தேர்தல் ஆணையம்
சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026 விதிகளை மீறிய சட்டவிரோத சமூக ஊடக உள்ளடக்கம் மீதான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
19 APR 2026 3:18PM by PIB Chennai
தகவல் தொழில்நுட்பச் சட்டம் - 2000, தகவல் தொழில்நுட்ப விதிகள் -2021, மற்றும் மாதிரி நடத்தை விதிகள் உள்ளிட்ட தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு இணங்க, அனைத்துத் தரப்பினரும் சமூக ஊடகங்களையும் டிஜிட்டல் தளங்களையும் பொறுப்புடனும் அறநெறியுடனும் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தவறான அல்லது சட்டவிரோதமான, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட எந்தவொரு சமூக ஊடக உள்ளடக்கம் குறித்தும், அது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட 3 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆணையம் மேலும் உத்தரவிட்டிருந்தது.
வெளிப்படைத்தன்மையையும் வாக்காளர் நம்பிக்கையையும் பேணுவதற்காக, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பிரச்சாரப் பிரதிநிதிகள், பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது செயற்கை நுண்ணறிவால் மாற்றியமைக்கப்பட்ட எந்தவொரு உள்ளடக்கமும், அதை உருவாக்கிய நிறுவனத்தைக் குறிப்பிட வேண்டும். அத்துடன், “செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது”, “டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது” அல்லது “செயற்கை உள்ளடக்கம்” எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் பதிவுகள், சட்டம் ஒழுங்கைக் குலைக்க சாத்தியமுள்ள பதிவுகள், வாக்குப்பதிவு செயல்முறை அல்லது இயந்திரங்களுக்கு எதிரான தவறான தகவல்கள் போன்ற சமூக ஊடக உள்ளடக்கங்கள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாநில தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, 2026 மார்ச் 15 அன்று தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டு, உள்ளடக்கம் நீக்கம், முதல் தகவல் அறிக்கை பதிவு, விளக்கங்கள் கோருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேர அமைதிக் காலத்தில், வாக்குப்பதிவுப் பகுதிகளில் எந்தவொரு தேர்தல் தொடர்பான விஷயத்தையும் காட்சிப்படுத்துவதைத் தடைசெய்யும் , 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126-ம் பிரிவின் கீழ் உள்ள விதிகளையும் ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது. தொலைக்காட்சி, வானொலி, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகத் தளங்கள் இந்த விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், மக்கள்/அரசியல் கட்சிகள்/வேட்பாளர்கள், இசிஐநெட்-டில் (ECINET) உள்ள சி-விஜில் (C-Vigil) பிரிவைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்துப் புகாரளிக்கலாம். இந்தத் தேர்தல்களில், மார்ச் 15 முதல் ஏப்ரல் 19 வரை, சி-விஜில் (C-Vigil) செயலி மூலம் 3,23,099 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 3,10,393 புகார்கள், அதாவது 96.01% புகார்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட 100 நிமிட காலக்கெடுவிற்குள் தீர்வு காணப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253528®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2253554)
வருகையாளர் எண்ணிக்கை : 19