுறை அவரது ஊக்கமளிக்கும் உறுதியைக் கண்டது. இன்று, காஷ்மீர் 370-வது பிரிவின் விலங்குகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக நாட்டின் முதன்மை நீரோட்டத்துடன் இணைந்துள்ளது. இன்று பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்தின் எஜமானர்களுக்கும் இந்தியாவின் உண்மையான பலம் என்னவென்று தெரிந்துவிட்டது! இன்று இந்தியாவின் மீது யாராவது கண் வைக்கத் துணிந்தால், இந்தியா அவர்கள் வீட்டிற்குள்ளேயே புகுந்து தாக்கும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' மூலம் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. ஒவ்வொரு முறையும் இந்தியாவின் பதில் முன்பை விடப் பெரியதாகவும், முன்பை விட தீர்க்கமானதாகவும் இருக்கிறது. இது இந்தியாவின் எதிரிகளுக்கான செய்தி; இது இரும்பு மனிதர் திரு. சர்தார் படேலின் இந்தியா, இது தனது பாதுகாப்பு மற்றும் கௌரவத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி, நக்சலிசம்-மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை உடைத்ததே ஆகும். 2014-ம் ஆண்டிற்கு முன்பு, நம் நாட்டில் நக்சலைட்டுகளும் மாவோயிஸ்டுகளும் நாட்டின் இதயப்பகுதியிலேயே ஆட்சி நடத்தும் சூழல் இருந்தது. நக்சலைட் பகுதிகளில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அங்கு காவல்துறை நிர்வாகம் செயல்பட முடியவில்லை. நக்சலைட்டுகள் பகிரங்கமாக புதிய ஆணைகளை பிறப்பித்து வந்தனர். அவர்கள் சாலைகள் அமைப்பதைத் தடுத்தனர். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டன. அவர்களுக்கு முன்னால் அரசாங்கமும் நிர்வாகமும் கையறு நிலையில் இருந்தன.
நண்பர்களே,
2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, எமது அரசு நக்சலிசம்-மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் மீது ஒரு மாபெரும் தாக்குதலைத் தொடுத்தது. நகர்ப்புற நக்சலைட் ஆதரவாளர்களையும் 'நகர்ப்புற நக்சலைட்டுகளையும்' நாம் ஓரங்கட்டினோம். நாம் கருத்தியல் போரில் வெற்றி பெற்று, அவர்களின் கோட்டைகளிலேயே அவர்களை எதிர்கொண்டோம்; அதன் முடிவுகள் இன்று நாட்டின் முன்னே உள்ளன. 2014-ம் ஆண்டிற்கு முன்பு, நாட்டின் சுமார் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்தன. இன்று, இந்த எண்ணிக்கை 11-ஆகக் குறைந்துள்ளது. அதிலும் கூட, மூன்று மாவட்டங்களில் மட்டுமே நக்சலிசம் தீவிரமான முறையில் உள்ளது. இன்று, சர்தார் படேல் அவர்களின் முன்னிலையில், இந்த ஏக்தா நகர் மண்ணிலிருந்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் நான் உறுதியளிக்கிறேன்; நாடு நக்சலிசம், மாவோயிசம் மற்றும் அந்தப் பயங்கரவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடும் வரை, நாம் நிறுத்தப்போவதில்லை, நாம் அமைதியாக இருக்கப்போவதில்லை.
நண்பர்களே,
இன்று, ஊடுருவல் என்பது நாட்டின் ஒற்றுமைக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பல தசாப்தங்களாக வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் நாட்டிற்குள் வந்து கொண்டே இருந்தனர்; அவர்கள் நாட்டு மக்களின் வளங்களை ஆக்கிரமித்து, மக்கள் தொகை சமநிலையைச் சீர்குலைத்து, நாட்டின் ஒற்றுமையைப் பணையம் வைத்தனர். ஆனால் முந்தைய அரசாங்கங்கள் இவ்வளவு பெரிய பிரச்சினையைக் கண்டும் காணாமல் இருந்தன. வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பு திட்டமிட்டே ஆபத்தில் தள்ளப்பட்டது. இப்போது முதல்முறையாக, இந்த மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு தீர்க்கமான போரை நடத்த நாடு முடிவு செய்துள்ளது. செங்கோட்டையிலிருந்து நான் 'மக்கள் தொகை மாற்றத் திட்டத்தை' அறிவித்துள்ளேன்.
ஆனால் நண்பர்களே,
இன்று நாம் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக முன்னெடுக்கும்போது, சிலர் தேசிய நலனை விடத் தங்கள் சொந்த நலனுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த நபர்கள் ஊடுருவல்காரர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக அரசியல் போர் நடத்தி வருகின்றனர். ஒருமுறை நாடு பிரிக்கப்பட்டுவிட்டது, அது தொடர்ந்து பிரிக்கப்படுவதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் பாதுகாப்பும் அடையாளமும் ஆபத்தில் இருந்தால், ஒவ்வொரு தனிமனிதனும் ஆபத்தில் இருப்பான். எனவே, இன்று தேசிய ஒற்றுமை தினத்தில், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு ஊடுருவல்காரனையும் வெளியேற்றுவோம் என்று நாம் மீண்டும் ஒருமுறை உறுதிமொழி ஏற்க வேண்டும்.
நண்பர்களே,
ஒரு ஜனநாயக நாட்டில் தேசிய ஒற்றுமையைப் பற்றி நாம் பேசும்போது, அதன் ஒரு அம்சம் என்னவென்றால், நாம் கருத்து வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்பதாகும். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, ஆனால் மன வேறுபாடுகள் இருக்கக்கூடாது. ஆனால் வேடிக்கையைப் பாருங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு யாரிடம் நாடு பொறுப்பை ஒப்படைத்ததோ, அவர்களே 'மக்களாகிய நாம்' என்ற உணர்வைக் கொல்ல முயன்றனர். தங்கள் சொந்த சிந்தனை மற்றும் சித்தாந்தத்திலிருந்து வேறுபட்ட ஒவ்வொரு நபரையும் அமைப்பையும் அவர்கள் இகழ்ந்தனர்; அவற்றின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயன்றனர். அரசியல் தீண்டாமை என்பது நாட்டில் ஒரு கலாச்சாரமாக மாற்றப்பட்டது. காங்கிரஸ் அரசாங்கங்களின் கீழ் சர்தார் படேல் அவர்களுக்கும் அவரது பாரம்பரியத்திற்கும் என்ன நேர்ந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் உயிரோடு இருந்தபோதும், அவர் மறைந்த பின்பும் இந்த மக்கள் அவருக்கு என்ன செய்தார்கள்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு என்ன செய்தார்கள்? லோகியா மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்களுக்கும் காங்கிரஸ் இதையேதான் செய்தது. இந்த ஆண்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் 100-வது ஆண்டைக் குறிக்கிறது. அந்தச் சங்கத்தின் மீது எத்தகைய தாக்குதல்களும் சதிகளும் நடத்தப்பட்டன! ஒரு கட்சி மற்றும் ஒரு குடும்பத்திற்கு வெளியே இருந்த ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு கருத்தையும் தீண்டத்தகாததாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
சகோதர சகோதரிகளே,
நாட்டைப் பிரித்தாளும் இந்த அரசியல் தீண்டாமையை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம் என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். சர்தார் படேல் நினைவாக நாம் 'ஒற்றுமைக்கான சிலையை' உருவாக்கினோம். திரு. பாபாசாகேப் அம்பேத்கர் நினைவாக 'பஞ்சதீர்த்தங்களை' அமைத்தோம். டெல்லியில் உள்ள பாபாசாகேப்பின் இல்லம், அவர் மகா பரிநிர்வாணம் அடைந்த இடம் ஆகியவை காங்கிரஸ் காலத்தில் கவனிக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் இருந்தன. அந்தப் புனிதத் தலத்தை நாம் ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாக மாற்றியுள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஒரே ஒரு முன்னாள் பிரதமரின் பெயரில் மட்டுமே அருங்காட்சியகம் இருந்தது. நாம் அரசியல் தீண்டாமைக்கு அப்பாற்பட்டு, நாட்டின் அனைத்துப் பிரதமர்களின் பங்களிப்பையும் போற்றும் வகையில் 'பிரதமர்கள் அருங்காட்சியகத்தை' உருவாக்கினோம்.
கர்ப்பூரி தாக்கூர் போன்ற மக்கள் தலைவருக்கு நாம் பாரத ரத்னா விருது வழங்கினோம். தனது வாழ்நாள் முழுவதையும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்த பிரணாப் முகர்ஜிக்கும் நாம் பாரத ரத்னா விருது வழங்கினோம். மேலும், மாற்றுச் சித்தாந்தம் கொண்ட தலைவரான முலாயம் சிங் யாதவ் அவர்களைப் பத்ம விருதின் மூலம் கவுரவித்தோம். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தேசத்தின் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதே இந்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள சிந்தனையாகும். 'ஆபரேஷன் சிந்துார்' போராட்டத்திற்குப் பிறகு வெளிநாடு சென்ற நமது அனைத்துக் கட்சித் தூதுக்குழுவிலும் இந்த ஒற்றுமையின் ஒரு காட்சியைக் கண்டோம்.
நண்பர்களே,
அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டின் ஒற்றுமையைத் தாக்கும் எண்ணம் என்பது அடிமைத்தன மனப்பான்மையின் ஒரு பகுதியாகும். காங்கிரஸ் ஆங்கிலேயர்களிடம் இருந்து கட்சியையும் அதிகாரத்தையும் மட்டும் சுதந்தரிக்கவில்லை, அவர்கள் ஆங்கிலேயர்களின் அடிமைத்தன மனப்பான்மையையும் உள்வாங்கிக் கொண்டனர். பாருங்கள், இன்னும் சில நாட்களில் நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. 1905-ல் ஆங்கிலேயர்கள் வங்காளத்தைப் பிரித்தபோது, வந்தே மாதரம் ஒவ்வொரு குடிமகனின் எதிர்ப்புக் குரலாக மாறியது. வந்தே மாதரம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் குரலாக உருவெடுத்தது. வந்தே மாதரம் என்று சொல்வதையே தடை செய்ய ஆங்கிலேயர்கள் முயன்றனர். ஆனால், அவர்களின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை! இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்தே மாதரம் என்ற முழக்கம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
இருப்பினும், ஆங்கிலேயர்களால் செய்ய முடியாத வேலையை காங்கிரஸ் செய்தது. மத ரீதியிலான காரணங்களைக் கூறி வந்தே மாதரத்தின் ஒரு பகுதியை காங்கிரஸ் நீக்கியது. அதாவது, காங்கிரஸ் சமூகத்தைப் பிரித்ததோடு, ஆங்கிலேயர்களின் நோக்கத்தையும் முன்னெடுத்துச் சென்றது. இன்று நான் மிகுந்த பொறுப்புடன் ஒரு விஷயத்தைக் கூறுகிறேன் - எந்த நாளில் வந்தே மாதரத்தை உடைக்கவும், வெட்டவும், பிரிக்கவும் காங்கிரஸ் முடிவு செய்ததோ, அந்த நாளிலேயே அது இந்தியப் பிரிவினைக்கான அடித்தளத்தை அமைத்துவிட்டது. காங்கிரஸ் அந்தப் பாவத்தைச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று இந்தியாவின் நிலைமையே வேறாக இருந்திருக்கும்!
நண்பர்களே
அக்காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் இத்தகைய சிந்தனையால், நாடு பல தசாப்தங்களாக அடிமைத்தனத்தின் அடையாளங்களைச் சுமந்து வந்தது. எங்களுக்கு நாட்டைச் சேவகிக்க நீங்கள் வாய்ப்பளித்து, எமது அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நமது கடற்படைக் கொடியிலிருந்து அடிமைத்தனத்தின் சின்னம் அகற்றப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். நாம் மாற்றத்தைக் கொண்டு வந்தபோது 'ராஜ்பத்' என்பது 'கடமைப் பாதை'யாக மாறியது. சுதந்திரப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் தியாகத் தலமான அந்தமானில் உள்ள செல்லுலார் சிறைக்கு, திரு. மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தின் போதுதான் தேசிய நினைவுச் சின்ன அந்தஸ்து வழங்கப்பட்டது. சிறிது காலத்திற்கு முன்பு வரை, அந்தமான் தீவுகளுக்கு ஆங்கிலேயர்களின் பெயர்களே சூட்டப்பட்டிருந்தன. நாம் அவற்றிற்கு நேதாஜி சுபாஷ் பெயரைச் சூட்டினோம். பல தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் சிலையையும் நாம் நிறுவினோம்.
நண்பர்களே,
நாட்டின் பாதுகாப்பிற்காகத் தியாகம் செய்த வீரர்களுக்குக் கூட, இந்த அடிமைத்தன மனப்பான்மையால் முறையான மரியாதை கிடைக்கவில்லை. தேசியப் போர் நினைவுச் சின்னத்தை நிறுவியதன் மூலம் அந்த நினைவுகளை நாம் அழியாததாக்கினோம். நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பில் கூட, நமது காவல்துறைப் படையைச் சேர்ந்த 36 ஆயிரம் வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்பது நாட்டிற்குத் தெரியாமலே இருந்தது. 36 ஆயிரம் தியாகிகள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல. நமது காவல்துறை, பி.எஸ்.எஃப், ஐ.டி.பி.பி சி.ஐ.எஸ்.எஃப் சி.ஆர்.பி.எஃப் என நமது அனைத்து துணை ராணுவப் படைகளின் வீரமும் மரியாதையிலிருந்து வஞ்சிக்கப்பட்டது. எமது அரசுதான் காவல் நினைவுச் சின்னத்தைக் கட்டி அந்தத் தியாகிகளைக் கௌரவித்தது. இன்று, சர்தார் படேல் பாதங்களில் நின்று கொண்டு, நாடு முழுவதும் காவல்துறையில் பணியாற்றிய மற்றும் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்; அவர்களைக் குறித்துப் பெருமிதம் கொள்கிறேன். இன்று நாடு அடிமைத்தன மனப்பான்மையின் ஒவ்வொரு சுவட்டையும் அகற்றி வருகிறது. தேசத்திற்காகத் தியாகம் செய்பவர்களைக் கௌரவிப்பதன் மூலம், 'தேசமே முதன்மை' என்ற உணர்வை நாம் வலுப்படுத்துகிறோம்.
எனது அன்பிற்குரிய நாட்டு மக்களே,
ஒரு தேசத்தின் மற்றும் சமூகத்தின் வாழ்விற்கு ஒற்றுமையே அடிப்படையாகும். சமூகத்தில் ஒற்றுமை இருக்கும் வரை தேசத்தின் ஒருமைப்பாடு பாதுகாப்பாக இருக்கும். எனவே, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, நாட்டின் ஒற்றுமையை உடைக்கும் ஒவ்வொரு சதியையும் நாம் முறியடிக்க வேண்டும்; ஒற்றுமையின் சக்தியால் அதை முறியடிக்க வேண்டும். அதனால்தான், இன்று நாடு தேசிய ஒற்றுமையின் ஒவ்வொரு முனையிலும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறது. இந்தியாவின் ஒற்றுமை எனும் இந்தச் சடங்கிற்கு நான்கு தூண்கள் உள்ளன. ஒற்றுமையின் முதல் தூண் கலாச்சார ஒற்றுமை! அரசியல் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை ஒரு தேசமாக அழியாமல் வைத்திருப்பது இந்தியாவின் கலாச்சாரமே ஆகும். நமது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள், ஏழு புரிக்கள், நான்கு தாம்கள், 50-க்கும் மேற்பட்ட சக்திபீடங்கள், புனிதப் பயணப் பாரம்பரியம் ஆகியவையே இந்தியாவை ஒரு விழிப்புணர்வுள்ள தேசமாக மாற்றும் உயிர் ஆற்றலாகும். இன்று, 'சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்' மற்றும் 'காசி தமிழ் சங்கமம்' போன்ற நிகழ்வுகளின் மூலம் இந்தப் பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். சர்வதேச யோகா தினத்தின் மூலம், இந்தியாவின் சிறந்த யோகக் கலைக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கி வருகிறோம். இன்று நமது யோகா மக்களை இணைக்கும் ஒரு ஊடகமாக மாறி வருகிறது.
நண்பர்களே,
நமது ஒற்றுமையின் இரண்டாவது தூண் மொழி ஒற்றுமை! இந்தியாவின் நூற்றுக்கணக்கான மொழிகளும் வட்டார வழக்குகளும் இந்தியாவின் திறந்த மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையின் அடையாளமாகும். ஏனெனில், இங்கு எந்தவொரு சமூகமோ, அதிகாரமோ அல்லது பிரிவோ மொழியை ஒருபோதும் தனது ஆயுதமாக மாற்றியதில்லை. ஒரே மொழியைத் திணிக்க எந்த முயற்சியும் இங்கு எடுக்கப்படவில்லை. அதனால்தான் மொழியியல் பன்முகத்தன்மையின் அடிப்படையில் இந்தியா உலகில் இத்தகைய வளமான நாடாக மாறியுள்ளது. இசையின் வெவ்வேறு ஸ்வரங்களைப் போல நமது மொழிகள் நமது அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளன. அதனால்தான் நண்பர்களே, நாம் ஒவ்வொரு மொழியையும் ஒரு தேசிய மொழியாகக் கருதுகிறோம். உலகின் பழமையான மொழியான தமிழ் இந்தியாவில்தான் உள்ளது என்று நாம் பெருமையுடன் கூறுகிறோம், அதற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம். சமஸ்கிருதம் போன்ற அறிவுப் பாரம்பரியம் நம்மிடம் உள்ளது. அதேபோல், ஒவ்வொரு இந்திய மொழிக்கும் அதன் தனித்துவம், இலக்கிய மற்றும் கலாச்சார வளம் உள்ளது. நாம் ஒவ்வொரு இந்திய மொழியையும் ஊக்குவித்து வருகிறோம். இந்தியாவின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இந்திய மக்கள் நாட்டின் பிற மொழிகளையும் அறிந்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மொழிகள் நமது ஒற்றுமையை இணைக்கும் சக்தியாக மாறட்டும். இது ஒரு நாள் வேலை அல்ல. இது ஒரு தொடர்ச்சியான பணி, இதற்கான பொறுப்பை நாம் அனைவரும் இணைந்து சுமக்க வேண்டும்.
நண்பர்களே,
நமது ஒற்றுமையின் மூன்றாவது தூண் பாகுபாடற்ற வளர்ச்சி! ஏனெனில் வறுமையும் பாகுபாடும் சமூகக் கட்டமைப்பின் மிகப்பெரிய பலவீனங்கள். நாட்டின் எதிரிகள் எப்போதும் இந்த பலவீனங்களைச் சுரண்டியே வந்துள்ளனர். அதனால்தான் சர்தார் சாஹேப் வறுமைக்கு எதிராக நாட்டிற்கு ஒரு நீண்டகாலத் திட்டத்தில் பணியாற்ற விரும்பினார். இந்தியா 1947-ம் ஆண்டிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரம் பெற்றிருந்தால், 1947-ம் ஆண்டிற்குள் இந்தியா உணவுப் பற்றாக்குறை நெருக்கடியிலிருந்து விடுபட்டிருக்கும் என்று சர்தார் படேல் ஒருமுறை கூறினார். சமஸ்தானங்களை இணைக்கும் சவாலை தான் முறியடித்தது போலவே, உணவுப் பற்றாக்குறை சவாலைத் தீர்க்கும் வரை தாம் ஓய்வெடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். இதுவே சர்தார் சாஹேபின் மன உறுதி. மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள கூட, நாம் இந்த மன உறுதியை வெளிப்படுத்த வேண்டும். சர்தார் சாஹேபின் நிறைவேறாத இந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற எமது அரசு பாடுபட்டு வருவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். கடந்த தசாப்தத்தில், 25 கோடி நாட்டு மக்களை நாம் வறுமையிலிருந்து மீட்டுள்ளோம். இன்று கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் சென்றடைகிறது. இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. அதாவது, ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கை - இதுவே இன்று தேசத்தின் லட்சியம் மற்றும் தொலைநோக்குப் பார்வை. இந்தப் பாகுபாடற்ற மற்றும் ஊழலற்ற கொள்கைகள் இன்று தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன.
நண்பர்களே,
தேசிய ஒற்றுமையின் நான்காவது தூண் - தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து இணைப்பின் மூலம் இதயங்களை இணைப்பதாகும். இன்று நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய நெடுஞ்சாலைகளும், விரைவுச் சாலைகளும் கட்டப்பட்டு வருகின்றன. 'வந்தே பாரத்' மற்றும் 'நமோ பாரத்' போன்ற ரயில்கள் இந்திய ரயில்வேயை மாற்றியமைத்து வருகின்றன. சிறிய நகரங்கள் கூட இப்போது விமான நிலைய வசதிகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவின் மீதான உலகின் பார்வையையே முற்றிலுமாக மாற்றி வருகின்றன. இது நாட்டிற்குள் வடக்கு மற்றும் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இடையிலான தூரத்தைக் குறைத்துள்ளது. இன்று மக்கள் சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக மற்ற மாநிலங்களுக்கு எளிதாகப் பயணம் செய்கிறார்கள். இது மக்களிடையேயான தொடர்பு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தின் புதிய யுகமாகும். இது தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. மேலும், ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியும் இந்த ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இன்று டிஜிட்டல் இணைப்பு இதயங்களை இணைப்பதற்கான ஒரு புதிய பாதையையும் அமைத்துக் கொடுத்துள்ளது.
நண்பர்களே,
"தேசத்திற்காகப் பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று சர்தார் படேல் ஒருமுறை கூறினார். இன்று நானும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதே கோரிக்கையை விடுக்கிறேன். தேசத்திற்காகப் பணியாற்றுவதை விட பெரிய மகிழ்ச்சி வேறொன்றுமில்லை. பாரத அன்னையை வணங்குவதே நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயர்ந்த வழிபாடாகும். 140 கோடி இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கும்போது, பாறைகளே வழிவிடும். 140 கோடி நாட்டு மக்களும் ஒரே குரலில் பேசும்போது, அந்தச் சொற்கள் இந்தியாவின் வெற்றியின் பிரகடனமாக மாறும். ஒற்றுமை எனும் இந்த அடிப்படை மந்திரத்தை நமது தீர்மானமாக மாற்ற வேண்டும். நாம் பிரியக்கூடாது; நாம் பலவீனமடையக்கூடாது. இதுவே சர்தார் சாஹேபிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. நாம் அனைவரும் இணைந்து 'ஒரே இந்தியா - உன்னத இந்தியா' என்ற உறுதியை வலுப்படுத்துவோம் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் சுயசார்பு இந்தியா என்ற கனவை நாம் இணைந்து நனவாக்குவோம். இந்த உணர்வுடன், சர்தார் சாஹேபின் பாதங்களில் மீண்டும் ஒருமுறை எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் -
பாரத் மாதா கி ஜெய்!
நண்பர்களே, இந்தக் குரல் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைய வேண்டும்.
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜெய்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
***
(Release ID:2184628)
AD/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2256846)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada