பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2025 12:11PM by PIB Chennai
நண்பர்களுக்கு வணக்கம்! நீங்களும் இந்த வானிலையை மகிழ்ந்து அனுபவிக்கிறீர்கள்.
நண்பர்களே,
இந்த (நாடாளுமன்ற) குளிர்கால கூட்டத்தொடர் என்பது வெறும் ஒரு சடங்கு அல்ல. நாட்டை விரைவாக முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு, இந்த குளிர்கால கூட்டத்தொடர் புதிய ஆற்றலை வழங்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. பாரதம் உண்மையாகவே ஜனநாயகத்தை வாழ்ந்து காட்டியுள்ளது. ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வலுவடையும் வகையில், ஜனநாயகத்தின் உற்சாகமும் உணர்வும் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பீகாரில் நடந்த தேர்தல்களும், அங்கு பதிவான சாதனை அளவிலான வாக்கு சதவீதமும் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாகும். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் அதிகரித்து வரும் பங்களிப்பு, எனக்குள்ளேயே ஒரு புதிய நம்பிக்கையையும் உறுதியையும் உருவாக்குகிறது. ஒருபுறம் ஜனநாயகம் வலுவடைந்து வருகிறது, மறுபுறம் இந்த ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் நமது பொருளாதாரம் வலுப்பெற்று வருவதை உலகம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜனநாயகம் பலன் தரும் என்பதை பாரதம் நிரூபித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலை இன்று புதிய உயரங்களை எட்டும் வேகம், நமக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதோடு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நகர்வதற்கு புதிய வலிமையைத் தருகிறது.
இந்தக் கூட்டத்தொடர், நாடாளுமன்றம் நாட்டிற்காக என்ன நினைக்கிறது, நாட்டிற்காக என்ன செய்ய விரும்புகிறது மற்றும் நாட்டிற்காக என்ன செய்யப் போகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும், விவாதங்களில் சிக்கல்களை எழுப்ப வேண்டும் மற்றும் வலுவான விவகாரங்களை முன்வைக்க வேண்டும். அவர்கள் தோல்வியின் விரக்தியிலிருந்து வெளியே வர வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, ஒன்று அல்லது இரண்டு கட்சிகளால் தங்களது தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் போதுமான காலம் கடந்துவிட்டதால், அவர்கள் அதிலிருந்து மீண்டிருப்பார்கள் என்று நான் நினைத்தேன், ஆனால் நேற்று அவர்களது அறிக்கைகளைக் கேட்கும்போது, அவர்களின் தோல்வி இன்னும் அவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருப்பதாகவேத் தோன்றுகிறது. ஆனால், இந்த குளிர்கால கூட்டத்தொடர் தோல்வியின் விரக்திக்கான போர்க்களமாக மாறக்கூடாது என்று நான் அனைத்துக் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல், இந்தக் குளிர்கால கூட்டத்தொடர் வெற்றியின் செருக்கிற்கான ஒரு களமாகவும் மாறிவிடக்கூடாது. நாட்டின் பிரதிநிதிகளாக மக்கள் நம்மீது வைத்துள்ள கடமைகளையும் எதிர்பார்ப்புகளையும் மனதில் கொண்டு, சமநிலை மற்றும் பொறுப்புணர்வுடன் நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். தற்போது இருப்பதை எப்படி மேம்படுத்துவது என்றும், ஏதேனும் தவறு நடந்தால், நாட்டின் குடிமக்களும் புரிதலைப் பெறும் வகையில் துல்லியமான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் எவ்வாறு முன்வைக்கலாம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இதற்கு நிச்சயமாகக் கடின உழைப்பு தேவைப்படுகிறது, ஆனால் அது தேசத்தின் நலன் கருதி செய்யப்பட வேண்டும்.
நீண்ட காலமாக எனது மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த முதன்முறை எம்.பி.க்கள் அல்லது இளம் எம்.பி.க்கள் மிகுந்த சிரமத்திற்கும் மனவருத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களுக்குத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவோ அல்லது தங்களது தொகுதிகளின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசவோ வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிக்க விரும்புகிறார்கள், ஆனால் அதுகூடத் தடுக்கப்படுகிறது. கட்சி எதுவாக இருந்தாலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இளம் எம்.பி.க்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். இவர்களது அனுபவங்களால் அவை (நாடாளுமன்றம்) பயனடைய வேண்டும். நாடாளுமன்றத்தின் வாயிலாக, இந்தப் புதிய தலைமுறையினரின் அனுபவங்களால் தேசமும் பயனடையும். எனவே, இந்த விவகாரங்களை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாடகம் நடத்துவதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. நாடகம் நடத்த விரும்புபவர்கள், அதை வேறு எங்காவது நடத்தட்டும். இங்கே (நாடாளுமன்றத்தில்), ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இருக்க வேண்டுமே தவிர, நாடகம் இருக்கக்கூடாது. கோஷமிடுவதற்கு நாட்டில் ஏராளமான இடங்கள் உள்ளன. நீங்கள் எங்கு தோற்கடிக்கப்பட்டீர்களோ, அங்கேயே ஏற்கனவே கோஷமிட்டுவிட்டீர்கள். அடுத்து எங்கு தோற்கப் போகிறீர்களோ, அங்கேயும் நீங்கள் கோஷமிடலாம். ஆனால் இங்கே, நாம் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, கோஷங்களுக்கு அல்ல. அதுவே உங்களது எண்ணமாகவும் இருக்க வேண்டும்.
நண்பர்களே,
அரசியலில் எதிர்மறைத் தன்மை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் இறுதியில் தேசக் கட்டமைப்பிற்குச் சில நேர்மறையான சிந்தனைகளும் இருக்க வேண்டும். எதிர்மறைத் தன்மையை எல்லைக்குள் வைத்துக்கொண்டு, தேசக் கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
நண்பர்களே,
இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடர் மற்றொரு காரணத்திற்காகவும் முக்கியமானது. நமது புதிய மதிப்பிற்குரிய குடியரசு துணைத்தலைவர் மாநிலங்களவையை இன்று முதல் வழிநடத்த தொடங்குவார். அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்த நம்பிக்கையான சூழலை மக்களிடையே உருவாக்கியுள்ளன. அந்தத் திசையில் பல முக்கியமான நடவடிக்கைகள் இந்தக் கூட்டத்தொடரிலும் எடுக்கப்படும். எங்களது ஊடக நண்பர்கள் சிலர் இதைப் பகுப்பாய்வு செய்தால், சில காலமாக நமது நாடாளுமன்றம் தேர்தலுக்கான ஒரு பயிற்சித் தளமாகவோ அல்லது தோல்விக்குப் பிறகு விரக்தியை வெளிப்படுத்தும் இடமாகவோ பயன்படுத்தப்படுவதைக் கவனிப்பார்கள். சில மாநிலங்களில் ஆட்சிக்கு எதிரான அலை மிக அதிகமாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன், அங்கு ஆட்சியில் இருந்த தலைவர்கள் மக்களிடையே செல்லவோ அல்லது அவர்களிடம் பேசவோ முடியாமல் உள்ளனர். அதனால், அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களது கோபத்தையெல்லாம் இங்கே கொட்டுகிறார்கள். சில கட்சிகள் தங்களது மாநில அளவிலான அரசியலுக்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தும் ஒரு புதிய கலாச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய முறைகளை நாடு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் இப்போது தங்களது அணுகுமுறையை மாற்ற வேண்டும், தங்களது உத்தியை மாற்ற வேண்டும். அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் குறைந்தபட்சம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறாதீர்கள். எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளியுங்கள். உங்கள் விரக்திக்கும் உங்கள் தோல்விக்கும் எம்.பி.க்களை பலியாக்காதீர்கள். நாம் அனைவரும் இந்தப் பொறுப்புகளுடன் முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன். ஆனால் தேசம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்பதை நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். புதிய உயரங்களை எட்டும் நோக்கில் நாடு முன்னேறி வருகிறது, மேலும் இந்த அவையும் அந்தப் பயணத்தில் புதிய ஆற்றலையும் புதிய வலிமையையும் புகுத்தும். இந்த நம்பிக்கையுடன், மிக்க நன்றி.
----
(Release ID: 2196790)
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2250131)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam