பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பர்டகாலி ஜீவோத்தம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2025 7:14PM by PIB Chennai

பர்டகாலி ஜீவோத்தம் மடத்தின் பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பர்டகாலி ஜீவோத்தம் மடத்தின் 24-வது மடாதிபதி ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமிஜி அவர்களே, மாண்புமிகு ஆளுநர் திரு.  அசோக் கஜபதி ராஜு  அவர்களே, முதலமைச்சர் சகோதரர் திரு.  பிரமோத் சாவந்த்  அவர்களே, மடத்தின் கமிட்டித் தலைவர்  திரு. ஸ்ரீனிவாஸ் டெம்போ அவர்களே, குடியரசுத் துணைத்தலைவர் திரு. R.R. காமத் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு. ஸ்ரீபத் நாயக்  மற்றும் திரு. திகம்பர் காமத் அவர்களே, மற்றும் இங்கு வருகை தந்துள்ள ஏனைய சிறப்பு விருந்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

இன்று நிலவும் இந்தப் புனிதமான சூழல் எனது மனதை ஆழ்ந்த அமைதியால் நிறைத்துள்ளது. துறவிகள் மற்றும் முனிவர்களின் முன்னிலையில் அமர்வது என்பது, அதுவே ஒரு ஆன்மீக அனுபவமாகும். இங்கு திரண்டுள்ள பெருந்திரளான பக்தர்கள், இந்த மடத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான துடிப்பான ஆற்றலை மேலும் வலுப்படுத்துகின்றனர். இந்த விழாவில் உங்கள் மத்தியில் இருப்பதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இங்கு வருவதற்கு முன்னதாக, ராமர் கோயில் மற்றும் வீர விட்டல் கோயிலில் வழிபாடு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு நிலவும் அமைதியும் சூழலும் இந்த விழாவின் ஆன்மீக சாரத்தை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

நண்பர்களே,

ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பர்டகாலி ஜீவோத்தம் மடம் தனது 550-வது நிறுவன ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். கடந்த 550 ஆண்டுகளில், இந்த நிறுவனம் எண்ணற்ற காலச் சூறாவளிகளைத் தாங்கி நின்றுள்ளது. சகாப்தங்கள் மாறின, காலங்கள் மாறின, தேசத்திலும் சமுதாயத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இருப்பினும், இந்த மடம் மாறிவரும் காலங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் தனது திசையை ஒருபோதும் இழந்ததில்லை. மாறாக, இது மக்களுக்கான ஒரு வழிகாட்டும் மையமாக உருவெடுத்துள்ளது; அதுவே இதன் மிகப்பெரிய அடையாளமாகும்.

வரலாற்றில் வேரூன்றி இருந்தாலும், இது காலத்தோடு இணைந்து நடைபோட்டு வருகிறது. இந்த மடம் எந்த உணர்வுடன் நிறுவப்பட்டதோ, அதே உணர்வு இன்றும் சமமான அளவில் உயிர்ப்புடன் உள்ளது. இந்த உணர்வு தவத்தையும் சேவையையும், பாரம்பரியத்தையும் பொது நலத்தையும் ஒன்றிணைக்கிறது. ஆன்மீகத்தின் உண்மையான நோக்கம் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை, சமநிலை மற்றும் விழுமியங்களை வழங்குவதே என்பதை பல தலைமுறைகளாக இந்த மடம் சமூகத்திற்கு உணர்த்தி வருகிறது. இந்த மடத்தின் 550 ஆண்டு காலப் பயணம், கடினமான காலங்களிலும் சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கும் வலிமைக்கு ஒரு சான்றாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், மடத்தின் தலைவர் ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமிஜி அவர்களுக்கும், கமிட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் இந்த நிகழ்வோடு தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

ஒரு நிறுவனம் உண்மை மற்றும் சேவையின் அடிப்படையில் கட்டப்படும்போது, அது மாறிவரும் காலங்களில் தள்ளாடுவதில்லை; மாறாக, சவால்களைத் தாங்கி நிற்கும் வலிமையை அது சமுதாயத்திற்கு வழங்குகிறது. இன்று, அதே பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில், இந்த மடம் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. இங்கே, பகவான் ஸ்ரீராமரின் 77 அடி உயர பிரம்மாண்டமான வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. சரியாக மூன்று நாட்களுக்கு முன்புதான், அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயிலின் உச்சியில் தர்மக் கொடியை ஏற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இன்று, பகவான் ஸ்ரீராமரின் இந்த அற்புதமான சிலையை இங்கே திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இன்று, ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருப்பொருள் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இன்று இந்த மடத்துடன் இணைந்துள்ள புதிய பரிமாணங்கள், வருங்கால சந்ததியினருக்கு அறிவு, உத்வேகம் மற்றும் ஆன்மீகப் பயிற்சியின் நிரந்தர மையங்களாக மாறப்போகின்றன. இங்கே உருவாக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3D திரையரங்கம் ஆகியவற்றின் மூலம், இந்த மடம் தனது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, புதிய தலைமுறையையும் அதனுடன் இணைக்கிறது. அதேபோல், நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் 550 நாட்களாக நடத்தப்பட்ட ஸ்ரீராம நாம ஜப யாகம் மற்றும் அதனுடன் இணைந்த ராம ரத யாத்திரை ஆகியவை, நமது சமூகத்தின் பக்தி மற்றும் ஒழுக்கத்தின் கூட்டு ஆற்றலின் அடையாளங்களாக மாறியுள்ளன. இந்த கூட்டு ஆற்றல்தான் இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

நண்பர்களே,

ஆன்மீகத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் இத்தகைய அமைப்புகள் வருங்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த குறிப்பிடத்தக்க உருவாக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில், இந்தச் சிறப்புத் தருணத்தின் அடையாளமாக நினைவு நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தை ஒற்றுமையாக வைத்திருக்கும் அந்த ஆன்மீக வலிமைக்கே இந்த கௌரவங்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன.

நண்பர்களே,

ஸ்ரீ மடத்தின் இந்தத் தொடர்ச்சியான பாரம்பரியம், த்வைத வேதாந்தத்தின் தெய்வீக அடித்தளத்தை நிறுவிய அந்த மகத்தான குரு பரம்பரையிலிருந்து உருவாகிறது. 1475-ம் ஆண்டு ஸ்ரீமத் நாராயண தீர்த்த சுவாமிஜியால் நிறுவப்பட்ட இந்த மடம், அதே ஞானப் பாரம்பரியத்தின் நீட்சியாகும். இதன் அசல் மூலம், ஈடு இணையற்ற ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியார் தவிர வேறு யாருமில்லை. இந்த மகத்தான ஆச்சார்யர்களின் பாதங்களில் எனது தலைவணங்கி மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடுப்பி மற்றும் பர்டகாலி மடங்கள் இரண்டும் ஒரே ஆன்மீக நதியின் துடிப்பான நீரோடைகள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பாரதத்தின் மேற்கு கடற்கரையின் கலாச்சார நீரோட்டத்தை வடிவமைத்த அந்த வழிகாட்டும் குரு-சக்தி ஒன்றே ஆகும். இந்த புனிதமான பாரம்பரியத்துடன் தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாக்கியம் எனக்கு இன்றைய தினமே கிடைத்திருப்பது ஒரு சிறப்பான தற்செயல் நிகழ்வாகும்.

நண்பர்களே,

இந்தப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக ஒழுக்கம், அறிவு, கடின உழைப்பு மற்றும் மேன்மை ஆகியவற்றைத் தங்கள் வாழ்வின் அடித்தளமாக மாற்றியுள்ளனர் என்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். வணிகம் முதல் நிதி வரை, கல்வி முதல் தொழில்நுட்பம் வரை, அவர்களிடம் காணப்படும் திறமை, தலைமைத்துவம் மற்றும் பணி அறம் ஆகியவை இந்த வாழ்வியல் தத்துவத்தின் ஆழமான செல்வாக்கையே பிரதிபலிக்கின்றன. இந்தப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வெற்றியைச் சொல்லும் எண்ணற்ற ஊக்கமளிக்கும் கதைகள் உள்ளன. அவர்களின் அனைத்து சாதனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது எளிமை, விழுமியங்கள் மற்றும் சேவை மனப்பான்மையே ஆகும். இந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் ஒரு மையமாக இந்த மடம் செயல்பட்டு வருகிறது; எதிர்காலத்திலும் இதேபோல் பல தலைமுறைகளுக்கு இது ஊக்கமளிக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

நண்பர்களே,

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மடத்தின் மற்றொரு சிறப்பம்சத்தை இன்று குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும். பல நூற்றாண்டுகளாக சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆதரவாக இருந்து வரும் சேவை மனப்பான்மையே இதன் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதி மோசமான சூழ்நிலைகளைச் சந்தித்தபோது, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி புதிய நிலங்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, இந்த மடம்தான் அவர்களுக்கு ஆதரவாக நின்றது. இது சமூகத்தை ஒருங்கிணைத்ததுடன், புதிய இடங்களில் கோயில்கள், மடங்கள் மற்றும் தங்குமிடங்களை நிறுவவும் உதவியது. இந்த மடம் மதத்தை மட்டுமல்ல, மனிதாபிமானத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தது. காலப்போக்கில், இதன் சேவை நீரோடை மேலும் விரிவடைந்தது. இன்று, கல்வி முதல் விடுதிகள் வரை, முதியோர் பராமரிப்பு முதல் தேவையுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது வரை, மடம் தனது வளங்களை எப்போதும் பொது நலத்திற்காகவே அர்ப்பணித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், நவீனப் பள்ளிகள் அல்லது இக்கட்டான காலங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் என ஒவ்வொரு முயற்சியும், ஆன்மீகமும் சேவையும் இணைந்து பயணிக்கும்போது, சமுதாயம் நிலைத்தன்மையையும் முன்னேறுவதற்கான உத்வேகத்தையும் பெறும் என்பதற்குச் சான்றாக அமைகின்றன.

நண்பர்களே,

கோவாவின் கோயில்களும் உள்ளூர் பாரம்பரியங்களும் பெரும் சவால்களை எதிர்கொண்ட காலங்களும் உண்டு; மொழி மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால், அந்தச் சூழ்நிலைகளால் சமூகத்தின் ஆன்மாவை பலவீனப்படுத்த முடியவில்லை. மாறாக, அவை அதனை இன்னும் அதிகமாக்கவே செய்தன. ஒவ்வொரு மாற்றத்தின் போதும் தனது அடிப்படை அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு, காலத்திற்கேற்ப தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதுதான் கோவாவின் தனித்துவமான வலிமையாகும். இந்த மறுமலர்ச்சியில் பர்டகாலி மடம் போன்ற நிறுவனங்கள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன.

நண்பர்களே,

இன்று, பாரதம் ஒரு அசாதாரணமான கலாச்சார மறுமலர்ச்சியைக் கண்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் புனரமைப்பு, காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பிரம்மாண்ட மறுமேம்பாடு மற்றும் உஜ்ஜைனியில் மகாகால் மகாலோக் விரிவாக்கம் ஆகியவை, நமது தேசம் தனது ஆன்மீக பாரம்பரியத்தை புதிய வலிமையுடன் புதுப்பித்து விழித்தெழுவதைப் பிரதிபலிக்கின்றன. ராமாயணச் சுற்றுப்பாதை கிருஷ்ணா சுற்றுப்பாதை, கயாவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கும்பமேளாவின் முன்னெப்போதும் இல்லாத மேலாண்மை போன்ற உதாரணங்கள், இன்றைய பாரதம் தனது கலாச்சார அடையாளத்தை புதிய உறுதி மற்றும் தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வதைக் காட்டுகின்றன. இந்த விழிப்புணர்வு வருங்கால சந்ததியினரைத் தங்களின் வேர்களுடன் இணைந்திருக்கத் தூண்டுகிறது.

நண்பர்களே,

கோவாவின் புனித பூமி தனக்கென ஒரு தனித்துவமான ஆன்மீக அடையாளத்தைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, பக்தி, துறவிகளின் மரபுகள் மற்றும் கலாச்சார ஒழுக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியான ஓட்டம் இந்தப் பகுதியை வளப்படுத்தியுள்ளது. தனது இயற்கை அழகுடன் சேர்த்து, இந்த நிலம் 'தட்சிண காசி' (தென்காசி) என்ற அடையாளத்தையும் கொண்டுள்ளது. பர்டகாலி மடம் இந்த அடையாளத்தை இன்னும் ஆழமாக்கியுள்ளது. இந்த மடத்தின் செல்வாக்கு கொங்கண் அல்லது கோவாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை; அதன் பாரம்பரியம் காசி எனும் புனித பூமி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், இது எனக்கு இன்னும் கூடுதல் பெருமையை அளிக்கிறது. வட பாரதத்தில் தனது பயணத்தின் போது, நிறுவன ஆச்சார்யரான ஸ்ரீ நாராயண தீர்த்தர் காசியிலும் ஒரு மையத்தை நிறுவினார், இது இந்த மடத்தின் ஆன்மீக ஓட்டத்தை தெற்கிலிருந்து வடக்கு வரை விரிவுபடுத்தியது. இன்றும், அவரால் காசியில் நிறுவப்பட்ட அந்த மையம் சமூக சேவையின் ஊடகமாகச் செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

இன்று, இந்த புனிதமான மடம் 550 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், நாம் வரலாற்றை மட்டும் கொண்டாடவில்லை, எதிர்காலத்தின் திசையையும் வடிவமைக்கிறோம். 'வளர்ச்சியடைந்த பாரதம்' நோக்கிய பாதை ஒற்றுமையின் வழியாகவே செல்கிறது. சமூகம் ஒன்றிணையும் போதும், ஒவ்வொரு பிராந்தியமும் ஒவ்வொரு பிரிவும் ஒன்றாக நிற்கும் போதும் மட்டுமே, ஒரு தேசம் பெரும் பாய்ச்சலில் முன்னேற முடியும். மக்களை ஒன்றிணைப்பது, மனங்களை ஒன்றிணைப்பது மற்றும் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதுமே ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பர்டகாலி ஜீவோத்தம் மடத்தின் முதன்மை நோக்கமாகும். அதனால்தான், 'வளர்ச்சியடைந்த பாரதத்தை' நோக்கிய பயணத்தில் இந்த மடம் ஒரு முக்கிய உத்வேக மையமாகவும் திகழ்கிறது.

நண்பர்களே,

நான் ஒருவர் மீது அன்பு வைத்திருக்கும்போது, மிகுந்த மரியாதையுடன் சில கோரிக்கைகளை முன்வைப்பதுண்டு. பூஜ்ய சுவாமிஜி அவர்கள் எனக்கு ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கும் பொறுப்பை வழங்கியுள்ளார். அவர் ஒரு துறவி, பொதுவாகத் துறவிகள் ஒரு கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்; ஆனால் நான் ஒன்றோடு திருப்தி அடைபவன் அல்ல. அதனால்தான், நான் இப்போது உங்கள் மத்தியில் இருக்கும்போது, எனது மனதில் இயல்பாக எழும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் நிறுவனத்தின் வாயிலாக வெகுஜன மக்களைச் சென்றடையும் வகையில் 9 கோரிக்கைகளை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். இந்த 9 கோரிக்கைகளும் 9 தீர்மானங்களைப் போன்றவை. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே நமது புனிதக் கடமை என்று நாம் கருதும் போதுதான் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற கனவு நனவாகும். பூமி நமது தாய், இயற்கையை மதிக்க வேண்டும் என்று நமது மடங்களின் போதனைகள் நமக்குக் கற்பிக்கின்றன.

எனவே, நமது முதல் தீர்மானம் நீரைப் பாதுகாப்பதாக, நீரைச் சேமிப்பதாக மற்றும் நமது ஆறுகளைக் காப்பதாக இருக்க வேண்டும். நமது இரண்டாவது தீர்மானம் மரங்களை நடுவது. நாடு தழுவிய அளவில் "தாயின் பெயரால் ஒரு மரம்" என்ற பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. உங்கள் நிறுவனம் இந்தப் பிரச்சாரத்திற்குத் தனது வலிமையைச் சேர்த்தால், அதன் தாக்கம் இன்னும் வெகுதூரம் சென்றடையும். நமது மூன்றாவது தீர்மானம் தூய்மைக்கான பணியாக இருக்க வேண்டும். இன்று நான் கோயில் வளாகத்தைப் பார்வையிட்டபோது, அதன் கட்டமைப்பு மற்றும் தூய்மை என்னைப் பெரிதும் கவர்ந்தது. எல்லாம் எவ்வளவு அற்புதமாகப் பராமரிக்கப்படுகிறது என்பதை நான் சுவாமி அவர்களிடம் கூறினேன். ஒவ்வொரு தெருவும், அக்கம்பக்கமும், நகரமும் சுத்தமாக இருக்க வேண்டும். நமது நான்காவது தீர்மானமாக, நாம் சுதேசி (உள்ளூர் தயாரிப்புகளை) பொருட்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இன்று பாரதம் 'சுயசார்பு பாரதம்' மற்றும் 'சுதேசி' என்ற மந்திரத்துடன் முன்னேறி வருகிறது. இன்று தேசம் "உள்ளூர் பொருட்களுக்காகக் குரல் கொடுப்போம்" என்று முழங்குகிறது, அதே உறுதியுடன் நாம் முன்னேற வேண்டும்.

நண்பர்களே,

நமது ஐந்தாவது தீர்மானம் தேச தரிசனமாக இருக்க வேண்டும். நமது நாட்டின் பல்வேறு பகுதிகளை நாம் ஆராய்ந்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நமது ஆறாவது தீர்மானத்தின் ஒரு பகுதியாக, இயற்கை விவசாயத்தை நமது வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும். நமது ஏழாவது தீர்மானம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதாகும். நாம் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் நமது உணவில் எண்ணெயின் அளவை 10 சதவீதம் குறைக்க வேண்டும். நமது எட்டாவது தீர்மானமாக, நாம் யோகா மற்றும் விளையாட்டுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் நமது ஒன்பதாவது தீர்மானமாக, ஏதேனும் ஒரு வகையில் ஏழைகளுக்கு உதவ வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொண்டால் கூட, பாரதத்தின் எதிர்காலம் நமது கண்களுக்கு முன்பே உருமாறுவதை நீங்கள் காண்பீர்கள்.

நண்பர்களே,

நமது மடங்களால் இந்தத் தீர்மானங்களை மக்களின் தீர்மானங்களாக மாற்ற முடியும். பாரம்பரியம் உயிர்ப்புடன் இருக்கும்போது சமுதாயம் முன்னேறுகிறது என்பதை இந்த மடத்தின் 550 ஆண்டு கால அனுபவம் நமக்குக் கற்பிக்கிறது. காலத்திற்கேற்ப தனது பொறுப்புகளை விரிவுபடுத்தும்போது மட்டுமே பாரம்பரியம் உயிர்ப்புடன் இருக்கும். கடந்த 550 ஆண்டுகளில் இந்த மடம் சமுதாயத்திற்கு என்ன பங்களிப்பை வழங்கியதோ, அதே ஆற்றல் இப்போது எதிர்கால பாரதத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

இந்த கோவா மண்ணின் ஆன்மீக மகிமை எவ்வளவு தனித்துவமானதோ, அதே அளவிற்கு அதன் நவீன வளர்ச்சியும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. தனிநபர் வருமானம் அதிகமுள்ள மாநிலங்களில் கோவாவும் ஒன்று. நாட்டின் சுற்றுலா, மருந்து உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் கோவா புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இங்குள்ள உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தி வருகின்றன. நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் இரயில் இணைப்புகளின் விரிவாக்கத்தால், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயணம் இன்னும் வசதியாக மாறியுள்ளது. 2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற நமது தேசிய தொலைநோக்குப் பார்வையின் முக்கியமான தூணாக சுற்றுலாத் துறை விளங்குகிறது, அதற்கு கோவாவே மிகச்சிறந்த உதாரணம்.

நண்பர்களே,

பாரதம் இன்று ஒரு தீர்க்கமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நமது இளைஞர்களின் ஆற்றல், நமது வளர்ந்து வரும் தன்னம்பிக்கை மற்றும் நமது கலாச்சார வேர்களை நோக்கிய நாட்டம் ஆகியவை இணைந்து ஒரு புதிய பாரதத்தை உருவாக்கி வருகின்றன. ஆன்மீகம், தேச சேவை மற்றும் வளர்ச்சி ஆகியவை ஒன்றாக முன்னேறும்போது மட்டுமே 'வளர்ச்சியடைந்த பாரதத்தை' உருவாக்கும் நமது உறுதிமொழி நிறைவேறும். இந்த கோவா மண்ணும், இந்த மடமும் அந்தத் திசையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. இன்று பூஜ்ய சுவாமிஜி என்னைப் பற்றி பல விஷயங்களைக் கூறினார். பல சாதனைகளுக்கான பெருமையை எனக்கு வழங்கினார். அவர் வெளிப்படுத்திய உணர்வுகளுக்காக அவருக்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் எதைச் சிறப்பாகக் கருதினாலும், அது மோடியால் மட்டும் நடந்தது அல்ல. அது 140 கோடி இந்தியர்களின் உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பின் பலன். அதனால்தான் நாம் நேர்மறையான முடிவுகளைக் காண்கிறோம், இன்னும் பல நன்மைகள் வரும்; ஏனெனில் நமது நாட்டின் 140 கோடி மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல, எனது வாழ்க்கையின் பல கட்டங்களில் கோவா மிக முக்கியமான பங்கைக் வகித்துள்ளது. அது எப்படி நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் ஒவ்வொரு திருப்புமுனையிலும் இந்த கோவா மண்தான் என்னை முன்னோக்கி வழிநடத்தியது என்பது உண்மை. பூஜ்ய துறவியின் ஆசிகளுக்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை, இந்தப் புனிதமான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

----

(Release ID:2196023


(வெளியீட்டு அடையாள எண்: 2246113) வருகையாளர் எண்ணிக்கை : 20