பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக கிராமப்புற திட்டங்களைப் பாதுகாக்கும் வகையில் தயார் நிலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 20 APR 2026 5:28PM by PIB Chennai

மேற்காசியாவில் நிலவி வரும் சூழல் குறித்து ஊடகங்களுக்கு தொடர்ந்து தகவல் அளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசு தேசிய ஊடக மையத்தில் விளக்கக் கூட்டம் ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டு நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு, கடல்சார் நடவடிக்கைகள், மேற்காசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் நிலைத்தன்மையை பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வழங்கினர்.

மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை:

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த கிராமப்புற மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தயார் நிலை குறித்த விரிவான மறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டும், உலகளவில் விநியோக நடைமுறைகளில் ஏற்படும் தாக்கத்தால் பொருட்களின் விலைவாசி மற்றும் பணவீக்க விகிதங்களின் ஏற்படும் தாக்கங்களை மதிப்பிடும் வகையில் இந்த மறுஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேலைவாய்ப்பு பாதுகாப்பு மற்றும் ஊதிய ஆதரவு:

வளர்ச்சியடைந் இந்தியாவிற்கான ஜி ராம் ஜி என்ற புதிய சட்டத்தின் அமலாக்கம் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் 2005 முழுமையான செயல்பாட்டில் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறத்தில் உள்ள குடும்பங்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் எவ்வித தடையுமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, உரிய நேரத்தில் சம்பள பட்டுவாடா, முழு அளவிலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது உட்பட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் தொடரும் என்றும், ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்கள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் கையிருப்பு:

நாடு முழுவதும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நேரடியாக அவற்றை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு செல்வதை தவிர்த்து டிஜிட்டல் தளம் மூலம் சிலிண்டருக்கான பதிவை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் மாற்று எரிபொருளாக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு, மின்சாரம் அல்லது இன்டக்‌ஷன் அடுப்புகளை பயன்படுத்த ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253834&reg=3&lang=1

***

TV/SV/RJ/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2253916) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam