பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஜோர்டான் வர்த்தகப் பேரவையில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 DEC 2025 3:04PM by PIB Chennai

மேன்மைதங்கிய மன்னர் அப்துல்லா அவர்களே, இளவரசர் அவர்களே, இரு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளே, வர்த்தகத் துறையின் தலைவர்களே,

வணக்கம்,

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்களுக்குள் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. பல நாடுகள் சந்தைகளையும் பகிர்ந்து கொள்கின்றன. இருப்பினும், இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவு என்பது வரலாற்று ரீதியான நம்பிக்கையும், எதிர்காலப் பொருளாதார வாய்ப்புகளும் ஒன்றிணையும் இடமாகும்.

நேற்று மேன்மைதங்கிய மன்னர் அவர்களுடன் நான் மேற்கொண்ட ஆலோசனையின் சாராம்சமும் இதுதான். புவியியல் அமைப்பை எவ்வாறு வாய்ப்பாக மாற்றுவது, அந்த வாய்ப்பை எவ்வாறு வளர்ச்சியாக மாற்றுவது என்பது குறித்து நாங்கள் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டோம்.

மேன்மைதங்கிய மன்னர் அவர்களே,

தங்களின் தலைமையின் கீழ், பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் எளிதாக்கும் ஒரு பாலமாக ஜோர்டான் உருவெடுத்துள்ளது. ஜோர்டான் வழியாக இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளின் சந்தைகளை எவ்வாறு அணுக முடியும் என்பதை நேற்றைய நமது சந்திப்பின் போது நீங்கள் விளக்கினீர்கள். இங்கு வந்திருக்கும் இந்திய நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று, ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. வர்த்தக உலகில் எண்களுக்கு (புள்ளி விவரங்களுக்கு) எவ்வளவு முக்கியத்துவம் உண்டு என்பதை நான் அறிவேன். இருப்பினும், நாம் இங்கு வெறும் புள்ளிவிவரங்களைக் கணக்கிட மட்டும் வரவில்லை, ஒரு நீண்டகால உறவை வளர்த்தெடுக்கவே இங்கே கூடியுள்ளோம்.

ஒரு காலத்தில், குஜராத்திலிருந்து சென்ற வர்த்தகம் பெட்ரா (ஜோர்டன் தென்மேற்கு பகுதி)  வழியாக ஐரோப்பாவைச் சென்றடைந்தது. நமது எதிர்காலச் செழிப்பை உறுதிப்படுத்த, அந்தத் தொடர்புகளை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்; இந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் அறிந்தபடி, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த வளர்ச்சியானது, உற்பத்தித் திறனை மையமாகக் கொண்ட நிர்வாகம் மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னிறுத்திய கொள்கைகளின் விளைவாகும்.

இன்று, ஜோர்டானைச் சேர்ந்த ஒவ்வொரு வணிகத்திற்கும், ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியாவில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்தியாவின் இந்த அதிவேக வளர்ச்சியில் நீங்கள் கூட்டாளிகளாக இணைந்து, உங்கள் முதலீடுகளுக்கு வலுவான லாபத்தை ஈட்ட முடியும்.

நண்பர்களே,

இன்று உலகிற்கு வளர்ச்சியின் புதிய இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. நம்பகமான மற்றும் நெகிழ்ச்சியான தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. உலகப் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியாவும் ஜோர்டானும் இணைந்து ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்ற முடியும்.

உங்களுடனான பரஸ்பர ஒத்துழைப்பிற்காக சில முக்கியத் துறைகளை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்; இந்தத் துறைகளில் தொலைநோக்குப் பார்வை, செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு மற்றும் வேகம்  ஆகிய மூன்றும் உள்ளன.

முதலாவதாக, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு  மற்றும் தகவல் தொழில்நுட்பம். இத்துறையில் இந்தியாவின் அனுபவம் ஜோர்டானுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கான ஒரு மாதிரியாக இந்தியா மாற்றியுள்ளது. யுபிஐ, ஆதார் மற்றும் டிஜிலாக்கர் போன்ற கட்டமைப்புகள் இன்று உலகளாவிய அளவுகோல்களாக மாறியுள்ளன. இந்தக் கட்டமைப்புகளை ஜோர்டானின் அமைப்புகளுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மேன்மைதங்கிய மன்னர் அவர்களும் நானும் விவாதித்தோம். நிதித் தொழில்நுட்பம், சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில்நுட்பம்  போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை நேரடியாக இணைக்க முடியும். கருத்துகளை மூலதனத்துடனும், கண்டுபிடிப்புகளைப் பெருமளவிலான உற்பத்தியுடனும் இணைக்கும் ஒரு பகிரப்பட்ட சூழலை நம்மால் உருவாக்க முடியும்.

நண்பர்களே,

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறைகளிலும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. இன்று, சுகாதாரம் என்பது வெறும் ஒரு துறை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார் முன்னுரிமையாகும்

இந்திய நிறுவனங்கள் ஜோர்டானில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்தால், அது ஜோர்டான் மக்களுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான ஒரு நம்பகமான மையமாக அந்த நாடு உருவெடுக்கவும் உதவும். அது ஜெனரிக் மருந்துகள், தடுப்பூசிகள், ஆயுர்வேதம் அல்லது ஆரோக்கியம் என எதுவாக இருந்தாலும், இந்தியா நம்பிக்கையைவழங்குகிறது, ஜோர்டான் அந்த நம்பிக்கையை உலகிற்கு கொண்டு செல்லும் வாய்ப்பைவழங்குகிறது.

நண்பர்களே,

அடுத்த துறை விவசாயம். வறண்ட தட்பவெப்ப நிலைகளில் விவசாயம் செய்வதில் இந்தியா விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளது; இந்த அனுபவம் ஜோர்டானில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும். துல்லியமான விவசாயம் மற்றும் நுண் பாசனம் போன்ற தீர்வுகளில் நாம் இணைந்து செயல்படலாம். குளிர்பதனக் கிடங்குகள், உணவுப் பூங்காக்கள் மற்றும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றலாம். உரத் துறையில் நாம் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது போலவே, மற்ற துறைகளிலும் நாம் இணைந்து முன்னேற முடியும்.

நண்பர்களே,

அதிவேக வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறைகள் மிகவும் அவசியமானவை. இத்துறைகளில் நாம் மேற்கொள்ளும் ஒத்துழைப்பு, நமக்கு வேகத்தையும் வளர்ச்சியின் அளவையும்  வழங்கும்.

ஜோர்டானில் ரயில்வே மற்றும் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை மேன்மைதங்கிய மன்னர் அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் எங்களது நிறுவனங்கள் முழுத் திறமை கொண்டவை என்பதையும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன என்பதையும் நான் அவருக்கு உறுதிபடத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நேற்று நடைபெற்ற நமது சந்திப்பின் போது, சிரியாவில் உள்கட்டமைப்பு மறுசீரமைப்புத் தேவைகள் குறித்தும் மேன்மைதங்கிய மன்னர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்திய மற்றும் ஜோர்டான் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒத்துழைக்க முடியும்.

நண்பர்களே,

பசுமை வளர்ச்சி இன்றி இன்றைய உலகம் முன்னேற முடியாது. தூய்மையான எரிசக்தி என்பது இப்போது ஒரு விருப்பத்தேர்வு மட்டுமல்ல; அது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், பசுமை ஹைட்ரஜன் மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் இந்தியா ஏற்கனவே ஒரு பெரிய முதலீட்டாளராக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஜோர்டானும் இத்துறையில் அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளது, அதனை வெளிக்கொணர நாம் இணைந்து செயல்படலாம்.

அதேபோல், ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்துத் துறை  பெரும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. சிக்கனமான மின்சார வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி  போக்குவரத்துத் தீர்வுகளில் இந்தியா இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இத்துறையிலும் நாம் விரிவான முறையில் ஒத்துழைக்க வேண்டும்.

நண்பர்களே,

இந்தியா மற்றும் ஜோர்டான் ஆகிய இரு நாடுகளுமே தங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்துப் பெருமிதம் கொள்கின்றன. நமது நாடுகளுக்கு இடையே பாரம்பரிய மற்றும் கலாச்சாரச் சுற்றுலாவிற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இரு நாடுகளையும் சேர்ந்த முதலீட்டாளர்கள் இத்துறையில் உள்ள வாய்ப்புகளைத் தீவிரமாக ஆராய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இத்திரைப்படங்களை ஜோர்டானில் படப்பிடிப்பு செய்வதற்கும், அதற்கான முறையான ஊக்கத்தொகைகளை வழங்கி, கூட்டுத் திரைப்பட விழாக்களையும் நடத்துவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க முடியும். மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள வரவிருக்கும் 'வேவ்ஸ்' உச்சிமாநாட்டிற்கு  ஜோர்டானிலிருந்து ஒரு பெரிய பிரதிநிதிகள் குழு வருவதையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நண்பர்களே,

புவியியல் அமைப்பு என்பது ஜோர்டானின் பலம். இந்தியாவோ திறன்  மற்றும் வளர்ச்சி அளவு ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. இந்தப் பலங்கள் ஒன்றிணையும் போது, அவை இரு நாடுகளின் இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

நமது இரு அரசாங்கங்களின் தொலைநோக்குப் பார்வையும் மிகத் தெளிவாக உள்ளது. இனி உங்கள் கற்பனைத்திறன், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் உணர்வு ஆகியவற்றின் மூலம் இந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவது வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த உங்கள் அனைவரின் கையில்தான் உள்ளது.

முடிவாக, நான் மீண்டும் ஒருமுறை இதைக் கூற விரும்புகிறேன்:

வாருங்கள்... நாம் இணைந்து முதலீடு செய்வோம், இணைந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம், மற்றும் இணைந்து வளர்ச்சி காண்போம்.

மேன்மைதங்கிய மன்னர் அவர்களே,

உங்களுக்கும், ஜோர்டான் அரசாங்கத்திற்கும் மற்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுக்ரன் (மிக்க நன்றி)

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் ஆற்றப்பட்டது.

***

(Release ID 2204571)

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2249618) வருகையாளர் எண்ணிக்கை : 35