பிரதமர் அலுவலகம்
சட்ட உதவி வழங்கல் வழிமுறைகளை வலுப்படுத்துவது குறித்து புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2025 7:30PM by PIB Chennai
இந்தியத் தலைமை நீதிபதி திரு. பி.ஆர். கவாய் அவர்களே, நீதிபதி சூர்ய காந்த் அவர்களே, நீதிபதி விக்ரம் நாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, உச்ச நீதிமன்றத்தின் இதர மாண்புமிகு நீதிபதிகளே, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளே, பெரியோர்களே மற்றும் தாய்மார்களே!
இந்த முக்கியமான தருணத்தில் உங்கள் அனைவர் மத்தியிலும் இருப்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும். சட்ட உதவி வழங்கல் வழிமுறையை வலுப்படுத்துவதும், சட்டப் பணிகள் தினத்துடன் தொடர்புடைய இந்த நிகழ்வும் நமது நீதித்துறை அமைப்புக்கு ஒரு புதிய வலிமையைத் தரும். இந்த 20-வது தேசிய மாநாடு சிறப்பாக அமைய உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இன்று காலை முதலே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று என்னிடம் கூறப்பட்டது, எனவே உங்கள் நேரத்தை நான் அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டேன். இங்கு வருகை தந்துள்ள முக்கியப் பிரமுகர்கள், நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் சட்டப் பணிகள் அதிகார அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நான் வரவேற்கிறேன்.
நண்பர்களே,
நீதி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும், சரியான நேரத்தில் கிடைப்பதாகவும் இருக்கும்போது, ஒருவருடைய சமூக அல்லது நிதிப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அது ஒவ்வொரு நபரையும் சென்றடையும்போது மட்டுமே, அது சமூக நீதிக்கான அடித்தளமாக மாறுகிறது. நீதி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதில் சட்ட உதவி மிக முக்கியப் பங்காற்றுகிறது. தேசிய அளவில் இருந்து தாலுகா நிலை வரை, சட்டப் பணிகள் அதிகார அமைப்புகள் நீதித்துறைக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகின்றன. இன்று, மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் வழக்குக்கு முந்தைய சமரசத் தீர்வுகள் மூலம் மில்லியன் கணக்கான தகராறுகள் விரைவாகவும், இணக்கமாகவும், குறைந்த செலவிலும் தீர்க்கப்பட்டு வருவது எனக்குத் திருப்தி அளிக்கிறது. இந்திய அரசால் தொடங்கப்பட்ட சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் திட்டத்தின் கீழ், வெறும் மூன்று ஆண்டுகளில் சுமார் 8 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. அரசின் இந்த முயற்சிகள் நாட்டின் ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், சுரண்டப்பட்டோர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எளிதாக நீதி கிடைப்பதை உறுதி செய்துள்ளன.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளாக, எங்களது கவனம் 'தொழில் புரிவதை எளிதாக்குதல்' மற்றும் 'வாழ்க்கையை எளிதாக்குதல்' ஆகியவற்றில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது; இதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். வணிகங்களுக்காக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவையற்ற விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. 'மக்களுக்கு விசுவாசமான' சட்டத்தின் மூலம் 3,400-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவுகள் குற்றமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. 1,500-க்கும் மேற்பட்ட பொருத்தமற்ற மற்றும் காலாவதியான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த பழைய சட்டங்களுக்குப் பதிலாக, இப்போது 'பாரதிய நீதிச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நண்பர்களே,
நான் ஏற்கனவே கூறியது போல, 'நீதி எளிதாகவும் விரைவாகவும் கிடைப்பது, ' உறுதி செய்யப்படும்போது மட்டுமே, தொழில் புரிவதை எளிதாக்குவதும் வாழ்க்கையை எளிதாக்குவதும் சாத்தியமாகும். கடந்த சில ஆண்டுகளில், நீதி கிடைப்பதை எளிதாக்குவதை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில், இந்தத் திசையில் நாம் இன்னும் வேகமாகச் செயல்படுவோம்.
நண்பர்களே,
தேசிய சட்டப் பணிகள் அதிகார அமைப்பான 'நல்சா' தொடங்கப்பட்டதன் 30-வது ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று தசாப்தங்களில், நீதித்துறையை நாட்டின் ஏழை மக்களுடன் இணைப்பதில் 'நல்சா' மிக முக்கியமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. சட்டப் பணிகள் அதிகார அமைப்புகளை அணுகும் மக்களிடம் பெரும்பாலும் வளங்கள் இருப்பதில்லை, பிரதிநிதித்துவம் இருப்பதில்லை, சில சமயங்களில் நம்பிக்கையும் கூட இருப்பதில்லை. அவர்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்குவதுதான் "சேவை" என்ற சொல்லின் உண்மையான பொருளாகும்; இது 'நல்சா' என்ற பெயரிலேயே அடங்கியுள்ளது. எனவே, அதன் ஒவ்வொரு உறுப்பினரும் பொறுமையுடனும் தொழில்முறையுடனும் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நண்பர்களே,
இன்று நாம் 'நல்சா'வின் சமூக சமரசப் பயிற்சியை அறிமுகப்படுத்துகிறோம். இதன்மூலம், பேச்சுவார்த்தை மற்றும் ஒருமித்த கருத்து மூலம் தகராறுகள் தீர்க்கப்பட்ட இந்தியப் பாரம்பரியத்தின் பண்டைய அறிவை நாம் மீண்டும் உயிர்ப்பிக்கிறோம். கிராம சபைகள் முதல் கிராம பெரியவர்கள் வரை, சமரசம் என்பது எப்போதும் நமது நாகரிகத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. புதிய சமரசச் சட்டம் இந்தத் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதுடன், அதற்கு நவீன வடிவத்தையும் அளிக்கிறது. இந்தப் பயிற்சி தொகுப்பின் மூலம், சமூக சமரசத்திற்கான ஆதாரங்கள் உருவாக்கப்படும் என்று நான் நம்புகிறேன். இது தகராறுகளைத் தீர்க்கவும், நல்லிணக்கத்தைப் பேணவும் மற்றும் வழக்குச் சுமைகளைக் குறைக்கவும் உதவும்.
நண்பர்களே,
தொழில்நுட்பம் என்பது நிச்சயமாக ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாகும். ஆனால் அது மக்கள் நலனை மையமாகக் கொண்டிருந்தால், அதே தொழில்நுட்பம் ஜனநாயகப்படுத்துவதற்கான ஒரு சக்தியாக மாறும். 'யுபிஐ' டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் எப்படி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்பதை நாம் பார்த்தோம். இன்று மிகச்சிறிய வியாபாரிகள் கூட டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகிவிட்டனர். கிராமங்கள் லட்சக் கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன்புதான், கிராமப்புறங்களில் சுமார் ஒரு லட்சம் மொபைல் கோபுரங்கள் ஒரே நேரத்தில் தொடங்கி வைக்கப்பட்டன. அதாவது, இன்று தொழில்நுட்பம் என்பது உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஊடகமாக மாறி வருகிறது. நீதி வழங்கலில் இ- கோர்ட்ஸ் எனப்படும் 'மின்னணு நீதிமன்றங்கள்' திட்டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். தொழில்நுட்பம் எவ்வாறு நீதித்துறை செயல்முறைகளை நவீனமாகவும் மனிதாபிமானத்துடனும் மாற்றும் என்பதை இது காட்டுகிறது. மின்னணு முறையில் தாக்கல் முதல் மின்னணு சம்மன் அனுப்பும் சேவை வரை, மெய்நிகர் விசாரணைகள் முதல் வீடியோ கான்பரன்சிங் வரை தொழில்நுட்பம் அனைத்தையும் எளிதாக்கியுள்ளது. இது நீதிக்கான பாதையை எளிமையாக்கியுள்ளது. நீங்கள் அனைவரும் அறிந்தபடி, இந்தத் திட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கான வரவு செலவுத் திட்டம் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மீது அரசு கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது.
நண்பர்களே,
சட்ட விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். ஒரு ஏழை எளியவர் தனது உரிமைகளை அறியாதவரை, சட்டத்தைப் புரிந்து கொள்ளாதவரை மற்றும் அமைப்பின் சிக்கல்களைக் கண்டு அஞ்சும் வரை அவரால் நீதியைப் பெற முடியாது. எனவே, நலிந்த பிரிவினர், பெண்கள் மற்றும் முதியோரிடையே சட்ட விழிப்புணர்வை அதிகரிப்பது நமது முன்னுரிமையாகும். நீங்களும் நமது நீதிமன்றங்களும் இந்தத் திசையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். நமது இளைஞர்கள், குறிப்பாகச் சட்ட மாணவர்கள், இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இளம் சட்ட மாணவர்கள் ஏழைகளுடனும், கிராமங்களில் வசிக்கும் மக்களுடனும் இணைந்து, அவர்களுக்குரிய சட்ட உரிமைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை விளக்க ஊக்குவிக்கப்பட்டால், அது சமுதாயத்தின் நாடித்துடிப்பை நேரடியாக உணரும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும். மகளிர் சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் இதர வலுவான அடித்தள கட்டமைப்பு வலைப்பின்னல்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், சட்ட அறிவை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல முடியும்.
நண்பர்களே,
சட்ட உதவியுடன் தொடர்புடைய மற்றொரு அம்சத்தைப் பற்றியும் நான் அடிக்கடி விவாதிப்பதுண்டு. நீதியின் மொழி என்பது நீதி தேடி வருபவருக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கும்போது இதைக் கருத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும். மக்கள் சட்டத்தைத் தங்களின் சொந்த மொழியில் புரிந்து கொள்ளும்போது, அது சட்டத்தை சிறப்பாகப் பின்பற்றுவதற்கு வழிவகுக்கும் மற்றும் வழக்குகளைக் குறைக்கும். இதனுடன், தீர்ப்புகள் மற்றும் சட்ட ஆவணங்கள் உள்ளூர் மொழியில் கிடைக்கச் செய்வதும் அவசியமாகும். உச்ச நீதிமன்றம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீர்ப்புகளை 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க முன்முயற்சி எடுத்துள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இந்த முயற்சி உயர் நீதிமன்றங்களிலும் மாவட்ட அளவிலும் தொடரும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
நாம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி முன்னேறும்போது, நாம் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த தேசம் என்று அழைத்துக் கொள்ளும் வேளையில் நமது நீதி வழங்கும் முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்க்குமாறு சட்ட வல்லுநர்கள், நீதித்துறை சேவைகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து அந்தத் திசையில் முன்னேற வேண்டும். 'நல்சா' ஒட்டுமொத்த சட்டத்துறை மற்றும் நீதி வழங்கலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை, இந்த நிகழ்விற்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, உங்கள் அனைவர் மத்தியிலும் இருக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
----
(Release ID : 2187861)
AD/VK/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2243125)
வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam