பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளர்களுடன் பிரதமரின் கலந்துரையாடலின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2025 1:32PM by PIB Chennai

பிரதமர்: இன்று மிக முக்கியமான நாள். இது தேவ தீபாவளி மற்றும் குரு பூரப் ஆகும். எனவே, இது உண்மையிலேயே மிக முக்கியமான சந்தர்ப்பமாகும்.

வீராங்கனைகள்: இனிய குரு பூரப் வாழ்த்துகள், ஐயா!

பிரதமர்: உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பல!

பயிற்சியாளர்: மாண்புமிகு பிரதமர் அவர்களே, மிக்க நன்றி. இங்கு இருப்பதில் நாங்கள் பெருமையாகவும், பாக்கியம் பெற்றவர்களாகவும் உணர்கிறோம். நான் உங்களிடம் ஒரு விஷயத்தை பற்றிச் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பெண்கள் அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள், உண்மையிலேயே ஆச்சரியம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவர்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். அபரிமிதமான முயற்சியைக் வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பயிற்சி அமர்விலும், அவர்கள் முழு தீவிரத்துடனும், உற்சாகத்துடனும் விளையாடினர். அவர்களின் கடின உழைப்பு உண்மையிலேயே பலனளித்துள்ளது என்று நான் கூறுவேன்.

ஹர்மன்பிரீத் கவுர்: ஐயா, 2017-ல் நாங்கள் உங்களைச் சந்தித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது நாங்கள் கோப்பையுடன் வரவில்லை, ஆனால் இத்தனை வருடங்கள் நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து கோப்பையை இன்று கொண்டு வர முடிந்தது எங்களுக்குப் பெரும் மரியாதை அளிக்கிறது. நீங்கள் இன்று எங்கள் மகிழ்ச்சியை இருமடங்காக்கி விட்டீர்கள், இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். எதிர்காலத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு கோப்பையுடன் உங்களைத் தொடர்ந்து சந்திப்பதும், உங்களுடன் குழுப் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதும் தான் இப்போது எங்கள் நோக்கம்.

பிரதமர்: உண்மையிலேயே, நீங்கள் அனைவரும் அசாதாரணமான ஒன்றைச் செய்திருக்கிறீர்கள். இந்தியாவில், கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல. ஒரு வகையில், இது மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. கிரிக்கெட் நன்றாக நடந்தால், இந்தியா மகிழ்ச்சியடைகிறது; அது கொஞ்சம் தடுமாறினாலும், நாடு முழுவதும் ஏமாற்றமடைகிறது. நீங்கள் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றபோது, சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்கள் வந்தன.

ஹர்மன்பிரீத் கவுர்: 2017-ல் நாங்கள் உங்களைச் சந்தித்தபோது, இறுதிப் போட்டியில் தோற்றுவிட்டுத் திரும்பி வந்திருந்தோம், ஆனால் அப்போது நீங்கள் எங்களுக்கு நிறைய ஊக்கமளித்தீர்கள். அடுத்த வாய்ப்பு வரும்போது எப்படிச் சிறப்பாக விளையாட வேண்டும், எங்களது சிறந்த பங்களிப்பை எப்படித் தர வேண்டும் என்று சொன்னீர்கள். மேலும், இன்று நாங்கள் இறுதியாகக் கோப்பையுடன் திரும்பியபோது, உங்களுடன் மீண்டும் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிரதமர்: ஆம், ஸ்மிருதி ஜி, தயவுசெய்து சொல்லுங்கள்.

ஸ்மிருதி மந்தனா: 2017-ல் நாங்கள் வந்தபோது, எங்களால் கோப்பையைக் கொண்டு வர முடியவில்லை, ஆனால் எதிர்பார்ப்புகள் குறித்து நீங்கள் எங்களிடம் ஒரு கேள்வி கேட்டது எனக்கு நினைவிருக்கிறது, உங்களுடைய பதில் அன்று முதல் இன்றுவரை என் மனதில் இருக்கிறது. அது எங்களுக்கு உண்மையில் உதவியது. அடுத்த 6-7 ஆண்டுகளில், நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம், ஆனால் உலகக் கோப்பைகளில் நாங்கள் பலமுறை மனமுடைந்து போனோம், ஆனாலும் முதல் மகளிர் உலகக் கோப்பை  இந்தியாவுக்கு வர வேண்டும் என்று ஆசி  இருந்ததாக நான் நினைக்கிறேன். மேலும், ஐயா, நீங்கள் எப்போதும் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருந்து வருகிறீர்கள். குறிப்பாக இப்போது, இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல்கள் ஆகட்டும் அல்லது வேறு எதுவாகட்டும், ஒவ்வொரு துறையிலும் பெண்கள் பிரகாசிப்பதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கும்போது, இன்னும் சிறப்பாகச் செயல்படவும், நாடு முழுவதும் உள்ள மற்ற பெண்களுக்கு ஊக்கமளிக்கவும் அது எங்களை மேலும் மேலும் தூண்டுகிறது.

பிரதமர்: ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டிருக்கிறது, பெருமையடைகிறது. உண்மையில், உங்கள் அனைவரிடமிருந்தும் உங்கள் அனுபவங்களைக் கேட்க விரும்புகிறேன்.

ஸ்மிருதி மந்தனா: ஐயா, இந்தக் களப்பணியில் சிறந்த விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு வீரருக்கும் சொல்வதற்கு ஒரு கதை உள்ளது, மேலும் யாருடைய பங்களிப்பும் மற்றவர்களை விடக் குறைந்தது அல்ல என்று நான் நினைக்கிறேன்.

ஸ்மிருதி மந்தனா: கடந்த முறை, எதிர்பார்ப்புகளை எப்படிச் சமாளிப்பது என்று நீங்கள் கேட்டீர்கள். அதற்கான பதில் எப்போதும் என் மனதில் நிலைத்திருக்கிறது. மேலும், நீங்கள் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கும் விதம் எங்களுக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிறது.

ஜெமிமா ரோட்ரிகஸ்: ஐயா, நாங்கள் அந்த மூன்று போட்டிகளில் தோற்றபோது... ஒரு அணி எத்தனை முறை வெற்றி பெறுகிறது என்பதை வைத்து அல்ல, மாறாக ஒரு தோல்விக்குப் பிறகு எப்படி உங்களை மீட்டெடுக்கிறீர்கள் என்பதை வைத்துதான் ஒரு அணி வரையறுக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்த அணி அதைச் செய்திருக்கிறது, அதனால்தான் இது ஒரு சாம்பியன் அணி என்று நான் உணர்கிறேன். இந்த அணியைப் பற்றி நான் சொல்ல விரும்பும் மற்றொரு விஷயம், அணியில் உள்ள ஒற்றுமை. நான் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த ஒற்றுமை இது. யாராவது சிறப்பாகச் செயல்படும்போது, மற்ற அனைவரும் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்து, கைதட்டி, அவர்கள் தாங்களே அந்த ரன்களை எடுத்தது போல அல்லது அந்த விக்கெட்டுகளை வீழ்த்தியது போலக் கொண்டாடுவார்கள். மேலும் யாராவது சோர்வாக இருக்கும்போது, அவர்களின் தோளில் கை போட்டு, "பரவாயில்லை, அடுத்த போட்டியில் நீ நன்றாக விளையாடுவாய்" என்று சொல்ல எப்போதும் யாராவது இருப்பார்கள். அதுதான் இந்த அணியை வரையறுக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

ஸ்னே ராணா: ஜெம்மியுடன் நான் உடன்படுகிறேன். வெற்றியில் அனைவரும் ஒன்றாக இருப்போம், ஆனால் வீழ்ச்சியின் போது ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதுதான் உண்மையான சோதனை என்று நாங்கள் முடிவு செய்தோம். ஒரு அணியாக, ஒரு குழுவாக, என்ன நடந்தாலும், யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டோம், எப்போதும் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து முன்னேறுவது என்று முடிவு செய்தோம். அதுதான் எங்கள் அணியின் மிகச் சிறந்த அம்சம் என்று நான் நினைக்கிறேன்.

கிராந்தி கௌட்: ஹர்மன் டி எப்போதும் சொல்வார்: "சிரித்துக் கொண்டே இருங்கள்!" எனவே, யாராவது பதட்டமாகவோ அல்லது அமைதியாகவோ உட்கார்ந்திருந்தால், அனைவரும் சிரிப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஒருவருக்கொருவர் சிரிப்பதைப் பார்ப்பது எங்களை லேசாகவும், மேலும் நேர்மறையாகவும் உணரச் செய்தது.

பிரதமர்: ஆனால் உங்கள் அணியில் எல்லோரையும் சிரிக்க வைப்பதற்கு ஒருவர் இருக்க வேண்டுமே, இல்லையா?

வீராங்கனை: ஜெம்மி டி!

ஜெமிமா ரோட்ரிகஸ்: ஐயா, உண்மையில் ஹர்லீன் கூட! அணியை ஒன்றாக வைத்திருப்பதற்கு அவள் உண்மையிலேயே முக்கியத்துவம் கொடுக்கிறாள்.

 

ஹர்லீன் கௌர் தியோல்: ஐயா, உண்மையில், ஒவ்வொரு அணிக்கும் மனநிலையை லேசாக வைத்திருக்கக் குறைந்தபட்சம் ஒரு நபர் தேவை என்று நான் உணர்கிறேன். யாராவது தனியாகவோ அல்லது அமைதியாகவோ உட்கார்ந்திருப்பதை நான் பார்க்கும்போதெல்லாம் அல்லது நான் சும்மா இருக்கும்போதெல்லாம், நான் வேடிக்கையாகவோ அல்லது லேசான விஷயங்களைச் செய்வேன். என்னைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நானும்  நன்றாக இருப்பது போன்று உணர்கிறேன்.

பிரதமர்: இங்கேயும் நீங்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும், இல்லையா?

 ஹர்லீன் கௌர் தியோல்: ஐயா, அவர்கள் உண்மையில் எங்களை திட்டினார்கள். அமைதியாக இருங்கள் என்று சொன்னார்கள்! நாங்கள் கொஞ்சம் கூடுதல் சத்தம் போட்டால் கூடத் திட்டு வாங்கினோம்.

ஹர்லீன் கௌர் தியோல்: ஐயா, உண்மையில் நான் உங்களிடம் உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தைப் பற்றிக் கேட்க விரும்பினேன்! நீங்கள் உண்மையில் பிரகாசமாக இருக்கிறீர்கள், ஐயா!

பிரதமர்: உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், நான் இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்தியதில்லை.

வீராங்கனைகள்: ஐயா, நீங்கள் பிரகாசமாக இருப்பதற்குக் காரணம், கோடிக்கணக்கான இந்தியர்களின் அன்புதான்!

பிரதமர்: அது உண்மைதான், அது உண்மையிலேயே அப்படித்தான். மேலும் இது மிகவும் சக்திவாய்ந்த விஷயம்... மக்களின் அன்பும் ஆசீர்வாதங்களும். பாருங்கள், நான் அரசாங்கத்தின் தலைவராக இருந்து இப்போது 25 வருடங்கள் ஆகிவிட்டது. இது ஒரு நீண்ட காலம். இவ்வளவு காலத்திற்குப் பிறகும், மக்கள் இன்னும் இவ்வளவு பாசத்தைப் பொழிகிறார்கள் என்றால், அது உண்மையிலேயே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பயிற்சியாளர்: ஐயா, கேள்விகள் எப்படி வருகின்றன என்று பார்த்தீர்களா? இவர்கள் அனைவரும் வெவ்வேறு கதாபாத்திரங்கள்! நான் இவர்களின் தலைமைப் பயிற்சியாளராகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது, அதற்குள்ளேயே என் முடி நரைத்துவிட்டது! உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். நாங்கள் ஜூன் மாதம் இங்கிலாந்தில் இருந்தோம், அங்கே கிங் சார்லஸை சந்தித்தோம். ஆனால், நெறிமுறைப்படி 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதனால், துணை ஊழியர்களால் செல்ல முடியவில்லை. வீராங்கனைகள் மற்றும் மூன்று திறமையான பயிற்சியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. நான் துணை ஊழியர்களிடம், "எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஆனால் 20 பேர் மட்டுமே வர முடியும்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது. "பரவாயில்லை, எங்களுக்கு இந்தப் புகைப்படம் வேண்டாம். நவம்பர் 4 அல்லது 5-ம் தேதி மோடி அவர்களுடன் ஒரு புகைப்படம் வேண்டும்" என்று அவர்கள் சொன்னார்கள். இன்று, அந்த நாள் நனவாகிவிட்டது!

ஹர்மன்பிரீத் கவுர்: சில சமயங்களில், ஏன் எப்போதும் எங்களுக்கு இப்படி நடக்கிறது என்று தோன்றியது? ஒருவேளை நாங்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் வலிமை பெறுவதற்காக அது அப்படித்தான் எழுதப்பட்டிருக்கலாம்.

பிரதமர்: ஹர்மன், நீங்கள் அதைக் கூறும்போது உங்கள் மனதில் என்ன ஓடியது? ஏனென்றால், நீங்கள் சொன்னது மக்களுக்கு உண்மையிலேயே ஊக்கமளிக்கக் கூடும்.

ஹர்மன்பிரீத் கவுர்: ஒரு நாள் நாங்கள் இந்த கோப்பையைத் கைப்பற்றும் வேளை வரும் என்று ஆழ்மனதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம். மேலும், இந்த அணியுடன், முதல் நாளிலிருந்தே அதை நம்மால் உணர முடிந்தது, அது ஒரு சிறப்பான உணர்வு.

பிரதமர்: ஆனால், "இது ஏன் தொடர்ந்து எங்களுக்கே நடக்கிறது?" என்ற எண்ணம் உங்களுக்கு வந்தபோது, அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், மற்ற அனைவருக்கும் நம்பிக்கையூட்டவும் துணிந்ததற்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருந்திருக்க வேண்டுமே.

ஹர்மன்பிரீத் கவுர்: ஆம், ஐயா. அதன் பெருமை எங்கள் அணி உறுப்பினர்கள் அனைவருக்கும் சேரும், ஏனென்றால் அனைவருக்கும் தன்னம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் முன்னேறி வந்தோம். ஐயா (பயிற்சியாளர்) சொன்னது போல, அவர் இரண்டு வருடங்களாக எங்களுடன் இருக்கிறார், இந்த நேரத்தில் எங்கள் மன வலிமையில் நிறைய உழைத்திருக்கிறோம், ஏனென்றால் கடந்தது கடந்ததுதான், அதை நம்மால் மாற்ற முடியாது.

பிரதமர்: அதனால், நீங்கள் நிகழ்காலத்தில் வாழக் கற்றுக்கொண்டீர்கள்.

ஹர்மன்பிரீத் கவுர்: ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். அதனால்தான் உங்களிடம் எனது கேள்வி என்னவென்றால், நிகழ்காலத்தில் வாழும் இந்த யோசனையை இன்னும் வலிமையாக நம்புவதற்கு எங்கள் அணி உறுப்பினர்களுக்கு ஒரு செய்தியை வழங்கக்கூடிய விதமாக, நீங்கள் கூடுதலாக என்ன செய்கிறீர்கள்? ஏனெனில் இது எங்களுக்கு உண்மையில் உதவியிருக்கிறது, மேலும் அது உங்களிடமிருந்தும் வந்தால், நாங்களும் எகள் பயிற்சியாளர்களும் சரியான பாதையில் இருக்கிறோம் என்பதை மேலும் உறுதிப்படுத்தும்.

பிரதமர்: அப்படியானால், டிஎஸ்பி (காவல் துணைக் கண்காணிப்பாளர்), இன்று நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் அனைவருக்கும் அறிவுறுத்தல்களைக் கொடுத்து, எல்லோரையும் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும், இல்லையா?

தீப்தி ஷர்மா: இல்லை ஐயா, நான் உங்களைச் சந்திக்கத்தான் காத்திருந்தேன்! நான் இந்த நாளுக்காகக் காத்திருந்தேன், இந்தத் தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன், உங்களைப் பார்க்கக் காத்திருந்தேன். ஆனால், 2017-ல், தோல்விக்குப் பிறகு மீண்டும் எழுந்து நிற்பவரே உண்மையான வீரர் என்று நீங்கள் என்னிடம் சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நீங்கள் என்னிடம், "தொடர்ந்து கடினமாக உழை, ஒருபோதும் முயற்சியை நிறுத்தாதே" என்று சொன்னீர்கள். அந்த வார்த்தைகள் எப்போதும் எனக்கு ஊக்கமளித்து வருகின்றன. எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் உங்களுடைய பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், ஐயா. மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் சொல்லும்போது கூட, நீங்கள் எப்போதும் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் மிகவும் அமைதியாகக் கையாளும் விதம் தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்திற்கு எனக்கு மிகவும் உதவுகிறது.

பிரதமர்: மேலும், நீங்கள் ஹனுமான் ஜி பச்சை குத்திக்கொண்டு திரிகிறீர்கள். அப்படியானால், போட்டிகளில் ஹனுமான் ஜி உங்களுக்கு உதவுகிறாரா என்று சொல்லுங்கள்?

தீப்தி ஷர்மா: ஐயா, உண்மையில், எனக்கு என்னைப் பார்ப்பதை விட அவர் (இறைவன் ஹனுமான்) மீதுதான் அதிக நம்பிக்கை இருக்கிறது. நான் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போதெல்லாம், அவருடைய பெயரை உச்சரிக்கிறேன், மேலும் அந்தச் சிரமங்களிலிருந்து என்னால் வெளிவர முடிகிறது என்று உணர்கிறேன். என் நம்பிக்கை அவர் மீது அவ்வளவு வலுவானது.

பிரதமர்: மேலும் நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் கூட "ஜெய் ஸ்ரீ ராம்" என்று எழுதுகிறீர்கள், இல்லையா?

தீப்தி ஷர்மா: ஆம் ஐயா, அங்கும் எழுதப்பட்டுள்ளது. ஆம், நிச்சயமாக.

பிரதமர்: வாழ்க்கையில் நம்பிக்கை உண்மையில் நிறைய உதவுகிறது. இதில் உள்ள மிகப் பெரிய நன்மை என்னவென்றால், அது உங்களுக்கு அமைதியை அளிக்கிறது. உங்கள் கவலைகளை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் விஷயங்களைக் கவனித்துக் கொள்வார் என்று அறிந்து நீங்கள் நிம்மதியாக உறங்கலாம். ஆனால் களத்தில், நீங்கள் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள். அதன் மூலம் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். அது எவ்வளவு உண்மை?

தீப்தி ஷர்மா: இல்லை ஐயா, அப்படியொன்றும் இல்லை! ஆனால் ஆம், மக்கள் கொஞ்சம் பயப்படும் ஒரு விஷயம் இருக்கிறது, அது என்னுடைய எறிதல் (Throw)! சில சமயங்களில் என் அணியினரும் கூட வேடிக்கையாக, "சற்று அமைதியாக இரு, உன் எதிரில் இருப்பவர்கள் நாங்கள்தான். அவ்வளவு கடினமாக எறியாதே!" என்று சொல்வார்கள்.

தீப்தி ஷர்மா: ஐயா உண்மையில் என்னுடைய கையில் உள்ள ஹனுமான் ஜி பச்சை குத்துதல் பற்றித் தனிப்பட்ட முறையில் கேட்டார். அதன் பின்னால் உள்ள ரகசியம் என்ன, அவர் மீது நான் எவ்வளவு ஆழமாக நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று கேட்டார். மேலும், ஐயா என் இன்ஸ்டாகிராம் குறிச்சொல் (tagline) கூட உங்களுக்கு தெரிந்திருப்பது உண்மையிலேயே எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.

பிரதமர்: அப்படியானால் ஹர்மன், வெற்றிக்குப் பிறகு, நீங்கள் பந்தை உங்கள் பையில் போட்டபோது... அதன் பின்னால் இருந்த காரணம் என்ன? நீங்கள் அதைப் திட்டமிட்டிருந்தீர்களா, அல்லது யாராவது உங்களிடம் அதைச் செய்யச் சொன்னார்களா?

ஹர்மன்பிரீத் கவுர்: இல்லை ஐயா, அதுவும் இறைவனின் திட்டம் என்றுதான் நான் கூறுவேன். கடைசிப் பந்து, கடைசி கேட்ச் என்னிடம் வரும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை, ஆனால் அது வந்தது. மேலும் பல வருடக் கடின உழைப்புக்கும் காத்திருப்புக்கும் பிறகு, அது இறுதியாக என் கைகளுக்கு வந்தபோது, அது என்னுடனே இருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். அந்தப் பந்து இன்னும் என் பையில்தான் இருக்கிறது.

பிரதமர்: ஷஃபாலி, நீங்கள் ரோத்தக்-கைச் சேர்ந்தவர். அந்த நகரில் இருந்துதான் அதிகமான மல்யுத்த வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்த உலகத்திற்குள் (கிரிக்கெட்டிற்குள்) நீங்கள் எப்படி வந்தீர்கள்?

ஷஃபாலி வர்மா: ஆம் ஐயா, அங்கே மல்யுத்தமும் கபடியும்தான் மிகவும் பிரபலம். ஆனால் என்னுடைய தந்தைக்குத்தான் மிகப் பெரிய ஏக்கம் இருந்தது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால்...

பிரதமர்:  ஒருநிமிடம், நீங்களே ஒருபோதும் மல்யுத்தத்தை முயற்சித்தது இல்லையா?

ஷஃபாலி வர்மா: இல்லை ஐயா, ஒருபோதும் இல்லை.

பிரதமர்: ஒருபோதும் இல்லையா?

ஷஃபாலி வர்மா: இல்லை ஐயா, ஒருபோதும் இல்லை.

பிரதமர்: ஓ, அப்படியா.

ஷஃபாலி வர்மா: என்னுடைய தந்தை ஒரு கிரிக்கெட் வீரராக வர விரும்பினார், ஆனால் அவரால் முடியவில்லை. எனவே அவர் அந்தக் கனவைத் தன் குழந்தைகளுக்குக் கடத்தினார். நானும் என் சகோதரரும் ஒன்றாக விளையாடுவோம், மேலும் நாங்கள் தொடர்ந்து போட்டிகளைப் பார்த்துக் கொண்டே இருப்போம், அப்படித்தான் எனக்கு கிரிக்கெட்டில் ஆழ்ந்த ஆர்வம் ஏற்பட்டு, ஒரு கிரிக்கெட் வீராங்கனையானேன்.

பிரதமர்: ஷஃபாலி, நீங்கள் பிடித்த அந்த கேட்சைப் பார்த்தபோது என் மனதில் ஒரு கேள்வி இருந்தது. பந்தைப் பிடித்த பிறகு யாராவது சிரிப்பதைப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் நீங்கள் அதைப் பிடிப்பதற்கு முன்பே சிரித்துக் கொண்டிருந்தீர்கள்! அதற்குக் காரணம் என்ன?

 

ஷஃபாலி வர்மா: ஐயா, நான் எனக்குள்ளேயே, "அந்த பந்து என்னிடம் வரவேண்டும். நானே அந்த கேட்சை பிடிக்க வேண்டும்!" என்று சொல்லிக் கொண்டிருந்தேன்! மேலும், அது உண்மையில் என்னிடம் வந்தபோது, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!

பிரதமர்: அந்தப் பந்து வேறு எங்கும் செல்ல வாய்ப்பில்லை என்று நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தது போல எனக்குத் தோன்றியது. அப்படித்தானே?

ஷஃபாலி வர்மா: ஐயா, அது வேறு எங்காவது சென்றிருந்தாலும், நானும் அங்கே குதித்திருப்பேன்!

பிரதமர்: அந்தத் தருணத்தின் உணர்ச்சிகளை நீங்கள் விவரிக்க முடியுமா?

ஜெமிமா ரோட்ரிகஸ்: உண்மையில், ஐயா, அது அரையிறுதிப் போட்டி, மேலும் நாங்கள் எப்போதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சிறிய வித்தியாசத்தில் தோற்றோம். அதனால், நான் பேட் செய்யச் சென்றபோது, அணிக்காக நாம் இதை வென்றே ஆக வேண்டும் என்பதுதான் என் மனதில் இருந்த ஒரே எண்ணம். என்ன நடந்தாலும், நான் இறுதிவரை களத்தில் இருக்க வேண்டும். நாங்கள் அந்தச் சூழ்நிலையில் இருந்தபோது, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டே இருந்தோம்: ஒரே ஒரு நீண்ட பார்ட்னர்ஷிப், ஒரே ஒரு உறுதியான பார்ட்னர்ஷிப், அவர்கள் வீழ்ந்து விடுவார்கள். அதைத்தான் நாங்கள் செய்ய முயற்சித்தோம். மேலும் அந்தக் கணம் ஒரு கூட்டு முயற்சி என்றுதான் சொல்வேன், ஐயா,  ஆம், ஒருவேளை நான் சதம் அடித்திருக்கலாம், ஆனால் ஹாரி டி (ஹர்மன்பிரீத் கவுர்) மற்றும் எனக்கு இடையேயான பார்ட்னர்ஷிப் நடக்காமல் இருந்திருந்தால், அல்லது தீப்தி அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸை விளையாடாமல் இருந்திருந்தால், அதன்பின் ரிச்சா மற்றும் அமன் அந்த 15 ரன்களை 8 பந்துகளில் எடுக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை நாங்கள் அரையிறுதியில் வென்றிருக்க மாட்டோம் என்று நான் உணர்கிறேன். ஆனால், "ஆம், எங்கள் அணியால் இதைச் செய்ய முடியும், நாங்கள் செய்வோம்!" என்ற நம்பிக்கை அனைவரிடமும் கூட்டாக இருந்தது.

ஜெமிமா ரோட்ரிகஸ்: அவர் (பிரதமர்) எல்லாவற்றையும் விட எங்களுக்கு அதிக ஊக்கமளிக்க விரும்பினார். உலகக் கோப்பையை வென்றது எப்படி இருந்தது, மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு எப்படி இருந்தது, எப்படி நாங்கள் மீண்டு வந்தோம் என்பதை அவர் எங்களுடைய அனுபவத்திலிருந்து தெரிந்துகொள்ள விரும்பினார்.

கிராந்தி கௌட்: நான் ஒரு உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆட்ட நாயகி ஆனபோது, நான் மிகுந்த பெருமை அடைந்தேன், மேலும் எனது கிராமமும் பெருமைப்படும் என்று எனக்குத் தெரியும்.

கிராந்தி கௌட்: நான் பந்துவீசும்போது, ஹர்மன் டி எப்போதும் என்னிடம், "நீ விக்கெட்டை எடுக்க வேண்டும். முதல் விக்கெட்டை நீதான் எடுப்பாய்" என்று சொல்வார். எனவே, அந்த முதல் விக்கெட்டை எடுப்பதில்தான் நான் கவனம் செலுத்துவேன். "நான் அந்த முதல் விக்கெட்டை வீழ்த்துவேன்" என்று நினைத்துத்தான் பந்துவீசுவேன். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார், அவருக்கும் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். ஐயா, அவர் உங்களை மிகவும் போற்றுகிறார். அவர் கிரிக்கெட் விளையாடுவதை விரும்பினார், ஆனால் என் தந்தைக்கு வேலை இழந்தபோது, அவரால் ஒரு அகாடமியில் சேர முடியவில்லை. அதனால் அவர் சும்மா விளையாடிக் கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே, அவர் விளையாடுவதைப் பார்க்க எனக்குப் பிடிக்கும், மேலும் நான் சிறுவர்களுடன் டென்னிஸ்-பந்து கிரிக்கெட் விளையாடுவேன். பின்னர், எங்கள் கிராமத்தில் எம்எல்ஏ கோப்பை என்ற பெயரில் ஒரு தோல்-பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் நான் பங்கேற்றேன். இரண்டு அணிகள் வந்திருந்தன. ஒரு அணியில் ஒரு பெண் திடீரென்று நோய்வாய்ப்பட்டார், எனக்கு நீண்ட முடி இருந்தது, அதனால் பயிற்சியாளர் என்னிடம் வந்து, "நீ விளையாடுவாயா?" என்று கேட்டார். நான் ஆம் என்றேன். அவர் என்னை அந்த அணிக்காக விளையாட அனுமதித்தார். அதுதான் என்னுடைய முதல் தோல்-பந்து போட்டி. நான் ஆட்ட நாயகி ஆனேன். இரண்டு விக்கெட்டுகளை எடுத்தேன், 25 ரன்கள் எடுத்தேன். அப்படித்தான் என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கியது.

பிரதமர்: ஷஃபாலிக்கும் கடைசி இரண்டு ஆட்டங்களில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது, இல்லையா?

ஷஃபாலி வர்மா: ஆம் ஐயா. அதற்கு முன்பு, நான் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அழைப்பு வந்தபோது... நிச்சயமாக, பிரத்திகாவுக்கு நடந்தது எந்த விளையாட்டு வீரருக்கும் நடக்கக் கூடாது. ஆனால் எனக்கு அழைப்பு வந்தபோது, நான் என் மீது நம்பிக்கை வைத்தேன், மேலும் அணியும் என் மீது நம்பிக்கை வைத்தது. எப்படியாவது நான் அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

பிரத்திகா ராவல்: ஐயா, இந்தக் காணொளியின் மூலம் நான் உங்களிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், எனக்குக் காயம் ஏற்பட்டபோது, அணியில் இருந்த பலர், "நாங்கள் இந்த உலகக் கோப்பையை பிரத்திகாவுக்காக வெல்ல விரும்புகிறோம்" என்று சொன்னார்கள். அப்போது எனக்குத் தெரியாது, அணியில் இல்லாத ஒருவர் பிறகு என்னிடம் சொன்னார். நான் வெளியே உட்கார்ந்திருந்தபோது நாங்கள் உலகக் கோப்பையை வென்றோம், தொழில்நுட்ப ரீதியாக நான் இறுதி போட்டிக்கான அணியில் இல்லை. நான் 16வது வீராங்கனையாக இருந்தேன். ஆனால், ஐயா, நான் சக்கர நாற்காலியில் இருந்தபோதும், அவர்கள் என்னை மேடையில் நிற்க வைத்து, அதே மரியாதையையும் கவுரவத்தையும் கொடுத்தார்கள். இந்த அணி உண்மையிலேயே ஒரு குடும்பம், ஐயா. நீங்கள் ஒவ்வொரு வீரரையும் சமமாக மதித்து, அனைவரையும் உள்ளடக்கியதாக உணர வைக்கும்போதுதான், அந்த அணி ஒரு உண்மையான குடும்பமாக மாறுகிறது. மேலும் அத்தகைய ஒரு குடும்பம் ஒன்றாக விளையாடும்போது ஐயா, அந்த அணியைத் தோற்கடிப்பது மிகவும் கடினம். அதனால்தான் இந்த அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற உண்மையிலேயே தகுதியானது.

பிரதமர்: நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. முடிவில், விளையாட்டில் அணி மனப்பான்மைதான் மிக முக்கியமானது. மேலும் இது களத்தில் உள்ள அணி மனப்பான்மை மட்டுமல்ல. நீங்கள் 24 மணி நேரமும் ஒன்றாகச் செலவிடும்போது, ஒருவிதமான பிணைப்பு உருவாகிறது. நீங்கள் ஒருவருக்கொருவரின் பலவீனங்களை அறிந்து அவற்றை மறைக்க முயற்சி செய்கிறீர்கள், மேலும் ஒருவருக்கொருவரின் பலத்தை அடையாளம் கண்டு அவற்றை ஆதரிக்கவும், வெளிச்சம் போட்டுக் காட்டவும் முயற்சிக்கிறீர்கள். அப்போதுதான் உண்மையான குழு உணர்வு வெளிப்படும்.

பிரதமர்: உங்களுடைய அந்த கேட்ச், மிக பிரபலமான ஒன்றாக மாறியது, இல்லையா, சொல்லுங்கள்?

அமன்ஜோத் கவுர்: ஆம், ஐயா! நான் இதற்கு முன் பல சிறப்பான கேட்சுகளைப் பிடித்திருக்கிறேன், ஆனால் அதுபோல எதுவும் பிரபலமாகவில்லை. மேலும், கேட்சைப் பூர்த்தி செய்வதற்கு முன்பு கொஞ்சம் தடுமாறியது கூட, முதல் முறையாக மகிழ்ச்சியாக இருந்தது!

பிரதமர்: நீங்கள் அந்த கேட்சைப் பிடித்தபோது, அது ஒருவித திருப்புமுனையாக மாறியது, இல்லையா?

அமன்ஜோத் கவுர்: ஆம், ஐயா.

பிரதமர்: நீங்கள் உண்மையில் அந்த கேட்சைப் பிடிக்கும் வரை, நீங்கள் பந்தை மட்டும்தான் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு, நீங்கள் நிச்சயமாகக் கோப்பையைக் கண்டிருக்க வேண்டும்!

 

அமன்ஜோத் கவுர்: ஐயா, அந்தக் கேட்சிற்கு பிறகு உண்மையில் கோப்பையை வெல்ல முடியம் என எனக்குத் தோன்றியது.  அதன் பிறகு, என்மீது எவ்வளவு பேர் குதித்தார்கள், அந்த கனம் என்னால் சுவாசிக்ககூட முடியவில்லை. என் மேல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கூட எனக்குத் தெரியவில்லை!

பிரதமர்: உங்களுக்குத் தெரியும், இல்லையா? கடந்த முறை, சூர்யகுமார் யாதவ் கூட இதுபோல ஒரு கேட்ச் பிடித்திருந்தார்.

அமன்ஜோத் கவுர்: ஆம், ஐயா.

பிரதமர்: உங்களில் ஒருவர் முன்பு ஒரு கேட்ச் பிடித்தது போல நினைக்கிறேன், அதை நான் மறு ட்வீட் செய்திருந்தேன். அது எனக்கு நினைவிருக்கிறது. அது மிகவும் ஈர்க்கக்கூடிய தருணம்.

ஹர்லீன் கௌர் தியோல்: ஆம், ஐயா! நான் அந்தக் கேட்சைப் பிடித்தபோது நாங்கள் இங்கிலாந்தில் இருந்தோம். நாங்கள் இதுபோன்ற கேட்சுகளை பிடிக்க நீண்ட காலமாகப் பயிற்சி செய்து கொண்டிருந்தோம். நான் ஃபீல்டிங்கில் இருந்தேன், ஒரு கேட்ச் என் பக்கம் வந்தது. நான் ஓடினேன், ஆனால் அதைச் சற்றுக் கோட்டை விட்டேன். ஹாரி டி என்னைத் திட்டினார், "இதுபோன்ற கேட்சுகளைப் பிடிக்க முடியாவிட்டால், ஒரு நல்ல ஃபீல்டராக இருந்து என்ன பயன்?" என்றார். அப்போது எனக்குப் பின்னால் நின்றிருந்த ஜெம்மி, "பரவாயில்லை" என்றார். நான் அவளிடம், "என்னால் அதைப் பிடித்திருக்க முடியும் என்று நினைக்கிறாயா?" என்று கேட்டேன். அவள், "ஆம், உன்னால் முடிந்திருக்கும்" என்றாள். அதனால் நான் அவளிடம், "இன்னும் இரண்டு ஓவர்கள் உள்ளன, நான் ஒரு நல்ல கேட்ச் பிடித்து உனக்குக் காட்டுகிறேன்" என்று சொன்னேன். மேலும் ஐயா, அதற்குப் பிறகு அந்தப் பந்து வந்தது, நான் அதைப் பிடித்தேன்!

பிரதமர்: ஓ, அதனால் நீங்கள் ஒரு தனிப்பட்ட சவாலில் ஈடுபட்டீர்கள் என்று தெரிகிறது! ரிச்சா, நீங்கள் எங்கு விளையாடினாலும், நீங்கள் ஆட்டங்களை வெல்கிறீர்கள், இல்லையா? நீங்கள் எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிப்பீர்கள்!

ரிச்சா கோஷ்: எனக்குத் தெரியவில்லை, ஐயா, ஆனால் ஆம், அது 19 வயதுக்குட்பட்ட அணியாக இருக்கட்டும், சீனியர் அணியாக இருக்கட்டும் அல்லது மகளிர் பிரீமியர் கிரிக்கெட்டாக இருக்கட்டும், நாங்கள் கோப்பைகளை வென்றிருக்கிறோம், மேலும் நான் சில நீண்ட சிக்ஸர்களை அடித்திருக்கிறேன்!

பிரதமர்: சரி, மேலும் சொல்லுங்கள்.

ரிச்சா கோஷ்: நான் பேட்டிங் செய்யும்போது... அந்தச் சிக்ஸர்களை அடிக்கும்போது... ஹாரி டி, ஸ்மிருதி அக்கா, மற்றும் மற்ற அனைவரும் என்னை நம்பினார்கள் என்று நினைக்கிறேன். என்ன சூழ்நிலையாக இருந்தாலும், குறைவான பந்துகளில் அதிக ரன்களும் தேவைப்பட்டாலும் என்னால் சமாளிக்க முடியும் என்று அணி முழுவதும் நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கை எனக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது, ஆம், என்னால் முடியும் என்று. அதனால்தான் என்னுடைய உடல்மொழி ஒவ்வொரு போட்டியிலும் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.

ராதா யாதவ்: நாங்கள் மூன்று போட்டிகளில் தோற்றோம், ஐயா. ஆனால் மிகச் சிறந்த பகுதி என்னவென்றால், தோல்வியிலும் கூட, நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, பேசிக்கொண்டு ஒன்றாகவே இருந்தோம். அது உண்மையானதாகவும் தூய்மையானதாகவும் இருந்தது. அதனால்தான் கடவுள் எங்களுக்கு இந்தக் கோப்பையை வழங்கினார் என்று நினைக்கிறேன்.

பிரதமர்: இல்லை, இல்லை, இது கடவுள் மட்டுமல்ல, இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது உங்களுடைய கடின உழைப்புதான். நீங்கள் அனைவரும் இந்தத் துறையில் உங்களை எப்படித் தயார் செய்து கொண்டீர்கள் என்று சொல்லுங்கள்?

 

ராதா யாதவ்: ஐயா (பயிற்சியாளர்) சொன்னது போல, நாங்கள் இப்போது நீண்ட காலமாக மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். உடற்தகுதி, ஃபீல்டிங் அல்லது திறன் என எதுவாக இருந்தாலும், நாங்கள் அனைத்து விதமான சூழ்நிலைகளுக்கும் தயாராகிக் கொண்டிருந்தோம். நீண்ட காலமாக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும் நான் சொன்னது போல, அனைவரும் ஒன்றாக இருக்கும்போது, விஷயங்கள் எளிதாகிவிடும். ஆனால் யாராவது தனியாக விடப்பட்டால், அந்த வழியில் வேலை செய்வது மிகவும் கடினம்.

பிரதமர்: ஆனால் நீங்கள் முதன்முதலில் ஒரு பரிசு பெற்றபோது, அதை உங்கள் தந்தைக்கு உதவச் செலவழித்தீர்கள் என்று கேள்விப்பட்டேன்.

ராதா யாதவ்: ஆம், ஐயா.

பிரதமர்: மேலும் உங்கள் தந்தை எப்போதும் உங்களை முழுமையாக ஊக்கப்படுத்தினாரா?

ராதா யாதவ்: ஆம், ஐயா, எல்லா நேரங்களிலும். அப்போது எங்கள் குடும்பத்திற்கு அது எளிதாக இருக்கவில்லை, ஆனால் என் தந்தையோ என் தாயோ அதை நான் உணர வைத்ததில்லை.

ஸ்னே ராணா: ஐயா, இது பல வருடக் கடின உழைப்பின் விளைவு. நான் தொடர்ந்து என்னுடைய பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆவிஷ்கர் சார் உடன் தொடர்பில் இருக்கிறேன். குறிப்பிட்ட பேட்டர்களை எப்படி எதிர்கொள்வது என்று நாங்கள் விவாதிக்கிறோம். அந்தக் கேப்டன், துணை கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஆகியோருடன் அனைத்து வியூகங்களும் வகுக்கப்பட்டு, அவற்றை நாங்கள் களத்தில் செயல்படுத்த முயற்சிக்கிறோம். அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான நேரங்களில், அவை பலனளிக்கின்றன. நிச்சயமாக, திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காத போட்டிகளும் உள்ளன, ஆனால் அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்ய நாங்கள் எப்போதும் எங்களை ஊக்குவித்துக் கொள்வோம்.

 

உமா செத்ரி: ஐயா, உங்கள் முன் நின்று என்ன சொல்வதென்று எனக்கு உண்மையில் தெரியவில்லை.

பிரதமர்: மனதில் என்ன வருகிறதோ, அதைச் சொல்லுங்கள்.

உமா செத்ரி: ஐயா, அது என்னுடைய அறிமுகப் போட்டி . மேலும் நான் அறிமுகமாகும் போதெல்லாம், எப்படியாவது மழை வந்துவிடும்! அன்றும் அது நடந்தது. மழை பெய்தது, அதனால் நான் விக்கெட் கீப்பிங் மட்டும்தான் செய்ய முடிந்தது. ஆனாலும், இந்தியாவுக்காக அதுவும் உலகக் கோப்பையில் அறிமுகமாவது எனக்குப் பெரிய விஷயம் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்தப் போட்டியில் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், நாட்டிற்காக எனது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். என்னுடைய முயற்சிகள் இந்தியா வெற்றி பெற உதவ வேண்டும் என்பதை நான் உறுதிப்படுத்த விரும்பினேன். முழு அணியும் என்னை நம்பியது, அனைவரும் என்னுடன் வந்து பேசினார்கள், வழிகாட்டினார்கள், ஆதரவளித்தார்கள், அது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

பயிற்சியாளர்: இந்தியாவிற்காக விளையாடும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் இவர்தான்.

பிரதமர்: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர், இல்லையா?

ரேணுகா சிங் தாக்கூர்: ஆம், ஐயா. வீராங்கனைகளின் அறையின் சூழலை லேசாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க, நாங்கள் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய நினைத்தோம். அதனால் நான் ஒரு மயிலை வரைந்தேன், அது நேர்மறையின் அடையாளம். பிறகு, இன்னும் சுவாரஸ்யமாக்க வேறு என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்தோம்? ஸ்மிருதி தனது ஐம்பது ரன்களை எடுத்தபோது, "சரி, அடுத்து நாம் நூறு ரன்களுக்குச் செல்கிறோம்!" என்று சொன்னது போல.

பிரதமர்: அப்படியானால், நீங்கள் இங்கே வந்தபோதும் எல்லா இடங்களிலும் மயில்களைப் பார்த்திருக்க வேண்டும்!

ரேணுகா சிங் தாக்கூர்: ஆம், ஐயா! "நான் இங்கே இன்னொரு மயிலைப் பார்த்தேன்" என்று கூடச் சொன்னேன். உண்மையில், மயில் வரைவது மட்டும்தான் எனக்குத் தெரியும், அதனால் அதை வரைந்தேன். வேறு எதுவும் வரையத் தெரியாது!

(மற்றொரு வீராங்கனை): அடுத்து அவள் ஒரு பறவையை வரைய முயற்சி செய்தாள், ஆனால் வேண்டாம் என்று நாங்கள் அவளிடம் சொல்லிவிட்டோம்!

பிரதமர்: இருந்தாலும், நான் குறிப்பாக உங்களுடைய தாயாருக்கு மரியாதை செலுத்தி வணங்க வேண்டும். எல்லா கஷ்டங்களுக்கு மத்தியிலும், உங்களுடைய வெற்றிக்குப் பின்னால் அவர் மிகப் பெரிய பங்கை ஆற்றியுள்ளார். ஒற்றைப் பெற்றோராக இருந்தாலும், உங்களுடைய வாழ்க்கையை வடிவமைக்க அவர் அயராது உழைத்துள்ளார், அது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. என்னுடைய மரியாதைக்குரிய வாழ்த்துகளை அவரிடம் தயவுசெய்து தெரிவியுங்கள்.

ரேணுகா சிங் தாக்கூர்: ஆம், ஐயா, நான் சொல்கிறேன்.

அருந்ததி ரெட்டி: ஐயா, முதலாவதாக, என்னுடைய அம்மா உங்களுக்கு ஒரு செய்தியைத் தர வேண்டும் என்று விரும்பினார். உங்களுடன் பேச எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நீங்கள் அவருடைய ஹீரோ என்று உங்களிடம் சொல்லச் சொன்னார். அவர் ஏற்கனவே நான்கு அல்லது ஐந்து முறை எனக்கு அழைப்பு விடுத்து, "என்னுடைய ஹீரோவை எப்போது சந்திக்கிறாய்? என்னுடைய ஹீரோவை எப்போது சந்திக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

பிரதமர்: இப்போது நீங்கள் விளையாட்டுக் களத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள், அடுத்ததாக நாடு உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்கள்? மேலும் நீங்கள் என்ன பங்களிக்க முடியும்?

ஸ்மிருதி மந்தனா: ஐயா, நாங்கள் எந்த உலகக் கோப்பைக்குச் சென்றாலும், நாங்கள் அனைவரும் முதலில் பேசுவது, அந்த உலகக் கோப்பையை வெல்வது மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மகளிர் விளையாட்டிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றித்தான். அது மிகப் பெரியதாக இருக்கும், மேலும் அது இந்தியாவில் ஒரு உண்மையான புரட்சியைத் தொடங்க முடியும். எதிர்காலத்தில், எங்களுடைய முயற்சி எப்போதும் மகளிர் கிரிக்கெட்டை உயர்த்துவது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மகளிர் விளையாட்டுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும் இந்த அணிக்கு அதைச் செய்யக்கூடிய திறன் இருப்பதாக நான் உண்மையாகவே நம்புகிறேன்

பிரதமர்: நீங்கள் அனைவரும் மற்றவர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தின் ஆதாரமாக மாற முடியும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் வெற்றி உங்களுக்கு மிகுந்த சக்தியை அளிக்கிறது. உதாரணமாக, நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, இயல்பாகவே கொண்டாட்டங்களும் உற்சாகமும் இருக்கும். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, நீங்கள் படித்த உங்கள் பள்ளிக்குச் செல்லுங்கள். அங்கே ஒரு நாள் மட்டும் செலவிடுங்கள். குழந்தைகளுடன் பேசுங்கள்; அவர்கள் உங்களிடம் எல்லாவிதமான கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களுடன் சுதந்திரமாக உரையாடுங்கள். அந்தப் பள்ளி உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும், அந்தக் குழந்தைகள் அந்த நாளை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் படித்த அதே பள்ளிதான். அந்த அனுபவம் உங்களுக்குப் பிடித்திருந்தால், மூன்று பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு வருடத்தில், எப்போது முடியுமோ, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நாள் செலவிடுங்கள். இது அவர்களுக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், பதிலுக்கு உங்களுக்கும் உந்துதல் அளிக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

இரண்டாவதாக, ஃபிட் இந்தியா இயக்கம் (Fit India Movement) உள்ளது. உங்களுக்குத் தெரியும், நம் நாட்டில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. உடற்தகுதியே அதை எதிர்கொள்ள சிறந்த வழி. நான் எப்போதும் சொல்வது போலச் சிறிய விஷயங்கள் கூட முக்கியம், உதாரணமாக, உங்கள் சமையல் எண்ணெயை 10% குறைப்பது போன்றது. நீங்கள் அதை வாங்கும்போது அந்தத் தேர்வை செய்யுங்கள். மக்கள் உங்களிடமிருந்து இந்தச் சிறிய, நடைமுறை ஆலோசனைகளைக் கேட்கும்போது, அவர்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் இளம் பெண்களை ஃபிட் இந்தியா பிரச்சாரத்தில் சேர நீங்கள் ஊக்குவித்தால், அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

எனவே, உங்கள் அனைவருடனும் இந்த எளிமையான, மனப்பூர்வமான உரையாடலை நான் மிகவும் ரசித்தேன். உங்களில் சிலரை நான் முன்பே சந்தித்திருக்கிறேன், சிலரை முதல் முறையாகச் சந்தித்தேன். ஆனால் உங்கள் அனைவரையும் சந்திக்க நான் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் (பிரத்திகா), நீங்கள் விரைவில் குணமடைய நான் விரும்புகிறேன்.

ஸ்மிருதி மந்தனா: ஐயா, நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருப்போம். மக்களுடன் பேச வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், இந்தச் செய்தியை உறுதியாக கொண்டு செல்வோம். மேலும் எங்கள் முழு அணியின் சார்பாக, இந்தச் செய்தியை பரப்புவதற்கு தேவைப்பட்டால், நீங்கள் எங்களை அழையுங்கள், நாங்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கே இருப்போம், ஏனென்றால், நிச்சயமாக, இது ஒரு முக்கியமான விஷயம்.

பிரதமர்: நாம் ஒன்றாக, அனைவரும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஸ்மிருதி மந்தனா: ஆம், ஐயா.

பிரதமர்: அப்படியானால், சரி. உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

***

(Release Id: 2186882)

AD/VK/EA

 


(வெளியீட்டு அடையாள எண்: 2243106) வருகையாளர் எண்ணிக்கை : 21