பிரதமர் அலுவலகம்
வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2025 12:53PM by PIB Chennai
நண்பர்களே,
இந்தத் தீபாவளித் திருநாள் உங்கள் அனைவரின் வாழ்விலும் ஒரு புதிய ஒளியைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு நடுவே நிரந்தர வேலைக்கான நியமனக் கடிதத்தைப் பெறுவது என்பது, கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியையும், வெற்றியின் இரட்டிப்புச் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியை இன்று நாட்டின் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடைந்துள்ளனர். உங்கள் குடும்பங்கள் அனைத்திலும் எவ்வளவு மகிழ்ச்சி நிலவும் என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையின் இந்தப் புதிய தொடக்கத்திற்கு எனது நல்வாழ்த்துகள்.
நண்பர்களே,
உங்கள் உற்சாகம், கடினமாக உழைக்கும் திறன், உங்கள் கனவுகள் நிறைவேறியதால் பிறக்கும் நம்பிக்கை, மற்றும் நாட்டிற்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் ஆகியவை ஒருங்கே இணையும்போது, உங்கள் வெற்றி தனிப்பட்டதாக மட்டும் இருக்காது; அது தேசத்தின் வெற்றியாக மாறும். இன்று நீங்கள் அரசுப் பணியை மட்டும் பெறவில்லை; நாட்டின் சேவைக்கு தீவிரமாகப் பங்களிக்க ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். இந்த உணர்வுடன், நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்றும், எதிர்கால இந்தியாவிற்கான சிறந்த அமைப்புகளை உருவாக்குவதில் நீங்கள் உங்கள் பங்களிப்பை அளிப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன். மேலும், நமது மந்திரம் ‘நாகரிக் தேவோ பவ:’ (குடிமக்களே கடவுள்) என்பதை நீங்கள் அறிவீர்கள். சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன், ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும் நாம் எப்படிப் பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளாக, நாடு ஒரு வளர்ந்த பாரதத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதில் நமது இளைஞர்களாகிய உங்கள் அனைவரின் பங்கு மிக முக்கியமானதாகும். எனவே, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே பாஜக-என்.டி.ஏ அரசின் முதன்மையான நோக்கமாக உள்ளது. இன்று வேலைவாய்ப்பு திருவிழாக்கள் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் ஒரு ஊடகமாக மாறியுள்ளன. இந்த வேலைவாய்ப்பு திருவிழாக்கள் மூலமாகவே, அண்மைக் காலத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் அரசுப் பணிகளுக்கு மட்டும் நின்றுவிடவில்லை. நாடு முழுவதும் 'பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு' என்ற திட்டத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ், 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
நண்பர்களே,
இன்று ஒருபுறம், திறன் இந்தியா இயக்கம் போன்ற இயக்கங்கள் மூலம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது; மறுபுறம், தேசியப் பணித் தளச் சேவை போன்ற முயற்சிகள் அவர்களைப் புதிய வாய்ப்புகளுடன் இணைக்கின்றன. இதன் மூலம் 7 கோடிக்கும் அதிகமான காலியிடங்கள், அதாவது 7 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 கோடி காலியிடங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல.
நண்பர்களே,
இளைஞர்களுக்கான மற்றொரு பெரிய முன்னேற்ற நடவடிக்கைதான் "பிரதிபா சேது இணையதளம்" (Pratibha Setu Portal)! மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இறுதிப் பட்டியலை அடைந்தும், ஆனால் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களின் கடின உழைப்பு இனி வீணாகாது. ஏனெனில், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் இந்த இணையதளம் மூலம் அந்த இளைஞர்களை நேர்காணலுக்கு அழைப்பதுடன், அவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்க முடியும். இளைஞர்களின் திறமைகளை முறையாகப் பயன்படுத்துவது மட்டுமே இந்திய இளைஞர் சக்தியை உலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தும்.
நண்பர்களே,
இந்த முறை, ஜிஎஸ்டி சேமிப்பு விழா இந்தத் திருவிழாக் காலத்திற்குப் புதிய வண்ணங்களைச் சேர்த்துள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி வரிகளைக் குறைப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் அடையப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இதன் தாக்கம் மக்களின் சேமிப்பில் மட்டும் நின்றுவிடவில்லை; அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக வேலைவாய்ப்புகளும் விரிவடைந்து வருகின்றன. அன்றாடப் பொருட்கள் மலிவாகும்போது, தேவை அதிகரிக்கிறது. தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியும் உத்வேகம் பெறுகின்றன. மேலும், தொழிற்சாலைகள் அதிகமாக உற்பத்தி செய்யும்போது, புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன. அதனால்தான், இந்த ஜிஎஸ்டி சேமிப்பு விழா வேலைவாய்ப்புத் திருவிழாவாகவும் மாறி வருகிறது. தன்தேரஸ் மற்றும் தீபாவளியின்போது பதிவு செய்யப்பட்டுள்ள விற்பனை சாதனைகளையும், புதிய சாதனைகள் உருவாக்கப்பட்டு, பழைய சாதனைகள் முறியடிக்கப்பட்டதையும் நாம் பார்த்தோம். இது ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வாறு புதிய உந்துதலை அளித்துள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்தச் சீர்திருத்தத்தின் நேர்மறையான தாக்கத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சில்லறை வர்த்தகத் துறையிலும் நாம் காண்கிறோம். இதன் காரணமாக உற்பத்தி, தளவாடங்கள், பொதியிடல் (Packaging) மற்றும் விநியோகம் போன்ற துறைகளில் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
இன்று, உலகிலேயே அதிக இளைஞர் மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய இளைஞர் சக்தியை இந்தியாவின் மிகப் பெரிய பலமாகக் கருதுகிறோம். இந்தக் கண்ணோட்டத்துடனும், தன்னம்பிக்கையுடனும் ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நமது வெளியுறவுக் கொள்கைகூட இந்தியாவின் இளைஞர்களின் நலன்களை மனதில் வைத்தே செயல்படுகிறது. நமது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், உலகளாவிய ஒப்பந்தங்கள், இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது, திறன்களை மேம்படுத்துவது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற அம்சங்களும் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், பிரிட்டன் பிரதமர் இந்தியாவிற்கு வருகை புரிந்திருந்தார். அவரது வருகையின்போது, செயற்கை நுண்ணறிவு, நிதித் தொழில்நுட்பம் மற்றும் தூய்மையான ஆற்றல் போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியாவும் பிரிட்டனும் ஒப்புக்கொண்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேபோல், பல ஐரோப்பிய நாடுகளுடன் முதலீட்டுப் பங்களிப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இவை ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், சிங்கப்பூர், கொரியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவை முதலீட்டை அதிகரிக்கும், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும், ஏற்றுமதியை அதிகரிக்கும், அத்துடன் இளைஞர்களுக்கு உலகளாவிய திட்டங்களில் பணிபுரியப் புதிய வாய்ப்புகளை வழங்கும்.
நண்பர்களே,
இன்று நாம் நாட்டின் வெற்றிகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை பற்றிப் பேசுகிறோம்; வரும் காலங்களில், இவற்றில் உங்களுக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கும். நாம் ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கித் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். உங்களைப் போன்ற இளம் அரசு ஊழியர்கள்தான் அரசின் உறுதியைச் செயல்வடிவத்திற்கு கொண்டு வருபவர்களாக இருப்பீர்கள். இந்த பயணத்தில் iGot Karmayogi Bharat இணையதளம் உங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். சுமார் 1.5 கோடி ஊழியர்கள் இந்தத் தளத்தில் இணைந்து, தங்கள் திறன்களைக் கற்றுக் கொண்டு மேம்படுத்தி வருகின்றனர். நீங்களும் அவர்களுடன் இணைந்தால், உங்களிடமும் ஒரு புதிய பணிக் கலாச்சாரமும், நல்லாட்சி உணர்வும் உருவாகும். உங்கள் முயற்சிகளின் மூலமாகவே இந்தியாவின் எதிர்காலம் வடிவமைக்கப்படும், நாட்டு மக்களின் கனவுகளும் நனவாகும்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
-----
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2242368)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam